பூர்ணம் -22 (சரணாகதி)

                           


எட்டெழுத்து மந்திரம் என்பது " ஓம் நமோ நாராயணய". பூர்ணமடைய அறிய வேண்டிய மந்திரம் இந்த எட்டெழுத்து மந்திரம் என்பது வைஷ்ணவ நம்பிக்கை.

கிருஷ்ணன் பகவத்கீதை 10.35 யில்,

"மாஸாநாம் மார்கசீர்ஷோஹம்"

மார்கழி மாதம் என்பது மாதத்தில் எட்டாவது மாதம். கிருஷ்ணனுக்குப் பிடித்த மாதம். அவன் பிறந்தது ( எட்டாம் நாள்) அஷ்டமி திதியில் எட்டாவது குழந்தையாகப் பிறந்து பகவத்கீதை என்ற உயர்ந்த ஞானத்தை உலகுக்கு வழங்கி "எட்டெழுத்து மந்திரமாக" ஏற்றம் கண்டான்.

முமுஷூப் படியில் அஷ்டாக்ஷர மந்திரத்தின் பெருமையை மிகவும் விஸ்தாரமாக விளக்குகிறார் பிள்ளைலோகாச்சாரியார். பாவ புண்ணியங்களைப் போக்கவல்ல மந்திரம் இந்த எட்டெழுத்து.முமுஷூக்கு ( முக்தியை விரும்புவர்)  அறிய வேண்டிய மந்திரம் மூன்று. அதில் பிரதான மந்திரம் "திருமந்திரம்". திருமந்திரம் என்பது "ஓம் நமோ நாராயணய" 

பாவபுண்ணியங்கள் என்ற இரு வினைகளையும் ஒழித்து , இறைவன் அடிப் பற்றுபவர் பிறவா நிலையை அடைகிறார்கள் என்று கிருஷ்ணன் கீதையில் கூறியதைப் பார்த்தோம்.

வள்ளுவ பெருந்தகை,

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" - குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை ( புண்ணியம்), தீவினை (பாவம்) என்னும் இரண்டு வினையும் உளவாகா.

இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. பரிமேலழகர் மேற்கண்ட உரையைத் தெளிவாகத் தந்து , மேலும் தொடருகிறார் நல்வினையும் பிறத்தற்கு வழிவகுக்கும் என்பதனால் இருவினையும் சேரா என்று வள்ளுவர் கூறினார். முற்றவும் உடைய இறைவன் புகழே " பொருள் சேர்" புகழ் எனப்பட்டது.

தமிழ் மெய் புலவன் , பொய்யா மொழிப் புலவன் வள்ளுவன் வாக்கும் பாரதீய மரபில் கிருஷ்ணன் பகவத்கீதை வாக்கை வழிமொழிகிறது.


"ஓம் தத் ஸத் இதி நிர்தேசோ ரஹ்மணஸ் த்ரிவித: ஸ்ம்ருத: |
ப்ராஹ்மணாஸ் தேந வேதாஸ்ச யஜ்ஞாஸ்ச விஹிதா: புரா||" 17 - 23

ஓம் - பிரணவ மந்திரம், தத் - அது , ஸத் - உண்மை , இருத்தல் ( உண்மைப் பொருள், அழியாத என்றும் இருப்பவை) , இதி - என்று , ப்ரஹ்மண - பிரம்மம், த்ரிவித - மூவித , நிர்தேசோ - பெயர் , ப்ராஹ்மணா: ச - வேத விற்பன்னர்களும், வேதா:ச - வேதங்களும், யஜ்ஞா:ச - யாகங்களும் , புரா - பண்டைக் காலத்தில் , விஹிதா - வகுக்கப்பட்டன.

ஓம் தத் ஸத் என்று பிரம்மம் ( மூலக்கடவுள்) மூவிதமாய் மொழியப்பட்டுள்ளது. அதனின்று வேதியர், வேதம் , வேள்வி பண்டு வகுக்கப்பட்டனர்.

ஓம் காரம் என்பது ஓசையாகப் பரிணமிக்கிறது. ஓசையினின்று உலகெலாம் உண்டாகிறது. ஓம் என்பது அகில அண்டத்தின் ஓசையின் தொகை. ஓசையின் தொகை ஓம்கார சொரூபமாக ஓயாது எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதனைத் தத் அஃதாவது அது ( பிரம்மம்) என்று எப்பொழுதும் தத்துவ ஞானிகள் கூறுகிறார்கள். எது சாத்தியமுள்ளதோ அது ஸத் எனப்படுகிறது. காலத்தால் இடத்தால் செயலால் அடிபடாதிருப்பது பிரம்மம். எனவே அது ஸத் என்னும் பெயர் பெறுகிறது. ஆக , ஓம் தத் ஸத் என்பதன் பொருள் ஓசை வடிவமாயுள்ள அந்தப் பிரம்மமே மெய்ப்பொருள் என்பதாம்.

ஓம் என்பது அஉம என்ற எழுத்துகளைக் கொண்டது. அகார வாக்யமான விஷ்ணு. உகாரமான தாயார். மகாரமான ஜீவாத்மா. அதாவது பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் சேர்த்து வைப்பவள் தாயார் என்பதே ஓம்.

"அக்ஷராணாம் அகார அஸ்மி"  - பகவத்கீதை 10.33 

எழுத்துகளுக்குள் நான் அகரம் என்று கிருஷ்ணன் கீதையில் கூறியதை நம் பொய்யா மொழிப் புலவன் வள்ளுவன், 
 
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு" 

எழுத்துகளுக்கு முதன்மை அகரம். உலகுக்கு முதன்மை ஆதிபகவன். அவனே எழுத்துக்கும் உலகுக்கும் முதன்மை என்பது வள்ளுவன் வாக்கு. 

"மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை உள்ளெழ வாங்கி

காலுங் கையும் விதிர் விதிர்த்தேறிக் கண்ணுறக்க மாவதன் முன்னம்

மூல மாகிய ஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி

வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலு மாமே

– பெரியாழ்வார் திருமொழி 4-5-4

மூலமாகிய ஒற்றை எழுத்து என்பது ஓம் , மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி என்பது அஉம என்பதனைக் குறிக்கிறது.


ஆதிபகவன் என்ற பிரம்மத்திடம் சரணடைந்து, அவன் திருவடி பலத்தால் அவன் திருவடி அடைந்து பிறவா நிலையில் அங்குப் பேரானந்த அனுபவத்தை அனுபவித்து இருப்பது என்பது ஜீவனின் முக்தி நிலை. அதுவே பரிபூர்ணம். அதற்காகப் பகவான் கிருஷ்ணன் 18 அத்தியாயத்தில் ஜீவாத்மா நிலையை விளக்கி , ஆக்கை வழி உழலும் ஜீவனையும் விளக்கி, பரமாத்மா என்ற புருஷோத்தமனின் நிலையையும் விளக்கி, இரட்டைகளை வென்று சமநிலைப் படுத்தி , ஐம்புலன்களையும் அடக்கி மனதைக் கவனச் சிதறல் இல்லாமல் கவனக்குவியலுடன் ஜீவன் கர்மங்களைச் செய்து , கர்மங்களின் மேல் பற்று இல்லாமல் கர்மங்களை முழு மனதுடன் செய்து , பலன்களை எதிர்பாராமல் இறைவன் திருவடியில் அர்ப்பணம் செய்து அனுபவித்து, அவன் திருவடியில் சரணடைந்து அவன் திருவடியை அனுபவிப்பது என்பதே பரிபூர்ணம் என்று கீதையின் 18 - 66 கூறுகிறான்.

"ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ|
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:||" (18-6)

ஸர்வதர்மாந் - எல்லாத் தர்மங்களையும் , பரித்யஜ்ய- அறவே தியாகம் செய்து விட்டு, மாமேகம்-என்னை ஒருவனையே, சரணம் வ்ரஜ-சரணமடைவாயாக, அஹம்-நான், த்வா-உன்னை, ஸர்வ பாபேப்யோ-எல்லா பாகங்களிலிருந்தும், மோக்ஷயிஷ்யாமி- விடுவிப்பேன், மா சுச: வருத்தப்படாதே.‌

வள்ளுவ பெருந்தகையும் ,

"பிறவிப் பெருங்கடலை நீந்துவார் நீந்தார்
இறைவன் அடி சேராதார்" குறள் 10

இறைவன் அடி சேர்ந்தார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறின்றி மாறி இறைவன் அடி சேராதவர்க்குப் பிறவி அறாமையும் நியமிக்கப்படுகிறது என்பது வள்ளுவனின் வாக்கு.

இறைவன் அடி சேர்வது என்பது பிறவிப் பெருங்கடலைக் கடந்து பிறவா நிலையை அடைவது என்பதனை திருக்குறளில் , கிருஷ்ணன் கீதையில் கூறியதையே வழி மொழிந்து தமிழ் மரபு பாரதீய மரபின் அங்கம், வேறல்ல என்பதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் 6-10-10

" அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று
உடையாய் என்னை ஆள்வானே
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"

புகல் ஒன்று இல்லா அடியேன் - வேறு கதியில்லாத அடியேன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே - திருப்பதி திருவேங்கடமுடையான் திருவடிக்கீழ் அலர்மேல் மங்கை தாயாரை முன்னிட்டு சரணாகதி செய்கிறார் நம்மாழ்வார்.

வருடத்திற்கு ஒரு முறை பங்குனி உத்திரம் அன்று ரங்க நாச்சியாரும் ரங்க நாதனும் சேர்த்தியில் சேவை சாதிக்கிறார்கள். அந்த நன்னாளில் திருவரங்கத்தில் இராமானுஜரும் சரணாகதி கத்யம் மூலம் , அனைத்து உயிர்களும் உய்விக்கும் பொருட்டு சரணாகதி அனுஷ்டித்தார் என்பது வரலாறு. அப்பொழுது தாயாரும் பெருமாளுமாகச் சேர்ந்து,  ராமானுஜன் தாள் பற்றினோர் அனைவருக்கும் பரமபதம் தந்தோம் தந்தோம் தந்தோம் என்று அருளினார்கள். பகவத்கீதையில் கிருஷ்ணன் கூறியதை நடைமுறையில் நடத்தி காட்டிய கருணை வள்ளல் நம்மிராமானுஜன்.

இவ்வாறு பிரம்மத்தை அறிந்து, பிறவா சூழ்நிலையை அடைந்து பரிபூரணம் எய்வது என்பது அனைத்து ஜீவனின் கடமை என்று ஞானிகள் காட்டிய வழியில் நாமும் முயல்வோம்.


******* முற்றும்*******

மகர சடகோபன் 
தென்திருப்பேரை 

கருத்துகள்

  1. இத்தொடர் மிக மிக அருமை ஸ்வாமி. தேவரீர் திருவடிகளுக்கு பல்லாண்டு .. நன்றி இராமானுசனடியேன்

    பதிலளிநீக்கு
  2. பூர்ணம் என்ற தலைப்பில் தங்கள் எழுதிய கட்டுரை அனைத்தும் அற்புதமாக இருந்தது முடிந்தவரை என்னால் படித்து புரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பிறவியில் இந்த ஆன்மாவின் எண்ணம் மறுபிறப்பெடுத்து பிறவித்துழனியில் உழலாமல் இருக்க இத்தகைய ஆன்மீக சிந்தனைகள் நமக்கு உதவும்.
    து.குஹன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி குகன். அவ்வப்போது படித்து அப்பொழுதே பதிலளித்து ஊக்கிமித்த நபர்களில் நீயும் ஒருவன். நன்றி

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

பிராயக்ராஜ் யாத்திரை - 2 (திரிவேணி சங்கமம்)

பிரயாக்ராஜ் யாத்திரை -3 (அயோத்தியா, நைமிசாரணியம்)