பூர்ணம் - 12


பத்துக் குதிரைகள் பூட்டிய ரதத்தைச் செலுத்தும் ஒருவனுக்கு, குதிரைகளைச் சரியான பாதையில் செலுத்துவதற்குக் கடிவாளம் என்ற ஒரு கயிறு தேவைப்படுகிறது. அந்தக் கயிற்றின் மூலம் 10 குதிரைகளையும் அடக்கித் தான் செல்ல வேண்டிய பாதையில் செலுத்தி, சேர வேண்டிய இடத்துக்கு ரதத்தை ஓட்டுபவன் செல்கிறான்.

10 குதிரைகள் என்பது பத்து இந்திரியங்கள், கடிவாளம் என்பது மனம் , ரதம் என்பது உடல் , ரதத்தைச் செலுத்துபவன் என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவும்.

சிறுவயதில் எனக்கு ஒர் அனுபவம் உண்டு. எங்கள் வீட்டில் மாட்டு வண்டி ஒன்று இருந்தது. அதில் மாடுகளைப் பூட்டி மூன்று மைல் தொலைவில் இருக்கும் கிராமத்துப் பள்ளிக்குச் செல்வது என்பது எனது தாத்தாவின் அன்றாடப் பழக்கம். சில சமயங்களில் மாட்டை ஓட்டுபவன் தூங்கினாலும் அல்லது மூக்காணங்கயிற்றை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டு விட்டாலும் மாடுகள் தானகவே அந்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும். இந்த அனுபவம் என்பது நிறைய அன்பர்களுக்கு இருந்திருக்கும்.

இங்கு மூக்காணங்கயிறு என்பது மனம். பழக்கப்பட்ட மாடுகள் என்றால் மட்டுமே எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் சேரவேண்டிய இடத்துக்குச் செல்லும். புதிய இடத்துக்குத் திசையை மாற்றிச் செல்லும்போது மூக்காணங்கயிற்றின் அவசியம் தேவைப்படும்.

இங்குக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பது நமது இந்திரியங்களைச் சாஸ்திரங்கள் கூறிய நல்ல பழக்கத்துக்கு உட்படுத்த வேண்டும்.

எந்தப் பழக்கம் என்பது நமது ஞானத்துக்கும் கர்மத்துக்கும் சாஸ்திரம் கூறியபடி தேவை என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். நமது பிறவியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அதற்கான பாதைகளை வகுக்க வேண்டும். அதற்காக இந்திரியங்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.

அரண்மனையைப் பாதுகாக்க அகழிகள் சுற்றிலும் இருக்கும். வெளிப்புறத்தை அரண்மனையுடன் இணைக்கவும், அகழிகளைக் கடந்து அரண்மனைக்குள் செல்லவும், எதிரிகளை அகழிகளைத் தாண்டி வரவிடாமல் துண்டிக்கவும் தொங்கு பாலம் உதவியாக இருக்கும். 

புற வெளிச் செய்திகளை ஞான இந்திரியங்கள் மூலம் பார்த்து மனம் மூலம் ஜீவன் அறிகிறது. இங்கு மனம் என்பது தொங்கு பாலம் போன்ற ஒர் அமைப்பு.

தொங்கு பாலம் என்பது தேவைப்படும்போது இணைத்துக் கொள்ளலாம், தேவையில்லாதப்போது இணைப்பைத் துண்டித்துக் கொள்ளலாம். இப்படியாக மனம் மூலம் ஞான இந்திரியங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான பயிற்சியைத் தொடர்ந்து செய்யவேண்டும்.

கர்ம இந்திரியங்கள் என்பது கை கால் கொண்டு தேவையானவற்றைச் செய்கிறோம். உணவு என்பது உடல் தரிக்கவும் அஃதாவது உடலுக்கான சக்தியை வழங்கத் தேவைப் படுகிறது. தண்ணீர் என்பது உயிர் தரிப்பதற்குத் தேவை. குடல் என்பது செரிமானத்திற்குத் தேவை. பிறகு கழிவுகளை வெளியேற்றத் துவாரங்கள் தேவை. உடல் உறவு உறுப்புகள் என்பது இனப்பெருக்கம் உருவாக்குவதற்குத் தேவை.

இதில் ஒன்று வேலை செய்யவில்லை யென்றால் நாம் எவ்வளவு துன்பத்தைச் சந்திக்க வேண்டும் என்பதனை உணர வேண்டும். மூன்று உணர்வுகள் என்பது ஒவ்வொரு ஜீவனுக்கும் சரீர சம்பந்தம் இருக்கும் வரை உருவாகிக் கொண்டிருக்கும்.

பசியைத் தூண்டும் உணர்வு என்பது உடல் தரிப்பதற்கும், தாகம் என்ற உணர்வு தண்ணீர் அருந்துவதற்கும் அஃதாவது உயிர் தரிப்பதற்கும், காம உணர்வு என்பது இனப் பெருக்கத்திற்கும் அஃதாவது உயிர்கள் உருவாகவும் என்று உடலில் ஒருவிதமான ரசாயனப் பொருட்களைச் சுரந்து இந்த உணர்வுகள் ஏற்படுகிறது.

இந்த உணர்வுகளை மனம் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். இந்த உணர்வுகள் ஞான இந்திரியங்கள் மூலமும் செயற்கையாகத் தூண்டப்படலாம். இங்குதான் ஆசை என்பது ஏற்படுகிறது.

மூன்று உணர்வுகளும் தேவை , அதற்கான மூன்று செயல்களும் தேவை. ஆனால் அளவுக்கு மீறிச் செல்லும் போது அமிர்தமும் நஞ்சு என்ற கதைதான்.

இதனைப் பூரி தக்ஷணைக் கதை என்று விளக்குவார்கள். அஃதாவது அரசன் ஒருவர் பூரி தக்ஷணைக் கொடுக்க மக்களை அரண்மனையின் உள்ளே அடைத்து வரிசையில் வரச் சொல்கிறான் .‌ அரசன் அரண்மனை வாயிலில் நின்று வரிசையில் நிற்கும் ஏராளமான மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒருவன் மட்டும் மதிள் ஏறி மீண்டும் ரத்தக் காயத்துடன் வருகிறான். அவனைக் கண்ட அரசன் " நீ மறுபடியும் உள்ளே ஏன் வந்தாய்" என்று கேட்க , அதற்கு அவன் " எனக்கு மூன்று மனைவிகள் உண்டு, யாரையும் திருப்திப் படுத்த முடியாது , அதிலும் இரண்டை திருப்திப் படுத்தினாலும் ஒன்றை திருப்திப் படுத்த முடியாது" என்று பதில் சொன்னான்.

மேலே சொன்ன மூன்று உணர்வுகள்தான் மூன்று மனைவிகள், பசி தாகம் என்ற உணர்வை கட்டுப்படுத்தி விடலாம் , ஆனால் காம உணர்வு என்பது கட்டுப்படுத்துவதற்குக் கடினம் என்பது இந்தக் கதையின் மூலம் விளக்கப்படுகிறது.

இன்றைய உணவு பழக்கவழக்கங்கள் நீர் ஆகாரங்கள் என்பது கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதனால் உலகம் என்பது எவ்வளவு பெரிய வியாதிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். உடல் பருமன், புற்று நோய் போன்ற எண்ணற்ற கொடிய நோய்கள், இயற்கையாக இனப்பெருக்கம் ஏற்படத் தடையாகப் பல வியாதிகள் இருப்பதை உலகம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறது. காமம் என்பது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்பதனையும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் மனம் ஒன்றை கட்டுப்படுத்த தெரியாத நிலையிலும், உடலைப் பற்றியும் , ஜீவனைப் பற்றியும் சரியான முறையில் அறிந்து கொள்ளாத காரணம் என்றே தோன்றுகிறது.

உலகில் ஆயிரம் விஷயங்கள் இருக்கலாம். அதனை நாம் பார்க்கலாம் கேட்கலாம் நுகரலாம் சுவைக்கலாம் , ஆனால் தொங்கு பாலம் போல் துண்டிக்கத் தெரிய வேண்டும்.

ஞானம் மட்டும் இருந்தால் போதாது, பயிற்சி அஃதாவது அனுஷ்டானம் என்பது அன்றாட வாழ்வியல் முறையில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

ஞான அனுஷ்டானம் என்பது பறவையின் இரண்டு சிறகுகள் போல். ஒர் இடத்திற்குப் பறவைகள் செல்ல இரண்டு சிறகுகளும் வேண்டும். ஒன்று இருந்தால் செல்வது என்பது கடினம்.

ஞான அனுஷ்டானம் இவை நன்றாக உடைய குருவை அடைந்து ஞானத்தையும் பயிற்சியும் பெற்று வாழ்க்கை என்ற பாடத்தைப் பெற வேண்டும் என்று பகவான் கீதையில் கூறுகிறான்.

"தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா|
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞாநிநஸ்தத்வ தர்சிந:||" 4-34

தத் - ஆத்ம ஞானம் , ப்ரணிபாதேந - ஞான அனுஷ்டானம் நிறைந்த குரு , பரிப்ரச்நேந- நமஸ்கரித்துப் பணிவுடன் கேள்விகளைக் கேட்டு , ஸேவயா- பணிவிடைகள் செய்து ( பயிற்சியில் பங்கு கொள்வது) , உபதேக்ஷ்யந்தி- உபதேசிப்பார்கள்

ஞான அனுஷ்டானம் நிறைந்த குருவை பணிவுடன் நமஸ்கரித்து , அடக்கத்துடன் கேள்விகளைக் கேட்டு , அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து வந்தால் , நீ விரும்பும் ஞான அனுஷ்டானங்களை அவர்கள் உபதேசிப்பார்கள் என்று கிருஷ்ணன் கீதையில் கூறுகிறான்.

இன்றைய சில குழந்தைகளுக்குப் பணிவு , அடக்கம் என்பது இல்லாத சூழ்நிலை , குரு என்பதும் அதற்கன விதியில் இல்லை என்பதனால் , மாணவன் ஆசிரியர் கொலைகள் , மாணவன் ஆசிரியர் காம விளையாட்டுகள் என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆதலால் கிருஷ்ணன் கீதையில் கூறியது போல் , மனம் என்பது தொங்கு பாலம், புலன்களால் அறியப்படும் விஷயங்களைத் துண்டிப்பதற்குப் பழக வேண்டும்.‌

மனதைக் கட்டுப்படுத்துவது என்பது,

............(தொடரும்)

கருத்துகள்

  1. மனம் என்பது தொங்கு பாலம் புதன்களால் உணரப்படும் விஷயங்களை துண்டிக்க பழக வேண்டும் . இந்த ஞானம் வருவதற்கு ஒரு சாதாரண மனிதன் 50 வயதை எட்ட வேண்டியிருக்கும் அதற்குள் அவன் புலன்களால் உணர்ந்த பல விஷயங்களை அனுபவித்து முடித்து இருப்பான் அது பாவமாக புண்ணியமாகவோ அவனுடைய கர்மகணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இதில் குறிப்பிட்டு இருப்பது போல் குறைந்தபட்சம் 50 க்கு மேலோ அல்லது 60 க்கு மேலும் மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே அது நாம் வாழ்நாளில் சாதிக்கும் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எல்லைச்சாமி

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

பிராயக்ராஜ் யாத்திரை - 2 (திரிவேணி சங்கமம்)