வாரம் (கிழமையில் தொகுப்பு)
உரிமை என்றால் ஒருவனுக்குச் சட்டப்படி உரித்தான ஒன்றை உறுதிப்படுத்தி, அதன்மேல் சுதந்திரமாக எப்பொழுது வேண்டுமானாலும் அவனது/ அவளது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் ஒரு விதமான செயலுக்கான வார்த்தை.
ஒரு சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவது என்பது சட்டப்படி எனது உரிமை என்று சொல்லாடல் உபயோகப்படுத்துகிறோம். இந்த உரிமை என்பது சட்டத்தினால் மாற்றப்படும் உரிமை.
இதில் சில உரிமைகள் என்பது இயற்கை விதியின் படி நிகழும். அதை மாற்ற முடியாது. தாய் தந்தை உறவு உரிமை என்பது இயற்கையால் / இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமை. இந்த உடம்பின் மூலம் உயிர் அறியப்படும் வரை அந்த உரிமைத் தொடரும்.
தந்தை மற்றும் தாய் என்பவர்கள் மகன் மகளுக்கான சொத்து, மகன் மற்றும் மகள் என்பவர்கள் தாய்க்கான தந்தைக்கான சொத்து.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது உரிமை என்பதற்குச் சொத்து என்றும் புரிகிறது. அதுவும் உண்மைதான்.
உரிமை என்பது உரி என்ற வேர்ச்சொல்லிருந்து வருகிறது. உரித்தான பொருளின் மீது ஆதிக்கம் அல்லது அன்பு செலுத்துவதை உரிமை என்று பொருள் கொள்ளலாம்.
கிழமையின் தொகுப்பு வாரம் . இதுவும் உரிமை என்பதனை உணர்த்துவதை நமது இலக்கியங்கள் மூலம் அறிவோம்.
"புணர்தல் பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்"
புணர்தல் பழகுதல் உணர்தல் மூன்றுமே நட்புக்கு வழிவகுக்கும் என்றாலும், உணர்ச்சிதான் நட்புக்கு உரிமை தரும் என்று உணர்ச்சி மூலம் கிடைக்கும் நட்புக்கு ஏற்றத்தைக் கூறுகிறார்.
இங்கே கிழமை தரும் என்ற சொல்லுக்கு உரிமை தரும் என்று பொருள் காண்கிறார் பரிமேலழகர்.
"பழமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு"
பழமை எனப்படுவது என்ன என்ற வினாவிற்குப் பதில் கூறும் வகையில் அமைந்த குறளில், அது பழமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு என்று பதில் கூறுகிறார்.
இங்கும் கிழமை என்பதற்கு உரிமை என்றே பொருள் கொள்கிறார் பரிமேலழகர்.
கிழவன் என்ற சொல்லுக்கு உரிமையாளன் என்றே பொருள். குறிஞ்சிக் கிழவன் என்று முருகனுக்கான பெயர். அதாவது குறிஞ்சி நிலத்துக்கு உரிமையாளன் என்று பொருள்.
ஞாயிற்றுக் கிழமை என்றால் ஞாயிறுக்கு உரிமையான நாள் என்பதனால் அதன் பெயர் வந்தது. இப்படியே அந்தந்த உரிமையாளன் பெயரை வைத்து நாட்கள் அறியப்பட்டு , ஏழு நாட்களின் அதாவது ஏழு கிழமைகளின் தொகுப்பை வாரம் என்று அழைக்கிறோம்.
உரிமைகளின் தொகுப்பு என்பது வாரம் என்று இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
"கார்-இனம் புரை மேனி நற் கதிர் முத்த வெண்ணகைச் செய்ய வாய்
ஆர-மார்வன் அரங்கன் என்னும் அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து கசிந்து இழிந்த கண்ணீர்களால்
வார நிற்பவர் தாளிணைக்கு ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே"
"வார நிற்பவர் தாளினைக்கு ஒரு வாராமாகும் என் நெஞ்சமே" என்று எம்பெருமானை உரிமையாக்கி நிற்பவர்களின் திருவடிக்கு எனது மனம் உரிமையாகும்/ உரித்தாகும் / அன்புடைய தாகும் என்று குலசேகரயாழ்வார் தெரிவிக்கிறார்.
"பாரமாயப் பழவினை பற்றுஅறுத்து, என்னைத்தன்-
வாரம்ஆக்கி வைத்தான் வைத்ததுஅன்றி என்உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு-
வார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே"
பழவினைகளை அறுத்து என்னை அவனுக்கு உரிமையாக்கி/ சொத்தாக்கி / அன்பாக்கி வைத்து , அது மட்டும் இல்லாமல் என்னுள் புகுந்தான் என்று திருப்பாணாழ்வார் தெரிவிக்கிறார்.
இங்கு ஆழ்வார்கள் வாரம் என்பதற்கு உரிமை, உரிமையால் வரும் அன்பு பற்றியும் கூறுகிறார்கள் என்பது புலப்படுகிறது. உரிமையின் பால் வரும் விளைவு என்பது அன்பாக மாறக்கூடும்.
கிழமை , வாரம் என்ற சொல்லுக்கும் உரிமை மற்றும் உரிமையால் அன்பு என்ற அர்த்தத்தைத் திருக்குறள் மற்றும் திவ்ய பிரபந்தம் மூலம் அறிகிறோம்.
மானுடத்தை வாரமாக்கி வைத்து , மானுடம் கிழமை தோறும் காப்போம்.
மகர சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக