பூர்ணம் - 5
கூடி வாழும் தன்மை என்பது இயற்கையின் நீதி. பெரியாழ்வார் “கூடிய கூட்டமாகக் கொண்டு குடி வாழுங்கள் " என்றும், அவரது திருமகள் ஆண்டாள் “கூடியிருந்து குளிர்ந்து"என்றும், தமிழ் மூதாட்டி ஔவையார் “ஊருடன் கூடி வாழ்" என்றும், கூடிவாழ்வதைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளார்கள். மனிதன் பிறந்த தொடக்கம் இறப்பு வரைக்கும் ஒருவரைச் சார்ந்துதான் வாழ்கிறான். சார்பு வாழ்க்கை முறை என்பது மனிதனுக்கு இயற்கையின் நீதி. நாம் அணியும் சட்டை என்பது , பருத்தியிலிருந்து தையல் செய்த சட்டையாக வருவதற்குப் பல ஊழியர்களின் உழைப்பும், வியர்வையும் நேரமும் அதில் உள்ளது என்பதனை உணர்ந்தால் சார்பு நிலை என்ன என்பது புலப்படும். உணவுப் பொருட்கள் நம் தட்டில் உணவாக வருவதற்குப் பல புண்ணியவான்களின் உழைப்பு பின்னால் இருக்கிறது என்பதனை உணர்ந்தால் சார்பு நிலை புலப்படும். சார்பு நிலையை ஒத்துக்கொள்ளாதவர்கள் எழுப்பும் கேள்வி என்பது, 1. அவர்களும் பணத்திற்காக வேலை செய்கிறார்கள். 2. என்னிடம் பணம் இருந்தது, அதனால் பொருட்களை வாங்கினேன். வேலை செய்வதற்குப் பணம் கொடுத்தாலும், மக்கள் அதற்கு வரவில்லையென...