பூர்ணம் - 18 (தத்வத்ரையம்)

"பூமி ராபோ அனலோ வாயு: கம் மனோ புத்திரேவ ச|
அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதி:அஷ்டதா"
                                          (7-4)
பூமி- நிலம் , மண், ஆபோ- நீர் , அனல- நெருப்பு, வாயு - காற்று, கம் - ஆகாசம், மனோ - மனம், புத்தி - புத்தி , அஹங்கார ச - அஹங்காரமும் , பின்னா - பின்னப்பட்டிருக்கிறது, அஷ்டதா - எட்டு விதமான

பகவான் கிருஷ்ணன் கீதையில் உண்மை பொருட்கள் மூன்று உள்ளன, அதனை படிகட்டுகளாக அமைத்து விளக்குகிறான். 
மூன்று உண்மை பொருட்களில் படியில், அசேதனம் ஞானமில்லாத , அழியக்கூடிய வஸ்துக்கள் என்றும், அதற்கு மேல் ஞானமயமான, அழியாத ஜீவாத்மாக்கள் உயர்ந்தது என்றும் , அதற்கு மேல் அனைத்தையும் எங்கும் பரவியிருந்து தாங்கும் பிரம்மம் அதாவது பகவான் உயர்ந்தது என்றும் கீதையில் காட்டுகிறான். 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாக என்னுடைய ப்ரகிருதி பின்னப்பட்டுள்ளது என்று கீதை 7-4 ல் கிருஷ்ணன் விளக்குகிறான். இந்த எட்டு விதப் பிரகிருதியை இருபத்து நான்கு தத்துவங்களாக விரித்துச் சொல்வது வழக்கத்தில் உள்ளது. இதுவே அசித் அல்லது அசேதனம்.

"பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்

தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்

மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய்

நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே? "
         - திருசந்தவிருத்தம் (1)

திருமழிசையாழ்வார் பஞ்ச பூதங்களையும் பஞ்ச பூதங்களின் குணங்களான ஓசை என்பது ஆகாசத்திற்கும், ஆகாசத்திலிருந்து தோன்றிய வாயுக்கு தொடும் உணர்ச்சியுடன் ஆகாசத்திற்கான ஓசையும் சேர்ந்த இரண்டு குணங்களும், வாயுவிலிருந்து தோன்றிய தீ யுக்கு வடிவம் என்ற குணத்துடன் வாயுக்குரிய இரண்டும் சேர்ந்த மூன்று குணங்களும், தீயிலிருந்து தோன்றிய நீருக்கு ருசியுடன் கூடிய தீர்வுக்கான மூன்று குணங்களும் சேர்ந்த நான்கு குணங்களும் , நீரிலிருந்து பூமி அதாவது நிலத்துக்கு வாசனை என்ற குணத்துடன் நீருக்கான நான்கு குணங்களும் சேர்ந்த ஐந்து குணங்களும் பஞ்ச பூதங்களின் தன்மைகள் என்றும் , பஞ்ச பூதங்கள் மற்றும் அதன் குணங்களுக்கும் அந்தர்யாமியாய் ( உள்ளுறைப் பொருளாய்) நிற்கும் நீயல்லவோ என்று பகவானின் ஏற்றத்தை விளக்குகிறார் ஆழ்வார். 

ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய்

ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனே

ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று

ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே?
           - திருசந்தவிருத்தம் (3)

பஞ்ச பூதங்கள் ஐந்தும், அதன் குணங்கள் ஐந்தும், பஞ்ச பூதங்களின் குணங்களை உணர உடலில் ஞானயேந்திரங்கள் ஐந்தும், ஜீவனுக்கு இயல்பாக உரிய கர்த்துவத்தை சரிவரச் செய்ய கர்மயேந்திரங்கள் ஐந்தும்,  ப்ரகிருதி, மஹந் ( சத்வ, தமோ, ரஜோ குணங்கள்) , அஹங்காரம் என்ற மூன்றுடன், மனது என்ற ஒன்றுடன் சேர்ந்து இந்த அசேதன தத்துவங்கள் இருபத்து நான்குக்கும் அந்தர்யாமியாய் நிற்கும் ஆதிதேவனே என்று பகவத் கீதையில் 7-4 ல்  கிருஷ்ணன் அருளிய வாக்கியத்தை எளிய தமிழில் விளக்குகிறார் திருமழிசையாழ்வார்.

இந்த பஞ்சபூதங்களைக் கொண்டு ஒரு கலவையில் ( இந்த கலவைக்கான அளவுகளையும் வேறு இடத்தில் கூறுகிறான்)  உடம்பை உருவாக்குகிறான். அந்த உடம்பில் ஜீவனை செலுத்தி, மனம் புத்தி அஹங்காரம் என்பதனையும் வைக்கிறான் பிரம்மம். இவ்வாறாகப் படைப்பு தொழில் என்பது அவனால் உருவாக்கப்படுகிறது. 

உலகத்தில் முதன்முதலில் கலப்படத்தை நல்லதற்காக ஆக்கப்பூர்வமான செயலுக்காக உருவாக்கியவன் பிரம்மம் அதாவது பகவான்.

"அபரேயம் இதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்|
ஜீவபூதாம் மஹபாஹோ யயேதம் தார்யதே ஜகத்||"  
                                             (7-5)
அபரா - தாழ்ந்தவை, அந்யாம் - வேறானவை, வித்தி - அறிவாயாக , மே - என்னுடைய வை, பராம் - உயர்ந்தவை, ஜீவபூதாம் - ஜீவாத்மாக்கள், சேதனங்கள் மஹபாஹோ - தோள்வலியோய், இதம் ஜகத் - இந்த உலகம், யயா- இதனால் , தார்யதே - தாங்கப்படுகிறது 
மேலே சொன்ன அறிiவற்ற பொருட்கள் தாழ்ந்த வை. அவைகளை விட வேறான மேம்பட்ட அறிவுள்ள ஜீவ சமூகம் உயர்ந்தவை. இவை இரண்டும் என்னுடையவையே. இவற்றால் உலகம் முழுவதும் தரிக்கப்படுகிறது என்று ஜீவாத்மா ஏற்றத்தைக் கூறுகிறான். 

"ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீ த்யுபதாரய|
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரளயஸ் ததா||" (7-6)

ஏதத்யோநீநி- இந்த இரண்டு ப்ரகிருதிகளைப் பிறப்பிடமாக கொண்டவை கள் - பூதாநி ஸர்வாணி - எல்லா உயிர்களும் , இதி உபதாரய- என்று அறிந்து கொள்ள, அஹம்- நான், க்ருத்ஸ்நஸ்ய ஜகத - உலகம் முழுவதினுடைய, ப்ரபவ- தோற்றத்துக்கு காரணம், ப்ரளயஸ்- மறைவுக்கு காரணம் , ததா- அப்படியே 

உலகிலுள்ள எல்லா உயிர்களும் கீழ்ச் சொன்ன என்னுடைய இருவித பிரக்ருதிகளை , அதாவது சேதன அசேதனங்களை காரணமாக உடையவை. அவைகளின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் நானே காரணம்.  

"தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே" 

         - திருசந்தவிருத்தம் (10)

அலையானது கடலில் உருவாகி , கடலினுக்குள் ஒடுகங்குகிறது. அது போல எல்லா உயிர்களும் பகவானிடத்திலே தோன்றி பகவானிடத்திலேயே மறைகின்றன என்று திருமழிசையாழ்வார் கூறுகிறார். 

இந்த ஸ்லோகம் 7-6 ல் அசேதனம் சேதனம் இரண்டும் பகவானிடத்தில் பிறக்கிறது , அங்கேயே ஒடுங்குகிறது அல்லது மறைகிறது என்று விளக்கி, பிரம்மத்தின் அதாவது பகவானின் ஏற்றத்தை கிருஷ்ணன் விளக்குகிறான். 

"மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய: |
மயி ஸர்வம் இதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ||"                                                (7-7)
மத்த - என்னைக் காட்டிலும், 
பரதரம் - உயர்ந்தது , மேலானது,  ந அன்யத் கிஞ்சித் அஸ்தி - வேறு ஒன்றும் இல்லை, மயி - என்னிடத்து , ஸர்வம் இதம் - இதை அனைத்தும் , ப்ரோதம் - கோக்கப்பட்டிருக்கின்றன, ஸூத்ரே - நூல், கயிறு மணிகணா இவ - மணிக் கோவைப் போல

அசேதனம் சேதனத்தை காட்டிலும் பிரம்மம் அதாவது பகவான் உயர்ந்தது என்று காட்டி , இவை அனைத்தையும் நூலானாது மணிக் கோவையை உள்ளிருந்து தெரியாமால் தாங்குவது போல் தாங்குகிறான். 

ஒரு நூலில் முத்துமணிகள் நெருக்கமாகக் கோர்க்கப்பட்டு மாலையாக அணியும் போது, உள்ளிருந்து வெளியில் தெரியாமல் நூலானது முத்துமணிகளைத் தாங்குவது போல, பகவான் வெளியில் தெரியாமல் சேதனம் அசேதனத்தைத் தாங்குகிறான் என்று கிருஷ்ணன் இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறான். 

இப்படியாக சேதனம் ( ஜீவாத்மா) அசேதனம் ( உயிரற்ற பொருள்) , பிரம்மம் அதாவது பகவான் மூன்றும் உண்மை என்பதனை விளக்குகிறான். இதைத்தான் பகவத் இராமானுஜர் இந்த மூன்றும்  உண்மை , இதனைக் கொண்டு தத்துவங்கள் மூன்று, ஒன்றல்ல என்று விளக்கி , விசிஷ்டாத்வைதம் ( விசேஷ அத்வைதம்) என்று தத்துவத்தை மேலும் மேலும் விளக்கினார். ஆதலால் விசிஷ்டாத்வைதம் என்ற தரிசனத்தில் தத்வத்ரையம் என்பது மிகவும் முக்கியம். 

இதனைக் கொண்டு சரீர ஆத்ம பாவத்தை விளக்கி , அதைக் கொண்டு உலகயியலையும் ஆன்மீகயியலையும் இணைத்து பொருள் தருகிறார். அந்த சரீர ஆத்ம பாவத்தைக் கொண்டு எப்படி தத்துவங்களை அறிந்து கொண்டு , இவ்வாழ்க்கையில் பூர்ணம் அடைவது என்பதுதான் நமது லட்சியம், குறிக்கோள். 

இருப்பது என்பது உண்மை. இருப்பதிலிருந்து மட்டுமே ஒன்றை மற்றொன்றாக மாற்றி உருவாக்க முடியும் என்பது விஞ்ஞானம். அதனையும் இந்த கீதையில் அருமையாக மெய்ஞானமாக அன்றே  விளக்குகிறான் கிருஷ்ணன். அதனை மேலே தொடர்வோம்.  

                 ...... ( தொடரும்) 

மகர சடகோபன் தென்திருப்பேரை 


கருத்துகள்

  1. "உலகத்தில் முதன்முதலில் கலப்படத்தை நல்லதற்காக ஆக்கப்பூர்வமான செயலுக்காக உருவாக்கியவன் பிரம்மம் அதாவது பகவான்" இது முற்றிலும் உண்மை இதன்படி பார்த்தால் ஒரு மனிதப் பிறவி என்பது கடவுளால் இந்த பஞ்ச பூதங்களின் கலவையாலும் மூன்று குணங்களின் கலவையாலும் ஆக்கப்பட்டு இந்த பூவுலகில் தனது கர்ம வினை கழிக்க வெளிவந்துள்ளது.
    அற்புதமான பதிவு
    து. குஹன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

பாமாலை (மூலம்)

பிராயக்ராஜ் யாத்திரை - 2 (திரிவேணி சங்கமம்)