உணர்வு



           
                                 


உணர்வு என்பது தனிமனித அனுபவம். உணர்வு என்பது இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் ஒருவனுக்கு வெளிப்படுத்தும். இதில் சிலவற்றை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும். சிலவற்றை முடியாது. அக உணர்வு , புற உணர்வு என்று தமிழ் இலக்கியம் இதனைக் கூறுகிறது.

இன்ப துன்பம் எப்படி ஏற்படுகிறது என்றால் , ஒருவனது வாழ்நாள் முழுவதும், உயிர் உடம்புடன் இருக்கும் வரை இஃது இவ்வாறு நடைபெறுகிறது என்று திருக்குறளுக்கு உரை எழுதும்போது பரிமேலழகர் காண்கிறார்.

"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடக்குங் கல்"

வாழ்நாள் வழியடைக்கும் கல் என்பதற்கு , ஐவகைக் குற்றத்தால் வரும் இருவகை வினையும், அதன்வழி வரும் இன்பம் துன்பம் என்ற வினைப்பயனும், உயிர் உயிரோடு இருக்கும் வரை வரும், இதை வாழ்நாள் முழுதும் என்று கூறுகிறார்.

அவித்தை (அறியாமை), அகங்காரம், அவா, விருப்பு, வெறுப்பு என்று ஐந்தினையும் , ஐங்குற்றம் என்று பரிமேலழகர் காட்டுகிறார். இதை விடுத்து அறன் வழியில் சென்றால், வீடுபேறு கிடைக்கும் என்று அறனை வலியுறுத்திகிறார் அதன் அதிகாரத்தில் வள்ளுவர் என்று பரிமேலழகர் உரை.

வீடு என்பது விடு என்ற வேர்சொல்லிருந்து வந்தவை. ஒருவனுடைய வீடு என்பது சுதந்திரமாக அவனது இன்பத்தை அனுபவிக்கும் இடம். சிலவற்றை விடுத்து வரவேண்டும் என்பதன் பொருள். பேறு என்பது பெறுதல். வீடுபேறு என்பது இன்பத்தைப் பெறுதல் என்று பொருள்.

இன்பதுன்ப உணர்தல் என்பது ஒரு செயலினால் ஏற்படும் விளைவு. அதனை வார்த்தைகளால் விளக்க முடியாது, அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்.

ஃப்ளாக் காபி என்பது அதன் சுவையைச் சிறிது சிறிதாக அனுபவித்து அனுபவித்துக் குடிக்கும்போது ஒரு சிலருக்கு அதில் ஏற்படும் இன்பத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது, அதனை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். இதுதான் உணர்தல். அக உணர்வின் வெளிப்பாடு வார்த்தைகளினால் சுருக்கமாக "ஃபேஷ்" "யம்மி" என்று வெளிப்படும்.

குளிர்காலத்தில் பன்னீர் பூ நிறைய இருக்கும் ஒரு தெரு வழியாகக் காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது , அதன் நறுமணம் என்பது ஒருவித உணர்ச்சியை ஏற்படுத்தும். இதனையும் நிதானமாக இருந்து சுவாசித்து உள்ளுக்குள் நிறுத்தி உணர்ந்தால் மட்டுமே மனம் என்பது ஒரு மகிழ்ச்சி அடைவதையும் உங்களால் மட்டுமே காணமுடியும். இந்த அக உணர்வு என்பது சுருக்கமாக "ஆஹா" என்று வெளிப்படும்.

அதேபோல் காலைப்பொழுதில் எந்தவிதவொரு சப்தமுமில்லாமல் , பறவைகள் எழுப்பும் ஒலியை மட்டும் உள்வாங்கும் போது ஏற்படும் ஒரு மகிழ்ச்சி என்பதுவும் உணர்ந்தால் ஏற்படும் ஒரு நிகழ்வு.‌

இந்த உணர்வு மனிதனுக்கு ஐம்புலன்களினால் உண்டாக்கப்படும் ஐம்பொறிகளினால் மட்டுமே உணரமுடியும். ஐம்புலன்கள் இருந்தும் ஐம்பொறிகள் செயல்பாடு இல்லையென்றால் உணர்வு என்பது ஏற்படாது. இதுதான் உணர்வு என்பது மனிதனுக்குள் வேறுபடுவதற்கான காரணம்.

ஒருவருக்கு மூக்கு இருந்தும் சுவாசிக்க மட்டுமே முடியும். மல்லிகை மணம் மற்றும் சமையலின் வாசனைகள் என்பது தெரியாது. நறுமணத்தை அறிவது என்பது ஐம்புலன்களில் ஒன்றான மூக்கின் கடமை ( நாசி செய்யும் பொறி).

எப்படிக் கண் இருந்தும் பார்வை இல்லையோ, காது இருந்தும் கேட்கவில்லையோ, ஐம்புலன்கள் இருந்தும் ஐம்பொறிகள் சரியாக அதன் வேலைகளைச் செய்யும்போது இந்த உணர்வை ஒருவன் உணரமுடியும்.

சிலருக்கு சில உடலின் பாகங்களைத் தீண்டினால் ஏற்படும்‌ உணர்வு, அவருக்கு மட்டுமே உணரமுடியும். அதனால் ஏற்படும் தீடீர் துள்ளல் மூலமே இது புறமாகச் சிலருக்கு வெளிப்படும். துள்ளல் என்பது புற உணர்வு. அக உணர்வு என்பது அவன் உடலில் ஏற்படும் ஒருவித கூச்ச உணர்வு. துள்ளும் போது எழுப்பப்படும் ஒலி மட்டுமே வார்த்தை , மற்ற அனைத்தும் அனுபவம்.

இதுதான் அனுபவம்.இங்கே பேசுவது என்பது சுருக்கமாக இருக்கும், அனுபவம் என்பது அதிகமாக இருக்கும்.

இதைத்தான் பாரதியார் பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றார் போலும்.

நம்மாழ்வார் பல காலம் திவ்ய பிரபந்த வரியைப் பாடிய பின் , மூர்ச்சித்துக் கிடந்தார் என்று சொல்லுவது, அனுபவித்தில் ஆழ்ந்து இருந்தார் என்று சொல்லுவார்கள்.

பெருமாள் அவர் மனதில் கூடும்போது , அதாவது காட்சி கொடுக்கும்போது மகிழ்வதும், பிரியும்போது சோகத்தையும் வெளிப்படுத்திய வண்ணம் பல மாதங்கள் இருந்தார் என்று வைணவர்கள் சொல்வதும் ஆழ்வாரின் அனுபவமே இவ்வாறு வெளிப்படுகிறது. இதுதான் ஆழ்வாரின் உணர்வு. இஃது அக உணர்வு , அவர் மட்டுமே அனுபவித்தது.

உள்ளுக்குள் உறையும் இறைவனை உணர்வது என்பது அனுபவம். இதனை,

"கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே"   
                                                                                                               -திருநாவுக்கரசர்


உள்ளத்தே உறையும் மாலை* உள்ளுவான் உணர்வு ஒன்றில்லா*
கள்ளத் தேன் நானும் தொண்டாய்த்* தொண்டுக்கே கோலம் பூண்டு*
உள்ளுவார் உள்ளிற் றெல்லாம்* உடனிருந்து அறிதியென்று*
வெள்கிப் போய் என்னுள்ளே நான்* விலவறச் சிரித்திட்டேனே|
                                                                                         - தொண்டரடிப்பொடியாழ்வார்

உணர்வினால் ஒன்று பட்டவர்கள் இவர்கள்.உணர்வினால் உள்ளுக்குள் இறைவனைக் கண்டவர்கள். இவர்கள் சொல்லும் வார்த்தை என்பது சுருக்கம். அவர்களது அனுபவம் என்பது பெரிது உணர்வதற்கு.

ஐங்குற்றங்களில் முதலாவது அவித்தை என்பது அஞ்ஞானம். ஞானத்தைப் பெற்றால் மற்ற நான்கையும் தவிர்த்து நல்வினையில் நின்று, அனுபவத்தால் பேரின்பம் எய்துவது என்பது உணர்வு.

(ஞானம் என்ற கட்டுரையின் தொடர்ச்சி)

மகர சடகோபன்
தென்திருப்பேரை

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூர்ணம்-15

பூர்ணம் - 13

பூர்ணம் - 17