பூர்ணம் -14


"வித்யாவிநயஸம்பந்தே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி|
சுநி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சிந:||"  5-18

படித்தவன் படிக்காதவன் மேலானவன் கீழானவன் உருவத்தில் சிறிய பசு, உருவத்தில் பெரிய யானை, சைவம் அசைவம் சாப்பிடும் மனிதர்களிடத்திலும் உள்ள ஜீவாத்மாக்கள் எல்லாம் ஒருபடிப்பட்டிருப்பதனால், உண்மையான ஆத்ம ஞானம் பெற்ற பண்டிதர் அவைகளைச் சமமாகப் பார்ப்பார் என்று பண்டினுக்கான இலக்கணத்தை கீதையில் கிருஷ்ணன் விளக்குகிறான்.
 
புலன்களை அடக்கி மனதை வென்றவன் கர்மத்தைச் செய்யும்போது ஆத்மயாதாத்ம்ய ஞானத்துடன் இருக்க வேண்டும் என்று கூறிய பகவான், ஞான யோகத்தைத் தனியாகச் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் உரைத்தான். மனதை அடக்க நல்ல பண்டிதன் மூலம் பயிற்சி செய்யவேண்டும் என்பதனை விளக்குவதோடு இல்லாமல், நல்ல பண்டிதனுக்கான இலக்கணத்தையும் கூறுகிறான். இதையும் ஞாபகத்தில் அடிக்கடி வைத்துக் கொள்ள வேண்டும்.

கர்ம யோகம் ஞான யோகம் இரண்டுமே ஒரே பலனைக் கொடுப்பதனால், இயல்பாகத் தரையில் நடப்பதைப் போன்ற கர்ம யோகத்தைச் செய்யும் படி உரைத்த கிருஷ்ணன், அவ்வப்போது மனதை அடக்குவதற்கு மூச்சுப் பயிற்சி செய்யும்படியும் பகவான் கீதையில் கூறுகிறான். 

புலன்களைக் கொண்டு அறியப்படும் உலகில், கர்மங்களைச் செய்யும்போது மனம் கலக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

அர்ஜூனன் மனதை வென்றவன். இந்திரலோகப் பெண்கள் அவன்முன் வந்து நின்ற போதும் மனதைப் பறிக்கொடுக்கவில்லை. அவனுக்கே மனம் கலங்குகிறது, அவனுடைய இயல்பான கர்மத்தைச் செய்வதற்குத் தடையாக இருக்கிறது மனம். அர்ஜூனனுக்கே இந்த நிலைமை என்றால் நம் மனது எவ்வளவுக் கஷ்டப்படுத்தும் என்பதனை உணரவேண்டும். இதனால்தான் கிருஷ்ணன் சில விஷயங்களை மீண்டும் மீண்டும் உபதேசிக்கிறான். 

இந்த யோக நிலையில்தான் கர்மத்தில் ஞான யோகத்தைத் காணவேண்டும் என்று உரைக்கிறான். 

கலங்கிய மனம் தெளிவு ஏற்படவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் மூச்சுப் பயிற்சி செய்து மனதை சமநிலைக்குக் கொண்டு வரமுடியும் என்பதனை இன்றைய உலகில் நிறைய குருக்கள் கூறிவருகின்றனர்கள். இவர்கள் கூறும் அனைத்தும் கீதையில் பகவான் கூறியது. இதுதான் பாரதீய ஞானம். 

ஊற்றுத் தண்ணீர் எடுப்பதற்கு நதிக் கரையில் தோண்டும் போது முதலில் வரும் நீர் கலங்கியே இருக்கும். அதை அமைதியாக ஒன்றும் செய்யாமல் சில மணித்துளிகள் விடும்போது தெளிந்த சுவையான நீர் கிடைக்கும். 

தெளிந்த நீரில் களிமண்ணைச் சேர்த்துக் கலக்கினால் போல் மனது என்பது அவ்வப்போது புலன்களினால் கலக்கம் ஏற்படலாம். அப்பொழுது கலக்காமல் அசையாமல் இருப்பதற்கு முயற்சி செய்யும் போது தெளிவு ஏற்படும். கலக்காமல் அசையாமல் இருக்க மனதிற்கு மூச்சுப் பயிற்சி தேவை. 

நமது மனதில் தோன்றும் எண்ணத்தை மேகமூட்டம் போல் அமைதியாக விட்டுவிட்டால் சிறிதுநேரத்தில் மேகமூட்டம் அனைத்தும் தெரியாமல் வானம் வெளுத்துக் காணப்படுவது போல் மனம் தெளிவாகும். 

"ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் பாராப்ய சாப்ரியம்|
ஸ்த்திரபுத்திஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித: ||" 5-20 

தத்துவத் தரிசிகள் என்று அறியப்பட்ட பண்டிதனால் உபதேசிக்கப்பட்டு, ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து, அதையே எப்போதும் நினைத்துப் பழகி வந்து, அதனால் சரீரமே ஆத்மா என்ற அறிவின்மை நீங்கி, தூய ஆத்மாவை பார்ப்பவன், உலகில் உண்டாகும் நிலையில்லாத அல்பமான விருப்பு வெறுப்பு, துன்பம் இன்பம் போன்ற இரட்டைகளைச் சமமாகவே கொள்வான் என்று கீதை 5-20ல் உரைக்கிறான். 

"லபந்நே ப்ரஹ்மநிர்வாணம் ருஷ்ய: க்ஷீணகல்மஷா: |
சிந்ந த்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ராதா:||" 5-25

"காமக்ரோத வியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்|
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்த்ததே விஜிதாத்மநாம்||" 5-26

த்வைதா - இரட்டை , ஸர்வபூத - எல்லா உயிர்கள் 
ஹிதே - நன்மை பயக்கும் பரந்த செயல்கள் 
ப்ரஹ்மநிர்வாணம் - உச்சபட்ச விடுதலை 
க்ஷீணகல்மஷா - எல்லாப் பாவங்களிலும் விடுபட்டு 

கீதை 5-25 , 5-26 ல் காமம் கோபம்  இரட்டைகளிலிருந்து விடுபட்டு ஆத்மாவிடம் மனதை வைத்து , எல்லா உயிர்களுக்கும் பரந்த மனப்பான்மையுடன் நன்மை பயக்கும் செயல்களைச் செய்பவன், எல்லாப் பாவங்களிலும் விடுபட்டு உச்சபட்ச விடுதலை என்ற பிறவியற்றச் சூழலை ( பூர்ணத்தை) அடைகிறான். 

அவ்வப்போது கலங்கும் மனத்தை மூச்சுப் பயிற்சி செய்வதை 5 வது அத்தியாயத்தின் இறுதியில் கூறி ஆறாவது அத்தியாயத்திலும் கூறுகிறான். 

கீதையில் கிருஷ்ணன் பண்டிதன் யார், மனதைக் கட்டுப்படுத்த எதை விலக்க வேண்டும், அதற்கான வழிகளையும் கூறி, மூச்சுப் பயிற்சி செய்யவேண்டும் என்று கூறி, எவ்வாறு செய்ய வேண்டும் என்பதனையும் கூறுகிறான். 

"ஸ்பர்சாந் க்ருத்வா பஹிர் பாஹ்யாந் சக்ஷூ ச்சைவாந்தரே ப்ருவோ:|
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்யந்தர சாரிணௌ:||" 5-27

ஸ்பர்சாந் - புலன்கள் 
பஹிர் - வெளிப்புறம்
பாஹ்யாந்-தேவையில்லாத 
சக்ஷூ- கண்கள், ப்ருவோ - புருவங்கள், ச்சைவாந்தரே- இடையில் 
ப்ராணாபாநௌ- காற்றை மேல் கீழாக இழுத்தல் 
ஸமௌ க்ருத்வா- மூச்சை இழுத்து வைத்தல்
நாஸாப்யந்தர- இழுத்த மூச்சை மூக்கு வழியாக 
சாரிணௌ- விடுதல். 

"யதேந்த்ரிய மநோ புத்திர் முநிர் மோக்ஷபராயண:|
விகதேச்சா பயக்ரோத யஸ் ஸதா முக்த ஏவ ஸ:||" 5-28 

யதேந்த்ரிய- புலனடக்கம் 
மநோ - மனம், புத்திர்- அறிவு
மோக்ஷபராயண- விடுதலை அதாவது மோக்ஷம் கிடைக்கிறது.  
விகதேச்சா பயக்ரோத - ஆசை, பயம் , கோபம் விலக்குபவன்,
யஸ் ஸதா முக்த ஏவ ஸ: எப்பொழுதும் விடுதலை அடைந்து முக்திப் பெற்ற முக்தானாக இருக்கிறான். 

ஆசை, பயம்,கோபம் முதலியவற்றை விலக்கி, புலன்கள், மனம்,புத்திகளை வேறு விஷயங்களுக்குச் செல்லவிடாமல் ஆத்மாவின் மேல் வைத்து , புலன்களை வெளிப்புறத்திலிருந்து மூடிக் கொண்டு, கண்களையும் மூடிக்கொண்டு, இரண்டு புருவங்களுக்கு இடையே மூக்கு நுனியை நோக்கி, மூச்சை மூக்கு வழியாக இழுத்து சிறிது நேரம் வைத்து மூக்கு வழியாக விட வேண்டும். உள் மூச்சு வெளி மூச்சு விடுவது என்பது சமமாக இருக்க வேண்டும். இப்படியிருந்து ஆத்ம தரிசனம் பெறுபவன் எப்பொழுது விடுதலை அடைந்த முக்தானாக இருக்கிறான் என்று கிருஷ்ணன் கீதையில் விளக்குகிறான். 

மேலும் மூச்சுப் பயிற்சி மற்றும் த்யானத்தைப் பற்றி ஆறாவது அத்தியாயத்தில் கூறுவதைத் தொடர்ந்து பார்ப்போம்.      
                     ...........(தொடரும்)

மகர சடகோபன் தென்திருப்பேரை 







கருத்துகள்

  1. நல்ல முறையில் அத்யாவசியமான கட்டுரை வரையப்பட்டுள்ளது. உண்மையில் இன்றைய உலக வாழ்வியல் முறைக்கு தேவையான ஒன்று இந்த மூச்சு பயிற்சி.

    அற்புதமான பதிவு சடகோபன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எல்லைச்சாமி

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

பிராயக்ராஜ் யாத்திரை - 2 (திரிவேணி சங்கமம்)