பூர்ணம் - 10




சித்தார்த்தன் ஆத்ம ஞானத்தைத் தேடிப் பல சம்பிரதாய நம்பிக்கைக்கு மாறி, அதனுடன் வாழ்ந்து அந்தக் கொள்கைகள் கூறியபடி ஆத்ம ஞானத்தைப் பெற முயற்சித்தான். ஆனால் இடையில் கமலாவைச் சந்தித்து , அவளுடைய அழகில் மோகம் ஏற்பட்டு அவள் சுகத்தை அனுபவிக்கும் செயலில் முழுமையாக ஆழ்ந்து விட்டான். அப்படி ஆழ்ந்திருக்கும் நேரத்தில் மீண்டும் ஞானம் பிறந்து ஆத்ம ஞானத்தைத் தேட ஆரம்பிக்கிறான். 

அவன் கடைசியில் வசுதேவன் என்ற படகோட்டி யின் மூலமாக நதியிலிருந்து கர்மாவை தெரிந்து செய்து கொண்டிருக்கும் போது ஆத்ம ஞானத்தைத் தேட ஆரம்பிக்கிறான். இது பாரத ஞான மரபில் ஒன்று. 

உலக ஞான மரபில் பாரதத்துக்கென்று ஒரு தனியிடம் எப்பொழுதுமே உண்டு.

சித்தார்த்தன் ஜீவனுக்கே உண்டானக் கர்மத்தைச் செய்யாமல், இந்திரியங்களை அடக்கி ஞான யோகத்தின் மூலம் ஆத்ம ஞானத்தைப் பெற முயன்றான். 

கிருஷ்ணன் பகவத்கீதையில் கர்மயோகம் என்பது இயல்பாகவே தரையில் நடப்பது போல், ஆனால் ஞான யோகம் என்பது உச்சியில் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றில் நடப்பது போல, கவனம் தவறினால் மரணம் என்ற நிலை. 

கவனம் தவறியதால் ஆசை மிகுந்து  கமலாவிடம் அடிமையாகி , வசுதேவன் மூலம் கர்ம யோகத்தில் ஈடு பட்டு ஆத்ம ஞானத்தைப் பெறுகிறான். கர்மம் என்பது ஜீவனுடன் இருக்கும் அழிக்கமுடியாத தன்மை என்றும் பகவத்கீதையில் உரைக்கிறார். 

இந்திரியங்களைக் கொண்டு கர்மங்கள் செய்வதன் மூலம் , மனதைக் கர்மத்தின்பால் செலுத்தி, அதன் மூலம் ஆத்ம ஞானத்தைப் பெறலாம். 

பகவத்கீதையில் கிருஷ்ணன் கர்ம யோகத்தைச் சொல்லி ஞான யோகத்தை வலியுறுத்திகிறான்.  மூன்றாவது அத்தியாயத்தில் கர்ம யோகம் ஞான யோகத்தை விடச் சிறந்தது என்று வலியுறுத்திப் பேசுகிறான். 

ந ஹி கச்சித் க்ஷணமபி ஜாது திஷ்ட்டத்யகர்மக்ருத்!
கார்யதே ஹ்யவச: கர்ம ஸர்வ : ப்ரக்ருதிஜைர் குணை:!!   3-5 

மேலும் புகையிருக்கும் இடத்தில் நெருப்பு இருக்கிறது என்று ஊகித்து உணர்ந்துக் கொள்ளமுடிகிறதோ , அதைப் போலவே ஜீவன் உடலுடன் கூடியிருக்குமிடத்தில் கர்மா இருக்கும். ஜீவனுடன் சேர்ந்து இருப்பது என்பது கர்த்துவத்துவம். ஜீவனுக்குக் கர்ம இயந்திரியங்கள் என்பது கர்மாவைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு என்பதும் இதன் மூலம் கிருஷ்ணன் தெளிவு படுத்துகிறான். 

ஒவ்வொரு ஜீவனும் தனது கடமைகளைச் சரியான முறையில் நேர்த்தியாக இச்சையற்றுச் செய்வதன் மூலம் ஆத்மயாதாத்ம்ய ஞானத்தைப் பெறுகிறான். 

ஆத்ம ஞானம் உடல் வேறு ஜீவன் வேறு என்று புரிந்து அறிந்து கொள்வது மட்டுமே. ஆனால் ஆத்மயாதாத்ம்ய ஞானம் என்பது உடல் வேறு ஜீவன் வேறு என்று அறிந்துக் கொண்டாலும் , அந்த ஜீவன் அஃதாவது ஆத்மா என்பது அணுவை விடச் சிறிது (அணுவத்துவம்), எப்பொழுதும் இருப்பவன்(நித்யத்துவம்) ஞானம் உண்டு (ஞானத்துவம்),  ஆனந்தமடையும் தன்மை உண்டு ( ஆனந்தத்துவம்), ஒருவிதத் தோஷமும் இல்லாதவன் (அமலத்துவம்)  பகவானை விட்டுப் பிரிக்க முடியாமல் பகவானுடன் இருக்கும் நிலைமை  (பகவத் ப்ரகாரத்துவம்) என்ற அறிவுடன் பெறும் ஞானம். 

யஸ்த்விந்த்ரியாணி மநஸா பிரம்ம ஆரபதேஅர்ஜூந:!
கர்மேந்த்ரியை: கர்மயோகம் அஸக்த: ஸ விசிஷ்யதே!!

ஐம்புலன்களையும் அடக்கி ஜீவன் அவதரித்த கர்மங்களைத் தொடர்ந்து இச்சையில்லாமல் பகவான் மனிதனுக்கு ( பாகவத) கைங்கர்யம் செய்வதன் மூலம் ஆத்மயாதாத்ம்ய ஞானத்தைப் பெறுபவனே சிறந்தவன். 

அவன் பிறவிச் சுழலை அறுத்து பிறவியற்றத் தன்மையை அடைவது என்பதே பூர்ணம் என்று பாரத ஞான மரபில் கருதப்படுகிறது. தான் செய்யும் கர்மங்கள் அதாவது செயல்களின் மூலம் பூரணத்தை அடையமுடியும்.  கர்மம் மற்றும் ஞானத்தைத் தேடித்தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. 

இங்கு வாழ்நாட்கள் முக்கியமல்ல, வாழ்ந்த முறை, செயல்கள், செயல்கள் உருவாக்கிய சமுதாயத் தாக்கமே முக்கியமாகப் பூரணமாகக் கருதப்படுகிறது. இஃது இக்கிகை புத்தகம் கூறும் கருத்துக்கு எதிர்நிலையில் இருக்கும்.‌

இவ்வழியில் மஹாபூர்ணத்தை அடைந்த ஞானிகள் நம்மாழ்வார், ஆதி சங்கரர், விவேகானந்தர், பாரதியார். இவர்கள் அனைவரும் குறைந்த வயது வாழ்ந்தவர்கள். இன்னும் பல ஞானிகள் உண்டு. 

பாரத ஞான மரபில் இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தவர். அவரைப் போன்று பல ஞானிகள் பாரத ஞான மரபில் நிறைய வயது வாழ்ந்தவர்கள் என்பதும் இருக்கிறது.‌

பிறவியின் நோக்கத்தை அறிந்து ஒரு ஜீவன், அதை வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு , அதை நிறைவேற்றுவதற்குக்கான கடமைகளைத் தொடர் நிலையில் இச்சையற்று செயல்படுத்திக் கொண்டு , அதன் மூலம் ஆத்ம ஞானத்தைத் தேடி , ஆத்ம ஷேமத்தை அடைந்துச் சமுதாயத்தில் அவர்களின் இருப்பிடத்தை அவர்கள் விட்டுச்சென்ற கொள்கையின் தாக்கத்தின் மூலம் அறிந்து கொள்கிறோம். இதுவே பாரத ஞான மரபுபடி  ஒரு ஜீவனின் பூரணம். 

                         - தொடரும் 

மகர சடகோபன் தென்திருப்பேரை 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எல்லைச்சாமி

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

பாமாலை (மூலம்)