பூர்ணம் -19 ( சரீர ஆத்ம பாவம்)
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத்: |
உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ் தத்வ தர்சிபி:||. 2-16
அஸத் - இல்லாததற்கு, பாவ - இருப்பு , ந வித்யதே - இல்லை , கிடையாது, ஸத் - இருப்பதற்கும், அப் பாவ - இல்லாமை , வித்யதே - உண்டு , தத்வதர்சிபி- தத்துவத்தை அறிந்தவர்கள், அனயோ உபயோ- இவ்விரண்டின், அந்தஸ் - முடிவு , த்ருஷ்டோ- காணப்படுகிறது.
இல்லாத பொருள்களுக்கு இருத்தல் என்பதில்லை ; இருக்கும் பொருள்களுக்கு இல்லாமை என்பதில்லை; இவ்விரண்டுமே ஞானிகளின் முடிவான கருத்தாகும். இதில் அஸத் மற்றும் ஸத் என்ற இரண்டு பொருள்களை வைத்து விசாரிக்கிறார்கள் தத்வ தரிசிகள்.
வேதாந்த கருத்துகளுக்குத் தத்துவ அர்த்தமாக உரை எழுதிய தத்துவத் தரிசிகள் மூவரும் பாரதத்தில் தெற்கே தோன்றினார்கள். மூவரும் மூன்று நூல்களைக் கொண்டு தங்களது தத்துவங்களை நிறுவினார்கள். உபநிஷத்துக்கள், பகவத் கீதை மற்றும் பிரம்ம சூத்திரம் என்ற மூன்று வேதாந்த கருத்து நூலுக்கு உரை எழுதினார்கள். பகவத் ஆதிசங்கரர் அத்வைதம் என்ற தத்துவத்தையும், பகவத் இராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தையும், பகவத் மத்வாச்சாரியார் துவைதம் என்ற தத்துவத்தையும் அவர்களது நூலில் நிறுவினார்கள். மற்றைய பாரதீய ஆச்சாரியார்கள் இவர்கள் மூவரையும் பின்பற்றிச் சில மாறுதல்களுடன் தத்தம் தத்துவ மதங்களை நிறுவினார்கள். எல்லாத் தத்துவங்களும் உயர்ந்தது தான்.
"அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே"
- திருவாய்மொழி 1-5
நம்மாழ்வார் மேலே உள்ள பாசுரத்தில் கூறியபடி
அவரவர் வழியில் நின்று இறை வழியை அடையுங்கள். இந்த மூன்று தரிசனத்திலும் பிரம்மம் என்பது ஒன்றுதான், ஶ்ரீமந் நாராயணன்.
விசிஷ்டாத்வைதம் கொள்கையில் பகவத் இராமானுஜர் 2-16 கீதா ஸ்லோகத்தில் அஸத் என்பதற்குச் சரீரம் என்றும், ஸத் என்றால் ஜீவாத்மா என்றும் பொருள் சொல்லி, அஸத்தான சரீரத்திற்கு இருத்தல் என்பதில்லை. ஸத்தான ஜீவனுக்கு இல்லாமை என்பதில்லை. அதாவது சரீரம் அநித்யம், ஜீவன் நித்யம்.
இதையே மூன்றாவது ஷட்கத்தில் 17 வது அத்தியாயத்தில் "ஓம் தத் ஸத்" என்ற இடத்தில் ஸத் என்பதற்கு பரமாத்மா, பிரம்மம் என்பது பொருள். அழிவில்லாத உண்மை தத்துவங்களுக்கு "ஸத்" என்பது அர்த்தமாகும்.
ஸத்தான ஜீவனுக்கு இல்லாமை இல்லை என்றால் ஜீவன் எப்பொழுதும் ஒருபடிப்பட்டவன்.ஒருவித மாறுதலும் இல்லாதவன். ஆத்மயாதாத்ம்ய ஞானம். சரீரத்துக்கு மாறுதல் உண்டு. பருத்தல் இளைத்தல் குட்டை நெட்டை என்ற மாறுதல்கள் சரீரத்துக்கு மட்டுமே என்பதனை "ந அஸதோ பாவோ" என்பதினால் கிருஷ்ணன் சொல்கிறான். ஜீவனுக்கு அந்த மாறுதல்கள் இல்லை என்பதை "ந பாவோ வித்யதே ஸத்" என்பதினால் சொல்கிறான் என்று பகவத் ராமானுஜர் காட்டினார்.
நமது பூர்ணத்தில் கர்ம யோகத்தைப் செய்யும் போது ஆத்மயாதாத்ம்ய ஞானத்துடன் செய்யவேண்டும் என்று கூறியிருந்தோம். இதை நாம் எழுதுவதற்குத் துணையாக விசிஷ்டாத்வைதம் தத்துவத்தின் அடிப்படையில் பொருள் தேடினோம்.
விசிஷ்டாத்வைதம் ( விசிஷ்ட அத்வைதம்) என்பது சேதனம் அசேதனத்துடன் கூடிய விசேஷ பிரம்மம் ஒன்றே உண்மை என்பதுதான் பொருள். அத்வைதம் என்பது பிரம்மம் ஒன்றேதான் உண்மை. மற்றது எல்லாம் மாயை அதாவது பொய்.
எல்லாத் தத்துவங்களும் உயர்ந்தது தான். அவரவர் வழியைப் பின்பற்றுங்கள். இங்கே நான் பின்பற்றும் அல்லது நம்பும் தத்துவத்தின் அடிப்படையில் விளக்கமளிக்கிறேன்.
விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தில் மூன்று பொருட்களும் உண்மை. ஆதலால் இதனைத் தத்வத்ரயம் ( தத்துவங்கள் மூன்று) என்று உரைப்பார்கள்.
மூன்று தத்துவங்கள் :
1. சித் அதாவது சேதனம் ( ஜீவாத்மாக்கள்)
2. அசித் அதாவது அசேதனம் (மற்ற உயிரற்ற பொருட்கள்)
3. ஈஸ்வர அதாவது பிரம்மம் - இறைவன் அதாவது ஶ்ரீமந் நாராயணன்.
சைவ சித்தாந்த கொள்கையின் படியும் தத்துவங்கள் மூன்று (பசு, பதி , பாசம்), அங்கே பிரம்மம் அதாவது பதி என்பது சிவன். இதுதான் வேறுபாடு.
விசிஷ்டாத்வைதம் கொள்கையில் அசித் என்பது 24 தத்துவ வகையில் உள்ளது. ஜீவாத்மா மற்றும் பரமாத்மா என்று மொத்தம் 26 தத்துவங்கள்.
இந்த மூன்றும் அதாவது சேதனம் அசேதனம் பிரம்மம் என்பன எப்பொழுதும் அழியாமல் இருக்கக்கூடிய வஸ்துக்கள். பார்ப்பது எல்லாம் உண்மைகள். மாயை என்பதற்கு விசிஷ்டாத்வைதத் தத்துவத்தில் ஆச்சரியம் என்று பொருள் கொள்கிறார்கள். பார்ப்பது எல்லாம் உண்மை, ஆச்சரியம். ஜீவாத்மாக்கள் என்பது பல என்பதும், ஒன்றல்ல என்பதும் தத்துவம். ஆத்மயாதாத்ம்ய ஞானத்துப்படி, ஜீவாத்மாக்கள் பலவாக இருந்தாலும் அனைத்தும் ஒருபடிப்பட்ட நிலையில் இருக்கும்.
இல்லாத ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்க முடியாது என்பது நவீன விஞ்ஞானம். அதைத்தான் அன்றைய மெய்ஞானமும் இந்த மூன்று தான் உண்மை, நிரந்தரமாக இருப்பவை. மற்றவற்றை இந்த இருப்பதில் இருந்து மாற்றி உருவாக்குகிறது பிரம்மம் என்ற இருக்கும் வஸ்து. மாறுதலுக்கு உண்டானது என்பது அசித் தத்துவம் , சித் மாறுதல் இல்லாமல் ஒரு படிப்பட்டவனாக இருக்கும்.ஈஸ்வரன் சர்வ சுதந்திரன், மாறுதல் இல்லாதான், எங்கும் வ்யாபித்து பரந்து இருப்பவன்.
பகவத் கீதையில் கிருஷ்ணன் இருப்பதில் மாற்றத்தை உருவாக்கி ஒரு புதியதை படைக்கிறான் என்று கூறுகிறான். இந்தச் சேதனமும் அசேதனமும் பிரம்மத்திற்குக் கட்டுப்பட்டது.
நமது உடம்பை எடுத்துக் கொண்டு விளக்க முயற்சிக்கிறேன். இந்த உடம்பானது அசித் அதாவது அசேதனம். பஞ்ச பூதங்கள் , பஞ்ச பூதங்களின் தன்மைகள், ஞான இந்திரியங்கள், கர்ம இந்திரியங்கள் , மனம், புத்தி , அகங்காரம் போன்ற அசேதனத்தினால் ஆனதுதான் இந்த உடம்பு. இந்த உடம்புக்குள் ஒரு ஜீவாத்மா வாழ்கிறது. ஜீவாத்மா இந்த உடம்பில் இருக்கும் வரை உடம்பானது எல்லாவற்றையும் உணரமுடிகிறது, சுவைக்க முடிகிறது, பார்க்க முடிகிறது, நடக்க முடிகிறது, செயலைச் செய்ய முடிகிறது.
அப்படியென்றால் இந்த உடம்பை இயக்குவது சித். உடம்பில் பல உறுப்புகள் பல செயல்களுக்காக இருந்தாலும், அனைத்தும் ஒருங்கிணைந்து சித்தின் விருப்பப்படி செயலில் ஈடுபடவேண்டும். மனம், புத்தி, கால்களும் கைகளும் அதை நோக்கி நகர்ந்து செயலைச் செய்ய வேண்டும். ஒரு நிமிடம் யோசியுங்கள் இவைகளுக்குள் குழப்பம் ஏற்பட்டு அகங்காரத் திமிரில் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு செயலை ஒருங்கிணைப்பு இல்லாமல் செய்தால் என்னவாகும். அப்படிப்பட்டவனை இந்த உலகம் எப்படிப் பார்க்கும் என்பதனை நினைவில் கொள்ளவும்.
கால் ஒரு காரியம் செய்தாலும் , கை ஒரு காரியம் செய்தாலும், மனம் ஒன்றை நினைத்தாலும், அதற்கான காரணம் சித். சித்தின் கட்டுப்பாட்டுக்குள் அனைத்து உடம்பு பாகங்களும் அடங்கியுள்ளது. எனது கை இந்தக் காரியத்தைச் செய்தது என்று சொல்லுவதில்லை, நான் செய்தேன் என்று சொல்லுகிறோம். நான் என்பது ஒரு பெயருடன் உடம்பில் இருக்கும் சித்தையே குறிக்கும். சித் வெளியேறும் போது நான் என்பதும் பெயருடன் வெளியேறுகிறது, சித் என்ற எஜமான் இல்லாத உடம்புக்குப் பிணம் என்றுதான் பெயர்.
விசிஷ்டாத்வைதம் தத்துவம் என்பது சேதனம் அசேதனத்துடன் கூடிய பிரம்மம். பிரம்மத்திற்குச் சரீரமாக அதாவது உடம்பாகச் சேதனங்கள் அசேதனங்கள் உள்ளன. இப்பொழுது பிரம்மம் (அ) பரம ஆத்மா அதாவது உயர்ந்த ஆத்மாவானது சேதனத்தையும் அசேதனத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறது.
ஆதலால் நாம் ஒரு காரியம் செய்தாலும், அது கடவுளின் சித்தம். எல்லாம் அவன் செயல் என்று எல்லா மதத்திலும் கூறுவதைக் காணலாம். அதாவது என் கைகள் காரியத்தைச் செய்தாலும் அதனை நான் (சித்) செய்ததாகக் கருதுவது போல் , பரமாத்வாவின் உடம்பின் ஒரு பகுதியான நான் (சித்) செய்தததை , அந்தப் பரமாத்மா செய்ததாக நினைத்து எல்லாம் அவன் செய்தான் என்று கூறுகிறோம்.
நம் சரீரமும் இந்திரியங்களும் நம் ஆத்மாவின் விருப்பத்தையே செய்து போகிறது. அதேபோல் பகவானுக்குச் சரீரமான சேதனமும் அசேதனமும் பகவானின் முகமலர்ச்சிக்காக அவனது விருப்பத்தையே செய்து போக வேண்டும் என்பது விதி.
பிரம்மம் என்பது சுதந்திரமானவன். அதேபோல் அனைத்து ஜீவனுக்கும் பூரணச் சுதந்திரத்தைக் கொடுக்கிறான் பிரம்மம். அவன் கொடுத்த அந்தச் சுதந்திரத்தில் பகவான் அதாவது பிரம்மம் எப்பொழுதும் தலையிடுவதில்லை. இங்கேதான் பிரம்மம் உலக விளையாட்டுகளைச் சுதந்திரம் என்ற பெயரில் நடத்துகிறான்.
ஜனநாயகமே எல்லாவற்றிற்கும் மேல் என்பது இன்றைய விஞ்ஞானம். சுதந்திரம் ஒவ்வொரு ஜீவனின் பிறப்புரிமை என்பது அன்றைய மெய்ஞானம்.
நம் உடம்பில் ஒரு பகுதியில் காயம் ஏற்பட்டு வலி உண்டானால் , அந்த வலியை பொறுத்துக் கொள்வது நான் என்ற சித்துக்குப் பொறுப்பு. அதன் வலியைப் போக்க முயற்சி செய்வதும் , போக்குவதும் அந்தச் சித்தின் காரியம். சரீரத்துக்கு ஒன்றுமே இதில் வேலை இல்லை. அதேபோல் பகவானின் சரீரமாக இருக்கும் நமக்கு ஒன்று ஏற்பட்டால் , அதைப் போக்குவதும் அந்த ஆத்மாவான பிரம்மம். அதனால் தான் எல்லாமே அவன் செயல் என்பதற்கான காரணம். இதுதான் ஆத்மயாதாத்ம்ய ஞானம்.
ஆத்மயாதாத்ம்ய ஞானம் என்பது ஜீவன், அழிவில்லாதவன். அவனுக்கு அணுத்வம்,நித்யத்வம், ஞானத்வம், ஆனந்தத்வம், அமலத்வம், பகவத் ப்ராகத்வம் என்ற ஆறு குணங்களை நிரந்தரமாகக் கொண்டது என்ற ஞானம்.
அதாவது ஜீவன் என்பது அணு வடிவம், நிரந்தரமானது, அறிவுள்ளது, ஆனந்தமானது , தோஷம் இல்லாதது , இறைவனை விட்டு பிரிக்க முடியாதாவன். இதில் இறைவனை விட்டு பிரிக்க முடியாதாவன் ஜீவன் என்பது அடிப்படை ஒன்றாக உள்ளது என்பதனையும் அறிகிறோம். மலருக்கு மணம் போல, ரத்னத்திற்கு ஒளி போல் இறைவனுடன் கூடியிருப்பது ஜீவன்.
உடம்பில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு துகளுக்கும் ஒரு குணங்கள் செயல்கள் இருப்பதுபோல் வேறுபாட்டுடன் இருந்தாலும் உடம்பை முழுவதுமாகப் பாகுபாடுன்றி ஜீவன் அதாவது சித் இயக்குகிறது. அதேபோல் பகவானுக்குச் சரீரமாக இருக்கும் பல்வேறு ஜீவன்கள் பல்வேறு பாகங்களிலிருந்து பிரிந்தாலும் பிரம்மத்தின் முன் அனைவரும் சமம் என்பதுதான் பிரம்மத்தின் விதி. அப்படித்தான் பிரம்மம் இயக்குகிறது.
சரீர ஆத்ம பாவத்தைப் பிரளய காலத்தில் கிருஷ்ணன் உலகம் முழுவதையும் தன் வயிற்றுக்குள் அடக்கி வைத்தான் (ஆலிலை கிருஷ்ணன்) என்ற ஒரு குறியீடு அடையாளமாகச் சொல்வதைக் காணலாம். சேதனம் அசேதனம் முழுவதையும் தன் உடம்பாக வைத்துக் கொண்டான். அப்பொழுது உலகத்தில் ஒரு சக்தி அதாவது பிரம்மம் மட்டும் அணு வடிவத்தில் சிறியதாக இருக்கும். அவனிடமிருந்து பிறக்கிறது ஒடுங்குவது என்பதனை 7-6 ல் கூறியதையும் மனதில் கொள்ளவும்.
ஒரு சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது இன்றைய விஞ்ஞானம். சக்தி அதாவது பிரம்மம் மட்டும் ஒன்றே அணு வடிவில் இருக்கும் என்பது மெய்ஞானம். இங்குதான் விசிஷ்டாத்வைதம், அத்வைதத்துடன் ஒன்று செல்கிறது.
சிருஷ்டி காலத்தில் கர்ம வினைகளுக்கு ஏற்ப ஜீவனைச் சங்கல்பத்தினால் உருமாற்றிப் படைக்கிறான். இப்படியாக மீண்டும் சிருஷ்டியைத் துவக்குகிறான்.
சிருஷ்டியின் போது பல்வேறு விதமாகப் படைக்கிறான். ஒருவரை பிறவியிலே குருடனாகவும் , ஊமையாகவும், பணக்காரனாகவும், ஏழையாகவும் படைக்கிறான்.
ஒரு ஸ்லோகத்தில் கீதையில் அவன் படைப்புக்குக் காரணம் என்று கூறி , அதே ஸ்லோகத்தில் படைப்புக்குச் சம்பந்தம் இல்லை என்று கூறுவதையும் பார்க்கமுடிகிறது. முரணாக இருக்கலாம் . ஆனால் இல்லை ...........
இதனைத் தொடர்வோம்
.......... (தொடரும்)
மகர சடகோபன்
தென்திருப்பேரை
Dear Sadagopan,
பதிலளிநீக்குஆசிரியர் உங்களது பல கட்டுரைகளில் இருந்து இது சிறிது வேறுபட்டுள்ளது. பல நேரங்களில் பொதுக் கருத்துக்களை ஆன்மிகத்தோடு இணைத்து எழுதும் நீங்கள் இதில் தத்துவங்களை உணர்த்த முற்பட்டு உள்ளீர்கள் அருமை.
நான் வைணவ தத்துவங்களை இதுவரை படிக்க இயலவில்லை ஆனால் சைவ சித்தாந்தத்தை ஓரளவு படித்தேன் திரு அனந்தராசன் ஐயா அவர்கள் எழுதிய சிவஞான போதம் என்ற புத்தகத்தை படித்தேன்
இறைவன் தன் சத்தியோடு இயைந்து நின்று, உயிர்களை அவற்றின் வினைக்கேற்பச் செயற்படுத்துவான் என்று கூறப்பட்டது. அவ்வாறு செயற்படுத்தப்படும் உயிர் என்பதுதான் எது? உடம்புதான் உயிரா? அல்லது உடம்பின் பகுதிகளுள் ஒன்று உயிரா? அல்லது, இவையனைத்திற்கும் வேறான ஒன்றா? இப்படிப் பலவாறான ஐயங்கள் இயற்கையாகவே நம்முள் எழும்
உயிர் எது என்பதில் கருத்து வேறுபாடு:
உயிர் என்பது எது என கேட்டால், உணரும் தன்மையுடையது எதுவோ அஃது உயிர் என அறியலாம். என்று சைவ சித்தாந்தமான சிவஞானபோதம் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. ஆன்மா உண்டு என உணர்த்துதல்
2. ஆன்மாவினது இலக்கணத்தை உணர்த்துதல் கடைசியில் அவர்கள் முடித்திருப்பது எவ்வளவு படித்து முடித்தாலும் உயிரைப் பற்றியும் ஆன்மாவை பற்றியும் பிறப்பு மற்றும் இறப்பை பற்றியும் சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும் என்பதோடு முடித்து விட்டனர்.
அருமை சடகோபன்.
து.குஹன்
Sir உங்கள் எழுத்துக்களைக் கண்டு பிரமிப்படைந்தேன்
பதிலளிநீக்குஇதை படித்து புரிந்து கொள்வதற்கு கண்டிப்பாக ஞானம் வேண்டும்.
நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் விடாமுயற்சியாக
நன்றி குகன். பசு பதி பாசம் என்ற மூன்று தத்துவங்கள். அதில் பாசம் என்பது 36 ஆக விரிகிறது சைவத்தில். வைணவத்தில் அது 24 ஆக விரிகிறது. பரதெய்வம் என்பது சிவன் சைவத்தில், ஶ்ரீமந் நாராயணன் வைணவத்தில். வைணவத்திலும் தாயாருடன் சேர்ந்த பெருமாள் இந்த உலகத்தை இயக்குகிறான். ஆதலால்தான் தாயார் அவனை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிவது இல்லை. அவனது மார்பில் அமர்ந்து அவனை இயக்குகிறாள். அவள் கண் அசைவில் அகிலத்தையும் ஆக்கினான். அவனை மேலும் கருணை உள்ளம் படைத்தவனாக மாற்றுவதும் அவளே. ஆதலால் முரண் என்பது சைவத்திலும் வைணவத்திலும் அதிகம் இல்லை.
பதிலளிநீக்கு