பூர்ணம்-3
பெரும்பாலும் இப்பொழுது அரசுப் பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ குழந்தைகளைச் சேர்ப்பதில்லை.பணம் இருக்கிறதோ அல்லது இல்லையோ? ஏழையோ அல்லது நடுத்தர மக்களோ? குழந்தைகளை நல்ல தரமான பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அதற்காகச் செலவுகளைச் சரி செய்வதற்குப் பணத்தை எப்படியாவது சமாளிப்பது போன்ற நிலைகள். இது சரி மற்றும் தவறு என்றல்ல?
அரசுப் பள்ளிகளின் தரம் என்பது இந்த 40 வருட காலத்தில் என்ன நிலைமைக்குச் சென்றுள்ளது? மக்கள் ஒருபக்கம் புறம் தள்ளி, மற்றொரு பக்கம் அரசு சரியான நிதியுதவி அளிக்காமல், ஆசிரியர்கள் சேர்ப்பு இல்லாமல் தரம் என்பது நலிவடைந்து விட்டன. உபயோகம் இல்லாத பொருட்களுக்கு மதிப்பு கிடையாது. மாறாக நலிவுற்றுவிடும். இது எல்லா பொருட்களுக்கும் பொருந்தும் அரசுப் பள்ளிகள் உட்பட. இந்த சூழல் இன்று அரசுப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்குத் தடையாக இருக்கின்றன. அரசாங்கம் இன்று அரசுப் பள்ளிகளைத் தனியாருக்கு ஏலம் கொடுப்பதைப் பற்றி யோசித்து வருகின்றன.
அந்த காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் கிராமத்தில் வருவதற்கு நம் முன்னோர்கள் எவ்வளவோ பாடுபட்டார்கள். ஏனென்றால் பள்ளிப் படிப்புக்காக மூன்று அல்லது நான்கு மைல் நடந்து செல்ல வேண்டும். ஆண்கள் பெண்கள் சாலை வழியாக நடந்து சென்று படித்துவரும்போது பாதுகாப்பு உணர்வு இருந்தது. காதல் கத்தரிக்காய் கற்பழிப்பு என்ற சமூக நாடகங்கள் இல்லை. உடல் ரீதியான மன ரீதியான கஷ்டங்கள் இருந்திருக்கும் ஆனால் சமுதாயத்தையோ , உறவுகளையோ , தனிமனிதனையோ அதிகமாகப் பாதிக்காமல், மன அமைதியுடன் ஒற்றுமை நிலவியது.
அரசுப் பள்ளிகள் தரம் தாழ்ந்ததும், தனியார் பள்ளிகளைத் தேடித்தேடி அலைந்து சேர்ப்பதும் ஒவ்வொரு தனி மனிதனாலும், சமூக எண்ணோட்ட மாற்றத்தினாலும், அரசு நடவடிக்கைகளினாலும் நிகழ்ந்தது.
நல்ல பள்ளியில் சேர்த்து ஆகி விட்டன. மன அமைதி ஏற்பட்டதா? இல்லை. ஒப்பீடு தொடங்கியது. அவன் நல்ல படிக்கிறான், இவள் நல்ல பரதம் ஆடுகிறாள், அவள் நல்ல பாடுகிறாள், இவன் நல்ல விளையாடுகிறான், அவன் நல்ல படம் வரைகிறான், இவள் நல்ல வீணை வாசிக்கிறாள் என்று பல நீண்ட பட்டியல்கள் உருவாகும்.
ஒப்பீடு பட்டியல்கள் குழந்தைகளிடம் அழுத்தத்தைக் கொடுக்கும். பல துறைகளில் முன்னேற வேண்டும் என்று ஒப்பீடு செய்து பெரும் அழுத்தம் கொடுக்கப்படும். இது ஒரு புறம். பெற்றோர்கள் படிக்கும் காலத்தில் சந்தித்த அனைத்து தோல்விகளையும் , படிக்க முடியாத கல்வி களையும், விளையாட்டுகளையும் குழந்தைகள் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்கப்படும் அழுத்தம்.
மேலும் பள்ளிகளில் பள்ளி ஒப்பீடு முறையில் ஆசிரியர்கள் மாணவர்கள் மேல் கொடுக்கும் பாட அழுத்தம். ஒப்பீட்டால் மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், அப்பொழுதுதான் உலக தரவரிசையில் இருக்கும் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று தனியார் பயிற்சியில் சேர்ப்பது. அதற்கான நேரத்தையும் மாணவன் அதே 24மணி நேரத்திற்குள் கண்டு பிடித்துப் படிக்க வேண்டும்.
இப்படியாகப் பலவிதமான பல கோணங்களில் பலராலும் கொடுக்கப்படும் அழுத்தங்களைத் தாங்கி மாணவன் வெற்றி பெற வேண்டியுள்ளது.
இவ்வளவு அழுத்தங்களையும் எல்லோராலும் எக்காலத்திலும் தாங்க முடியுமா?. ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டுள்ளது. அந்த எல்லையை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். அறிந்திருக்கா விட்டால் விளைவு என்பது வேறு விதம்.
ஒரு உலோகத்தின் டென்ஸைல் பலத்தைச் சோதிக்க ஒரு உருளை வடிவிலான இரும்பு துண்டை இயந்திரத்தில் மாட்டி இழுப்பார்கள். அதன் உருளையின் வடிவம் சுருங்கிக்கொண்டே வரும், ஒரு நேரத்தில் இரண்டு துண்டாகிவிடும். அதாவது அந்த உலோகத்தின் "இழுப்பு திறன்" எவ்வளவு தூரம் இழுக்க முடியும் என்று அறிவதற்கான சோதனை. எந்த எல்லை வரைச் செல்லலாம் என்பதனை ஞாபகம் ஊட்டும் நடைமுறைச் செயல்.
அதே மாதிரி கான்கீரிட் ப்ளாக் எவ்வளவு பாரத்தை அல்லது அழுத்தத்தைத் தாங்கும் (compression test) என்பதற்கு , அதன்மேல் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் , ஒரு கட்டத்தில் பிளவுகள் விட ஆரம்பித்துவிடும். அதுதான் அதன் தாங்கும் சக்திக்கான எல்லை.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் அழுத்தத்தைத் தாங்கும் சக்தி என்பது ஒன்று உண்டு. அந்த எல்லையை அறிய வேண்டும் . அதைத் தாண்டும் போது அவனுக்கு மனதளவில் கோளாறுகள் ஏற்பட்டு அவனையே முடித்துக் கொள்ளலாம்( Destructive mode). அவனது வாழ்க்கை முடியும் அளவுக்கு உடலளவில் கோளாறுகள் ஏற்படலாம்.
எதிர்பார்ப்பு என்பது ஏராளம். அத்தனை எதிர்பார்ப்பையும் நடத்த முடியும் என்பது ஏமாற்றத்தின் அறிகுறி. எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் போது அழுத்தங்கள் அதிகம் உண்டாகலாம். அடுத்தவர்கள் மீது எதிர்பார்ப்பைத் திணிப்பதும் ஒரு வகை அழுத்தமே. தான் விரும்பும் எதிர்பார்ப்பு , சமுதாயம் பரிந்துரைக்கும் எதிர்பார்ப்பு இரண்டுமே சில சூழ்நிலைகள் காரணமாக நிறைவேற முடியாமல் போனால் அழுத்தங்களை உருவாக்குகிறது.
பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்கும்போது குழந்தையின் எல்லையறிந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். மன அமைதி குன்றாத அளவில் அழுத்தம் இருக்க வேண்டும். அவனது முழுமை என்பது அவன் எல்லையறிந்து செயல்படுவதன் மூலம் விளையும். இல்லையென்றால் மிகவும் மோசமான சூழ்நிலை உருவாகலாம்.
எல்லையை அறிதல் ( Knowing the Individual limits) என்பது மிகவும் அவசியம். அதனுடன் சேர்ந்து மற்ற ஒன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது ..................( தொடரும்)
மகர சடகோபன்
தென்திருப்பேரை
( படம் வரைந்து உதவியவர் திருமதி. ஷோபா கிருஷ்ணன், என்னுடன் வேலை செய்பவர். நன்றி ஷோபா)
நல்ல தலைப்பு மற்றும் அதன் ஆய்வு சடகோபன்!!!
பதிலளிநீக்குஉண்மையில் பெற்றோர்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்த பின்பு பள்ளிகளில் கொடுக்கப்படும் ப்ராஜெக்ட்டை தாங்கள் கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் போட்டிப்போட்டிக் கொண்டு தங்களுடைய திறமைகளை காண்பிப்பதற்காக குழந்தைகளையும் அழுத்தத்திற்கு உட்படுத்தி அதை பள்ளிகளில் சமர்ப்பிக்கும் பொழுது என்னுள் தோன்றிய எண்ணம் அவர்களால் சிறுவயதில் செய்ய முடியாத பல விஷயங்களை பிள்ளைகள் மூலமாக இப்பொழுது தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பது தான் அதனுடைய வெளிப்பாடு. இப்படிப்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகள் செய்ததாக பெரியவர்கள் செய்து கொண்டு வந்தது பொது இடத்தில் அரங்கே அமைத்து அதை பார்வைக்கும் வைக்கப்படுவதால் பல பெற்றோர்கள் பரவசம் அடைகிறார்கள் குழந்தைகள் அவர்களுடைய திறமையில் எதையுமே செய்யாமல் பெற்றோர்களின் எண்ணத்தில் செய்யப்பட்டதால் குழந்தைகளுக்கு தான் என்ன செய்தோம் என்றே தெரிவதில்லை. இது ஒரு புறம் இருக்க இந்த ப்ராஜெக்ட் செய்யும் காலங்களில் குழந்தைகளுக்கு கிடைக்கும் வசவு அதிகம் போதாக்குறைக்கு செல்போன் வேறு வந்து விட்டதால் போட்டி போட்டுக் கொண்டு படங்களை எடுத்து பல இணையதளங்களில் பகிர்ந்து குழந்தைகளின் மனதை ஒருவித அழுத்தத்திற்கு உட்படுத்தி விடுகின்றனர்.
உண்மை குகன். மாணவர்கள் பல கோணங்களில் அழுத்தத்துக்கு தள்ளப்படுகிறார்கள். பெற்றொர்களின் அந்தஸ்து , கௌரவம் ஒரு புறம் . சமுதாயம் பரிந்துரைக்கும் முழுமை
பதிலளிநீக்குஒப்பீட்டு தற்காலத்தில் அதிகமாகிவிட்டது.
பதிலளிநீக்குகனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் அதற்கு மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்
பதிலளிநீக்குஇதை சிறப்பாக விளக்கி இருக்கிறீர்கள் அருமை