பூர்ணம் - 20 ( சமநிலை புத்தி)
பாரதீய சமயங்கள் அனைத்தும் கர்ம வினைகளை நம்புகிறது. பிறவியற்ற சூழ்நிலையை உருவாக்குவதே ஒரு ஜீவாத்மாவின் பரிபூர்ணம் என்பதும் நம்பிக்கை. கர்ம வினைகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதுதான் பாரதீய நம்பிக்கை. அதிலிருந்து வெளியேற ஒரு வழி இறைவன் திருவடி என்பதும் பாரதீய சமயக் கருத்து.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் - திருக்குறள்
இதனைத்தான் வள்ளுவப் பெருமகனார் அவர்களும் தமிழ் மரபில் காண்பித்துள்ளார். தமிழ் மரபு என்பது பாரதீய மரபை உள்வாங்கி நிற்கும் என்பதற்கு வள்ளுவ பெருந்தகையின் வாக்குகள் நின்று பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.
பிரம்மம் பிரளய காலத்தில் சேதனங்கள் அசேதனங்களைத் தன்னுள் சரீரமாகக் கொண்டு ஒரு சக்தியாக இருக்கின்றன என்பதைப் பார்த்தோம்.
சிருஷ்டி காலத்தில் இந்தப் பிரக்ருதியை உருவாக்கி பஞ்ச பூதங்களை உருவாக்கி, ஜீவாத்மாக்களைப் பிரக்ருதியுடன் சம்மந்தத்தை உருவாக்கி படைக்கிறான். அதாவது சங்கல்பத்தினால் அவனது சரீரத்திலிருந்து வெளியேற்றுகிறான்.
இங்குதான் கிருஷ்ணன் நான்கு வர்ணத்தைக் குணத்தின் அடிப்படையில் படைக்கிறேன் என்று கூறி, இந்தப் படைப்புக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதே கீதா ஸ்லோகத்தில் காட்டுகிறான்.
எப்படியென்றால் சர்க்கரைப் பொங்கலின் நெய் என்பது உடலின் ஒரு உறுப்பான கையில் ஒட்டிக் கொள்கிறது, அதே சர்க்கரைப் பொங்கல் நெய் மற்றொரு உறுப்பான நாக்கில் ஒட்டிக் கொள்வதில்லை. கையில் நெய்யைப் போக்க சீயக்காய் பொடித் தேவை. நாக்குவுக்குத் தேவையில்லை. இதில் முரண் இருப்பதாகத் தெரியவில்லை.
பத்ம பத்ரம் அதாவது தாமரை இலை தண்ணீரிலே இருந்தாலும் தண்ணீரில் ஒட்டுவது இல்லை என்பது முரணாக அமையவில்லை.
அதேபோல் படைப்பில் சம்பந்தம் உண்டு, சம்பந்தம் இல்லை என்று கிருஷ்ணன் சொல்வதிலும் முரண்கள் இல்லை.
"சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:|
தஸ்ய கர்த்தாரம் அபி மாம் வித்தி அகர்த்தாரம் அவ்யயம்||". 4-13
அவரவர் கர்மாநு குணமாக நான்கு வித வருணங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சிருஷ்டிக்கு நான் கர்த்தாவே அன்றி , அந்த மாறுதலுக்கு நான் கர்த்தா இல்லை என்று கிருஷ்ணன் கூறுகிறான். ஆனால் நமது பாரதீய சமயத்திலும் இறைவன் என்பவன் கருணைப் படைத்தவன் , தாய் போல் அன்புள்ளம் கொண்டவன் என்றுதான் காட்டப்பட்டுள்ளது. .
இங்கு இராமானுஜர் ஒரு அன்றாட வாழ்வில் நடக்கும் வேளாண் நிகழ்வுகளைக் கொண்டு விளக்குகிறார்.
ஒரு இடத்தில் வேளாண் பயிர் செய்யும் நபர் , அவரை விதையை ஆங்காங்கே குழித்தோண்டி அதனுள் அவரது கையால் போடுகிறார். விதையைப் போட்ட பிறகு தண்ணீர் ஊற்றுகிறார். உரங்கள் இடுகிறார். ஆனால் ஒரு இடத்தில் நன்றாக வளர்கிறது. ஒரு இடத்தில் குறையுடன் வளர்கிறது. ஒரு இடத்தில் வளரவே இல்லை.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஒரு நபர்தான் எல்லா விதைகளையும் குழியில் போட்டு , தினம் தண்ணீர் ஊற்றியது. இடமும் ஒரே இடம்தான். இங்குதான் பிரகிருதி சம்மந்தம் உணர்த்தபடுகிறது. மண், உரம் , தண்ணீர் சம்பந்தம் என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. விதையைப் போட்டது கர்த்தா என்ற வேளாண், ஆனால் பயிர் வளரும் தன்மைக்கு அவர் கர்த்தா இல்லை. பல சுற்றுச் சூழலைப் பொறுத்து வளர்கிறது.
பிரக்ருதி சம்பந்தம் ஏற்படும் வரை பகவான் சம்பந்தம் உண்டு என்றும், அதற்குப் பிறகு எந்த மாறுதலுக்கு உட்படுகிறான் என்பதில் பகவானுக்குச் சம்பந்தம் இல்லை. கர்ம வினைகளும் , பிரக்ருதி சம்பந்தமும் ஜீவனின் மாறுதலுக்குக் காரணம் என்று கிருஷ்ணன் கூறியதாக பகவத் இராமானுஜரின் கருத்து.
வள்ளுவப் பெருந்தகை வாக்கு:
"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது". 377
ஊழ்வினைப் பயன்படி வகுத்தளிக்கும் இறைவனால் இவ்வளவுதான் என்று ஏற்படுத்திய வகையைத் தவிர கோடிக்கணக்கில் பொருட்களை சேர்த்தவர்க்கும் அதனை அனுபவித்தல் கிடையாது.
ஊழ்வினைப்படி வகுக்கப்படுகிறது என்பது வள்ளுவ பெருந்தகை வாக்கு. கிருஷ்ணன் கீதையில் கூறியதை வழி மொழிந்தது போல் உள்ளது.
பிரக்ருதி சம்பந்தம் கர்ம வினை காரணமாக ஒருவன் பணக்காரனாக, ஏழையாக, அரண்மனையில், ரோடு ஓரத்தில், நிறைவு குறைவுடன் பிறக்கிறான், அதாவது படைக்கப் படுகிறான்.
இங்கேதான் கருணப்படைத்த இறைவனுக்கும் அந்தக் குறைபாடு படைப்பில் சம்பந்தம் இல்லை என்று பாரதீய சமய மரபில் காட்டப்படுகிறது. ஆனாலும் எல்லோரும் அவன் குழந்தைகளே. அதில் எந்த வேறுபாடும் கிடையாது. மேலும் தாய் என்பவள் குறையுள்ள பிள்ளைகள் இடத்தில் அதிக அன்பு கொள்வது போல் , பகவானின் அருளும் கருணையும் இல்லாதவர்களிடத்தில் அதிகம் இருக்கும். ஆனால் அவன் திருவடி பலத்தால் இப்பிறவி இறுதியில் பிறவியற்ற சூழ்நிலையை உருவாக்கலாம் வள்ளுவ பெருந்தகை கூறியது போல்.
"WHEN BAD THINGS HAPPEN TO GOOD PEOPLE"
- HEROLD S KUSHNER
மேலே குறிப்பிட்ட புத்தகத்தில் ஆசிரியர் ஹெரால்டு எஸ் குஷ்னர் விளக்க முயற்சிப்பார். மேற்கத்திய சமய ஞான மரபின் அடிப்படையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இறைவன் கருணைக் குணம் கொண்டவர். ஆனால் எப்படிச் சில குறைகள் ஏற்படுகிறது என்பதனை விளக்க முயற்சிக்கிறார். ஆனால் புத்தகத்தில் ஒரு தெளிவு தென்படவில்லை. உலகில் மிகப்பெரிய தத்துவ எழுத்தாளர்.
ஊழ்வினைப்படி வகுப்பான் (இறைவனால்) வகுக்குப் படுகிறது என்பது வள்ளுவன் வாக்கு.
படைப்பில் சில குறைகள் காணப்படுவதற்கு இறைவன் காரணமில்லை, ப்ரகிருதி சம்மந்தம் மற்றும் கர்ம வினை ( ஊழ் வினை) என்று கூறி , கர்ம வினைப் பயன்களை இப்பிறவியில் அனுபவித்துப் பாவ புண்யங்களைத் தொலைத்து அவன் கிருபையினால் இப்பிறவி சுழலை அறுக்க முடியும் என்பதனைக் கண்ணன் கீதையில் காட்டுகிறான். பாவ புண்யங்கள் இரண்டுமே மொத்தமாகத் தொலைய வேண்டும், இரண்டையும் பூஜ்யம் ஆக்க வேண்டும். ஒன்றைக் கூட்டினால் அதன் வினைகளை அனுபவிக்க மீண்டும் பிறவியை எடுக்க வேண்டும். இந்தக் கணக்கு என்பது மிகவும் சிக்கலான ஒன்று. இறைவன் திருவடி ஒன்றே பலம் என்று இருக்க வேண்டும்.
இதையே வள்ளுவ பெருந்தகை ஊழியல் என்ற தலைப்பில் ஊழ் பற்றி பத்து பாடல்கள் திருக்குறளில் பாடியுள்ளார். ஊழின் வலி மிகப் பெரிது என்று கூறுகிறார்.
"பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம" 376
ஊழினால் தமக்கு உரிமை இல்லாதவைகளை வருந்திக் காப்பாற்றினாலும் தம்முடைய பொருள் ஆகாது. ஊழினால் தமக்கு உரிமையான பொருட்கள் புறத்தே கொண்டுபோய் வேண்டாமெனக் கொட்டிவிட்டாலும் நம்மை விட்டு அகலாது.
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்" 380
ஊழைவிட மிகுந்த வலிமையானது எது உள்ளது ? எதுவும் இல்லை. அந்த ஊழை விலக்க மற்றொன்று மாற்ற நினைத்து முனைந்தாலும், அந்த ஊழ்வினைப்பயனே அதன் வினைப்பயனை ஏற்படுத்த முந்தி நிற்கும்.
நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவன் செய்வதாக நினைத்து , அந்த ஞானத்துடன் செய்யும் போதும், அனைத்து ஜீவன்களின் பிறப்பிடமும் அவனிடத்திலிருந்து தோன்றுகிறது என்ற ஞானத்துடன் எல்லாச் செயல்களையும் செய்யும் போது தவறுகள் இழைக்க வாய்ப்பு இல்லை என்பதனால், இந்தச் சரீர ஆத்ம ஞானத்துடன் சம நிலையில் இருந்தால் பிறவி சுழலை அறுக்கலாம்.
"புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸூக்ருத துஷ்க்ருதே|
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ யோக:கர்மஸூ கௌசலம்||" 2-50
புத்தியுக்தோ- புத்தி யோகம்
ஜஹாதீஹ- விடுபடுகிறான்
உபே - இரண்டும்
ஸூக்ருத - நல்லது (புண்யம்)
துஷ்க்ருதே - கெட்டது (பாவம்)
யோகாய - சமநிலைப் படுத்தும் காரியம்
யுஜ்யஸ்வ- ஈடுபடுத்துவது
கர்மஸூ- எல்லாச் செயல்களிலும்
கௌசலம்- கலை.
புத்தி யோகத்துடன்( சமநிலையில்) இருந்து கர்ம யோகம் எல்லாச் செயல்களிலும் செய்கிறவன் இப்பிறவியிலேயே புண்ய பாபங்கள் இரண்டிலிருந்தும் விடுபடுகிறான் அதாவது கர்ம யோகத்தில் ஞான யோகத்துடன் செய்யும் போது பாவ புண்யங்களிலிருந்து விடுபடலாம் என்று கிருஷ்ணன் கீதையில் கூறுகிறான்.
"கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:|
ஜந்மபந்த விநிர்முக்தா:பதம் கச்சந்த்யநாமயம்||" 2-51
கர்மஜம் - சமநிலைப் படுத்தும் பலனைத் தரக்கூடிய செயல்
ஹி பலம் - தீர்மானமான முடிவு
த்யக்த்வா - கிடைக்கிறது
ஜந்மபந்த - பிறப்பு இறப்பு சுழல்
விநிர்முக்தா- விடுதலை
பதம் கச்சந்த்யநாமயம் - அனாமயம் பதம் கச்சந்தி - பரமபதம் அடைகிறான். ( முக்தி)
50 வது கீதா ஸ்லோகத்தில் சொல்லிய படி சமநிலையில் புத்தி யோகத்துடனிருந்து செயலைச் செய்பவன், பிறப்பு இறப்பு சுழலிருந்து விடுதலைப் பெற்று இறைவன் திருவடி அதாவது முக்தி என்பது அவனுக்கு உறுதி என்று கிருஷ்ணன் கீதையில் கூறுகிறான்.
முக்தி பெறுவதற்காக ஒரு ஐந்தைக் கூறி , இந்தத் தத்வத்ரயம் மூன்றுடன் அந்த ஐந்தையும் சேர்த்தால் பரமபதம் உறுதி அதாவது முக்தி உறுதி என்பதனை விளக்குகிறார் பகவத் இராமானுஜர் . ஒரு ஐந்தை அடக்க வேண்டும் என்பதனை பகவத் கீதையில் நிறைய இடங்களில் கிருஷ்ணன் கூறுவதைக் கவனித்து வந்தோம். அதனையும் வள்ளுவ பெருந்தகை ,
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து"
ஆமை என்பது நான்கு கால்களையும் , ஒரு தலையையும் தனது ஓட்டுக்குள் அடக்குவது போல், மனிதன் உடம்பிலுள்ள ஐம்புலன்களை (ஐந்தடக்கல்) அடக்கினால், ஏழு பிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து.
ஒரு ஐந்தினை அடக்கி மற்றொரு ஐந்தினை வாழ்வில் முக்கியமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்வில் வெற்றி பெற ( முக்தி பெற) என்று பகவத் இராமானுஜர் கூறுவதை தொடர்வோம்.
...............(தொடரும்)
மகர சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக