பூர்ணம் - 5


கூடி வாழும் தன்மை என்பது இயற்கையின் நீதி.‌ பெரியாழ்வார் “கூடிய கூட்டமாகக் கொண்டு குடி வாழுங்கள் " என்றும், அவரது திருமகள் ஆண்டாள் 
“கூடியிருந்து குளிர்ந்து"என்றும், தமிழ் மூதாட்டி ஔவையார் “ஊருடன் கூடி வாழ்" என்றும், கூடிவாழ்வதைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளார்கள். 

மனிதன் பிறந்த தொடக்கம் இறப்பு வரைக்கும் ஒருவரைச் சார்ந்துதான் வாழ்கிறான். சார்பு வாழ்க்கை முறை என்பது மனிதனுக்கு இயற்கையின் நீதி. 

நாம் அணியும் சட்டை என்பது , பருத்தியிலிருந்து தையல் செய்த சட்டையாக வருவதற்குப் பல ஊழியர்களின் உழைப்பும், வியர்வையும் நேரமும் அதில் உள்ளது என்பதனை உணர்ந்தால் சார்பு நிலை என்ன என்பது புலப்படும். உணவுப் பொருட்கள் நம் தட்டில் உணவாக வருவதற்குப் பல புண்ணியவான்களின் உழைப்பு பின்னால் இருக்கிறது என்பதனை உணர்ந்தால் சார்பு நிலை புலப்படும். 

சார்பு நிலையை ஒத்துக்கொள்ளாதவர்கள் எழுப்பும் கேள்வி என்பது, 
1. அவர்களும் பணத்திற்காக வேலை செய்கிறார்கள். 
2. என்னிடம் பணம் இருந்தது, அதனால் பொருட்களை வாங்கினேன்.

வேலை செய்வதற்குப் பணம் கொடுத்தாலும், மக்கள் அதற்கு வரவில்லையென்றால் அந்த பொருட்கள் கிடைக்காது. ஆதாரமான தொழில்கள் விவசாயங்கள் இருக்காது. உணவுப் பொருட்கள் கிடைக்காது. உன்கையில் பணம் இருந்தாலும் வாங்குவதற்குப் பொருள்கள் சந்தையில் இல்லையென்ற நிலையே உருவாகும். 

சமுதாய சார்பு நிலை முற்றிலும் கிடையாது என்று எண்ணுபவர்களின் நிலைமை என்பது, தனி மனித சிந்தனையின் உச்சியிலிருந்து வெளிப்படும் உட்சபட்ச அகங்காரம்.‌

சமுதாயம் கூட்டமாக வாழ்வது என்பது சார்பு நிலையின் நிலைப்பாடு. கூடி வாழும் சமுதாய வாழ்க்கையில் அழுத்தங்கள் குறைந்து ஆயுள் கூடும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. . 

சமுதாயம் கூட்டமாக வாழும் பொழுது புத்துணர்ச்சி உண்டாகுவதும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அன்பினால் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சி பெருக்குடன் வாழ்வதால் , மனித இனம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்று “ இக்கிகை” ( Ikigai) என்ற புத்தகம் விவரிக்கிறது. ஜப்பானில் “ ஒக்கிநவா” ( Okinawa) என்ற தீவில் வாழும் மக்கள் அதிக ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதை விளக்கமாகக் கூறும் இந்த புத்தகத்தில் ஆயுளுடன் வாழ நான்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக “ கூடி வாழும் முறையை” வலியுறுத்துகிறது.

" It turns out that one of the secrets to happiness of Ogimi's residents is feeling like part of a community. From an early age they practice"Yuimaaru", or teamwork, and so are used to helping one another.  
                               - IKIGAI Book
"Get rid of things that make you fragile". எல்லை அறிதல் என்பதனையும் அறிவுறுத்துகிறது இந்த "IKIGAI" புத்தகம்.‌

வைணவ குரு பரம்பரையில் ஆசாரியர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும்போது பெரும்பாலோர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்து இருந்தார்கள் என்பது தெரியவருகிறது. அவர்களுக்கு இலக்கு என்பது மிகத் தெளிவு, சமுதாயமாகக் கூடி வாழ்ந்தார்கள், உணவில் மிகவும் கவனம், வாழ்க்கை முறையில் தெளிவுடன் இருந்தார்கள். சமுதாயம் மாற்ற நினைக்கும் எல்லா திசைகளுக்குள் செல்லாமல் அவர்கள் நிர்ணயித்த இலக்கில் முழுமைபெறவும் , அடைந்த முழுமையைச் சமுதாயத்துக்கும் அளித்தார்கள். முழுமை என்றவுடன் என்மனதில் தோன்றும் முதல் விஷயம் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் இருக்கிறது.‌ இதுபோல் மற்ற பாரதீய சம்பிரதாயங்களிலும் இருக்கலாம். இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

மேற்கூறிய இரண்டு சம்பவங்களிலும் ஆயுள் என்பது முக்கியமல்ல. மகிழ்ச்சியாக மன நிறைவுடன் வாழ்ந்தார்கள் என்பதுதான் "பூரணத்திற்கான வழி" என்று முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சமூகம் பரிந்துரைக்கும் பரிபூரணப் பொறிக்குள் செல்லாமல் சமுதாயத்துடன் வாழ்ந்தார்கள். 

சமுதாயத்தில் இருக்க வேண்டும் ஆனால் சமுதாயம் பரிந்துரைக்கும் பூரணத்துக்குள் செல்லக்கூடாது என்பது ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றலாம். தாமரை இலையில் தண்ணீர் ஒட்டுவது இல்லை ஆனால் தாமரையை   தண்ணீரை விட்டு எடுத்தால் வாடிவிடும் என்பதுதான் இதற்கானப்  பிரபஞ்சத்தில் உள்ளது. 

நெய்யுடன் கூடிய சர்க்கரைப் பொங்கல் என்பது மனிதனுடைய ஒரு உறுப்பான கையில் ஒட்டிக் கொள்கிறது.  கழுவ வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் நாக்கில் ஒட்டிக் கொள்வதில்லை. அதேபோல் சமுதாயத்தில் ஒட்டியும் சமுதாயம் பரிந்துரைக்கும் சிலவற்றிற்கு ஒட்டாமலும் வாழ முடியும். இது முரண் இல்லை. 

சார்பு நிலை வாழ்க்கையில் ஒட்டுமொத்த சமூகமும் கூடி மகிழ்ச்சியாக வாழ வேண்டும், ஆனால் சமூகம் பரிந்துரைக்கும் பரிபூரணப் பொறிக்குள் (Socially prescribed Perfection Trap) செல்லக் கூடாது. இதனால் மிகப்பெரிய அழுத்தங்கள் உருவாகி மிகப் பெரிய விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருவகையான கருத்து.

உதாரணத்திற்கு ஒருவன் விளையாட்டில் சிறந்து விளையாடுகிறான். வெற்றியும் பெறுகிறான். சமுதாயத்தில் அவனுக்கென்று ஒரு பெயர் உருவாகிறது. பிறகு சமுதாயம் அவனைப் புகழ ஆரம்பிக்கிறது. புகழ் என்பது தேவைதான். புகழின் சுவையை மனதினுள் வாங்கி அசைபோட்டு அசைப்போட்டு வளர்க்கிறான். பிறகு புகழ் தான் வாழ்க்கையின் பிரதானம் என்று நகர்வுக்குள் அவனே அறியாமல் செல்ல ஆரம்பிக்கிறான். இதை ஒரு எல்லையாகப் பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் அவனுக்கு ஒரு தெளிவு ஏற்படுமானால் அவன் தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். இல்லையேல் புகழ் என்பது அவனது விளையாட்டு திறமையையும் மறைத்து, அவன் நோக்கத்தையும் மறைத்து, அவனையும் மறைத்து வாழவைக்கும். பலவீனத்தை உணர வைக்கும். அப்படியொரு சூழ்நிலையில் தோல்வி ஏற்படுமானால் , அந்த தோல்வி என்பது அவனுக்கொரு அவமானமாகத் தோன்றும். அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்து தன்னையே அழித்துக் கொள்வான். உயர்த்திப் பேசிய சமுதாயம் அப்போது அவனைத் தாழ்த்தி பேசும். 

புகழ் ஒன்றே வாழ்க்கை என்பதனால் சில சமயங்களில் அவனது சுய எல்லையை மறந்து புகழை அடைவதற்குக் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதுதான் சமுதாயம் அவனிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயமாக மாறும். அவனது சுய எல்லையைத் தாண்டும்போது மன அமைதி குலைந்து உடல் கோளாறுகள் ஏற்பட்டு பெரும் விளைவுகளுக்குள் செல்ல நேரிடும் என்பதனையும் கவனிக்க வேண்டும்.

சமூகம் பரிந்துரைக்கும் பொறிக்குள் செல்பவர்களுக்குக் கடினமான பல விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்பதனை பல புள்ளிவிவரங்களுடன் ஆசிரியர் "Perfection Trap" என்ற புத்தகத்தில் விளக்குகிறார். 

              ....….....( தொடரும்) 

மகர சடகோபன் 
தென்திருப்பேரை 






கருத்துகள்

  1. நல்ல கருத்து சடகோபன்.
    "சமுதாயம் பரிந்துரைக்கும் பொறிக்குள் செல்பவர்களுக்குக் கடினமான பல விளைவுகள் ஏற்பட்டுள்ளது"

    இது மிகப் பெரிய உண்மை.
    நன்றி
    வணக்கம்
    குஹன்.

    பதிலளிநீக்கு
  2. தொடர்ந்து படித்து பின்னூட்டம் இட்டு ஊக்கம் தருவதற்கு நன்றி குகன்.

    பதிலளிநீக்கு
  3. பாரதீய பாரம்பரியத்தில் முக்கியமானது கூட்டு சமுதாயம் தான்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி