"ஆலிலையில் ஆற்றல்"

 


ஒரு சிறுவன் ஆலிலைக் கண்ணன் படத்தைப் பார்த்து, எவ்வளவு அழகாக ஆலிலையில் சயனித்து, ஒரு காலை தூக்கி அதன் கட்டைவிரலை வாயில் வைத்து சுவைத்துக் கொண்டிருக்கிறான். இதன் அர்த்தம் என்ன? என்று கேட்க அனைவரும் வியந்து நின்றனர்.


இந்தச் சிறுவனின் கேள்விக்குப்பின் பெரிய தத்துவம் ஒன்று உள்ளது, அந்தத் தத்துவத்தின் குறியீட்டாகவே இந்த ஆலிலைக் கண்ணன் உள்ளான் என்றும் , அவற்றை நாம் ஆழ்வார்கள் பாசுரங்களின் மூலம் நவீன அறிவியியின் துணைக்கொண்டும் ஒரளவு அறியமுற்படுவோம்.


பேதை குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாத கமலங்கள் வந்து காணீரே! பவள வாயீர் வந்து காணீரே!! என்று பெரியாழ்வார் ஆலிலைக் கண்ணனின் அழகை இந்தச் சிறுவன் போல் ரசித்துள்ளார் என்றும் தெரிகிறது.


ஆழ்வார்கள் ஆலிலைக் கண்ணனைப் பல பாடல்களில் பாடியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை இப்பொழுது காண்போம்


திருப்பாணாழ்வார் “ ஆலமாமரத்தின் இலைமேல் ஒருபாலகனாய், ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்” என்றும்,


பெரியாழ்வார் “ ஐய நாவழித்தாளுக்கு அங்காந்திட, வையம் ஏழு கண்டாள் பிள்ளை வாயுளே “ என்றும்,


“உண்டிட்டு உலகினையேழும் ஒராலிலையில் துயில் கொண்டான்” என்றும், “ வாயுள் வையம் கண்ட மடநல்லார், ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம் “ என்றும்


திருமழிசையாழ்வார் “ பண்டும் இன்றும் மேலும் ஆயோர் பாலானாகி ஞாலம் ஏழும், உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற ஆதிதேவனே” என்றும்


நம்மாழ்வார் “ ஒராலிலைச் சேர்ந்த எம்பெருமான் மாயனையல்லது, ஒருமா தெய்வம் மற்றுடையமோயாமே “ என்றும்


"செழுமூவுலகும் தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து, ஊழி ஊழி தலை அளிக்கும் “ என்றும்


ஆழ்வார்கள் அனைவரும் இந்த ஆலிலைக் கண்ணனைப் புகழ்ந்து, அவனே ஆதிதேவன் என்றும், ஞாலம்( உலகம்) ஏழும் உண்ட எம்பெருமான் என்றும் சொல்வதன் மூலம் ஒரு பெரிய தத்துவத்தை இங்கு நாம் பார்க்கிறோம்.


நாம் அனைவரும் அறிவியல் பாடத்தில், சக்தி திறனைப் ( Energy) பற்றிப் படிக்கும் பொழுது “ Energy is neither created nor destroyed” என்று படித்துள்ளோம். சக்தியை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. இருக்கும் ஒரு சக்தியே, மற்றொரு சக்தியாகப் பரிணாமம் எடுக்கிறது என்பது நவீன விஞ்ஞானம்.


ஆழ்வார்கள் பாசுரத்திலும் “ ஆதி தேவனே, ஒரு மா தெய்வம் “ என்று ஒரு சக்தி மட்டுமே பிரளய காலத்தில் இருக்கும், அதுவே பரபிரம்மம், ஸ்ரீமந் நாராயணன் என்று கூறுகிறார்கள். அவனே பெரிய சக்தி, அதிலிருந்து சிருஷ்டி காலத்தில் ஏழு உலகங்களும், பஞ்ச பூதங்களும், ஐம் புலன்களும், ஞானக் கர்ம இந்திரியங்கள், மனசு போன்ற தத்துவங்களும், எல்லா ஜீவராசிகளும் உண்டாகின்றன. மீண்டும் பிரளய காலத்தில் அவனிடம் சென்று சேர்ந்து விடும் என்பதன் மூலம், ஆற்றல் சக்தி ஒன்றே என்றும், அதற்குத் தோற்றமும் அழிவும் இல்லாத சக்தியாக இருக்கிறது என்று அறியப்படுகிறோம்.


பிரளய காலத்தில் அனைத்தையும் தன் வயிற்றுக்குள் வைத்துக் காப்பாற்றுகிறான். அதனால்தான் பிள்ளை வாயுள் வையம் ஏழும் கண்டாள் என்று சொன்னார்கள். இதையே ஆலிலைக் கண்ணன் குறிக்கிறது.


ஒன்றும் இல்லாத சமயத்தில பிரளய காலத்தில் சிறிய உருவத்தில் பாலகனாய், ஏழு உலகங்களையும் உண்டு வயிற்றில் அடக்கி, ஒரு சிறு இலை மேல் துயில் கொள்வதுபோல், ஒரு சிறிய உருவத்தில் பெரும் சக்தியான பரபிரம்மம் இருப்பதாகக் குறிக்கிறது.


மூலசக்தி என்பது அணு வடிவில் இருக்கும் என்பதனை குறியிட்டு முறையில் இந்த ஆலிலைக் கண்ணன் படம் சிறிதாகக் காண்பிக்கிறது.


இவ்வாறாக நவீன அறிவியலுக்கு , விஞ்ஞானம் ஒத்தும் போகும்படி, இருக்கும் ஒரு சக்தியிடமிருந்து மற்ற சக்திகள் தோன்றி, அந்த ஒரு சக்தியுடன் கடையில் சிறியதாக ஒன்றி நிற்கின்றன. இதைத்தான் மெய்ஞானம் பரபிரம்மம் என்று கூறுகிறது.


உடனே சிறுவன், ஆலிலைக் கண்ணன் பரபிரம்மம் என்றால் சரி, ஆனால் காலை தூக்கி சுவைத்துண்ணும் படி செய்ததன் காரணம் என்று கேட்க, இந்தக் கேள்விக்கான பதிலையும் ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு நவீன அறிவியலுக்கு ஒத்தும் போகும்படி சிலவற்றைக் காண்போம் .


“கைவண்ணம் தாமரை வாய் கமலம் போலும், கண்ணினையும் அரவிந்தம் அடியும் அஃதே”


என்று திருமங்கை ஆழ்வார் திருநெடுந்தாண்டகம் பாசுரம். அஃதாவது அவனுடைய திருக்கை ஒரு தாமரைமலர், திருப்பாதம் ஒரு தாமரை மலர், மற்றும் திருவாய் மற்றொரு தாமரைமலர். தாமரை என்ற திருக்கையால் தாமரை என்ற திருவடியைப் பிடித்து, தாமரை என்ற திருவாயில் சேர்த்துள்ளான் என்பது ஆழ்வார் அநுபவம்.


பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும், எம்பெருமான் வயிற்றுக்குள் அடக்கி வைத்திருப்பதை மேல் பார்த்தோம். ஆலிலைத் துயின்ற கண்ணன் திருவாயில், அவன் திருவடியை வைத்திருக்கும் காரணத்தை, கீழ்கண்ட நான்கு விளக்கத்தின் மூலம் பார்ப்போம்


1. எம்பெருமான் திருப்பாதம் தேன் போன்ற இனிமையானது என்று அடியவர்கள் சொல்கின்றனர். அடியவர்கள் அந்தத் தேனை பருகுவதற்கு ஆசைப்படுகின்றனர். எம்பெருமான் தன் திருப்பாதத்தின் சுவையைப் பிரளய காலத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தானே சுவைத்துப்பார்க்கிறான்


2. பிரளய காலத்தில் வயிற்றுக்குள் இருக்கும் ஏழுலக ஜீவராசிகளுக்கும் தன் திருவடித் தேனை உணவாகக் கொடுத்துக் காப்பாற்றுகிறான். ஆதலால் திருப்பாதத்தை வாயில் வைத்துள்ளான்.


3. பிரளய காலம் ஆபத்தான காலம், ஏழுலக ஜீவராசிகளும் வயிற்றிலிருந்து வெளியில் வரக்கூடாது என்பதற்காக, தனது திருப்பாதம் கொண்டு மூடி வைத்துள்ளான்.


4. திரிவிக்ரம அவதாரம் எடுத்து இந்த அடியைக்கொண்டு மண் முழுதும் அளந்தான்.


“ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப,


ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து,


எண்மதியும் கடந்து அண்ட மீது போகி,


இரு விசும்பினூடு போய்எழுந்து, மேலைத்


தண்மதியும் கதிரவனும் தவிரயோடித்


தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு


மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை


மலர்புரையும் திருவடியே வணங்கினேனே.


என்று திருமங்கை ஆழ்வார் திரிவிக்ரம அவதாரத்தில் மண்ணை அளந்ததைப்பற்றிப் பாடியுள்ளார்.


“மாமுதலடி போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி


மண்முழுதும் அகப்படுத்து”


என்று நம்மாழ்வார் திருவிக்ரம அவதாரத்தில் மண்முழுவதும் அகப்படுத்தி அளந்ததைப் பற்றிப் பாடியுள்ளார்.


திரிவிக்ரம அவதாரத்தில் அளந்து அகப்படுத்திய முழு உலகங்களும் சரியாகத் தன் வயிற்றுக்குள் பிரளய காலத்தில் வந்துவிட்டனவா என்று, அன்று அளந்த திருவடிகளினால் பிரளய காலத்திலும் அளந்து சரிப்பார்த்துக் கொள்வதற்காகத் திருவடியை திருவாயில் வைத்துள்ளான் என்ற விளக்கம் பொருந்தும் படி இருப்பதையும் பார்க்கிறோம்.


பிரளய காலத்தில் அனைத்து உலகங்களையும் உள்ளடக்கிய எம்பெருமான், சிருஷ்டி காலத்தில் அனைத்தையும் எம்பெருமான் தன்னிடமிருந்து பிறப்பிக்கிறான்.


அன்று திருவிக்ரம அவதாரத்தில் அளந்த திருவடிகளினால் பிரளய காலத்தில் அளக்கிறான் என்ற தத்துவம், இன்றைய நவீன விஞ்ஞானத்தில் தரக்கட்டுப்பாடு ( QUALITY CONTROL QC) எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை அழகாகக் காட்டியுள்ளதாக அமைந்துள்ளது. Qulality system, Quality Audit, Quality Control இந்த மூன்றினையும் தெளிவாக எளிதாக விளக்கும் படி அமைந்துள்ளது.


பரபிரம்மம் ஸ்ரீமந்நாராயணன் என்பதனை, நம்மாழ்வார் அவரது ஊரான ஆழ்வார்திருநகரி எம்பெருமானைப் பற்றிப் பாடும்பொழுது,


“.ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லாவன்று ,


நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்,


குன்றம் போல் மணிமாட நீடு திருக்குருகூர் அதனுள், நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே”


என்று பிரளய காலத்தில் யாதும் ஒன்று இல்லாத காலத்தில் பரபிரம்மமான ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே யாவற்றையும் உள்ளடக்கி, மீண்டும் சிருஷ்டி காலத்தில் படைக்கிறான் என்று நம்மாழ்வார் தெளிவாகக் கூறியுள்ளதையும் அறிவோம்


“ நின்றியங்கும் ஒன்றலா உருக்கடோறும் ஆவியாய்


ஒன்றியுள் கலந்துநின்ற நின்ன தன்மை இன்னதென்று


என்றும் யார்க்கும் எண்ணிறந்த ஆதியாய் நின்னுந்திவாய்


அன்றுநான் முகற்பயந்த ஆதிதேவன் அல்லையே”


என்று திருமழிசை ஆழ்வார் , எம்பெருமானை ஆதிகாரணம் என்றும், பிரளய சிருஷ்டி அவனிடம் மட்டுமே உள்ளது என்றும் தெளிவாக இந்தப் பாசுரத்தில் காட்டியுள்ளார்.


இவ்வாறாக இவ்வுலகிலுள்ள சக்தி அனைத்தையும் ஆலிலைத் துயிலும் கண்ணன் திருவயிற்றில், பிரளய காலத்தில் அவனிடம் ஒன்றாகப் பாதுகாப்பாக வெளியில் வரமுடியாத வண்ணம், வாயை (முகதுவாரத்தை) மூடிக்கொண்டு இருப்பதைக் காண்பிக்கும் வண்ணம், ஆற்றல் அனைத்தும் ஆலிலையில் என்று சொல்லும் வண்ணம், ஆலிலைக் கண்ணன் அழகாகக் காட்டப்பட்டுள்ளது.


மகர சடகோபன் 

தென்திருப்பேரை 

*** சர்வம் கிருஷ்ணமயம்" 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூர்ணம்-15

பூர்ணம் - 13

பூர்ணம் - 17