பூர்ணம் - 2
எனக்கு விபரம் தெரிந்த காலகட்டத்தில் 1980 ( டீன் வயதில்) சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்று பார்த்தால், பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் என்பது குறைந்தது 5 அல்லது அதற்கு மேல் இருக்கும்.
பள்ளிப் படிப்பு என்பது அரசாங்க பள்ளிக் கூடமாக இருக்கும். வீட்டிலிருந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு மதியம் சாப்பாட்டுக்கு வீடு வருவோம். சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளி. படிப்பது என்னவென்று கூடப் பெற்றோர்கள் பின்தொடர்வது கிடையாது. ஒழுக்கம் குறைந்தால் மட்டுமே தகவல் பள்ளியிலிருந்து பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும்.
மாணவர்களும் காலையில் நிதானமாக எழுந்து தெரு திண்ணையில் உட்கார்ந்து பேசி , ஆறு பக்கம் சென்று காலைக் கடன் மற்றும் குளித்துவிட்டு வந்து, சிற்றுண்டி என்னவோ அதையும் சாப்பிட்டு பள்ளி செல்வது என்பது தின வழக்கம். பெரும்பாலும் காலை சிற்றுண்டி என்பது பழைய சோறு அல்லது பழஞ்சோறு நீர் ( நீராகாரம்). இப்பொழுது ஆற்றில் தண்ணீரே இல்லை. முட்செடிகளும் புதர்களுமாக இருக்கிறது. இதுதான் இன்றைய சூழ்நிலை. இன்றைய இளைஞர்கள் இழந்த பலவற்றில் இதுவும் ஒன்று.
அந்த பழஞ்சோறு நீராகாரம் சுவையே தனி. நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் இலங்கை சென்றபோது ஐந்து நட்சத்திர விடுதியில் அதை வைத்து இருந்தார்கள். சின்னவெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து அவர்களது பாரம்பரிய உணவு என்று எழுதி வைத்து இருந்தார்கள். தங்கியிருந்த நாட்களில் அதையே காலை உணவாகப் பருகினேன். தேங்காய்ப் பால் சேர்ப்பது என்பது எனக்கு வித்தியாசமாக இருந்தது. ஆனால் எங்களது பக்கத்தில் மோர் சேர்ப்பது என்பது வழக்கம். தமிழக இன்றைய இளைஞர்கள் இழந்த பலவற்றில் இதுவும் ஒன்று.
அந்தக் கால சூழலிலும் நல்ல படிக்கும் மாணவன் / மாணவியைச் சுட்டிக்காட்டி ஒப்பிடுவது என்பது இருந்தது. ஆனால் அது பெற்றோர்களுக்கு அதிகம் கவலையை அல்லது மாணவர்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்ததா? என்றால் இல்லை என்ற சூழலே இருந்தது.
அப்பொழுது நம் முன்னோர்கள் முழுமையாக இல்லையா? அவர்களிடம் மன அமைதி/நிறைவு இல்லையா? அவர்கள் வாழவில்லையா?
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்பட்டதா அல்லது இல்லையா? என்ற கேள்விகளுக்குப் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். இல்லை இல்லை. எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். சமுதாயம் சார்ந்து இருந்தார்கள். எத்தனையோ நாட்கள் நண்பர்களின் வீட்டில் அவர்களது அம்மா கொடுக்க சாப்பிட்டு இருக்கிறோம். எந்த மாணவன் எந்த வீட்டில் சென்று உணவுண்டான் என்பதும் கேள்வி அல்ல. . மாறாக எத்தனை மாணவனை தன்னுடன் அழைத்து வந்தாலும் கொடுக்கும் மனப்பான்மையில் அன்றையே சமுதாயம் இருந்தது. இது 40 - 50 வருடத்திற்கு முன் சூழல்.
படிக்கவில்லையென்றாலும் பள்ளியில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், சில நாட்கள் மட்டுமே அதை நினைத்து இருந்தார்கள். குறுகிய காலத்தில் வேறு ஒரு நிலைக்கு மன அமைதி ஏற்படும் நிலைக்குப் பெற்றோர்களும் மாணவர்களும் சென்று விடுவார்கள்.
அப்படியென்றால் அந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் மீது அக்கறை இல்லையா? கவனம் செலுத்த வில்லையா என்ற கேள்விகள் எழலாம். ஆனால் கவனம் செலுத்தினார்கள். அதிக கவனம் செலுத்தவில்லை. அக்கறை இருந்தது. அதிகமான அக்கறை செலுத்தவில்லை. இப்பொழுது குழந்தைகளை அதிக பாதுகாப்பு வளையத்துக்குள் வைத்து அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதுவும் ஒரு வகையான மாறுதலை இப்பொழுதுள்ள குடும்ப சூழ்நிலையில் சந்தித்து வருகிறோம். இதுவும் ஒரு ஆரோக்கியமான சூழலா? என்று யோசிக்க வேண்டும்
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறவில்லையா? அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களே இது வரைக்கும் இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் , பல வகைகளில் முன்னேற்றுவதற்கும் ஆதாரமாக இருந்துள்ளார்கள் என்பதும் உண்மை. இன்றைய தலைமுறைகளுக்கு இதை விளக்குவது என்பது மிகவும் முக்கியம்.
ஆனால் இப்பொழுது நமது குழந்தைகளை அரசாங்க பள்ளியில் சேர்க்கிறோமா? என்று சிந்தனை செய்து பார்க்க வேண்டும்.
ஒப்பீடு என்ற முறையில் பெற்றோர்கள், மாணவர்கள் சந்திக்கும் அழுத்தம், பள்ளியில் ஆசிரியர்கள் சந்திக்கும் அழுத்தங்கள், இன்னும் எத்தனையோ அழுத்தங்கள் தெரிந்தும் தெரியாமலும் நம்மை வந்து மோதுகின்றன?
இதற்குக் காரணம் யார்? மாற்றங்கள் என்பதனை யார் தீர்மானிக்கிறார்கள் ? அதன் விளைவுகள் என்ன? முழுமை அடைவது எப்படி? எங்கே ? எப்பொழுது?
.......... ( தொடரும்)
மகர சடகோபன் தென்திருப்பேரை
ஒருவர் செய்வதை மற்றொருவர் செய்யவேண்டும் அவர்களை போல வாழவேண்டும் என்ற தொடர்பு ஆசையே இதற்கு காரணம் ஜி
பதிலளிநீக்குஆமாம்.ஒப்பீடு முறை. இதைப்பற்றியும் பார்க்கப் போகிறோம்
பதிலளிநீக்குநமது வாழ்வியல் முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது 1991க்கு பிறகு வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் டிவி வந்ததிலிருந்து மாற்றங்கள் தெள்ளத்தெளிவாக தெரிய ஆரம்பித்தது உணவு முறையில் இருந்து உடையிலிருந்து பழக்க வழக்கங்களில் இருந்து சகல விஷயங்களும் ஒரு பத்து ஆண்டுக்குள் மாறிவிட்டது. 1991லயே ஒரு பீட்சாவின் விலை 350 ரூபாயாக விற்கப்பட்டது அன்றைய காலகட்டத்தில் ஹோட்டல்களில் ஒரு தோசையின் விலை 20 ரூபாய் கூட கிடையாது. பீட்சா என்பது இங்கே வாழும் மக்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை ஆனால் உலகமயமாக்கலுக்கு பிறகு இப்படிப்பட்ட உணவகங்கள் இந்தியாவில் திறக்கப்பட்ட பொழுது அமெரிக்காவில் வசிக்கும் அவர்களுடைய குழந்தைகள் இந்த பீட்சா வை பற்றி பெரியவர்களிடம் எடுத்துச் சொல்வதும், பின்னர் அவர்கள் விடுமுறைக்கு வரும் பொழுது குடும்பத்தினரை அங்கே அழைத்துச் செல்வதும் அதன் பின்னர் இங்கிருந்த பெற்றோர்கள் அங்கு சென்று அந்த உணவகங்களில் சாப்பிடும் பழக்கம் வந்ததும் மிகப்பெரிய மாற்றங்கள் உணவு முறையில் ஏற்பட்டு விட்டன.
பதிலளிநீக்குதொலைக்காட்சியில் முழுவதுமாக தூர்தர்ஷன் நிராகரிக்கப்பட்டது. ஸ்டார் டிவியில் அன்று வெளிவந்து நான்கே சேனல்கள் அதுவும் 24 மணி நேர ஒளிபரப்பு மக்கள் அதைப் பற்றி பேசி பேசி அதில் வரும் நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் பார்க்க ஆரம்பித்தனர் அன்று முதல் அன்றைய வாலிபர்களிடமும் நடுத்தர வயதுடைய மக்களிடமும் பெரும் மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தது.
தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் பின்னர் இணைய தளம் மூலமாகவும் வெளிநாட்டு கலாச்சாரத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததினால் நம்முடைய பழங்கால வாழ்வியல் முறை முழுவதுமாக அழிந்து புதிய முறையை தத்து எடுத்துக் கொண்டது என்பது என் எண்ணம்.
அமெரிக்காவிலும் வாழ்வியல் மாற்றத்தினால் தற்கொலை மனச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்பது புள்ளியில் தகவல்
பதிலளிநீக்குசிந்தனை தெளிவாக்கு அல்லால் என்னை செத்த உடல் ஆக்கு
பதிலளிநீக்குஇந்த மகாகவியின் வரிகள் நம்மை சிந்திக்க வைத்து பூரணம் அடைய வைக்கும்