நெஞ்சிலோர் நண்டு
*ஆண்களுக்கான மார்பக நோய் விழிப்புணர்வு புத்தகம்*
எனது நண்பர் சுதாகர் கஸ்தூரி எழுதிய நெஞ்சிலோர் நண்டு என்ற புத்தகத்தை, எனது பணி ஓய்வுக்குப் பிறகு படித்த முதல் புத்தகம்.
ஒரு தடவை "When bad things happen to good people" Harold S kushner எழுதிய புத்தகத்தையும் , "Man's Search for Meaning" Dr Viktor E Frankl எழுதிய புத்தகத்தையும் படித்து ஒப்பீடு செய்து இரண்டாவது புத்தகம் நடைமுறையை அனுபவத்தின் மூலம் உணர்ந்து வெளிபடுத்திய புத்தகம் என்பதனால் நன்றாக இருக்கிறது என்று எழுதியிருந்தேன்.
அதற்குச் சுதாகர் கஸ்தூரி அவர்கள் தான் அனுபவித்த அனுபவத்தின் வேதனையின் வெளிப்பாடு என்பதனால் , அதுவே நடைமுறைக்கு உகந்த உணர்வுகளை வெளிபடுத்தும் புத்தகமாக இருக்கும் என்று எழுதியிருந்தார்.
Emotional Intelligence வகுப்பில் Viktor E Frankel எழுதிய இந்தப் புத்தகமும் அவரது உணர்வு பூர்வமான தத்துவ வார்த்தைகளும் இடம் பெறும். அவரே பிற்காலத்தில் லோகதெரபி என்ற மருத்துவச் சிகிச்சையை உலகுக்கு வழங்கியவர்.
இப்பொழுது அவர் எழுதிய இந்தப் புத்தகம் என்பது அவர் சந்தித்த யாருக்கும் நிகழக்கூடாத ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையிலும் வந்து அவரை உலுக்கிய உணர்வு பூர்வமான நிகழ்வை எடுத்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அற்புதமான புத்தகம். படிக்கும் போது சில நேரத்தில் தயங்கி கண்ணில் நீர் வெளியேறும் நிகழ்வுகளைப் படிக்கும் அனைவருக்கும் கொண்டு வரும்.
அவரது எழுத்து நடை என்பது அனைவரும் சிலேகிக்கும் வண்ணம் நெல்லை தமிழில் அழகாக எழுதும் ஆற்றல் படைத்தவர். அவரது மற்ற புத்தகங்கள் இதனை வெளிப்படுத்தும்.
இந்தப் புத்தகம் என்பது மார்பக புற்றுநோய் பற்றியும், அதனால் ஏற்பட்ட நோயின் வலி பற்றியும், நோய்க்கான மருத்துவச் சிகிச்சை மூலம் அனுபவித்த பெருவலி பற்றியையும் படிப்பவர்களை உறைக்க வைக்கும், அதே நேரத்தில் நோய், நோய்க்கான மருத்துவச் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் அறிவு உணர்வு பூர்வமான அருமையான புத்தகம்.
மார்பக நோய் என்பது பெண்களுக்கு மட்டுமே வரும் என்று நினைப்பு அனைவருக்கும் உண்டு. ஓரளவு பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது, ஆனால் முழுவதுமாக இந்தியாவில் இல்லை என்றே சொல்லலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும் ஒதுக்கி தள்ளி 100% விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
இதில் ஆண்கள் என்றால் விழிப்புணர்வு என்பது பூஜ்யம்.
ஆசிரியர் சுதாகர் கஸ்தூரி மருந்துகளைத் தயாரிக்கும் சோதனை , புற்று நோய்க்கான இயந்திரங்களை இயக்கும் மென்பொருள் (Softwares) வேலை செய்து வருபவர். அவருடைய வேலையை இங்கே குறிப்பிடுவது என்பது , அந்தத் துறையில் இருந்தும் அவரால் தொடக்க நிலையில் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை என்பதனையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது.
மார்பகம் என்பது பெண்களுக்கு மட்டுமே என்று உலகமே நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஆண்களுக்கு இல்லாத ஒன்றில் இருக்கிறது என்று சொல்லுவதை உலகம் நம்புவது என்பது கஷ்டம். அதனை ஆசிரியர் பெண்களுடன் இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது பெண்கள் அவரைப் பார்த்த பார்வையையும் , அதனால் அவருக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்ட நிகழ்வுகளைக் கூறும்போது ஆண்கள் யாருக்கும் இல்லாத ஒன்றில் வரக்கூடாது என்று நீர் கண்ணில் எட்டிப் பார்க்கும்.
ஹீமோ சிகிச்சையில் அனுபவித்த வலி என்பது , உயிர் போய்த் திரும்பி வருவதுபோல் என்று அவர் 8 ஹீமோ சுழலையும் மருத்துவ நுணுக்கத்துடன் விழிப்புணர்வு பதிவாக, அதே நேரத்தில் நோயாளி சந்திக்கும் உணர்வு மாற்றங்களையும் நீர் கண்ணில் ததும்பும் வண்ணம் அனுபவத்தை , ஆண்களுக்கு விழிப்புணர்வு தகவலாக இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பது என்பது மிகவும் சிறப்பு.
ஆசிரியர் அவருக்கு இந்தக் கஷ்டமான சூழ்நிலையில் உதவிய அனைவரையும் நினைவு கூர்ந்து அவ்வப்போது நன்றி தெரிவிப்பதை மறந்து விடவில்லை. ஹீமோ சிகிச்சை என்பது மறதியையும் வலியின் மிகுதியால் உருவாக்கலாம் என்பதனை நாம் நினைவு கொள்ளவேண்டும். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.
இதனை எழுதுவதற்கு ஒரு மன தைரியம் வேண்டும். அதனை ஆசிரியர் கொண்டுவந்து , அதற்கு அவரது மனைவி துணையாக நின்றதுதான் இந்தப் புத்தகம் ஆண்களுக்கு விழிப்புணர்வு புத்தகமாக இன்று பல வாசகர்களின் கையில் இருப்பதற்குக் காரணம். அவரது குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய நன்றியை வாசகர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியரின் மன தைரியத்துக்கும் நன்றி.
காலத்தால் அழிக்கமுடியாத நோயை சுமந்து நிற்கும் இந்தப் புத்தகமும் காலத்தால் அழியாத விழிப்புணர்வு புத்தகமாக விளங்கும்.
சுதாகர் கஸ்தூரி மற்றுமோர் Viktor E Frankel என்றால் மிகையாகாது.
* இந்தப் புத்தகம் "சுவாசம் பதிப்பகம்" வெளியீடு. வாங்க வேண்டும் என்றால் சுவாசம் பதிப்பகத்தை அணுகவும்*
மகரச் சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக