ஞானம்


 பாரதீய மரபில் ஞானம் என்றால் என்ன? நாம் இன்று படிப்பது எல்லாம் ஞானமா? ஒரு விஷயத்தை அறிவது என்பதும் ஞானமா? அதை அலசி ஆராய்ந்து புள்ளி விவரங்களுடன் அறிவது , அறிந்தவற்றைச் சொல்வது என்பது ஞானமா?

இது மட்டுமல்ல பாரதீய மரபில் முக்கியமானது புருஷார்த்தம் என்ற கொள்கை. புருஷார்த்தம் என்பது வீடு பேறு அடைவதற்கான வழி முறை. அதாவது மோஷத்திற்கான வழிமுறை. பிறப்பற்ற ஒரு சூழ்நிலையை அடைவதற்கான வழி என்பதனை வீடுபேறு என்று அறிகிறோம். 

புருஷார்த்தம் என்றால் தர்ம அர்த்த காம மோக்ஷ என்பதுதான். இதனைத் தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்று அழகாகக் காட்டுவார்கள்.

அறத்தின் வழியில் பொருளை ஈட்டி இன்பத்தை அனுபவித்தல் என்ற இவ்வுலக வாழ்க்கு ( இம்மையில் செய்யும் காரியங்கள்) , மறுமையில் வீட்டின்பம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை அறம் பொருள் இன்பம் என்று இம்மையில் செய்யப்படும் செயல் மூன்றையும் மூன்று பாற்களாக அமைத்து , அதில் ஒழுகும் போது மறுமையில் வீடுபேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையை நம்பிக்கையாகவே நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார். இதுதான் திருக்குறளுக்குச் சிறந்த உரை எழுதிய பரிமேலழகர் உரைக் கருத்தும்.

ஆனால் இதில் முதல் விஷயம் என்பது தருமம் அதாவது அறம், இதனுடைய அர்த்தம் என்னவென்று கேட்டால் நல்லது செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். சிலருக்கு நல்லது என்பது மற்றவர்களுக்கு நல்லதாக இருக்காது, இது மாறுபடும் தன்மை கொண்டது மானுட வாழ்வில். அப்படியானால் தருமம் அல்லது அறம் என்பதற்கான அர்த்தம் என்று தேடும்போது , நான் அறிந்து உணர்ந்து வார்த்தைகளை இங்கே கூறுகிறேன். அதனை நான் கண்டது வள்ளுவப் பெருந்தகை குறளில்.

"அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்"

பொறாமை, ஆசை , கோபம் , கடின சொற்கள் இவை நான்கும் இல்லாமல் இருப்பது அறம். அதனை வாழ்வில் ஒழுக வேண்டும் என்பதே அறம்.

இயன்றது என்பது செயல் வடிவம் என்ற பொருள் காணப்படுகிறது. இடைவிடாது செயல்பட வேண்டும். இழுக்கா இயன்றது என்பது இந்த நான்கையும் விலக்கி இடைவிடாது வாழ்வில் செயல்பட வேண்டும்.

குறளைப் படித்து அர்த்தங்களைப் புரிவது என்பது அறிவு. அந்த அறிவு முதிர்ந்து , மனதால் உணர்ந்து வாழ்வில் ஒழுகுவது என்பது அனுபவம். அதுதான் மனிதனை அடையாளம் காண உதவும். அவனது அறிவு என்பது அடையாளத்தைக் காண்பிக்காது, ஒழுகுதல் என்பதே அடையாளம்.‌

ஒழுகுவது என்பது நடைமுறையில் அறிவின் முதிர்ச்சி அனுபவத்தால் ஏற்பட வேண்டும். இதையே ஞானம் என்கிறார்கள். அனுபவத்தால் ஞானத்தைப் பெறமுடியும்.

திருமழிசையாழ்வார்,

"அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே"

நம்மாழ்வார் திருவாய்மொழியில் எங்கள் ஊர் பாசுரத்தில் ,

"வெள்ளை சுரிசங்கொடு ஆழியேந்தி , தாமரை கண்ணன் என் நெஞ்சினூடே , புள்ளைகடாகின்ற வாற்றைக் காணீர்"

பெரியாழ்வார்,

"மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து,
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி,
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு,
அரவத் தண்டத்தில் உய்யலும் ஆமே"

இந்தப் பாடல்கள் எல்லாவற்றிலும் மனதால் உணர்வதை ஆழ்வார்கள் தெரிவிக்கிறார்கள். அன்று நான் பிறக்க வில்லை , பிறந்தவுடன் மறக்கவில்லை என்று திருமழிசை வாழ்வார் மனதால் உணர்வதையே பிறந்தது என்று கூறுகிறார். அனுபவம்தான் பிறப்பு என்று கூறுகிறார். இதைத்தான் ஞானம் என்கிறார்களா?

விசிஷ்டாத்வைதம் தத்துவத்தில் ( இராமானுஜ சம்பிரதாயம்) இறைவனை ஐந்து நிலைகளில் காணலாம்.
1. பரமபதநாதன் ( வைகுண்ட நாதன்)
2. திருப்பாற்கடல் நாதன்
3. விபவ அவதாரங்கள் ( நரசிம்மன், வராகன், கண்ணன், ராமன்)
4. திவ்ய தேச எம்பெருமான் ( அர்ச்சாவாதாரம்)
5. அந்தர்யாமி ( நமது உடலுக்குள் உறைந்து நிற்கும் பெருமான்)

ஆழ்வார்கள் மேலே உள்ள பாசுரங்களில் மனதுக்குள் இருக்கும் எம்பெருமான் பற்றிப் பாடுகிறார்கள். உணர்ந்தால் மட்டுமே உள்ளுறைபவனைக் காணமுடியும் என்பதனை அனுபவத்தால் கூறுகிறார்கள். இதுதான் ஞானமா?


பாரதியார் குருப்புகழ் என்ற தலைப்பில், குள்ள சாமி என்ற ஞானியை குருவாக ஏற்றுக் கொண்டு ஞான உபதேசம் பெற்றதைப் பற்றி விளக்குகிறார். அதில் ஞானகுரு தேசிகனைப் போற்றுகின்றேன் என்று ஆரம்பிக்கிறார்.

"இடையில் குருவைப் பற்றிச் சொல்லும் போது,

அப்போது நான் குள்ள சாமி கையை
அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்;
அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்.
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே;
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே! எனக்குநினை உணர்த்து வாயே , என்று உபதேசம் கேட்கிறார்.

குள்ளச்சாமியும் ஓட , பாரதியாரும் ஓட, கடைசியில் பாழடைந்த ஒரு வீட்டினுள் செல்கிறார் குள்ளச்சாமி. பாரதியாரும் செல்கிறார். அங்கே உபதேசம் நடைபெறுகிறது.

"பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளேதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “அறிந்தேன்” என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார் குணர்த்து கின்றேன்;
“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான்.

உபதேசம் என்பது , ஒரு குட்டி சுரைக் காட்டி, சூரியனைக் காட்டி பிறகு கிணற்றைக் காட்டி அதனுள் தெரியும் பிம்பத்தைக் காட்டி, உபதேசத்தை அறிந்தாயா என்று கேட்க, அறிந்தேன் என்று பாரதியார் கூறுகிறார். இதற்கு நமக்கு அர்த்தம் புரிந்ததா அல்லது மற்றவர்கள் பின் வந்து அர்த்தத்தை அவரவர் வழியில் சொல்வார்கள் என்று நினைத்து , சரியாக நான் உணர்ந்த உபதேசத்தைச் சொல்ல வேண்டும் என்று பாரதியார் அடுத்த வரியில் நமக்கு விளக்குகிறார்.

" மூச்சுப் பயிற்சி செய்து மூச்சினால் கட்டுப்பட்டு நிற்கும் உடல் என்பது சுவர். அந்தக் குட்டிச் சுவர் என்பது பாழடைந்த கட்டிடத்தில் உறுதியாக நிற்கிறது. அதுபோல் நாம் உறுதியாக இருக்க வேண்டும். பஞ்ச பூதங்களினால் கட்டப்பட்ட சுவர் ( உடல்) , எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் சமநிலையில் இருப்பது போல் வாழ வேண்டும்.

கிருஷ்ணன் பகவத் கீதையில் , உலகம் என்பது இரட்டைகளால் ஆனது. அந்த இரட்டைகளை வென்று சமநிலையில் வாழ்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம், அவர்களே யோகி என்று அழைக்கப்படுவார்கள் என்று கூறுகிறான். வெப்பம், குளிர்ச்சி, புகழ்ச்சி இகழ்ச்சி, வெற்றி தோல்வி, இரவு பகல், ஏற்றம் தாழ்வு போன்ற இரட்டைகளை வெல்லவேண்டும், இரட்டைகளை வென்று மனதை சமநிலைப் படுத்தல் என்ற நிலையை விளக்குகிறான்.

அதைத்தான் குள்ளச்சாமி என்ற குரு , பாரதியாருக்கு உணர்ச்சியற்ற நிலை என்பது சமநிலைப் படுத்தல் என்ற உறுதி நிலையை விளக்குகிறார்.

வானில் இருக்கும் சூரியன் பாழடைந்த வீட்டில் இருக்கும் கிணற்றினுள் தெரிவது போல், மன உறுதி நிலையில் இருக்கும் உன்னுள் சிவனைக் காண்பாய் என்று கூறி , பேசுவதில் பயனில்லை , அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் என்று பாரதியார் விளக்குகிறார்.

அனுபவத்தால் உணர்வது என்பதே பிறப்பு , அதுவே அந்தர்யாமி என்ற தத்துவத்தை உணரவல்லது, அதுவே ஞானம் என்பது ஆழ்வார்கள் வாக்கு.

அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்பது 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி பாரதியின் வாக்கு.‌


மகர சடகோபன்
தென்திருப்பேரை   

கருத்துகள்

  1. சடகோபன், ஞானம் பற்றிய தங்களது கட்டுரை நன்றாக இருந்தது, உலகம் இரட்டைகளை உடையது என்று கூறி நேர் எதிர் நிகழ்வுகளான சம்பவங்களை கோர்த்து இரு நிகழ்வுகளையும் சமப்படுத்தி வாழ வேண்டும் அதுதான் ஞானத்திற்கு வழி என்று அருமையாக சொன்னீர்கள்.

    நான் படித்துக் கொண்டிருக்கின்ற சைவ சித்தாந்தத்தில் இருவினையொப்பு(அதாவது நீங்கள் சொன்னது போல் இரண்டு நேர் எதிர் நிகழ்வுகளை ஏற்றத்தாழ்வின்றி ஒன்றாக உணரும் பக்குவம்) என்ற நிலையை எய்திய ஆன்மா சக்தி நிபாதம் என்ற நிகழ்வை அடைகின்றது அதாவது இறைவனுடைய சக்தி இந்த ஆன்மாவின் மீது வீழ்கின்றது. அது நிகழ்கின்ற காலத்தில் இந்த ஆன்மா ஞானம் பெறுகிறது என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் அனுபவித்து மூலமாகவே ஏற்படும்.

    அருமையான கருத்துக்கு நன்றி.
    Guhan.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூர்ணம்-15

பூர்ணம் - 13

பூர்ணம் - 17