பூர்ணம் - 4



மாணவன் எல்லையறிந்து ( Knowing the Individual Limits) அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை பார்ப்பதற்கு முன், பழைய குடும்ப அமைப்பு அழுத்தங்களைக் குறைக்கவும், சமுதாயமாகச்சிந்திக்கவும், மன நிறைவை உருவாக்க எவ்வாறு உதவுகின்றன என்று பார்ப்போம் 

குடும்பம் என்பது பெரும்பாலும் கூட்டுக் குடும்பம். பொருளாதார சுமைகளை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சேர்ந்து சமாளித்தார்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என்பது பலரிடம் காணப்பட்டது. கூட்டுப் பணி , விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஒருவரையொருவர் தாங்குவது ( Supportive system) , இன்ப துன்பங்களில் பங்கு கொள்வது, சார்பு வாழ்க்கை, பாதுகாப்பு போன்ற பண்புகள் கூட்டுக் குடும்பத்தின் அங்கமாக வழக்கத்திலிருந்தன. 

கூட்டுக் குடும்பம் ஒரு வகையில் அழுத்தத்தை குடும்பங்களிடையில் குறைத்தது என்பது உண்மை. பொருளாதார சுமை மற்றும் அழுத்தம், சமுதாய அழுத்தங்கள் என்பது குடும்ப உறுப்பினர்களிடம் பரவலாகப்பட்டது. குழந்தைகளும் தனிமையில் இல்லாமல் நிறைய குடும்ப குழந்தைகளுடன் சேர்ந்து ஒன்றாக விளையாடி, ஒன்றாகச் சாப்பிட்டு , ஒன்றாகப் பள்ளி சென்று, ஒன்றாகத் தூங்கும் போது அழுத்தம் என்பதை உணர்வதற்கு இடம் இல்லை. மேலும் குழந்தைகளும் கூட்டுப் பணி, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சார்பு வாழ்க்கை முறை போன்றவற்றை எளிதாக அன்றாட செயல்பாடுகள் மூலம் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பார்க்கப்பட்டது.

பல பிரிவுகளின் பல கூட்டுக் குடும்பங்கள் சேர்ந்தது சமுதாய அமைப்பாகும்.‌ ஆகவே 
சமுதாய அமைப்பும் கூட்டுக் குடும்பத்தின் நீட்சியாகப் பார்க்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்குப் பிரச்சினை என்றால் உதவி செய்வது. மேலும் சமுதாயம் என்பது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தது. சமுதாயப் பொறுப்பு என்பது பலரிடம் காணப்பட்டது. 

சிலர் கேட்கலாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை இல்லையா? என்று. அன்றைய சமுதாய அமைப்பில் பிரச்சினை இல்லையா? என்று. இருந்தது சிலரிடம் பலரிடம் இல்லை. 

பலரிடம் சமுதாய பொறுப்பு இருந்த காரணத்தினால் மட்டுமே ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், மற்ற நீர் நிலைகளும் , பல இயற்கை வளங்களும் பாதுகாக்கப்பட்டது.‌ சமுதாய கண்ணோட்டம் குறைந்து தனிமனித முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்ற நகர்வு , சமுதாய சீரழிவுக்கும், கூட்டுக் குடும்ப சிதைவுக்கும், அழுத்தங்களை உருவாக்குவதற்கும் ஒரு காரணியாகப் பார்க்கப்பட்டது.

இன்றைய சூழலில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை மீண்டும் ஏற்படுவது என்பது மிகக்கடினம். ஆனால் ஒன்று செய்யலாம். கீழே குறிப்பிடப்படும் செயல் முறையை நடைமுறையில் அமல்படுத்த முயலலாம். 

தனித்தனி குடும்பமாக வாழ்ந்தாலும், கூடப்பிறந்த சகோதரர், சகோதரி குடும்பங்கள், தாய்வழி தந்தைவழி ஒன்றுவிட்ட சகோதரர் சகோதரி குடும்பங்கள் முடிந்தால் மாதம் ஒரு முறை , இல்லையென்றால் மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஒரு நாள் முழுவதும் சந்தித்துச் சேர்ந்து இருப்பதன் மூலம் ஓரளவு உறவு முறைகள் என்பது பலப்படும். உறவுகளின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படும். மேற்கூறிய கூட்டுக் குடும்பத்தின் சில பண்புகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். 

வளைகுடா பகுதி அரேபியர்கள் அவர்களும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்கள். இன்றைய சூழலில் நம்மைப் போலவே தனிக் குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் வாரம் ஒரு முறை குடும்ப உறவுகள் அனைவரும் ஒரு வீட்டில் பெரியவர்களின் முன்னிலையில் சந்தித்து ஒன்றாக உணவருந்தி அன்றையே பொழுது முழுவதும் குடும்ப உறவுக்காகச் செலவிடுகிறார்கள். இது மிகவும் ஒரு அருமையான முறை உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும். மேலும் உறவுகள் என்பது அடுத்த தலைமுறை தலைமுறையாகத் தொடர்வதற்கும். 

கூட்டுக் குடும்பத்தில் ஒருவரையொருவர் தாங்கும் ஆதாரமாக இருப்பதனால் ( Supportive System), தனிமனித அழுத்தங்கள் , சமுதாய அழுத்தங்கள் குறைக்கப்படலாம். மன அமைதி ஏற்படலாம். மன அமைதி மூலம் மனநிறைவு அடைந்து , ஓரளவு முழுமை அடையலாம். 

தனி மனித முன்னேற்றம் என்பது தேவை.‌அது மிகவும் அழகாகப் பார்க்கப்படும் நேர்மையாக வெளிப்படும், சமுதாய நலனைப் பாதிக்காத வரை அல்லது இயற்கையை அழிக்காத வரை. இதுதான் அங்கே எல்லையாகப் பார்க்கப்படுகிறது. 

 தனிமனிதனும் மாறவேண்டும் சமுதாயமும் மாற வேண்டும். பொறுப்புணர்வு என்பது தனிமனிதனிடமும்,  இருக்க வேண்டும். 

கூட்டுக் குடும்பம் மனநிறைவு மற்றும் முழுமைக்கான பாடமாக இங்கே பார்க்கப்படுகிறது 

அறியப்பட வேண்டியவை  ஆதார அமைப்பு  ( Supportive System) , எல்லை அறிதல் (Knowing the Social  limits) 

  .................. ( தொடரும்) 

மகர சடகோபன் 
தென்திருப்பேரை 
 
 



கருத்துகள்

  1. கிராமத்தில் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு உள்ளது.அங்கேயும் கூட்டு குடும்பம் மெல்ல மெல்ல பிரிய துவங்கிவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியான கருத்து சடகோபன். கூட்டுக் குடும்பமாக இருந்து மாமன் மார் மாப்பிள்ளை மார் மைத்துனன்மார் சகோதரன்கள் மதனிமார் இவர்களுடன் குடும்ப விழாக்களில் குறிப்பாக திருமண வைபவங்களில் பங்கெடுத்த காலம் போய் இன்றைய திருமணங்களை பார்க்கும் பொழுது ஏதோ சினிமா தியேட்டரில் ஜனங்கள் ஒன்று கூறுவது போல் கூடி விட்டு திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே கலைவது உண்மையான திருமண வைபவதத்தில் பங்கெடுப்பது போன்ற உணர்வு இல்லை.

      நான் அதிகம் உணர்வது என்னுடைய இளம் வயது பருவத்தில் உறவினர் வீட்டு திருமணங்களுக்கு செல்லும் பொழுது குறிப்பாக வரவேற்பில் உறவினர்கள் மட்டுமே இருப்பார்கள் பின்பு அங்கே நடக்கும் பந்திகளில் உணவு பரிமாறுவது பெரும்பாலும் உறவினர்களே இருப்பார்கள் ஒவ்வொருவரையாக பார்த்து அன்போடு உணவருத்த உபசரிப்பார்கள் இன்று அப்படிப்பட்ட நிகழ்வுகள் குறிப்பாக சென்னையில் காணப்படுவதில்லை எல்லாமே கார்ப்பரேட் மயம் யாராரோ திருமண வரவேற்பில் இருக்கின்றனர் யார் யாரோ கூட்டமட்டமாக வந்து திருமண வீட்டுக்காரர்களை வரவேற்கின்றனர்.

      கூட்டுக் குடும்பம் பிரிந்ததனால் பல பண்புகள் காணாமல் போனது வீட்டிற்கு ஒரு பிள்ளை உண்டான பிறகு மாமன் மச்சான் சித்தி அத்தை அண்ணி மதனி இப்படிப்பட்ட உறவுமுறைகள் இல்லாமலே போய் விட்டன என்பதை பெற்றோர்களும் அதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.
      Guhan

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி