பூர்ணம்-15

கீதையில் எவ்வளவோ நிறைய விஷயங்கள் இருக்க, ஒரு ஸ்லோகத்தை எடுத்துக்கொண்டு தானாகவே ஆராய்ந்து, சொல்லாத ஒன்றை கிருஷ்ணன் சொன்னதாகச் சொல்லி, பொய்ப் பிரச்சாரம் செய்து மனதைக் கலக்கிக் கொண்டிருக்கிறது நமது நாட்டில் ஒரு கூட்டம். ஆனால் அந்நிய மண்ணில் கீதையின் பெருமையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

வேறுபாடுகள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினம், ஆனால் வேறுபாடுகளை எவ்வாறு அணுகுவது , வேறுபாடுகளைப் பெரிது படுத்தாமல், கீதையில் சொல்லியபடி எல்லா உயிர்களிடத்திலும் இருக்கும் ஆத்மா ஒரே தன்மை என்றும் , அதன் பிறப்பிடம் பிரம்மம் என்ற ஒரே இடத்திலிருந்து என்ற புரிதலுடன் அணுகும் போது சமூகம் உருவாக்கிய  வேறுபாடு கலைந்து  அன்புப் பெருக்குச் சமூகத்தில் ஏற்படும். 

அதற்காக மனதை அமைதியாக,  தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும்.‌ ஆதலால் கிருஷ்ணன் கீதையில் 2 வது அத்தியாயத்தில் தொடங்கி ஆறாவது அத்தியாயத்திலும் தொடர்ந்து உபதேசிக்கிறான்.

ஸ்வாமி விவேகானந்தர், 

"The essential thing in religion is making the heart pure; the kingdom of heaven is within us, but only the pure in heart can see the king"

மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு மோக்ஷம் என்பது தொலைவில் இல்லை, அவர்களிடத்திலே இருக்கிறது. தூய்மையான மனதைக் கொண்டவர்கள் மட்டுமே பரமபத நாதனைக் காணமுடியும் என்று விளக்குகிறார். 

"த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ் தேஷூபஜாயதே|
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோத அபிஜாயதே||"  2-62 

"க்ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம: |
ஸ்ம்ருதிப்ரம்சாத் புத்திநாச: புத்திநாசாதா ப்ரணச்யதி"  2-63

கிருஷ்ணன் இரண்டாவது அத்தியாயத்தில், புலன்களினால் ஒருவன் ஒரு பொருளின் மீதான ஈர்ப்பு அல்லது ஆசை ஏற்படுகிறது. அது இல்லாமல் உயிர் வாழ முடியாது என்ற அளவுக்கும் அந்த ஆசைகள் செல்லலாம். ஏதோ காரணங்களினால் அது கிடைக்கவில்லை என்றால் கோபமாக மாறும். அந்தக் கோபம் புத்தி குழப்பங்களுக்குக் காரணமாக அமையும். குழப்பமான புத்தி தன்னையே அழிக்கும் அளவுக்குச் செல்லும் என்று புலன்கள் படுத்தும் அவதிகளை இரண்டாவது அத்தியாயத்திலே கூறுகிறான் 

"உத்தரேத் ஆத்மநா ஆத்மாநாம் நாத்மாநம் அவஸாதயேத்| 
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந:||" 6-5

பந்து - உறவு ரிபு - எதிரி, பகைவன் 

ஒருவன் மனத்தினால் நல்ல காரியங்களைச் செய்யவேண்டும், மனத்தினால் தன்னைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது. ஒருவனுக்கு மனமே நெருங்கிய உறவாகும். அதுவே அவனுக்குக் கொடிய எதிரியாகும் 

"பந்துராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித: 
அநாத்மநஸ்து சத்ருத்வே வர்தேதாத்மைவ சத்ருவத்||" 6-6 

எதனால் மனம் வெல்லப்படுகிறதோ அவனுக்கு அம்மனம் நல்ல உறவாகும். மனதை வெல்லாதவனுக்கு அதுவே கொடிய எதிரியாகும் என்று 6-6 கூறுகிறான். 

"ஜிதாத்மந: ப்ரசாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:| 
சீதோஷ்ண ஸூகதுக்கேஷூ ததா மாநாவமாநயோ:||" 6-7

சீதோஷ்ண-குளிர்ச்சி வெப்பம் , 
ஸூகதுக்கேஷூ - சுகம் துக்கம் 
மாநாவமாநயோ- மானம் அவமானம் 

வெப்பம் குளிர்ச்சி, சுகம் துக்கம்,மானம் அவமானம் இவைகளினால் கலக்கம் அடையாமலிருக்க வேண்டும் கர்ம யோகி. இப்படியிருப்பவனே கர்ம யோகம் செய்து அமைதியடைய முடியும் என்று மீண்டும் இரட்டைகளை மனதால் வெல்லவேண்டும் என்று மீண்டும் மீண்டும் உரைக்கிறான். 

இரட்டைகளை மனதால் வெல்வது என்பது மிகவும் கடினம். கலக்கம் ஏற்படுவது என்பது இயல்பு. ஆதலால்தான் பகவான் மனதைக் கட்டுப்படுத்த நினைப்பவன்  இரட்டைகளை முதலில் வெல்லவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறான்.‌

யோகம் அதாவது மனநிலையைச் சமப்படுத்தும் செயலைச் செய்பவனை "யோகி" என்று அழைத்து, அதற்கான தகுதி மற்றும் இடம் தேர்ந்தெடுப்பது , யோகம் செய்யும் முறை , ஆகாரம் பற்றியெல்லாம் ஆறாவது அத்தியாயத்தில் மேலும் தொடர்கிறான். 
                   ............ (தொடரும்)









கருத்துகள்

  1. நல்ல அறிவுரை சடகோபன்..
    நம் மாநிலத்தில் குறிப்பாக இந்த திராவிட கூட்டம் கீதையை எவ்வளவு தரம் தாழ்த்தி விளக்க முடியுமோ அவ்வளவு தரம் தாழ்த்தி மக்களிடையே பிரச்சாரம் செய்கின்றனர்.
    து.குஹன்

    பதிலளிநீக்கு
  2. தெளிந்த மனம் மிக அவசியம். அருமை சடகோபன்.

    பதிலளிநீக்கு
  3. எதனால் மனம் வெல்லப்படுகிறதோ அவனுக்கு அம்மனம் நல்ல உறவாகும். மனதை வெல்லாதவனுக்கு அதுவே கொடிய எதிரியாகும்

    Super ji.

    பதிலளிநீக்கு
  4. அற்புதம்...மனம் தெளிய வைக்கும் பதிவு, நன்றி ஸ்வாமின்... 🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எல்லைச்சாமி

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

பிராயக்ராஜ் யாத்திரை - 2 (திரிவேணி சங்கமம்)