பூர்ணம் - 16
யோகி என்பவன் யோகா என்ற மனதைச் சமநிலைப் படுத்தும் செயலைச் செய்பவன். இரட்டைகளை வென்று, சமமாகக் கையாளக் தெரிய வேண்டும் என்று பல முறைச் சொல்லி, ஒவ்வொரு ஜீவாத்மாவும் மிகவும் எளிதாகக் கலக்கத்திற்கு உள்ளாகும் போது மனதைக் கட்டுப்படுப்படுத்த வேண்டும் என்று கூறினான் கிருஷ்ணன்.
"ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா கூடஸ்த்தோ விஜிதேந்த்ரிய:|
முக்தி இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாச்ம காஞ்சந:||" 6-8
"ஸுஹ்ருந் மித்ரார்யுதாஸீந மத்யஸ்யத்வேஷ்ய பந்துஷு|
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர் விசிஷ்யதே||" 6-9
இந்த இரண்டு கீதை ஸ்லோகத்தினால் யோகம் செய்பவனின் அதாவது யோகியின் தகுதியைப் பற்றிச் சொல்லுகிறது.
யோகீ ஸமலோஷ்டாச்ம காஞ்சந:
லோஷ்டாச்ம - கூழாங்கல்
காஞ்சந - தங்கம்
யோகி என்பவன் கூழாங்கல்லையும் தங்கத்தையும் சமமாகக் கருதுவான். அவனே (விஜிதேந்த்ரிய) புலன்களை வென்றவன்.
அப்படிப்பட்டவனுக்கு உறவினர்கள், நண்பர்கள், பாவப் புண்ணியங்கள் உடையவன், சத்ருக்கள் என்று எவரும் கிடையாது என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான்.
அப்படிப்பட்ட யோகி , தனிமையாக மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்து ஆத்ம த்யானத்தைச் செய்ய வேண்டும் என்று கீதை ஸ்லோகம் 6-10 ல் கிருஷ்ணன் கூறுகிறான். அப்படிப்பட்டவன் புலன்களினால் ஈர்க்கப்படும் விஷயங்களிலிருந்தும் மற்றும் தனக்குச் சொந்தமானவை என்ற மனநிலையிலிருந்தும் விடுதலைப் பெற்றவனாக இருப்பான்.
"யோகீ யுஞ்ஜீத ஸததம் ஆத்மாநம் ரஹஸி ஸ்தித:|
ஏகாகீ யதசித்தாத்மா நிராசீ: அபரிக்ரஹ:||" 6-10
ரஹஸி ஸ்தித யாருமில்லாத தனி இடம்
ஏகாகீ - தனிமையில்
யதசித்தாத்மா - மனதை ஆத்மாவின் மேல் வைத்துக் கட்டுப்பாடுடன் உள்ள ஆத்மா
நிராசீ- புலன்களினால் ஈர்க்கப்படாமல்
அபரிக்ரஹ- தனக்குச் சொந்தமானவை என்ற மன நிலையிலிருந்து விடுதலை
மேலும் கீதை 6 வது அத்தியாயத்தில் 11, 12 ஸ்லோகங்களிலும் , யோகம் செய்ய வேண்டிய இடம் , தர்ப்பைப் புல் போன்ற மற்ற பொருட்களையும் வைத்துக் கொள்ளக் கூறுகிறான். பிறகு 13 , 14 ஸ்லோகங்களில் த்யானம் செய்யும் முறையை விளக்குகிறான்.
"ஸமம் காயசிரோக்ரீவம் தாரயந் அசலம் ஸ்த்திர:|
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திசச்சாநவலோகயந்||" 6-13
ஸமம் - நேராக (அ) வளையாமல்
காய - உடம்பு, சிரோ - தலை, க்ரீவம் - கழுத்து, தாரயந்- இருத்தல் (அ) வைத்தல்,
அசலம்- அசையாமல்
ஸம்ப்ரேக்ஷ்ய- பார்க்க
நாஸிக் - மூக்கு, ஆக்ரம்- மூக்கு நுனி , ஸ்வம் - தனது
திசச்சாநவலோகயந்- எல்லாத் திசைகளிலும் பார்க்காதே
"ப்ரசாந்தாத்மா விகதபீர் ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித:|
மந:ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர:||" 6-14
ப்ரசாந்தாத்மா - கலக்கமிலாத மனம்
விகதபீர்- பயமில்லாமல்
ப்ரஹ்மசாரிவ்ரதே- பிரம்மச்சரிய விரதம்
ஸ்தித- அமைந்துள்ளது
மந - மனம், ஸம்யம்ய - முற்றிலுமாக அடக்கப்பட்ட
மச்சித்தா- கிருஷ்ணனையே மனதால் நினைத்துக் கொண்டு
யுக்த- யோகி
ஆஸீத மத்பர - கிருஷ்ணன் ஒருவனையே நினைக்க வேண்டும்
உடல் தலை கழுத்து இவைகளை அசையாமல் சிறிதுச் சாய்த்தாற்போல் ஸமமாய் இருத்தி, ஒரு பக்கமும் பாராமல் மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, மனத்தை அடக்கி ப்ரஹ்மசரிய விரதத்தில் இருந்து, பகவானான என் திருமேனியில் மனதை வைத்துச் சிந்தனைச் செய்யவேண்டும்.
கண்ணை மூடிக்கொண்டால் தூக்கம் வரும். ஆதலால் பாதி மூடியும் பாதித் திறந்தும் மூக்கு நுனியில் பார்வை விழும்படி கண்களை வைத்துக் கொள்ள வேண்டும். முழுக் கவனத்தையும் ஒரு பொருளின் மேல் செலுத்துவது. மனதை அலைய விடாமல் நிறுத்துவது என்பதுதான் இதன் பயிற்சி.
இதையும் 5-27ல் கூறியபடியும் மூச்சுப்பயிற்சி மற்றும் த்யானங்களை மேற்கொண்டு மனதை ஒரு நிலையில் நிறுத்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
"நாத்யச்நதஸ் து யோகோ அஸ்தி ந சைகாந்தம் அநச்நத:|
நசாதிஸ்வப்நசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜூந||" 6-16
நாத்யச்நதஸ் - அதிகமாகச் சாப்பிடக்கூடாது
சைகாந்தம் அநச்நத - சாப்பிடமால் பசியுடன் இருக்கக்கூடாது.
நசாதிஸ்வப்நசீலஸ்ய - அதிகமாகத் தூங்கக்கூடாது.
ஜாக்ரதோ நைவ - அதிகமாக விழித்திருக்கவும் கூடாது.
யோகம் செய்பவன் அதிகமாகச் சாப்பிடவும் கூடாது. அதிகமாகச் சாப்பிட்டால் தூக்கம் வரும். அதேபோல் சாப்பாட்டைத் தவிர்க்கவும் கூடாது. சாப்பாட்டைத் தவிர்த்தால் பசியில் தூக்கம் வராது. மிதமாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறான். தூக்கத்தின் முக்கியத்துவத்தையும் இங்கே உரைப்பதை மனதில் நிறுத்திக் கொள்ளவும். தூக்கமின்மை மன அமைதியைக் கெடுக்கும் என்ற செய்தியை மன நிலையைச் சமப்படுத்தும் முறையில் வைத்திருப்பதை இங்கே கவனித்துச் சரியான முறையில் கையாள வேண்டும் என்பதனைக் கீதையில் கிருஷ்ணன் விளக்குகிறான்.
"யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு|
யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி துக்கஹா||" 6-17
யுக்த - முறைப்படுத்தல்
ஆஹார - சாப்பாடு
விஹாரஸ்ய - விளையாட்டு
சேஷ்டஸ்ய கர்மஸு - வாழ்க்கையை நடத்தத் தேவையான வேலைகள்
ஸ்வப்நாவபோதஸ்ய - தூக்கம் விழித்திருத்தல்
யோகம் செய்பவன் சாப்பாடு, விளையாட்டு, வாழ்க்கைக்குத் தேவையான அவசிய வேலைகள் , தூக்கம் , விழித்திருத்தல் போன்றவற்றை ஒழுங்காக முறைப்படுத்தி வாழும் போது எந்தவொரு துக்கமும் வலியும் வராது என்று உரைக்கிறான்.
இந்தக் காலக்கட்டத்தில் பெரிய நிறுவனங்களில் வாழ்க்கையையும் வேலையையும் சமப்படுத்த வேண்டும் என்று (Work Life Balance) பாடம் எடுக்கிறார்கள். இதனைத்தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் கீதையில் உரைக்கிறான்.
தீபம் நின்று எரிவது போல் யோகம் செய்பவன் மனதை ஒரு நிலையில் நிறுத்த வேண்டும் என்பதனை மேலும் தொடர்கிறான் கிருஷ்ணன் கீதையில்
.........(தொடரும்)
மகர சடகோபன்
தென்திருப்பேரை
அருமை
பதிலளிநீக்குநன்றி ஸ்வாமி
நீக்குஅருமையான பதிவு
நீக்குநன்றி
நீக்கு"த்யானம் செய்யாதே
பதிலளிநீக்குத்யானத்தில் இரு"
இது ஓஷோவின் வார்த்தைகள்.
ப்ராணாயாமம் பயிற்சி, தண்டுவட பயிற்சி, மூக்கின் நுனியில் பார்வை அதுவும் மூடாமலும் முழுவதும் திறக்காமல் இதை அருட்ப்பார்வை என்று தியானப் பள்ளியில் சொல்கின்றார்கள்.
இந்த தியானத்தில் இருப்பவர்கள் நிச்சயம் அதன் பலனை உணர்வார்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு நிச்சயம் அவர்களுக்கு தெரியும் எதையும் சமமாக பார்க்க வேண்டும் என்று அதை கீதையில் கண்ணன் குறிப்பிட்டு இருப்பதே நீங்கள் குறிப்பிட்டிருப்பது அற்புதமாய் இருக்கின்றது.
நன்றி. இதற்கெல்லாம் அடிப்படை பாரதீய அடிப்படை நூலான கீதை. அதனால் பாரதீய ஆன்மீக குருக்களின் வித்து என்பது பகவத்கீதை . அதிலிருந்து மாறினால் மட்டுமே ஆச்சரியமான எச்சரிக்கையா தேவை.
நீக்கு