பூர்ணம் - 21 ( அர்த்த பஞ்சகம்)
தத்வத்ரயம் என்று மூன்று உண்மைப் பொருட்களை முதலில் தெரிவித்து, சரீர ஆத்ம பாவம் முறையில் இறைவனுக்கும் சேதன அசேதனத்துக்கும் சம்மந்தத்தை விளக்கி, சரீரத்திற்கு ஒன்று என்றால் அதனை ஆத்மா தாங்குவதுபோல், இறைவனுக்குச் சரீரமாக இருக்கும் சேதனத்துக்கு அதாவது ஜீவாத்மாக்களுக்கு ஒன்று என்றால் பரமாத்மா என்ற இறைவனே தாங்குகிறான் என்று காட்டப்பட்டது.
பாவபுண்யங்களை அதாவது நல்லது கெட்டது என்ற எல்லாக் கணக்குகளையும் பூஜ்யமாக்கி , பிறவி சுழலிருந்து விடுதலைப் பெறலாம் என்ற கீதையின் ஸ்லோகத்தையும் பார்த்தோம். பாவ புண்யங்களிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் ஐம்புலனடக்கம், மனவலிமை, இரட்டை நிலைகளைச் சமமாகக் கருதுதல், கர்மம் செய்வதைக் கடமையாகக் கொண்டு பலனை எதிர்பாராமல் இருக்கும் நிலைமை என்றவை மிகவும் அவசியம் என்பதனை கீதையில் உரைத்ததை மனதில் நிறுத்த வேண்டும். நரகம் சொர்க்கம் என்பதே பாவ புண்ணியங்கள் பலனுக்கான இடங்கள் என்றும் காட்டப்பட்டது. அதையும் தாண்டி இறைவன் திருவடியில் பிறவா நிலையை அடைவது என்பது ஶ்ரீமந் நாராயணன் இருக்குமிடத்தைப் பரமபதம் என்றும், சிவன் இருக்குமிடத்தைக் கைலாயம் என்று சனாதன தர்மத்தில் காட்டப்பட்டது. இதற்குப் பாவ புண்ணியங்கள் இரண்டுமே கழிய வேண்டும் என்பது நிபந்தனை.
ஜீவனுக்குக் கர்த்துவம் என்பது இயல்பு. மனிதன் பிறந்தது என்பது ஒரு விஷயத்தைச் செய்வதற்கும் , அதுவே அவனது பிறவியின் நோக்கமாகவும் இருந்தால் பலனை எதிர்பாராமல் தர்மத்தில் நாட்டம் ஏற்படும்.
பலனை அனுபவிக்கலாம் ஆனால் பலனே பிறவியின் நோக்கமாக இருந்தால் , பலனை அடைவதில் நேராக இல்லாமல், அறவழியில் இல்லாமல், குறுக்கு வழியில் தான் சார்ந்த சமுதாயத்துக்கும், தனது உற்றார் உறவினர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வண்ணம் செயல்களைச் செய்து பலன் ஒன்றே குறிக்கோள் என்று நகரக் கூடும். அஃது எவ்வளவு ஆபத்து என்பதனை தனிமனிதனும் சமுதாயமும் உணராத வரை அழிவு ஒன்றே நிச்சயம். இப்பொழுது உலகத்தில் நடக்கும் அனைத்துச் செயல்களும் பலன் ஒன்றே குறிக்கோள் என்ற புள்ளியில் இணைவதை உணரமுடிகிறது.
பலன் என்பது பணம், புகழ்ச்சி, பதவி என்ற மூன்றையும் அழைத்துவரும். அந்த மூன்றின் மேலிருக்கும் ஆசையை அடக்கி, அந்த மூன்று விளைவிக்கும் பொறிகளுக்குள் அகப்படாமல் அறவழியில் நின்று கர்மம் செய்வதில் நோக்கம் கொண்டு, பலனை இந்த மூன்றிலிருந்து விலக்கி அதனை அனுபவித்து, மீண்டும் கர்மத்தின் பால் கவனக்கவியலுடன் செல்ல வேண்டும் என்பதனையும் கீதையின் மூலம் அறிந்தோம்.
இதுவெல்லாம் நாம் முதலில் சில கேள்விகளைக் கேட்டு அதற்கான பதிலை பின்னால் பார்க்கலாம் என்று பதில் கூறாமல் நகர்ந்தது என்பது மனது என்பதைக் கையாள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.
அனுபவமும் பழக்கவழக்கங்களும், நல்லவர்களின் தொடர்பும் ஞானமும் ஒருவனின் மனதை எவ்வாறு எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதனையே இதுவரை பல ஞான மரபுகளின் வழியாகவும், இறுதியில் பகவத்கீதை என்பது உருவானதே மனக்கலக்கத்தைத் தெளிவாக்க உருவானதால், அதன் ஞான மரபையும் அறிந்து மனதை வென்று பூரணத்தை அடையும் முறைகளையும் பார்த்தோம்.
பிறவி என்பது இறப்பில் கொண்டுவிடும், அந்த இறப்பு என்பது பிறவிச்சுழலில் சிக்குண்டு தவிக்கும் நிலையை மேற்கொள்வதா? அல்லது பிறவிச்சுழலை அறுத்துப் பிறவா தன்மையை அடைந்து பரிபூரண நிலையை அடைவதா? என்பதே எல்லா ஜீவனுக்கும் உண்டான ஒரு கேள்வியாக இருக்கக்கூடும். இதிலிருந்து விடுபடவே உண்மைப் பொருட்கள் மூன்றுடன், இந்த ஐந்தையும் தெரிந்து கொண்டால் பிறவியின் நோக்கத்தை அறிந்து பிறவா நிலைக்குச் சென்று பரிபூரணத்தை அடையலாம் என்று பகவத் இராமானுஜர் காட்டிய நன்னெறி.
எந்த ஒரு காரியம் செய்தாலும் இந்த ஐந்து என்பது மிகவும் முக்கியம்.
ஓர் ஊருக்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்து, திட்டங்கள் அமைத்துக் கிளம்புகிறோம். 1.முதலில் அந்த ஊரைப்பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்வோம். 2. நம்மைப்பற்றியும் நமது உடல் பற்றியும் இரண்டாவது தெரிந்து கொள்வோம்.
3. அந்த ஊருக்குச் செல்வதற்கான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எப்படி எவ்வாறு செல்லவேண்டும் என்பதனையும் தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.
4.பாதையில் வரும் தடங்கல்கள் மற்றும் சில விஷயங்களைப் பற்றி ஆராய வேண்டும். ( உ.ம். எங்கு நிறுத்த வேண்டும் , என்ன செய்யவேண்டும், காருக்கு ஒன்று என்றால் எப்படிச் சமாளிப்பது, இடையில் காரைச் சரி செய்வதற்கான இடம் எங்கே என்ற விபரங்களை அறிந்து கொள்வது)
5. ஊரை அடைந்து அனுபவிப்பது என்ற அனுபவம். அதுவே பலனாக இங்கு அமைவதை உணருவது.
இதைத்தான் அர்த்த பஞ்சகம் என்று பரிபூரண வாழ்க்கைப் பயணத்துக்கான ஐந்தைப் பற்றிப் பகவத் இராமானுஜர் விளக்குகிறார்.
1. பரமாத்மா நிலை ( பரமாத்மா ஸ்வரூபம்): (அடையக்கூடிய இடம்) பரம்பொருளை சரீர ஆத்ம பாவத்துடன் புரிந்து கொள்வது. அவனே நம்மை இயக்குகிறார் என்பதனையும் , நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவனே செய்வதாக என்ற ஞானத்துடன் அறிய வேண்டும்.
2. ஜீவாத்மா நிலை ( ஜீவாத்மா ஸ்வரூபம்): (அடைய வேண்டும் என்று எண்ணுபவன்)
அணுத்வம், நித்யத்வம், ஞானத்வம்,ஆனந்தத்வம், அமலத்வம், பகவத் பரிகாரத்வம் என்ற ஆத்மயாதாத்ம்ய ஞானத்த்தை மனதில் நிறுத்த வேண்டும். பகவத் பரிகாரத்வம் என்பது மிகவும் முக்கியமாகச் சொல்லப்பட்டது. மலருக்கு மணம் போல, ரத்னத்திற்கு ஒளி போல , ஜீவாத்மா பரமாத்மா உறவு என்பது பிரிக்க முடியாத ஒன்று.
3. வழிமுறைகள் ( மார்க்கம்) ( பாதை) : கீதையில் பக்தி மார்க்கத்தின் மூலம் அடையலாம் என்று சொன்னாலும் , கடைசியில் சரணாகதி மூலம் முழுவதுமாகச் சரண் என்பதன் மூலம் அடையலாம் என்ற வழியைக் காட்டினான் கிருஷ்ணன். பகவத் இராமானுஜர் சரணாகதி மூலம் இறைவனை அடையலாம் என்ற பாதையைக் காட்டினார். அந்தப் பாதையில் கடைசி வரை பயணம் செய்ய வேண்டும் அந்த உண்மையான இறுதியை அடைவதற்கு.
4. தடங்கலை அறிதல் (விரோதி ஸ்வரூபம்): வழிப்பாதையில் வரும் தடங்கல்களைச் சமாளித்து, மீண்டும் தேர்ந்தெடுத்த பாதையில் பயணத்தைச் செலுத்துவது. தடங்கல்களை அறிவது, விரோதிகளை அறிவது என்பது பாதையில் மீண்டும் செல்வதற்காக.
5. அனுபவம் ( பல ஸ்வரூபம்) : பரமாத்மாவை அடைந்து அனுபவத்தில் ஆனந்தமாக இருப்பது.
இந்த ஐந்தையும் தத்வத்ரயத்துடன் ( மூன்று உண்மைப் பொருள் சித், அசித், ஈஸ்வரன்) அறிந்து கொண்டு வாழ்க்கையில் செயல்படுத்தினால் பரமபதம் என்ற பிறவியற்ற சுழலை அடையலாம் என்பது பகவத் இராமானுஜர் காட்டிய நன்னெறி.
இதைத் திருவரங்கம் கோயிலில் காணலாம். பெருமாள் கோயிலாக இருந்தாலும், சிவன் கோயிலாக இருந்தாலும் முதலில் தாயாரைச் சேவித்த பிறகு எம்பெருமான் சந்நிதிக்குச் சென்று சேவிப்பது என்பது வழக்கம். தாயார் நமது நிலைமைகளை எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய தாயன்பு இயற்கையிலே கொண்டவள். அவள் நமக்காக எம்பெருமானிடம் பரிந்துப் பேசக்கூடியவள். அவனும் அவள் சொல்லைத் தட்டாது கேட்பவன். அவள் மூலமாகவே நமக்குப் பரிபூரணத்தை அளிப்பவன் பரம்பொருனான எம்பெருமான்.
திருவரங்கத்தில் வடக்கு வாசலாகத் தாயார் சந்நிதி சென்று தாயாரைச் சேவித்து, எம்பெருமானை சேவிக்க மூன்று வாசல் ஐந்து குழி வழியாகச் செல்ல வேண்டும்.
இந்த மூன்று வாசலிலிள்ள ஐந்து குழியில் கையை வைத்து நிமிர்ந்து பார்த்தால் பரமபதம் நேரில் தெற்கு நோக்கி தெரியும். தென்புலத்தார் இருப்பதும் தெற்குப் பக்கம் என்பது விசேஷமாக அமைந்துள்ளதையும் நாம் உணர முடிகிறது. இந்த ஐந்தும் மூன்றும் காட்டும் அர்த்தத்தை அறிந்துக் கொண்டவர்கள் அனைவருக்கும் பரமபதம் உறுதி என்பது தென்திசை நோக்கி சயனித்திருக்கும் அரங்கனின் நிர்வாகம்.
ஐந்தும் மூன்றும் சேர்ந்து காட்டும் மந்திரம் எட்டெழுத்து மந்திரம், "ஓம் நமோ நாராயணய". ஓம் என்பதனை பகவத்கீதை மூலம் அறிவோம்.
- தொடரும்
மகர சடகோபன்
தென்திருப்பேரை
இறைவன் தன் சத்தியோடு இயைந்து நின்று, உயிர்களை அவற்றின் வினைக்கேற்பச் செயற்படுத்துவான் என்று கூறப்பட்டது. அவ்வாறு செயற்படுத்தப்படும் உயிர் என்பதுதான் எது? உடம்புதான் உயிரா? அல்லது உடம்பின் பகுதிகளுள் ஒன்று உயிரா? அல்லது, இவையனைத்திற்கும் வேறான ஒன்றா? இப்படிப் பலவாறான ஐயங்கள் இயற்கையாகவே நம்முள் எழும்
பதிலளிநீக்குஉயிர் என்பது எது என கேட்டால், உணரும் தன்மையுடையது எதுவோ அஃது உயிர் என அறியலாம். இன்று சைவ சித்தாந்தமான சிவஞானபோதம் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. ஆன்மா உண்டு என உணர்த்துதல்
2. ஆன்மாவினது இலக்கணத்தை உணர்த்துதல்.
3, ஆன்மாவிற்கு பிறவா நிலை ஏற்படுவதற்கு நமது ஆன்மீக இலக்கியத்தில் ராமானுஜர் கூறிய வழிகாட்டுதலின் மூலமாக அருமையாக எழுதியுள்ளீர்கள்.
இறைவன் கருணையானலேயே ஆன்மாவை பற்றியுள்ள மலங்களை நீக்கி இறைவனடியை அடைய இந்த அருமையான விளக்கம் உதவும்.
Guhan.D
சரியே . அவன் திருவடியால் அவன் திருவடி அடைவது. இதுவே உபயம் உபாயம் என்று வைஷ்ணவத்தில் காட்டுவார்கள்
நீக்குஅருமை ஸ்வாமி.
நீக்கு