பூர்ணம் - 17


"யதா தீபோ நிவாதஸ்த்தோ நேங்கதே ஸோப மா ஸ்ம்ருதா|
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகம் ஆத்மந:||" 6-19

தீபோ- விளக்கு , நிவாதஸ்த்தோ- காற்றில்லாத இடம், நேங்கதே- அசையாமல்
யதசித்தஸ்ய- மனதைக் கட்டுப்படுத்தினவன்
யுஞ்ஜதோ- தொடர்ந்து விடாமல்
யோகம்- த்யானம்

காற்றில்லாத இடத்தில் ஒரு விளக்கின் தழல், எப்படி ஆடாமல் அசையாமல் நின்று ஒளிருமோ, அதைப்போல மற்ற விஷயங்களினால் மனம் கலக்காமல் அசையாமல் ஆத்ம சிந்தனத்தில் நின்று பிரகாசிப்பவன் சிறந்த ஆத்ம யோகியாகிறான் என்று விளக்குகிறான்.

தியானத்தின் போது, கண்களைப் பாதி மூடியும் பாதித் திறந்தும் வைத்த நிலையில் மூக்கு நுனியைப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வது என்பது முதலில் கடினம், தொடர்ந்து பயிற்சி செய்து பழகும்போது எளிதாக மாறும். கூர்மையான கவனத்திறனை அதாவது குவியல் திறனை (Focus) அதிகரிக்கும்.

அப்படிச் செய்வதன் மூலம் உங்கள் கவனம் (Focus) சிதறாமல் ஒருநிலைப் படுத்தியிருக்கும் அதாவது ஒரு நிலையில் குவியப்படுத்திருக்கும். இது ஒரு மாபெரும் சக்தியை உள்ளுக்குள் உருவாக்கி மாபெரும் சாதனையாக உருவாக்க உதவியாக இருக்கும்.

இதனைப் பெரு நிறுவனங்கள் "குவியல்" (Focus) என்ற தலைப்பில் பல்வேறு விதமாகப் பாடங்களை நவீன மேலாண்மைப் பாடம் என்று சொல்லி எடுக்கிறார்கள். பணத்தை அள்ளுகிறார் கள். தருமம் தலைகுனிந்து நிற்கிறது.

சூரியனின் கதிர்கள் பல்வேறு திசைகளில் பரவலாக இருந்தாலும் , ஒரு குழிந்த (Concave Mirror) கண்ணாடியின் மீது விழும்போது, குழிந்த கண்ணாடி அனைத்து கதிர்களையும் ஒரு புள்ளியில் குவிக்கும். அதன் வலிமை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. 

குழிந்த கண்ணாடி என்பது த்யானம் , யோகம் போன்றது. அதேபோல் த்யானம் , யோகம் என்பது சிந்தனைச் சிதறும் மனதை ஒரு புள்ளியில் குவிக்கும்.‌ அந்த குவியல் என்பது மன வலிமையை உருவாக்கும்.‌

யோகம் என்பது மனதில் அமைதியை உருவாக்கும் போது, உங்களிடமும் ஒரு அமைதி(Silence) உருவாகுவதைக் கவனிக்க முடியும். அந்த அமைதி என்பது உங்களுடைய பல செயல்களின் வெற்றிக்கு வித்தாக அமையும். "நிறைகுடம் தழும்பாது" என்ற பழமொழிக்கேற்ப அமைதியான மனிதன் காரியங்களை வெற்றிகரமாக உருவாக்குவான்.

அமைதியாக இருக்கும் மனிதனிடம் யோகத்தின் மூலம் கவனத்திறன் (Focus) என்ற திறமையையும் சேரும்போது வெற்றி என்பது உறுதியாக ஏற்படும். செய்யும் செயலில் அவனது மனக்குவியல் ஏற்படும். அந்த மனக்குவியல் வெற்றியைத் தேடித்தரும்.

ஒரு பூனையோ புலியோ தனது இரையைத் தேடும் சமயத்தில் அமைதியாகச் செல்லும். மிகவும் கவனமாகத் தனது நகர்வுகளை நகர்த்தும். கவனத்தை ஒரு குவியலில் கொண்டு நிறுத்தி, இரையின் மீது பாயும். பொதுவாக ஒருவித சிதறலும் இல்லாமல் தனது வெற்றியை நிலைநாட்டும். குறிப்பாகக் கவனிக்க வேண்டியது, அவைகள் ஆரவாரமின்றிக் காரியத்தை வெற்றிக்கரமாக நடத்துகிறது.

இதனைத்தான் கிருஷ்ணன் கீதையில் யோகம் மூலம் மனதைக் கட்டுப்படுத்தி, மனதைக் கலக்கத்துக்கு உட்படுத்தாமல் மன அமைதி மற்றும் கவனத்திறனை அதிகரித்து, கர்ம யோகத்தைச் செய்யவேண்டும். கர்மயோகம் செய்யும்போது ஞானயோகத்தை அறிந்து செயலைச் செய்ய வேண்டும் என்று உரைக்கிறான்.

கர்ம யோகத்தில் ஞான யோகம் என்பது , நான் யார்? நான் செய்யும் செயல் என்ன? செய்யும் செயலில் பயன் என்பது தன்னலம் மற்றும் சமுதாய நலன் அடங்கியுள்ளதா? செய்யும் செயலின் பயனில் செய்பவனுக்குப் பங்கு இருக்கிறதா? பலனை அனுபவப்பதில் செய்பவனுக்கு உரிமை இருக்கிறதா? சமுதாயத் தீங்கு விளைவிக்கும் செயல் என்றால் தவிர்ப்பது நலம் என்ற ஞானம் வருவது, அறம் அதாவது தர்மத்தின்பால் நின்று காரியங்களைச் செய்யவேண்டும் என்ற ஞானம் போன்ற அறிவுச் சிந்தனையுடன் ஒரு காரியத்தைச் செய்யும்போது, செய்பவனுக்கும் மனநிம்மதி மற்றும் அந்தச் செயலை இறுதியில் அனுபவிப்பனுக்கும் மனநிம்மதி உருவாகும்.

இதனால்தான் கீதையில் முதல் ஆறு அத்தியாயத்தில் ( முதல் ஷட்கத்தில்) மனதைக் கட்டுப்படுத்தித் தான் யார் என்பதனை அறியும்படி உபதேசிக்கிறான் கிருஷ்ணன். இதுதான் அடிப்படைக் குணம் வாழ்க்கையில் பூர்ணத்தை அடைய வேண்டும் என்றால்.‌

இப்படிப்பட்ட மனமானது கலக்கத்துக்கு உரியது. அவ்வப்போது கலக்கம் ஏற்படும். அப்போதெல்லாம் மனதை யோகத்தின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று கீதை 6-26 ல் மீண்டும் உபதேசிக்கிறான். அதாவது வெளிப்புறச் சிந்தனையிலிருந்து மனதை உள்புறமாகத் தன்னைப்பற்றியும் , ஆத்மாவைப் பற்றியும் சிந்திக்கும் பக்கம் திருப்பவேண்டும் என்று உபதேசிக்கிறான்.

"யதோ யதோ நிச்சரதி மநச்சஞ்சலம் அஸ்திரம்|
ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத்||"

யதோ யதோ- எங்கே யெல்லாம்
நிச்சரதி- கிளர்ச்சியைத் தூண்டும், வெளிப்புறச் சிந்தனை
மநச்சஞ்சலம்- மனக்கலக்கம்
அஸ்திரம்- நிலையற்றத் தன்மை
ததஸ்ததோ- அந்தத் தருணத்தில்
நியம்யைதத்- ஒழுங்குப்படுத்தல்,
ஆத்மந்யேவ- ஆத்மாவின் பக்கம், உள்புறச்சிந்தனை
வசம் - கட்டுப்பாடு
நயேத்- கீழ் கொண்டுவர வேண்டும்

வெளிப்புறச் சிந்தனைக் கிளர்ச்சியை உருவாக்கி மனக்கலக்கத்தை ஏற்படுத்தும். உள்புறச்சிந்தனை மனதைக் கட்டுப்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும். கவனத்திறனை அதிகரிக்கும் என்று மீண்டும் உபதேசிக்கிறான்.

மனதைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதனால்தான் மீண்டும் மீண்டும் உபதேசிப்பதைக் கீதையில் உணரமுடிகிறது. அதனால்தான் நமது எழுத்திலும் சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றதற்கான காரணம்.

கவனக் குவியல் செயல்திறனை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் செயலின் வெற்றி என்பது தருமத்துடன் கூடியதாக இருக்கும் என்பது உறுதி . அதன் மூலம் மனநிம்மதி , அதன்மூலம் பூர்ணம் என்பது தெளிவு.

பிறவிச் சுழலை அறுத்து பிறவியற்றத் தன்மையை அடைவது என்பதுதான் பரிபூர்ணம். அதன் வழிகளை மேலும் தொடர்வோம் .................... ..........................(தொடரும்)













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

பாமாலை (மூலம்)

பிராயக்ராஜ் யாத்திரை - 2 (திரிவேணி சங்கமம்)