பூர்ணம் - 13
மனத்தை அடக்கி விருப்பு வெறுப்பு இல்லாமல் பலனை எதிர்பார்க்காமல் ஒருவன் கர்மத்தைச் செய்யும்போது ஆத்ம யதாத்ம்ய ஞானத்துடன் இருப்பவனுக்குப் பிறவியற்றத் தன்மை கிடைக்கும். ஜீவனுக்குப் பூர்ணம் ஏற்படும்.
"ஸாங்க்யயோகௌ ப்ருதக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:|
ஏ கமப்யாஸ்த்தித: ஸம்யக் உபயோர் விந்ததே பலம்||" (5-4)
ஞான யோகத்தினால்தான் ஆத்ம தரிசனம் பெறமுடியும். கர்ம யோகத்தினால் பெறமுடியாது , இவை இரண்டும் வெவ்வேறு என்று அறிவில்லாதவர்கள் ( ந பண்டிதா) கூறுவார்கள். அறிவில் சிறந்தவர்கள் ஞான யோகம் கர்ம யோகம் இரண்டும் ஒரே பயனான ஆத்ம தரிசனத்தைத் தரும் என்று அறிவார்கள் என்று மேலே உள்ள கீதை ஸ்லோகம் பண்டிதன் யார் என்பதனை விளக்குகிறது.
"யத் ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத் யோகைரபி கம்யதே|
ஏகம் ஸாங்க்யஞ்ச யோகஞ்ச ய: பச்யதி ஸ பச்யதி||" ( 5-5)
ஞான யோகம் கர்ம யோகம் இரண்டும் தனித்தனியே ஒரே பலனைத் தருவதால் அவ்விரண்டும் ஒன்றுதான் என்று அறிபவனே பண்டிதன் என்று பண்டிதனுக்கு இலக்கணம் கூறுகிறான் கிருஷ்ணன் கீதையில்.
கர்ம யோகம் செய்பவன் மனத் தூய்மைப் பெற்றவனாக இருக்க வேண்டும் என்று மேலும் கூறுகிறான்.
"யோகயுக்தோ விசுதாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:|
ஸர்வபூத ஆத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே||" 5-7
யோகயுக்தோ - கர்மயோகம் செய்பவன்.
விசுதாத்மா- மனத் தூய்மைப் பெற்றவன்
விஜிதாத்மா - மனத்தை வென்றவன்
ஜிதேந்த்ரிய - புலனடக்கம் பெற்றவன்
ஸ்ர்வ பூத - எல்லா ஜீவாத்மாவும்
ஆத்ம பூதாத்மா- எல்லா ஜீவாத்மாக்களும் ஒன்று போன்றவை
குர்வந்நபி- கர்மாக்களைச் செய்பவன்
ந லிப்யதே - குழப்பத்தில் சிக்கமாட்டான்.
வேற்றுமை என்பது சரீரத்தைப் பற்றியது, ஆத்மாவைச் சேர்ந்தவை அல்ல என்ற ஞானத்துடன் புலன்களை அடக்கி மனத்தூய்மையுடன் கர்மத்தைச் செய்பவன் சரீரமே ஆத்மா என்று கலங்க மாட்டான் என்று கூறுகிறான்.
சரீர சம்பந்தத்தை விலக்கிப் பார்த்தால் எல்லா ஆத்மாக்களுக்கும் பிறப்பிடம் ஒன்று , அணுவாய், நித்யமாய்,ஞானமாய், ஆனந்த ஸ்வரூபமாய் ஒரே மாதிரி இருப்பது தெரியும்.
ஒவ்வொரு ஜீவனுக்கும் கர்மங்களைச் செய்ய ஒர் உடல் தேவை. இந்த உடலின் மூலம் வெளிப்புறத்தை அறிகிறான். கர்மங்களைச் செய்கிறான். இந்த உடல் என்பது ஜீவனுக்கு வாகனம் போல் அல்லது வீடு போல் என்று வைத்துக் கொள்ளலாம்.
"ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸூகம் வசீ|
நவத்வார புனே தேஹீ நைவ குர்வந் ந காரயந்||"
5-13
ஒன்பது வாசல் கொண்ட வீட்டில் ஜீவன் வாழ்கிறான்.
உடலும் புலன்களும் அவைகளுக்கு இயல்பான கர்மாக்களைச் செய்கின்றன. தான் செய்யவில்லை என்று மனத்தினால் நினைத்து எல்லாம் பகவான் செயல் என்று நினைத்து, கர்மாக்களில் தொடர்பு அற்று இருக்கும் ஜீவன் , ஒன்பது வாசல் உள்ள சரீரமான பட்டணத்தில் சுகித்திருப்பான்.
மனம் என்பது பத்ம பத்ரம் போல் இருக்க வேண்டும் என்று மேலும் மனத்தைக் கட்டுபடுத்துவதை விளக்குகிறான்.
"ப்ரஹ்மண்யாதாயக் கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:|
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா||" 5-10
செயலைச் செய்பவன் கர்மத்தை இந்திரியங்கள் வசம் வைத்து, கர்மப் பலன்களில் சம்பந்தமற்று இவ்வுலகில் பல கர்மாக்களைச் செய்து வந்தாலும் புண்ணியப் பாபங்களினால் கட்டுப்படமாட்டான்.
இராமானுஜ சம்பிரதாயம் சரீர ஆத்ம பாவம் என்பதன் மூலம் ஜீவாத்மா பரமாத்மா உறவுகளை விளக்குகிறது. இதை எளிதாகப் பின்னால் விளக்குகிறேன். இது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தத்துவம். இது புரிந்தால் மட்டுமே உடல், ஜீவாத்மா, பரமாத்மா, ப்ரகிருதி போன்றவைகள் விளங்கும்.
தாமரை இலை (பத்ம பத்ரம்) தண்ணீரில் உண்டாகி தண்ணீரிலேயே வளர்ந்து வந்தபோதிலும் , அந்தத் தாமரையில் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதுபோல இந்த ஜீவன் சரீரத்தில் பிறந்து அச்சரீரத்திலேயே இருந்து வந்தாலும் சரீர ஆத்ம விவேகத்தினால், தன்னைச் சரீரமாக நினையமால் சம்சாரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும். பல கர்மங்களைச் செய்யும்போது, பத்ம பத்ரம் போல் கர்மப் பலன்களில் ஒட்டாமல் இருப்பவனுக்கு எந்தவித பாவ புண்ணியமும் ஒட்டாது என்று கூறுகிறான்.
நவீன காலத்திற்கு இந்தப் பத்மபத்ர உதாரணம் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். வேலை என்பது பொருட்களை ஈட்ட எல்லா ஜீவன்களுக்கும் வாழ்க்கையை நடத்த தேவை. வேலை என்பது வாழ்வாதாரம்.அந்த வேலையில் நித்தம் இருக்கவேண்டும் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, அந்த வேலைகளில் இருந்தாலும் தாமரை இலை போல் வேலையில் ஒட்டாமல் இருக்கும் பட்சத்தில் வேலை அழுத்தம் (Stress) இருக்காது.
மன அழுத்த நிவாரணத்திற்குத் தாமரை இலை சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறாக நல்ல பண்டிதன் மூலம் ஞானத்தைப் பெற்று நல்ல பயிற்சியின் மூலம் மனதைக் கட்டுபடுத்தும் முறைகளைக் கூறும் கிருஷ்ணன் மேலும் தொடர்கிறான்
மகர சடகோபன்
தென்திருப்பேரை
எல்லாம் பகவான் செயல். அருமை சடகோபன்.
பதிலளிநீக்குசிறப்பாக இருந்தது சடகோபன்.
நீக்குசமீபத்தில் கேட்ட ஒரு சொற்பொழிவிற்குப் பின்னர் "சிவஞானபோதம் வழித்துணை விளக்கம்" என்ற ஒரு நூலை படிக்க முற்பட நேர்ந்தது. அதில் ஒரு இடத்தில் மனதின் அசைவே கர்மா, இந்த மனதின் அசைவின் காரணமாக முயற்சி முதலில் தொடங்குகிறது அந்த முயற்சியின் காரணமாக அது செயலில் ஈடுபடுகின்றது அந்த செயலின் காரணமாக இன்ப துன்பங்கள் விளைகின்றது இன்பமும் துன்பமும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட ஒன்று ஆக ஒருவன் தனது கர்ம பலனை நிறைவு செய்ய மனதின் அசைவு மூலமாக ஏற்படும் முயற்சியின் மூலம் நிறைவு செய்கின்றான். இப்படிப்பட்ட சிந்தனையை இன்றைய பிறப்பில் நிலை நிறுத்திக் கொண்டால் நாம் ஈடுபடும் அத்தனை செயல்களிலும் பற்றற்ற தன்மையுடன் ஈடுபடுவோமாயின் நிச்சயமாக மன அழுத்தம் என்பது முற்றிலும் விலகிவிடும் என்பது அந்த கருத்தின் உடைய சாராம்சம்.
உங்களுடைய பதிவுகளில் தாங்கள் எழுதியது போல் தாமரை இலை நீரிலேயே பிறக்கின்றது நீரிலேயே வளர்கின்றது இருந்தும் அதன் மேல் நீர் ஒட்டுவதில்லை அதுபோல் நாமும் கர்ம வினைகளுக்கு உள்ளாகவே பிறக்கின்றோம் அதனூடே வளர்கின்றோம் பின்னர் மடிகின்றோம் நாம் செய்யும் செயல்களில் மனதை சிக்கிக் கொள்ளாமல் செயல்களை செய்தால் மன அழுத்தம் குறையும்.
து.குஹன்.
நன்றி
நீக்குஉண்மை. கர்ம கர்மா வினைகளினால் ஜீவன்களின் பிறப்பு சுழல் நடக்கிறது. மூன்று விதமான கர்மாக்களில் சஞ்சித கர்மா இவனுடன் தொடர்ந்துசுழற்சிக்குக் காரணமாக அமைகின்றன. ஒரு பிறவியில் செய்யும் காரியங்கள் நாம் அறியாமையினால் கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்கிறோம். மனதை அலைய விடுகிறோம்.. மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பகவான் கீதையில் கூறுகிறான். மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரளவு தவிர்க்கலாம். மனம் என்பது அலைபாயும். ஆதலால் மீண்டும் மீண்டும் உரைக்கிறான். அவன் திருவடி பலம் ஒன்றினாலே முழு கர்மாவையும் அதாவது பால் புண்ணியங்களையும் தொலைத்து பிறவி சுழலை அறுக்கும் இயலும் என்பதுதான் கீதையில் கிருஷ்ணன் இறுதியில் கூறிகிறான். "ஸ்ர்வ தர்மான்" ஸ்லோகம் மூலமாக.
நீக்குகீதையில் கிருஷ்ணன் படிப்படையாக மனநிலையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கூறி இறுதியில் அவனை சரணடையும் வழியை உபதேசிக்கிறார்.
நீக்குநன்றி ஸ்வாமி 🙏
பதிலளிநீக்கு