பாமாலை (மூலம்)
முன்னுரை
வயதில் மூத்த திருப்பேரை மக்கள் மனப்பாடம் செய்த பாமாலைக்கும், அச்சில் வெளிவந்த பாமாலை மூலத்துக்கும் சில பாடபேதங்கள் இருப்பதை ஊர் பெரியவர்கள் மூலம் அறிந்தோம். நமது பேராபுரி மஹாத்ம்யம் புத்தகம் வெளிக்கொணரும் போது அந்த பிழையை நிவர்த்தி செய்யும் வகையில் உண்மையான மூலத்தைத் தேடி அழைந்தோம். அந்த மூலமானது சீர்பிரிக்காமல் நான்கு அடிகளாக இருந்தது. அந்த மூலத்தை அப்படியே பேராபுரி மஹாத்ம்யம் நூலில் கொடுத்தோம். ஆனால் அது படிப்பதற்குக் கஷ்டமாக இருப்பதை உணர்ந்தோம்,இருந்தாலும் ஒரு மூல நூல் உருவாகிய வண்ணம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியே வெளியிட்டோம்.
பிறகு உ.வே.சா நூலகம் மூலம் ஸ்ரீ உ.வே.சா. அவர்களால் சீர் பிரித்து 1939ம் ஆண்டு வெளிவந்த மகரநெடுங்குழைக்காதர் பாமாலை நூலை, மீண்டும் 2021 ம் ஆண்டு மூன்றாவது பதிப்பாக அடியேனது நிதியுதவி மூலம் வெளிக்கொணர்ந்தோம்.
அதுவும் படிப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லியதன் காரணத்தினால் , "தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீக்ஷிதர்" என்ற பாமலைக்கு நெடிய உரையுடன் கூடிய ஒரு நூலை அடியேன் வெளியிடும்போது , எளிய முறையில் இன்றைய தலைமுறை படிக்கும் வண்ணமும், பாடபேதம் இல்லாத மூலத்துடன் ஒத்துச் செல்லும் வழியிலும் வெளியிட்டோம்.
அந்த நூலில் பாமாலைக்கு பதவுரை, விளக்கவுரை மற்றும் ஆழ்வார்களில் வழியில் பாமாலைச் சொற்கள் அமைந்துள்ளன என்ற வகையில் ஒரு நெடிய விளக்கவுரை " தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீக்ஷிதர்" என்ற நூலை 228 பக்கங்களில் 2023ம் ஆண்டு வெளியிட்டோம்.
அந்த புத்தகம் வெளியீட்டு விழாவில் எனது அருமை நண்பர் திரு.இராம.நம்பி நாராயணன், ஆசிரியர் ஒரே நாடு , மூலத்தை புத்தகத்தின் பின்னால் அனைவரும் படிக்கும்வண்ணம் ஒரே நீட்சியில் கொடுத்திருக்கலாம் என்று கூறினார். பிறகு அதே கருத்தை எனது மனைவியும் கூறினாள். அதனால் இதை எல்லோரும் இன்புறும் படி ஒரே நீட்சியில் கொடுத்துள்ளோம்.
மூலத்தைப் படிக்கும் நேரத்தில் அர்த்தத்துடன் பாமாலையைப் புரிந்துக் கொள்ள நெடிய உரை நூலான " தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீக்ஷிதர்" என்ற நூலையும் வாங்கி படித்து இன்புறும் படி கேட்டுக்கொள்கிறேன்.
மகர சடகோபன்
தென்திருப்பேரை
பாமாலை
அடியேங்கள் துன்பம் அகல்வதற்காவ் அந்த நான்மறையின்
முடியே பரவும் குழைக்காதர் மீது முதுதமிழால்
படியேழும் ஓங்கிய, பாமாலை ஈரைம்பது அளிப்பான்
கடியேறில் அஞ்சித் தொடை ஞானமுத்திரை கைத்தலனே.
காப்பு 2
பொன்சிறை நீக்கி விரித்தே பறக்கின்ற புள்ளரசே!
என்சிறை நீக்குவித்தாய் இல்லையே இகல், ஆடரவ
வன்சிறை நீக்கினை வானவர்காக மகிழ், விநதை
தன்சிறை நீக்கினாய் ஆராஅமுதம் தந்தனையே.
நூல்
கன்றுக்கு இரங்கிய கற்றாவைப் போலக் கருணையுடன்
என்றைக்கு இரங்குவரோ அறியேன் எழுபாருமுய்யக்
குன்றைக்கவி கை எனத்தரித்தோர், குழைக்காதரை நாம்
சென்று எப்பொழுது தொழுவதும் பாவங்கள் தீர்வதுமே (1)
எப்போது நின்னை நினைப்போம் அங்கே வந்து எதிர்முகமாய்
அப்போது நீயும் வந்து அஞ்சல் என்பாய் அடியார் உளத்தில்
மெய்ப்போத ஞானவிளக்கே கராங்கௌவ வீரிட்டந்தக்
கைப்போதகம் சொன்ன மாலே தென்பேரையிற் காகுத்தனே (2)
நூற்றெண்மருக்கு இடர்வந்தாலும் அவ்விடர் நோயகற்றி
மாற்றும் பரஞ்சுடர் நீயல்லவோ தமிழ்வாணர் தினம்
போற்றும் சுருதி பொருளே மதுரம் பொழிந்து நறை
ஊற்றும் துளவப்புயத்தாய் தென்பேரையில் உத்தமனே (3)
உத்தமனைத் தமிழ்ப்பேரை அம்மானை அன்புற்றவர்க்கு
நித்தமனத்தன் தவிர்க்கும் செஞ்சோதியை நீண்ட சுடர்
அத்தமனம்பட ஆழிதொட்டானை அனுதினமும்
தத்தமனத் துணினைப் பார்க்க ஒருதுயர்தான் இலையே (4)
எந்தெந்த வேளையினும் அலங்காமல் இருசரணம்
தந்தந்த கராவினை தவிர்ப்பாய் இந்தத்தாமதம் என்
உன்றன் திருவடிக்கு ஆளான எங்கட்கு உவகை நல்காய்
கொந்துந்து தாமப் புயனே மகரக் குழைக்கொண்டலே (5)
பூரண சந்திர முகமும் கத்தூரியும் பொற்புயமும்
ஆரணம் தேடு நின்பாதாம் புயமும் அபயமென்றே
வாரணம் காத்தகர புண்டரீகமும் வந்து தொழாக்
காரணம் ஏது என்று அறியேன் தென்பேரையில் காகுத்தனே (6)
அன்னை அல்லாமன் மகவுக்கு வேறில்லை ஆதுலர்க்குப்
பொன்னை அல்லாமல் புகல் வேறிலை இப் புலைதவிர்க்க
நின்னை அல்லாமன் மற்றாரையுங் காண்கிலன் நீதியுடன்
நன்னயஞ் சேருந் தமிழ்ப்பேரை வாழ்கின்ற நாரணனே (7)
பொல்லாத வஞ்சனை வாராமல் போக்கினை போக்கினதும்
அல்லாமல் எங்கட்கு அபயம் என் றாய் அடியேங்கள் வினை
எல்லாம் அகற்றி நின் சந்நிதிக்கே வர ரட்சிகண்டாய்
நல்லார் தொழும் தென்திருப்பேரை வாழ்கின்ற நாரணனே (8)
வஞ்சம் புணர்ந்த கொடுவினை யாவையும் மாற்றி எங்கள்
நெஞ்சம் கலங்கி அழியாமல் காத்தருள் நின்னை எந்நாள்
கொஞ்சும் குழந்தையும் கூடத் தொழுவது கோவியர்பால்
துஞ்சும் தயிருண்ட மாலேதென் பேரையிற் தூயவனே (9)
காவாய் எனப்பல தேவரை வாழ்த்திக் கவலையுடன்
நாவாய் உலர்ந்தது அல்லால் பயனேது எம்மை நாடிவந்த
தாவா வினையைத் தவிர்ப்பாய் இனியுன் சரணம் கண்டாய்
தேவாதியர் தொழும் தேவே தென்பேரையில் சீதரனே (10)
பித்தனைப் போல் மனம் ஏங்காமல் இந்தப் பிணியகல
எத்தனை நாள் செல்லுமோ அறியேன் இசைத்தேர் குருகை
முத்தனைப் போற்று மகிழ்மாறன் கூறு முகுந்தமலர்க்
கொத்தலர் பேரைக்கு அதிபா மகரக்குழைக் கொண்டலே (11)
அடியாரிடத்தில் வினைகள் வந்தாலும் அவை அகற்றி
நொடியாகத் தீர்ப்பது நீயலவோ மின்னுடங்கு வஞ்சிக்
கொடியார் இடைச்சியர் மத்தாலடிக்கக் குழைந்து நின்ற
வடிவா கருணைக் கடலே தென்பேரையின் மாதவனே (12)
ஆயிரங்கோடி வினைகள் வந்தாலும் அவை அகற்றி
நீ இரங்காவிடின் மற்றாரும் இல்லை நிறைந்த தமிழ்ப்
பாயிரம் மாறன் கவிகேட்டு உருகும் பரம இசை
வேயிரங்கும் கனிவாயா தென்பேரையில் வித்தகனே (13)
அவலப் படாப்பழி வாராமல் காத்து அடியேங்கள் மனம்
கவலைப் படாமல் கடாட்சி கண்டாய் கற்றநாவலரும்
நுவலப் படாவரை மத்தாக நாட்டி நுடங்கு திரைத்
திவலைக் கடலைக் கடைந்தாய் தென்பேரையில் சீதரனே (14)
உனை ஆதரிக்கும் அடியேங்கள் முன்செய்த ஊழ்வினையால்
நினையாமல் வந்த நெடுந்துயர் தீர்த்தருள் நேமிசங்கம்
புனை ஆரணப்பொருளே பலகால் அன்பு பூண்டவர்பால்
அனையாகிய குழைக்காதா இனி உன் அடைக்கலமே (15)
நெஞ்சினுநீ என் நினைவினு நீ நெடும்பூதமெனும்
அஞ்சினுநீ கலையாறினுநீ அறிவோடு இருகண்
துஞ்சினு நீ அன்றி வேறு அறியேன் இத்துயர் தவிர்ப்பாய்
மஞ்சினு மேனி அழகா கருணை வரோதயனே (16)
வண்ணம் கரியன் கனிவாய் முகுந்தன் மலர்ப்பதமும்
கண்ணும் கரமும் கமலம் ஒப்பான் கஞ்சமா மயிலை
நண்ணும் கருணைத் திருப்பேரை மாதவனாமம் சொன்னால்
எண்ணும் கவலையும் துன்பமும் தீரும் எமக்கினியே (17)
நிலையாக் கயத்துள் படிந்தவர் போல் எங்கள் நெஞ்சழிந்து
மலையாமல் இத்துயர் மாற்று கண்டாய் மலர்ச் சேவடியாள்
சிலையார் அணங்கின் உருவாக்கும் தெய்வசிகாமணியே
அலையாழி சூழும் தமிழ்ப்பேரை வாழ் அச்சுதானந்தனே (18)
எண்ணாத எண்ணி இடைந்து இடைந்து ஏங்கி இருந்து மனம்
புண்ணாய் மெலிந்து புலம்பாமல் நீ இப்புலை தவிர்ப்பாய்
பண்ணார் மதுரத் தமிழ்ப் பாவலரும் பழமறையும்
விண்ணாடரும் தொழும் எந்தாய் தென்பேரையில் வித்தகனே (19)
இழைக்கும் கொடிய வினையாவையும் மாற்றி எங்கள் உயிர்
பிழைக்கும் படிக்கருள் செய்தனையே சுவை பெற்ற பசும்
கழைக்கண்டு செஞ்சொல் வசுதேவி கண்டு இருகண் களிக்கும்
மழைக்கொண்டலே அண்டர் வாழ்வே தென்பேரை மணிவண்ணனே (20)
திங்கள் ஒன்றாகச் சிறையிருந்தோம் இச்சிறை அகற்றி
எங்கள் தன்பால் இரங்காதது என்னோ இசை நான்மறையின்
சங்கமும் கீதத்தமிழ் பாடலும் சத்தசாகரம் போல்
பொங்கு தென்பேரை புனிதா கருணைப் புராதனனே (21)
இன்றாகும் நாளைக்கு நன்றாகும் என்று இங்கு இருப்பதல்லால்
ஒன்றாகிலும் வழிகாண்கிலமே உன் உதவி உண்டேல்
பொன்றாமல் நாங்கள் பிழைப்போம் கருணை புரிந்தளிப்பாய்
அன்று ஆரணம் தொழ நின்றாய் தென்பேரைக்கு அதிபதியே (22)
வள்வார் முரசதிர் கோமான் வடமலையப்பன் முன்னே
விள்வாரும் இல்லை இனி எங்கள் காரியம் வெண்தயிர் பால்
கள்வா அருள் கடைக்கண்பார் கருணைக் களிறு அழைத்த
புள்வாகனா அன்பர் வாழ்வே தென்பேரைப் புராதனனே (23)
பறவைக்கு அரசனைக் கண்டோடும் பாம்பெனப் பாதகமாம்
உறவைக் கரம் கொண்டு ஒழிப்பது என்றோ பவத்தூடு அழுந்தித்
துறவைக் கருதும் அவர்க்கருள் பேரையில் தூயவ மா
சற வைத்த செம்பொன் துகிலுடையாய் அச்சுதானந்தனே (24)
வீயாமல் நாங்கள் மெலியாமல் இந்த வினை அகற்றி
நாயாகிய எங்களைக் காத்தருள் நவநீதம் உண்ட
வாயா ஒரு பத்து மாதம் சுமந்து வருந்திப் பெற்ற
தாயாகிய குழைக்காதா தென்பேரைத் தயாநிதியே (25)
கண்டோமிலை முனங்கேட்டோமிலை அவன் கைப்பொருளால்
உண்டோமிலை இவ்வினை வரக்காரணம் ஒன்றுளதோ
தண்டோடு சக்கரம் சங்கேந்தும் உம்பர் தலைவ நெடு
விண்டோய் பொழில் தடஞ்சூழ் பேரை வந்தருள் வித்தகனே (26)
நாவை அண்ணாந்து அசைத்து உன் திருநாமம் நவில மற்றோர்
தேவை எண்ணோம் இத்துயர் தீர்த்திடாத திருவுளம் என்
கோவை வண் நாக முடி மேலொரு பதம் குந்தி நின்ற
பூவை வண்ணா விண்ணவர் போற்றும் பேரைப் புராதனனே (27)
ஒரு நாளு நின்னை வணங்காது இரோம் கண் உறங்கினும் நின்
திரு நாமம் அன்றி மற்றொன்று அறியோம் இந்தத் தீங்கு அகற்றாய்
பொரு நாகணை ஒன்றி வேரொடு மைம்மலை போல் பொலிந்த
கருநாயிறே அன்பர் கண்ணே தென்பேரையில் காகுத்தனே (28)
உரகதம் கொண்ட கொடியோனை நீக்கி உறுதுணையாய்ப்
பரகதியாக வந்து அஞ்சல் என்பாய் பவளக்கதிர் பூங்
குரகதமா முகம் போல் கவிபேரைக் குழக செம்பொன்
மரகத மேனி அழகா கருணை வரோதயனே (29)
சிந்தாகுலம் தவிர்த்து எங்களை ஊரில் திரும்ப அழைத்து
உன்தாமரைச் சரணம் தொழவே அருள் உம்பர் தொழும்
எந்தாய் பொருநைத் துறைவா வரிவண்டு இசை பயிற்றும்
கொந்தார் துளவப் புயத்தாய் மகரக்குழைக் கொண்டலே (30)
உய்வண்ணம் எங்கட்கு உதவி அஞ்சேல் என்று உறுதுணையாய்
எவ்வண்ணம் இத்துயரம் தவிர்ப்பாய் கதிர் ஈன்று புனல்
செய்வண்ணப் பண்ணை வளமே செறிந்த தென்பேரை வளர்
மைவண்ணமேனி அழகா கருணை வரோதயனே (31)
பலகால் இருந்து மெலிந்து ஊசலாடும் பழவினையை
விலகாது இருந்த திருவுளம் ஏதுகொல் விண்ணவர்க்கா
உலகாள் இலங்கையர் கோமான் உயிர்க்கும் வண்டோதரிக்கும்
குலகாலனாகிய கோவே மகரக்குழைக் கொண்டலே (32)
அடங்காத் தனம் புதைத்தார் போல் மெலிந்து அடியேங்கள் இந்த
மடங்காத்து இருந்து சலியாமல் இத்துயர் மாற்று கண்டாய்
தடங்காத் திகழும் தமிழ்ப்பேரை வாழும் தயாபர பொற்
குடங்காத்து வெண் தயிர் உண்டாய் மகரக்குழைக் கொண்டலே (33)
பங்கேருகத்தை இரவி புரந்திடும் பான்மையைப் போல்
செங்கேழ்க் குமுதத்தைத் திங்கள் புரக்கும் செயலினைப் போல்
கொங்கே கமழும் இருசரணாம் புயம் கொண்டு தினம்
எங்கே இருந்தும் குழைக்காதர் எம்மை இரட்சிப்பரே (34)
எங்களையும் தொண்டர் என்றே இரங்கி இனி எங்கள் பா
வங்களையும் படிக்கே அருள்வாய் கனிவாய் அமுதம்
பொங்கு அளை உண்டு தெவிட்டியன் பால் பரிபூரணமாம்
திங்களை வென்ற முகத்தாய் தென்பேரையில் சீதரனே (35)
விடநடவாது கருமம் செய்தானை விலக்கி இனியெம்
முடலடு மாதுயர் தீர்த்து எமையாண்டருள் உண்மையிது
திடநட மாதருடனே பதாம்புயம் சேப்பநின்று
குடநடமாடு முகுந்தா மகரக்குழைக் கொண்டலே (36)
இரவும் பகலும் மெலியாமல் எங்கட்கு இரங்கி உனைப்
பரவும் படிக்கு இவ்வினை தீர்தருள் நெடும் பாரதப் போர்
விரவும் கொடுந்துயர் நூற்றுவர் மாள விசயனுக்கா
அரவுந்து தேர்முனம் ஊர்ந்தாய் தென்பேரையில் அச்சுதனே (37)
பாற்கொண்ட நீர் அன்னம் வேறாக்கும் உன்னைப் பரவும் எங்கள்
மேற்கொண்ட வல்வினை வேறாக்க நீயன்றி வேறுமுண்டோ
சூற்கொண்ட செந்நெல் வயல் பேரை அந்தணர் சூழ்ந்து தொழும்
கார்க்கொண்டலே குழைக்காதா கருணைக் கருங்கடலே (38)
அறிவும் அறமும் தரும் பலபூதமும் ஆரணத்தின்
பிறிவும் பிறிதொரு தெய்வமும் நீ இப் பெரு வினையால்
செறியும் தமியர் துயர் தீர்த்திடாத தென் தெண்டிரை நீர்
எறியும் பொருநைத் துறைவா தென்பேரைக்கு இறையவனே (39)
நெருங்கடர் தீவினை நீக்கி உன் நாமம் நினைப்பதற்குத்
தருங்கடன் எங்களைக் காப்பதன்றோ தளர்ந்தே மெலிந்த
மருங்கட வீங்கும் படாமுலைப் பூ மடமான் தழுவும்
கருங்கடலே குழைக்காதா தென்பேரையில் காகுத்தனே (40)
செழுந்தாமரை இலைத் தண்ணீரென நின்று தீவினையால்
அழுந்தாமல் நாங்கள் மலங்காமல் காத்தருள் ஆரணத்தின்
கொழுந்து ஆதிமூலமென்றே தெளகிந்தோதிய கொண்டல்வண்ணா
கழுந்தார் சிலைக்கையரசே தென்பேரையிற் காகுத்தனே (41)
பெய்யுங் கனமழைகண்ட பைங்கூழ் எனப்பேருதவி
செய்யுங் கடவுளர் வேறிலைகாண் இந்தத்தீங்ககற்றி
உய்யும் படிக்கு எங்களைக் காத்தருள் நறவூற்றிருந்து
கொய்யுந் துளவப் புயத்தாய் மகரக்குழைக் கொண்டலே (42)
பஞ்சின் மென்சீறடிப் பாண்டவர் பாவை பதைபதையா
தஞ்சல் என்றே அன்றவண் மானங்காத்தனை அப்படி இவ்
வஞ்சகந் தன்னையும் தீர்த்தருள்வாய் கரவால் வருந்தும்
குஞ்சரங் காத்த முகிலே மகரக்குழைக் கொண்டலே (43)
மறுகாமல் நாங்கள் மனஞ்சலியாமல் இவ்வஞ்சகர் வந்
திறுகாமல் எங்களைக் காத்தருள்வாய் துணரீன்ற மணம்
பெறுகா வில்வாசச் செழுந்தேறல் உண்டு இளம் பேட்டுவரி
அறுகால் வரிவண்டிசை பாடும் பேரையில் அச்சுதனே (44)
காக்குங் தொழில் உனக்கல்லாது வேறு கடவுளரை
நாக் கொண்டு சொல்லத் தகுவதன்றே நணுகாது வினை
நீக்கும் படிக்கு அருட்கண் பார்த்து இரட்சி நிறைந்த புனல்
தேக்கும் பொழில் தென்திருப்பேரை வாழும் செழுஞ்சுடரே (45)
கண்ணுக்கு இடுக்கண் வரும்போது இமைவந்து காப்பது போல்
எண்ணுக்கு நீங்கு துயர்தவிர்த்தே எங்களுக்கு அருள்வாய்
விண்ணுக்குள் ஓங்கும் பொழில் குருகூரன் விரித்த தமிழ்ப்
பண்ணுக்கு இரங்கும் பரமா தென்பேரைப் பழம்பொருளே (46)
சத்துருவைத் தள்ளி எங்களைக் காத்துத் தயவுபுரிந்
தித்துரு வத்தையு மாற்றுகண்டாய் இலங்கா புரியோன்
பத்துரு வங்கொண்ட சென்னிகள் தோறும் பதித்தமுடிக்
கொத்துரு வக்கணை தொட்டாய் மகரக்குழைக் கொண்டலே (47)
இரும்பான கன்னெஞ்ச வஞ்சக னார்க்கும் இடர்விளைப்போன்
திரும்பாம நீக்கி எமைக்காத்தருள் நறை தேங்குமுகை
அரும்பாரு மென்மலர் ஆராமம் தோறும் அமுதம்பொழி
கரும்பாரும் செந்நெல் வயல் பேரை வாழ் கருணாநிதியே (48)
முன்னில் புரிந்த பெருவினையான் முற்றுமே மலங்கி
இன்னல் படாமல் எமைக்காத்தருள் இறை தீர்த்தருள் பூங்
கன்னல் தடமும் கமுகாடவியும் கதிர்பவளச்
செந்நெல் பழனமும் சூழ் பேரைத் தெய்வ சிகாமணியே (49)
தீதாம் பரத்தர் செய் தீவினையாவும் தீர்த்தளிக்கும்
மாதாம் பரத்துவன் நீயல்லவோ மறையோர் பரவும்
வேதாம் பரத்தின் நடுவே அரவின் விழிதுயின்ற
பீதாம் பரத்து எம்பெருமான் தென்திருப்பேரையில் பேரொளியே (50)
ஆலம் என்னுஓர் உருக்கொண்டானை நீக்கி அகற்ற இது
காலம் அன்றோ எங்களைக் காத்தருளக் கடன் இலையோ
ஞால மென் தோகையும் பூமாது மேவிய நாததும்பி
மூலம் என்று ஓதிய மாலே நிகரின் முகில்வண்ணனே (51)
மெய்கொண்ட பொய் என இத்துயர் மாற்றி விலக்கமுற்றும்
கைகண்ட தெய்வம் உனையன்றி வேறிலை கான்ற விடப்
பைகொண்ட நாக முடிமேல் சரணம் பதித்துநடம்
செய் கண்டகர் குலகாலா தென்பேரையில் சீதரனே (52)
முத்தித் தபோதனர்க்கும் கலை வேத முதல்வருக்கும்
சித்தித்த நின்பதம் சேவிப்பது என்றுகொல் தேவகிமுன்
தத்தித்த தித்தி எனநடித்தே இடைத்தாயர் முனம்
மத்தித்த வெண்ணெய்க்கு உகந்தாய் தென்பேரை மணிவண்ணனே (53)
நிம்பவளக் கனி போல் கசப்பாகிய நீசன் உளம்
வெம்பவளத்த வினை அணுகாமல் விலக்கிவிடாய்
கும்பவளத் தயிரும் குடப்பாலும் குனித்து அருந்தும்
செம்பவளத்த எம்பெருமான் தென்பேரையில் சீதரனே (54)
ஊழ் வேதனை செய்ய வாராது உன்நாமம் உரைத்தவர்க்குத்
தாழ்வேதும் இல்லை மிகுநன்மையே வரும் சஞ்சரிகம்
சூழ்வேரி தங்கும் துழாய்ப்புயலே எங்கள் துன்பகற்றும்
வாழ்வே மரகத வண்ணா தென்பேரையின் மாதவனே (55)
முன்னம் பழகி அறியோம் அவனை முகம் அறியோம்
இன்னம் பழவினை வாராமல் காத்தருள் ஏற்ற செங்கால்
அன்னம் பழன வயல் தோறும் துஞ்சும் அடர்ந்த பசுந்
தென்னம் பழம் சொரியும் திருப்பேரையில் சீதரனே (56)
ஆக நகைக்கும்படி திரிவோன் கடந்து அப்புறமாய்
போக நகத்தில் புகுந்தோடவே அருள் போர்க்களத்தில்
மா கநகப்பெயர் கொண்டானை மார்வம் வகிர்ந்த செழும்
கோக நகச் செங்கையானே மகரக்குழைக் கொண்டலே (57)
பொய்யால் நிறைந்த கொடிய எம்பாதகன் பொய்யும் வம்பும்
செய்யாமல் எங்களைக் காத்தருள்வாய் செழுந்தார் அரசர்
மொய்யாக வந்தனில் பாண்டவர்க்காக முழங்கு சங்கக்
கையா கருமுகில் மெய்யா தென்பேரையில் காகுத்தனே (58)
இகல் இடமான புலையனை மாற்றி இனி எங்களுக்கு ஓர்
புகலிடம் நீயன்றி வேறுமுண்டோ புகல் கற்பமெலாம்
பகலிடம் ஆன சதுமுகத் தேவொடு பண்டொருநாள்
அகலிடம் உண்ட பிரானே தென்பேரைக்கு அதிபதியே (59)
கையக நெல்லிக் கனிபோல் எமைத்தினம் காத்தளிக்கும்
துய்ய கண்ணன் செழும் காயா மலர்வண்ணன் சுக்கிரனார்
செய்ய கண்ணைத் துரும்பாலே கிளறிச் சிறுகுறளாய்
வையகம் அன்று அளந்தான் தமிழ்ப்பேரையின் மாதவனே (60)
கலகக் கொடிய புலையன் எம்பால் செய்த காரியத்தை
விலகக் கடன் உனக்கல்லாது வேறிலை வேலை சுற்றும்
உலகத் தனிமுதல் என்று அறியாமல் உபாயம்செய்த
அலகைத் துணைமுலை உண்டாய் தென்பேரையில் அச்சுதனே (61)
கைச்ச கடைத்தொழில் கொண்டே திரியும் கபடன் செய்த
இச் சகடத்தையும் மாற்றிவிடாய் இடைமாதர் உறி
வைச்ச கடத்தயிர் உண்டே தவழ்ந்தன்று வஞ்சன் விட்ட
பொய் சகடத்தை உதைத்தாய் தென்பேரையில் புண்ணியனே (62)
புண்ணிய நந்தகுமாரா முன்னாள் செய்த புன்மையினால்
பண்ணிய நம்தம் வினை தவிர்ப்பாய் பலகாலும் உளம்
கண்ணி அனந்தன் முடிமேல் நடிக்கும் கருணைமுகில்
எண்ணி அனந்த மறைதேடும் பேரைக்கு இறையவனே (63)
இறையவன் எம்பெருமான் நெடுமால் எறிநீர்ப் பொருநைத்
துறையவன் ஏழை அடியார் சகாயன் சுடர் இரவி
மறைய வனந்திகழ் நேமிதொட்டான் என் மனக்கருத்தில்
உறைய வனஞ்சுடும் தீப்போலப் பாதகம் ஓடிடுமே (64)
அக்கண் அஞ்சாது எந்த வேளை என்றாலும் அளித்தனை நீ
இக்கணம் சால வருந்தும் எம்பால் இரங்காதது என்னோ
மைக்கண் அஞ்சாயன் மடமாதுக்காக வளர்மிதிலை
முக்கணன் சாபம் இறுத்தாய் தென்பேரை முகில்வண்ணனே (65)
ஆடகச் சேவடியால் எமதாவி அளித்தனை கார்க்
கோடகப் பாவிகள் வாராமல் காத்தனை கோசல நன்
நாடகத்து ஓர்சிலை தாங்கி வெங்கூற்றை நகைக்கும் அந்தத்
தாடகைக்கு ஓர்கணை தொட்டாய் தென்பேரை தயாநிதியே (66)
பரனே பராபரனே பதியே பதிகொண்ட சரா
சரனே நெடும் பரதத்துவனே சமர் வேட்டு எழுந்த
கரனே முதல் பதினாலாயிரம் கண்டகரை வெல்லும்
உரனே நிகர்முகில்வண்ணா இந்நாள் வந்து உதவினையே (67)
காலிக்கு ஒருவரை ஏந்தினை நெஞ்சம் கலங்கும் எங்கள்
மேல் இக்கொடுவினை வாராமல் காத்தனை மேன்மை தரும்
பாலுக்கு இனிய மொழியாளைத் தேடிப் பகையை எண்ணா
வாலிக்கு ஒருகணை தொட்டாய் தென்பேரை மணிவண்ணனே (68)
அரா மரியாதை அறியாத வஞ்சன் அதட்ட எமைப்
பொரா மரணாதிகள் வாராமல் காத்தனை பூதலத்தில்
இராமா எனும்படிக்கே நீ ஒரு கணை ஏவி நெடு
மராமரம் ஏழும் துளைத்தாய் தென்பேரையின் மாதவனே (69)
மாதவனே கருணாகரனே என் மன இருள் போர்
ஆதவனே கருமாணிக்கமே மலர் ஆசனத்தில்
போதவன் ஏகம் எனவே பரவிப் புகழ்ந்த குழைக்
காத அநேகம் பிழைசெய்த எங்களைக் காத்தருளே (70)
அதிபாவம் செய்து பிறந்தாலும் அப்பொழுது அஞ்சல் என்னல்
விதிபாரம் அன்றுஉனக்கு எங்களைக் காப்பது வேரிமடற்
பொதிபாளை மீற நெடுவாளை ஆளைப் பொருதுவரால்
குதிபாய் பொருநைக்கு அதிபா மகரக்குழைக் கொண்டலே (71)
மகரக் குழையும் முககாந்தியும் மணிமார்பமும் பொற்
சிகரக் குழையும் புயபூதரமும் நல்சேவடியும்
பகரக் குழையும் திருநாமமும் நெடும் பாதக நோய்
தகரக் குழையும் படி உரையீர் உயிர் தாங்குதற்கே (72)
ஒர் உருவாய் இரண்டாய் மூவராகி உபநிடதப்
பேர் உரு நான்கு ஐம்புலனாய் அறுசுவைப் பேதம் அதாய்ப்
பார் உருஏழ் எட்டெழுத்தாய்ப் பகரும் பிரணவமாய்க்
கார் உருவாம் குழைக்காதர் உண்டே எமைக் காப்பதற்கே (73)
இடைந்து ஓர் இருப்பிடம் இல்லாத வஞ்சகன் ஏங்கி மனம்
உடைந்து ஓட நோக்கி எமைக் காத்தனை உயர் வீடணன் நொந்
தடைந்தேன் என அன்று அரசளித்தாய் அறுகால் சுரும்பர்
குடைந்து ஓகை கூரு மலர்ப்பொழில் பேரையில் கோவிந்தனே (74)
கோவிந்தன் ஆயர்குலத்து உதித்தோன் செழும் கொவ்வைச் செவ்வாய்
மாவிந்தை நாயகன் பூமாது கேள்வன் பொன் வானவர்தம்
காவிந்த நானிலத்தாக்கிய பின்னை கணவன் பொற்றாள்
மேவித் நாள் எண்ணு நெஞ்சே தென்பேரை விமலனையே (75)
விண்டலத் தாபதரும் இமையோரும் நல்வேதியரும்
பண்டலத்தால் வருந்தாதவர்க்காகப் பகைதவிர்த்தாய்
மண்டலத்து ஆதவன் போல் கதிர்வீசு மணிமகர
குண்டலத்தாய் தண்தமிழ்ப்பேரை எங்கள் குலதெய்வமே (76)
புராதனன் மாயன் புருடோத்தமன் பரிபூரணன் வெவ்
விராதனை மாய வதைசெய்த காரணன் விண்ணவர் கோன்
சராதன மாயம் எனவே இறுத்தவன் தன் துணையாம்
கிராதனை மாலுமி கொண்டான் தென்பேரையில் கேசவனே (77)
வலையுற்று இனம் பிரியும் கலைபோல மறுகிமனம்
அலைவுற்று நைந்து மெலியாமல் காத்தனை அம்புவிக்கே
நிலையுற்ற தெண்திரை முந்நீரைச் சீறு நெடும்பகழிச்
சிலையுற்ற செங்கை முகிலே தென்பேரையில் சீதரனே (78)
சீதரனே மதுசூதனனே சிலையேந்து புய
பூதரனே புலவோர் அமுதே புவி தாங்கிய
காகோதரனே அன்று ஓர் ஆலிலை மேல் பள்ளி கொண்டருள்
தாமோதரனே குலநாதா நிகரின் முகில்வண்ணனே (79)
சேரீர் செனனம் எடுத்தவன் நாண்முதல் தீங்குசெய்வ
தோரீர் சடைப்பட்டு உழலும் தொண்டீர் நறவூற்று இதழித்
தாரீசனார்க்கும் இரவொழித்தே ஒரு சாயகத்தால்
மாரீசனை வென்ற மால் குழைக்காதர் மலரடிக்கே (80)
புங்கவன் எம்பெருமான் நெடியோன் புடைதோள் புனையும்
சங்கவனம் பெருமாநிலம் போற்றும் தயாபரன் மா
துங்கவனம் திரியும் சூர்ப்பணகை துணைமுலைகள்
வெங்க வனத்தில் அறுத்தான் தென்பேரையில் வித்தகனே (81)
வித்தகன் நேமிப்பிரான் திருமால் திரிவிக்கிரமன்
பத்தர்கள் நெஞ்சுறையும் பரமானந்தன் பண்டொருநாள்
மத்தக மாமலைக் கோடு ஒடித்தான் முகில்வண்ணன் என்றே
கத்து அகமே இகமே பெறலாம் நற்கதி என்பதே (82)
கூசும் கண்டீர் முன்வரக் கொடுங்கூற்றும் குளிர்ந்த மணம்
வீசும் கண்டீர் நறும் தண்ணந்துழாய் விதியால் விளைந்த
மாசும் கண்டீர் வினையும் மருண்டோடு மகிழ்ந்து ஒருகால்
பேசும் கண்டீர் தண்தமிழ்ப்பேரை வானப்பிரான் எனவே (83)
அன்பர்க்கு அருள்வது உனக்கே தொழில் அடியேங்கள் இந்தத்
துன்பப் படாமல் துணை செய்வதென்று கொல் சூட்டுமணி
இன்பப் பஃறலைப் பாம்பணையில் கண் இணை துயிலும்
என் பற்பநாப முகுந்தா தென்பேரைக்கு இறைவனே (84)
முராரி கராவை முனிந்தான் தயாபர மூர்த்தி முக்கண்
புராரி கபாலம் ஒழித்தான் சதுமறை போற்றநின்றான்
பரார் இதயத்தில் இரான் அன்பர் ஏத்தும்படி இருப்பான்
சுராரிகளைப் பட வென்றான் தென்பேரையில் தூயவனே (85)
வேலிக்கு நின்று விளைபயிர் போல விரும்புமெங்கள்
மாலிக் கொடுந்துயர் தீர்த்தளித்தாய் பகை வென்ற புய
வாலிக்கும் வேலைக்கு மானுக்கு மாய மயன்மகட் தன்
தாலிக்கும் கூற்றுவன் ஆனாய் தென்பேரைத் தயாநிதியே (86)
பாரதி நாவில் உறைவோனும் தேவர் பலரும் அன்பு
கூரதி காந்தி மலர்ச்சேவடியினை கூறும் ஐவர்
சாரதி பேரை வளர் சக்ரபாணி சரணம் என்றே
மாருதிக்கு ஈந்த திருநாமம் நாளும் வழுத்துவனே (87)
பேராழி வையகம் எல்லாம் மனுமுறை பேதலியா
தோராழி ஓச்சி அரசளித்தே பின் உறுவர்பதம்
கூராழி ஏந்தும் தமிழ்ப்பேரை வாழ் குலநாதன் எழில்
காராழி நீர்வண்ணன் பேர் ஆயிரத்தொன்று கற்றவரே (88)
சிகரம் திகழும் நின் கோபுர வாசலில் சேவிக்க நாம்
பகரும் தவமுனம் பெற்றிலமோ மடப்பாவையர் தம்
தகரம் தடவும் அளகாடவியில் தவழ்ந்து இளங்கால்
மகரந்த மொண்டு இறைக்கும் திருப்பேரையின் மாதவனே (89)
மந்தர மாமலை மத்தாக வேலை மதித்தனை கா
மந்தர மீது புரியாமல் நூற்றுவர் மாய ஐவர்
மந்தர ஞாலம் அரசாள வைத்தனை வான்பகை முன்
மந்தர சூழ்ச்சியின் வென்றாய் தென்பேரையின் மாதவனே (90)
வாமனன் நூற்றெண்மர் போற்றும் பிரான் மலராள் கணவன்
பூமனை நாபியில் பூத்தோன் அடங்கப் புவியிடந்தோன்
காமனைத் தந்த திருப்பேரை வாழ் கருணாநிதி தன்
நாமனைச் சிந்தையில் வைத்திலர் வீழ்வர் நரகத்திலே (91)
அருங் கொடிக்கோர் கொழுகொம்பென வெம்மை அளிப்பதும் செய்
திருங் கொடியோனையும் மாற்றி விட்டாய் இறுமாந்து விம்மி
மருங் கொடித்தோங்கு முலைச் சானகியை வருத்தம் செய்த
கருங் கொடிக்கோர் கணை தொட்டாய் தென்பேரையில் காகுத்தனே (92)
அரந்தரும் வேல்விழியார் அனுராகம் அகற்றி உயர்
வரந்தர வல்லவன் வானப்பிரான் எங்கள் வல்வினையைத்
துரந்தரனாக வந்து அஞ்சல் என்றோன் தன்துணை மலர்த்தாள்
நிரந்தரம் போற்றும் அவரே புரந்தரர் நிச்சயமே (93)
காண்டாவனம் எரித்தான் தரித்தான் என்கருத்தில் அன்பு
பூண்டான் எழில் மணிப் பூணான் அறிவற்ற புன்மையரை
வேண்டான் அடியவர் வேண்ட நின்றான் விரிநீர்ப் புடவி
கீண்டான் தமியனை ஆண்டான் தென்பேரையில் கேசவனே (94)
கேசவன் பேரைவளர் வாசுதேவன் கைகேசி சொல்லால்
நேசவனம் புகுந்தோர் மானை வீட்டி நிசாசரரை
வாசவன் செய்த தவத்தால் தொலைத்தருள் மாதவன் பேர்
பேச அனந்தலிலும் வருமோ பெரும் பேதைமையே (95)
கழக ஆரணத்தின் பயனறியாத கபடன் எம்மைப்
பழகாத வஞ்சனை நீக்குவித்தாய் இடைப் பாவையர்தம்
குழகா வழுதி வளநாட கோவர்த்தனம் எடுத்த
அழகா மகரக் குழையாய் தென்பேரையில் அச்சுதனே (96)
அச்சுதன் பேரை அபிராமன் செஞ்சொல் அசோதைக்கு அன்பாம்
மெய்ச்சுதன் எங்களை ஆட்கொண்ட மாயன் விசயனுக்கா
அச்சுத நந்தைக் குறித்தான் அரவிந்தலோசனன் முன்
நச்சு தனம் சுவைத்து உண்டான் என்பார்க்கு நரகில்லையே (97)
இல்லைப் பதியென்று இருந்து உழல்வீர் எளியேங்கள் சற்றும்
தொல்லைப் படாதருள் பேரை எம்மான் பதத்தூளி கொடு
கல்லைப் பெண்ணாக்கும் கருணாகரன் முன்பு கஞ்சன் விட்ட
மல்லைப் பொருதவன் என்றோதத் துன்பம் வராது உமக்கே (98)
வாராய் அணுவெனும் நெஞ்சே அஞ்சேல் வஞ்சகம் அகலும்
கூராய் அணிந்தவன் சேவடிக்கே அன்பு கூர்ந்து மறை
பாராயணம் பயில் நூற்றெண்மர் நாளும் பரிந்து தொழும்
நாராயணன் திருப்பேரை எம்மான் தனை நண்ணுதற்கே (99)
பதமும் பதச்சுவையும் கவிப்பாகமும் பாகச் செஞ்சொல்
விதமும் விதிவிலக்கு இல்லாவிடினும் வியந்தருளற்
புதமென் தளிர்இளந் தேமாவும் பூகப் பொழிலும் மழைக்கு
இதமென் பசுந்தென்றல் வீசும் தென்பேரைக்கு இறையவனே (100)
வாழ்த்து
பார்வாழி நூற்றெண் பதிவாழி மாறன் பனுவல் இயல்
சீர்வாழி நூற்றெண்மர் நீடுழி வாழி இச்செந்தமிழ் நூல்
ஏர்வாழி மன்னர் இனிதூழி வாழி எந்நாளும் மழைக்
கார்வாழி பேரைக் குழைக்காதர் வாழி இக்காசினிக்கே
ஸ்ரீமகரநெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !!
கருத்துகள்
கருத்துரையிடுக