நேரா யோசி



எனது நண்பர் சுதாகர் கஸ்தூரி எழுதிய நேரா யோசி என்ற புத்தகத்தை வாசித்து முடித்தபின், இந்தப் புத்தகம் குறிப்பாக இளைஞர்களுக்கும் , ஏன் எல்லோருக்கும் நேரா யோசிப்பதற்குத் தடையாக இருக்கும் தடைகளை "எதிரி" என்று பட்டியலிட்டு அவருக்கே உரித்தான நடையில் சில புனைவுகளைப் புகுத்தி, அந்தத் துறையின் சிறந்த ஆய்வாளர்களின் புத்தகத்தைச் சுட்டிக்காட்டி, அந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட சில முக்கியமான வார்த்தைகளைக் கொண்டு எதிரிகளை அறிவதையும் , அதனை வெல்வதற்கான செயல் திட்டங்களையும் நேர்த்தியாக ஆசிரியர் எடுத்து வைத்துள்ளார்.

இந்தப் புத்தகத்தில் 24 எதிரிகள் நேரா யோசிப்பதற்குத் தடையாகப் பட்டியிலிட்டுள்ளார். இது அனைத்தும் நாம் அறிந்தவைகளாக இருக்கலாம். ஆனால் அவர் எடுத்துக் கையாண்ட நேர்த்தி என்பது பிரமிக்க வைக்கிறது. சிறந்த ஆய்வாளர்களின் கருத்து மற்றும் உடல் உறுப்புகள் மற்றும் சுரப்பிகள் மூலம் நிகழும் சில மனமாற்றங்களையும் சேர்த்து விளக்குவது என்பது அவரது விஞ்ஞான அறிவின் வீச்சையும், வாசிப்புத் திறமையையும் ஒருங்கிணைத்து இங்கே நாம் பார்க்க முடிகிறது.

எதிரி 1- புகார்
புகார் கூறுவதால் தன் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான நேரத்தை நாம் அறியாமல் தின்றுவிடும். மேலும் அது ஒரு சுழற்சிக்குள் இழுத்துச் சென்று அங்கேயே நிறுத்திவிடும். புகார் என்பது உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. பெரும்பாலும் உண்மைத் தன்மை இருக்காது. இது மனக்குவியத்தைக் (Focus) கெடுத்துவிடும்.

சுய உணர்வு என்பது மனக் குவியத்தை மேம்படுத்த ஒரு அங்கமாகவும், அதனுடன் பின்னூட்டம் (Feedback) என்பது புகார்களை மட்டுப்படுத்துவது மட்டுமல்ல , தெளிவாகச் சிந்திக்கவும் உதவும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

எதிரி 3 - சுய கற்றலும் சாய்வு நிலைப்பாடுகளும்

குறிப்பிட்டப் பண்புகளை ஒரு சமூகத்திற்கே பொதுவானப் பண்பாக ஏற்றிச் சொல்லும் Profiling என்பதும் தன் கற்றலும் சாய்வு நிலைப்பாடுகளுமான சிந்தனையின் வெளிப்பாடுதான்.

இவற்றை நாம் சமுதாயத்தில் நிறையக் காண்கிறோம்.

அமைக்டிலாவின் ( மூளையின் ஒரு பகுதி) எதிர்வினைக்கும், பெருமூளையின் முன்புறம் பகுதி எதிர்வினைகளுக்கும் நடுவே நாம் தேர்ந்தெடுக்கும் முதிர்வின் அறிமுகம். இந்த உரிமையை நாம் எப்போதும் தன்னுணர்வாகக் கொண்டிருந்தால், அதுவே சரியான எதிர்வினையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டிவிடும். சரியான மன ஆளுமைக் குவியம், தன்னுணர்வுடன், தனா எதிர்மறை இயக்கத்தைச் சரியான அமைக்டிலா, பெருமூளையின் புற பகுதியிலிருந்து வெளிக்காட்டும்.

எதிரி 4 குறுக்காக இடையாடல்கள்

ஏதோ ஒரு உரையாடலில் இருக்கும்போது காபி வேணுமா? என்று கேட்டதற்கு, ஆம் சொல்லிவிட்டு , காபி வந்ததும் யார் கேட்டது என்று கேட்பதில் இருக்கிறது கவனச்சிதறல். இதில் காபி கொண்டு வந்தவருக்கு ஒரு எரிச்சல் வருவது என்பது நியாயம்.

இடையாடல்கள் (Interaction) என்பன பரிமாற்றத்தைச் (Transaction) சேர்ந்தவை . பரிமாற்ற பகுப்பாய்வுகள் (Transaction analysis) நாம் மூன்று நிலைகளில் இருப்பதாகச் சொல்கிறது. பேரண்டம்(Parent) , அடெல்ட்( Adult) மற்றும் சைல்ட்(Child).

இதனை எதிரி 23 - எல்லையற்ற நற்பண்புகளுடன் இணைத்து , ஒரு மனநல ஆலோசகரின் கருத்துடன், எந்த நிலையில் இருந்து கேள்வி வருகிறது என்பதனை ஆராய்ந்து மனதில் உள்வாங்கிக் கவனத்துடன் பதில் சொல்ல வேண்டும் என்பதனைத் தெளிவாக விளக்கியுள்ளார். இல்லையென்றால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பதனை சில நிகழ்வு டன் நயம்பட எடுத்து வைத்துள்ளார் ஆசிரியர்.

நல்லவனாக இருப்பதற்கும் ரொம்ப நல்லவனாக இருப்பதற்குமான வேறுபாடு மிக அதிகம். அதனால் விளைந்த நிகழ்வுகளை நெஞ்சு உலுக்கும் படி ஆதாரத்துடன், இடையாடல்கள் , பரிமாற்ற பகுப்பாய்வுகள் எவ்வளவு முக்கியம் என்பதனை கையாண்ட நேர்த்தி என்பது ஆசிரியரின் தனிச் சிறப்பு.

எதிரி 8 கட்டற்ற நுகர்வு மற்றும் எதிரி 12 பிராச்சார விளைவு மற்றும் செய்தி விளைவு. இரண்டுமே மிகவும் சமுதாயத்தையே அழிக்கும் அபாயம் கொண்டது என்பது என் கருத்து. ஆதலால்தான் இதனைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் எனது சுய அனுபவம் மற்றும் வாசிப்பின் மூலம் அறிந்ததைத் தனியாக எழுதுகிறேன்.

அனைத்து எதிரிகளையும் பட்டியிலிட்டு விளக்கினால், இது ஒரு சிறு புத்தகமாக ஆகிவிடும் என்பதனால் , அவரது எழுத்தின் ஆழத்தை (வாசிப்புத் திறன் மற்றும் மருத்துவ விஞ்ஞான அறிவின் ஆழம்) வலியுறுத்த சிலவற்றை இங்கே நாம் எடுத்துக் கூறினோம்.

புத்தகத்தை வாசிக்க நினைப்பவர்கள் சுவாசம் பதிப்பகத்தை அணுகவும்.

மகர சடகோபன்
தென்திருப்பேரை





கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூர்ணம்-15

பூர்ணம் - 13

பூர்ணம் - 17