இயற்கையிலே பெண்ணின் சிறப்பு

 
                                   


நான் சமீபத்தில் ஆதி இந்தியர்கள் என்ற புத்தகம் வாசித்தேன். அதிலில் தொல் ஆய்வு என்பது இப்பொழுது இரண்டு முறையில் ஆராயப்படுகிறது என்பதனைத் தெரிவிக்கும் புத்தகம்.

ஒன்று தாய் வழி உறவு , மற்றொன்று தந்தை வழி உறவு .

தந்தை வழி உறவு Y குரோமோசோம் வைத்து அறியப்படுகிறது. அதாவது பெண்ணிடம் இருப்பது XX , ஆணிடம் இருப்பது XY , அதாவது ஆண் என்பதனை உறுதிப்படுத்துவது Y குரோமோசோம். அது தந்தை மூலமாக ஒருவனுக்குக் கடத்தப்படுகிறது. இதுதான் பாரதீய மரபில் கோத்ரம் முறை என்று அழைக்கப்படுகிறது.

இதில் ஒரு வேடிக்கை என்று அடியேன் பார்த்தது, பெண்ணின் துணை ஆணுக்குத் தேவை (XY) ஆனால் பெண்ணுக்கு ஆண் துணை (XX) தேவையில்லை.

அதே போல் "மைட்டோ காண்டிரியல் என்பது 23 வகையான குரோமோசோமில் வராது. ஆனால் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இது மிகவும் ஒரு முக்கியமான ஒன்று . இதுவே "Power of Cells" என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த மைட்டோகாண்டிரியல் நாம் உட்கொள்ளும் உணவின் சத்துகளைப் பிரித்து உயிர் வாழ்வதற்கான சக்தியைக் கொடுக்கிறது . இது ஒரு உயிரினத்திற்குத் தாயிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது. தந்தை இதனை அவருடைய சந்ததியினருக்குக் கடத்த முடியாது. தந்தைக்கும் அவரது தாயிடமிருந்து மட்டுமே பெறப்படுகிறது. தாய்வழி உறவை இதன் மூலம் அறியலாம்.

இங்கேயும் உடலில் ஒரு உயிர் தரிப்பதற்கு ஒரு பெண்ணின் துணைத் தேவைப்படுகிறது.

இன்னொரு இனிமையான சம்பவம் ஒரு மருத்துவக் கட்டுரை படிக்கும்போது எனக்குக் கிடைத்தது. சேர்க்கையின் போது இலட்சக்கணக்கில் விந்தணுக்கள் வெளிவர அனைத்தும் விரைந்து முட்டையை நோக்கி விரைந்து செல்ல, பெண்ணின் கருவிலிருக்கும் முட்டையே ஒரு திரவத்தைச் சுற்றிலும் (Chemoattractants) பரப்பி , இலட்ச கணக்கில் விரைந்து வரும் விந்துக்களில் ஒன்றை மற்றும் இந்தத் திரவத்தின் வாசனையால் உந்தப்பட்டு ( Chemotaxis) , வேகத்தை அதிகரித்து முட்டைக்குள் செல்ல அனுமதிக்கிறது. ஏனைய விந்துக்களை உள் அனுமதிக்க முட்டை நிராகரிக்கிறது என்பது மருத்துவ விஞ்ஞானம். இங்கே முட்டைதான் விந்துவைத் தேர்ந்தேடுக்கிறது. இங்கேயே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் என்பது பெண்ணிடம் தான் இயற்கையாக இருக்கிறது என்பது நிதர்சன உண்மை.

பெண் இயற்கையாகவே அவளைச் சார்ந்து சமுதாயம் இருக்கும் தன்மையை உருவாக்குகிறாள் என்பதனைத்தான் மேற்கூறிய விஞ்ஞானத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அவளே உலக உயிர் அனைத்துக்கும் சக்தியைக் கொடுக்கும், அன்புடைமையைக் கொடுக்கும், சக்தியின் மூலம் வீரத்தைக் கொடுக்கும் இயற்கை அளித்த கொடை வள்ளலாக இருக்கிறாள் என்பதும் தெரியவருகிறது.

தாம்பத்ய வாழ்க்கையில் முதலில் பெண் இறந்து விட்டாள் ஒரு ஆண் பலத்தை இழந்து உடல் தளர்ந்து பலவீனப்படுகிறான். சில சமயங்களில் அவனது வாழ்க்கையும் முடிந்து விடுகிறது. ஆனால் ஆண் இறந்த பிறகு பெண் தனிமையில் பலம் பெற்றுச் சமுதாயத்தில் எழும் பிரச்சினைகளைச் சமாளித்துத் தன்னையும், தன்னைச் சார்ந்து நிற்பவர்களையும் உயிர் வாழச்செய்து நிமிர்ந்து நிற்கிறாள். இதுவும் உண்மை, நம் வாழ்க்கையில் முன் நடக்கும் நிகழ்வுகளே சாட்சி.

அவளுக்குச் சிறப்பு என்பது எது மூலமாக வருகிறதோ , அந்தப் புனிதத்தை, கொடை சிறப்பை அரஜாகத்தின் உச்சிக்குச் சென்று, மனித நேயம் இல்லாமல் மிகவும் கேவலமாக அருவருவருக்கும் வண்ணம் ஆறாவது அறிவு படைத்த கேவல ஜந்துக்கள் நடந்து கொள்கிறது என்றால் இதுதான் சமுதாயப் பரிமாணம் என்றால் மானுடம் தோற்றது. மானுடம் தலைகுனிந்து நிற்கிறது என்பதுதான் கேவலமான பரிணாமம்.‌

விலங்கினங்களில் பெண்ணிடமே பலம் இருக்கிறது. சிங்கத்தில் பெண் சிங்கமே வேட்டை செய்வதில் திறன் படைத்தது. பெண் இனமே உயிர் வாழ்வதற்கான உணவை சேகரித்து, குட்டிகளுக்கு வழங்குகின்றன.

ஆதலால் முதன்முதலில் மனிதன் உலக வரலாற்றில் பெண் தெய்வங்களை வணங்கினான் என்பதற்கான சான்றுகள் பல தேசங்களில் கிடைக்கின்றன. இது உண்மையான பரிணாமம்.

காட்டில் வேட்டையாடி உணவை சேகரிக்கும் வரை மனிதனில் பெண் ஆதிக்கமும், பெண் வழி உறவு மூலமாகச் சமுதாயம் அறியப்பட்டது என்பதும் தெரிய வருகிறது. இன்றும் உலகில் சில பகுதிகளில் பெண் வழி உறவு மூலமே சமுதாயம் அறியப்படுகிறது, குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் இன்றளவும் சில சமுதாயங்களில் உள்ளது என்பதனை அறிகிறோம்.

உழவுத் தொழில் வரும்போது சிறிதுசிறிதாகப் பெண்ணை வீட்டில் வைத்துச் செயற்கையாக ஆண் ஆதிக்கம் செய்து சமுதாய நகர்வுகள் கடவுள் வரைக்கும் சென்று சேர்த்தது என்பது வரலாறாக உள்ளது.

இயற்கையில் பெண்ணுக்கே பலம், அதனால்தான் ஒரு தேசத்தையோ , ஒரு இயற்கையின் வடிவத்தையோ பெண்ணாக மதித்துப் பெயரிட்டு , வழிபடுகிறோம்.

அதனால்தான் பெருமாள் பலம் பொருந்தியவராக இருந்தாலும், தாயார் கடைக்கண் பார்வை இல்லாமல் அவனால் ஒன்றும் செய்யமுடியாது என்ற தத்துவத்தை வைத்து, தாயாரின் பலம் மற்றும் வலிமை காட்டப்பட்டது. ஆண் பெண் சமத்துவ நிலை தத்துவமாக இருந்தாலும் அதாவது பெருமாளும் தாயாரும் சம இருக்கையிலிருந்தாலும் , தாயாரின் கடைக்கண் பார்வை அசைவில் உலகை இயக்குகிறான் என்ற தாயாரின் வலிமை காட்டப்பட்டது‌.

அதே மாதிரி , சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்ற சைவ சித்தாந்தமும் , ஆண் பெண் சமத்துவத்தின் நிலையாக இருந்தாலும் சக்தியின் வலிமை பெரிதாகக் காட்டப்பட்டது.

பாரதீய சமய மரபில் இரண்டு பெரிய சமய பிரிவுகளும் ஒன்றாகத் தாய்க்கு முதன்மைக் கொடுத்து , தாய் தந்தையை வழிபட வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.

மாதா, பிதா,குரு, தெய்வம் என்று மாதாவின் மூலம் மற்றவை அனைத்தும் உணரப்படுகிறது என்பதுதான் பாரதீய மரபாக இருந்து வருகிறது. இதுதான் உண்மை தாய் காட்ட தந்தை அறியப்படுகிறான்.

மேலும் சிவன், விஷ்ணு கோவிலுக்குச் சென்றால் முதலில் தாயாரை (சக்தி) சேவித்து அவளுடைய துணக்கொண்டு தந்தையான சிவனையோ, விஷ்ணுவையோ அடைந்து வழிபடுவது என்பதுதான் வழிபடும் பாரதீய மரபாகச் சமய நூல்கள் வலியுறுத்துகின்றன.

இன்னொன்றும் சிறப்பாகத் தமிழ்மொழியில் அமைந்துள்ளதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். நட்சத்திரங்கள் 27ல் , இரண்டு நட்சத்திரங்களை மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் வழங்குகிறோம். ஒன்று திருவோணம் , மற்றொன்று திருவாதிரை. முதலான திருவோணம் என்பது விஷ்ணுக்கான நக்ஷத்திரம். இரண்டாவதாகச் சொல்லப்பட்ட திருவாதிரை என்பது சிவனுக்கான நக்ஷத்திரம். இருவருமே திருவான தனது தேவியர்களுக்குத் தனது உடம்பில் இடம் கொடுத்துப் பிரியாமல் நிற்கிறோம் உலகை இயக்கி காப்பதற்காக என்று உலகியல் தத்துவத்தையும், உலகியல் வாழ்க்கையில் ஆண்பெண் இருவருமே என்றாலும் , சக்தி என்ற சொல்லுக்குப் பாரதீய மரபிலும் பெண்ணுக்கே முதலிடம் என்று சொல்லாமல் சொல்லப்படும் உண்மை. (சக்தி இல்லையேல் சிவன் இல்லை, தாயார் இல்லையேல் அங்குப் பெருமாள் இல்லை என்பதுதான் பாரதீய மரபு)

இன்னும் சில ஊர்களில் பெண் வழி உறவே மதிக்கப்படுகிறது, பெரிது படுத்தப்படுகிறது, வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அப்படி ஒரு ஊரில் பிறந்தவன் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.

நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் முதலில் பெண் வழிபாடும், அதன் பிறகு சிந்து நாகரிகத்தில்( இந்து) ஆண்பெண் என்ற சமநிலையைப் பாவித்து, அதற்குப் பிறகு தோன்றிய சமய சமுதாயப் பரிணாம வளர்ச்சியில் ஆண் ஆதிக்கச் சமுதாயம் வளர்ந்து இன்று சமுதாயம் ஆண் பார்வையில் இருக்கிறது.

ஆனால் சமய பரிணாமத்தில் ஆண் ஆதிக்கம் ஏற்பட்டுச் சமுதாயப் பார்வை மாறினாலும் பாரதம் பெண்களுக்கு என்று தனித்தவொரு இடத்தை வழங்கியுள்ளது. சக்தி வழிபாடு என்பது பாரதீய சமய மரபில் இன்றளவும் முக்கியமாக இருக்கிறது. சமுதாயம் பெண் தெய்வ வழிபாட்டைப் பெரிதும் போற்றி வழிபட்டு வருகிறார்கள். ஆனால் சமுதாயம் பல மாற்றத்தினால் சாதி மதம் அனைத்திலும் இன்று ஆண் ஆதிக்கத்தை நோக்கியே நிகழ்வுகளை நகர்த்துகிறது. இது சமயத்தில் குற்றம் இல்லை, புரிதலில் உணர்வில் குற்றம் இருக்கிறது. சமுதாயப் பார்வையில் குற்றம் இருக்கிறது.

நமது தமிழகத் தென் பக்கத்தில் காணப்படும் இசக்கி (இயக்கி)அம்மன் வழிபாடு என்பது அவளே இயக்குபவள் என்ற அர்த்தத்தில்தான் வழிபட்டு வருகிறார்கள். அவளது கையில் குழந்தையை வைத்துக்கொண்டு இந்த உயிரினத்தைக் காக்கும் தெய்வமாக , காவல் தெய்வமாக இந்தச் சமுதாயத்தில் அறியப்படுகிறாள். அவளே வீரம் பொருந்தியவள், காக்கும் திறமைப் படைத்தவள் என்பதனைக் காட்டும் வண்ணம் இங்கு இருக்கிறாள் என்றால் சமய பரிணாமம் ஆண் ஆதிக்கத்தை நோக்கி சென்றாலும் பாரதம் அதில் தனித்து நின்று மனித குலம் என்பது , ஏன் உலக உயிரினங்கள் அனைத்தும் பெண் இனம் இன்றித் தழைத்தோங்கி உலகப் பரிணாம வளர்ச்சியைக் காட்ட முடியாது என்ற உண்மையைச் சமயத்தின் மூலம் விளக்குகிறது.

மேலும் பாரதீய இரண்டு பெரிய சமய மரபுகளும் , சைவமும் வைணவமும் தாய் தந்தையாக இறைவனைச் சேர்ந்து சமநிலையில் பார்க்கும் உயர்ந்த நிலையை அளித்துப் பரிணாமத்தின் உச்சத்தில் நிற்கிறது.

பெண் வீரமகளாக எழுந்திருந்து வரும் காலம் விரைவில் மீண்டும் பரிணாம சுழற்சியில் ஏற்படும். அது வெகு தொலைவில் இல்லை என்பது உலகச் சூழ்நிலையில் தெரிகிறது.

ஒவ்வொரு ஆணும் சமூகத்தில் எவ்வாறு பெண்களிடம் பழக வேண்டும், அவள் ஒரு காமப் பொருள் அல்ல, உன் காவியத்தையும் காக்க வந்த காவல் தெய்வம் என்றும், அவளின்றி இவன் இல்லை என்ற உண்மையையும், அவளே முதல் குரு என்றும் சிறு வயது முதல் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்தச் சமுதாய மாற்றமும் ஒவ்வொரு வீட்டிலும் பெண் மூலமே நடக்கும்.

பெண் பலமே பெரிது. பெண் பலத்தைப் போற்றுவோம், மதிப்போம் , பாதுகாப்போம்.

மகர சடகோபன்
தென்திருப்பேரை

கருத்துகள்

  1. உண்மையை உரக்க கூறியுள்ளீர்கள். ஒரு குடும்பத்தில் பெண் சிறப்பாகஇருந்தால் அந்த குடும்பம் சிறப்பாக இருப்பதை நேரில் பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. நாரி சக்தி போன்ற வேண்டிய
    உண்மையை மிக அழகாக இந்திய சரித்திர வரலாறு மூலம் குறிக்கோள்கள் காட்டி
    நமது கோத்திர முறை எப்படி உருவானது என்பதையும் தாயின் சிறப்பையும் சரித்திர வரலாறு மூலம் தெளிவாக
    பலரும் உணர்வும் படி தங்களது கருத்துக்களை
    பதிவு செய்திருக்கிறீர்கள்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல தலைப்பு சடகோபன் நன்றாக இருந்தது இருந்தாலும் என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன்.

    "பெண் வீரமகளாக எழுந்திருந்து வரும் காலம் விரைவில் மீண்டும் பரிணாம சுழற்சியில் ஏற்படும். அது வெகு தொலைவில் இல்லை என்பது உலகச் சூழ்நிலையில் தெரிகிறது" .

    அருமையான கட்டுரை, தலைப்பு, விஷயம்.

    தற்போதைய சமூகத்தில் உள்ள பெண் என்பவள் அளவுக்கு அதிகமான வீர மகளாக மாறிவிட்டாளோ என்ற எண்ணம் தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

    இந்த காலகட்டத்தில் நடக்கும் திருமணம் போன்ற விஷயங்களில் பெண்களே முடிவெடுக்கின்றார்கள் என்றும் பெண்களே ஆண்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது இன்னும் சொல்லப்போனால் பெண்கள் தங்களுக்கு திருமணமே தேவை இல்லை என்றும் ஆண் துணையின்றி தங்களால் வாழ முடியும் என்ற துணிவிற்கு வந்துவிட்டன ஆகவே உங்களது மறுசுழற்சி கூற்றுக்கு ஏற்றார் போல் அவர்கள் வீர மகளாக அல்ல அதற்கும் மேலாக மாறிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூர்ணம்-15

பூர்ணம் - 13

பூர்ணம் - 17