பிராயக்ராஜ் யாத்திரை - 2 (திரிவேணி சங்கமம்)
வாரணாசியிலிருந்து 20 கி.மீ தொலைவில் சென்று நான்கு சக்கர வாகனத்தில் ஏறி திரிவேணி சங்கமம் நோக்கி பயணம் தொடங்கியது. பிரதான சாலைகள் அங்கங்கே மூடப்பட்ட காரணத்தினால், கிராமம் கிராமமாகப் புகுந்து பிரயாக்ராஜ் வந்தது வாகனம். அதற்கு மேல் வாகனம் செல்ல முடியவில்லை. திரிவேணி சங்கமம் செக்டார் 7 செல்வதற்கு இன்னும் 14 கி.மீ. இருக்கிறது என்று சொன்னார்கள். சாலை முழுவதும் மக்கள்.

மக்கள் சுமைகளைத் தூக்கிக் கொண்டும், குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டும் , தோளில் தூக்கிக் கொண்டும் மக்கள் ஊர்ந்து செல்வதைக் கவனித்தேன். ஒரு குறையும் கூறாமல் அமைதியாக நடந்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
மக்கள் கயிற்றைப் பிடித்துக் கொண்டு , இரண்டு கயிற்றுக்கு இடையில் குழந்தைகளையும் பெரியவர்களையும் வைத்துக் கொண்டு நகர்வது என்பது மக்கள் அவர்களால் அவர்களுக்கு அமைத்துக் கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளைவு.
மற்றொரு அமைப்பு என்பது ஒரு கயிற்றின் இரண்டு பக்கங்களிலும் பிடித்துக்கொண்டு நகரும் கூட்டம், அதுவும் மக்கள் அவர்களால் அவர்களுக்கு அமைத்துக் கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளைவு.
மக்களிடம் இருந்த அதிதீவிர பக்தியும் சனாதனத்தின் மேலுள்ள அதிதீவிர பற்றுதலும் பல கஷ்டங்களை அவர்களுக்கு மகிழ்ச்சியாக மாற்றியது என்பதை உணர்ந்தேன்.
குறைந்தபட்சம் 20 முதல் 25 கிமீ தினம் நடக்க வேண்டும். அவ்வப்பொழுது இரண்டு சக்கர வாகனத்தில் பணம் கொடுத்தால் அழைத்துச் செல்கிறார்கள். சிலர் நியாயமாகவும் சிலர் இதுவே பணம் சம்பாதிப்பதற்கான நேரம் என்ற முறையில் சம்பாதிக்கிறார்கள். இரண்டு மூன்று சக்கர வாகன ஓட்டுநர்கள் பெரும்பாலோர் நியாயமாக இருக்கிறார்கள். தகராறு செய்வதில்லை. சுற்றிச்சுற்றி சேரும் இடத்திற்கு வந்துள்ளோம் , ஆதலால் அதிகம் வேண்டும் என்று ஒரு நபர் கூட கேட்டதில்லை. இந்த அனுபவம் , வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் பொதுவாக இருப்பதை உணர்ந்தேன். அது ஒரு சிறந்த குணமாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் தர்மத்திற்கும் நியாயத்திற்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டவர்களாக இருப்பதை உணர முடிந்தது.
கீழே உள்ள படத்தில் ஒரு வயதானவர், வயது 86க்கு மேல் காலை 5.30 மணிக்கு குளிரையும் பொருட்படுத்தாமல் 6 கி.மீ தூரம் எந்த சலிப்பும் இல்லாமல் வேகமாகக் கைத்தடியை ஊன்றிக் கொண்டு நடந்து செல்வது என்பது நமக்கும் மற்றவர்களுக்கும் தரும் ஊக்கமாகப் பார்த்து வியந்தேன்.
கங்கையின் இருகரைகளிலும் இலட்சக் கணக்கில் தற்காலிக கூடாரம் அமைக்கப் பட்டிருந்தது. இதை கும்பமேளா க்ஷேத்ரம் என்று அழைக்கிறார்கள். மேலே க்ஷேத்ர , கீழ் க்ஷேத்ர என்று கங்கையின் இருகரைகளிலுள்ள கூடார க்ஷேத்திரத்தைப் பிரிக்கின்றனர்கள். கங்கையை கடப்பதற்கு என்று மிதவை பாலங்கள். தற்காலிக மிதவை பாலம் ( Pontoon Bridge) 5 டன் தாங்கும் வசதியுடன் 20க்கு மேல் கட்டப்பட்டிருந்தன. இதுவும் ஒரு சிறந்த ஏற்பாடு வசதி.
மின்சார இணைப்பு , தற்காலிக மின் தூண்கள், கம்பிகள், தெரு விளக்குகள், மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மேளா க்ஷேத்திரத்திலுள்ள எல்லா கூடாரங்களுக்கும் மின்சார வசதி என்பது அருமையான ஒன்று.
கங்கையின் மணல் வெளிப் பரப்பு என்பதனால் நடப்பதற்கு எளிதாகவும்,வாகனங்கள் எளிதாக செல்வதற்கும் செக்கர்டு ப்ளேட் தரையில் ஃபோல்ட் மூலம் பதிக்கப்பட்டு இருந்தன. இது ஒரு சிறந்த அமைப்பு.
ஆண் பெண் கழிப்பறை வசதிகள் ஏராளமாக நிறுவப்பட்டு இருந்தன. அதை அவ்வப்போது தண்ணீர்விட்டு சுத்தம் செய்து கொண்டே இருந்தார்கள். இதுவும் ஒரு சிறப்பான ஏற்பாடு வசதியாக இருந்தது.
கங்கை மற்றும் சங்கம பகுதிகளில் குளிப்பதற்கென்று பாதுகாப்பு வளையங்கள் நிறுவப்பட்டு தண்ணீர் வேகத்திலிருந்து காப்பாற்ற வசதிகள் நிறைய இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. இதுவும் ஒரு சிறந்த ஏற்பாடு.
யமுனை நதிக்கரைக்குச் சென்று, துடுப்பு படகு மூலம் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றேன். துடுப்பு படகு மூலம் சென்றதற்குக் காரணம் சாதாரண மக்களுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆசையினால் மட்டுமே. நடு ஆற்றில் பெரிய இடத்தில் தற்காலிகமாக உடை மாற்றும் வசதியுடன் கூடிய மிதவை இடம், குளிப்பதற்குப் பாதுகாப்பு வளையங்கள் செய்யப்பட்ட ஏற்பாடு என்பது மிகவும் ஆச்சரியமாக அழகாக இருந்தது.
கட்டமைப்பு வசதிக்கென்று மாநில நிர்வாகத்தின் திட்டமிடல் , செயல் படுத்திய விதம் என்பது ஏதோ ஒரு சந்நியாசி ஆட்சி என்று ஏளனம் செய்ய முடியாது. சிறந்த நிர்வாகம் படைத்த தலைவன் என்பதில் சந்தேகம் இல்லை. சட்டம் ஒழுங்கு என்பது ஆட்சியின் முதன்மையாக இருப்பதை நாமும் உணர்ந்தோம். உள்ளூர் மக்களின் உணர்வும் அதுவாக இருப்பதைப் பார்க்கும்போது சந்நியாசி தர்மத்தின் மேல் நின்று சாட்டையைச் சுற்றுவது திரிகிறது.
படகு செலுத்துபவர்கள் அழகாக ஒரு படகுடன் மற்றொரு படகை செருகி கரையில் அணைக்கும் அழகு என்பது பயத்துடன் கூடிய ஆச்சரியம்.ஆனால் குழுமப் பணி (Teamwork) , சகிப்புத் தன்மை (Tollererce), விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை (Giving up attitude) மற்றும் திறமை (Skills) இயற்கையாகவே அமைந்துள்ளதைப் பார்த்து வியந்தேன். இதற்காக பெரும் நிறுவனங்கள் செலவழிக்கும் தொகை என்பது ஏராளம். அதுவும் பெரும் நிறுவனங்களில் செயற்கையாக உருவாக்கப்படுகிறது.
கங்கை யமுனை நீரை அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே இருப்பதைப் பார்த்தேன். இவ்வளவு மக்கள் தொகை கூடும் இடத்தில் சுத்தம் செய்வது என்ற அரசாங்கத்தின் ஏற்பாடு என்பது பாராட்டுக்குரியது.
குடி தண்ணீர் கிடைப்பதற்கு ஏடிஎம் முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இதுவும் மிகச் சிறந்த ஏற்பாடுகளில் ஒன்று.
அனைத்து ஆசிரமங்களும் நிறுவனங்களும் பிரசாதம் என்ற முறையில் மூன்று வேளைக்கும் உணவுகள் ஆங்காங்கே விநியோகம் செய்கிறார்கள்.அதுவே நமது உணவாக மூன்று நாட்களுக்கும் அமைந்தது. ஶ்ரீ ஶ்ரீ ஆசிரமத்தில் ஒரு நாள் இரவு உணவு உண்டேன். அது மிகவும் அருமையாக இருந்தது.
மூன்று நாளில் இரண்டு முறை சங்கமத்திலும் ஒரு முறை அதாவது பௌர்ணமி நாளில் அதிகாலை 5.30 மணிக்கு கங்கையிலும் நீராடினேன். நீராடும் போது குளிர்ந்த நீரில் ஒரு புத்துணர்ச்சி அடைவதை உணர்ந்தேன். இவ்வாறு திருவேணி சங்கமம் நீராடல் என்ற கனவை நிறைவேற்றினேன்.
மக்களுடன் மக்களாக நகர்ந்து செல்லவேண்டும், எளிமையில் எவ்வாறு கூடாரத்தில் இருக்கமுடியும், ஆசிரம வெளியில் கிடைக்கும் உணவை உட்கொண்டு மக்களின் உணர்வை உணர முடியும், அந்த ஒரு சிறந்த மானுட அனுபவத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுபவித்து உணர இது ஒரு சந்தர்ப்பமாக இருந்தது என்பது என் உள்ளுணர்வு.
காவல் துறையினர் ராணுவத்தினர் சிறப்பு முறையில் ஏற்பாடுகளைச் செய்து வந்தார்கள். அமைதியான முறையில் கேட்பவர்களுக்குப் பதில் அளித்தார்கள். எனது நண்பர் ஒருவர் அதிகமாக நடந்த காரணத்தால் மிகவும் சோர்வடைந்த நேரத்தில் காவலாளி தண்ணீர் பிஸ்கட் வாங்கி கொடுத்து அவரை நன்றாகக் கவனித்து உதவியும் செய்துள்ளார். இது நாம் உணர்ந்த மானுட செயலாக இருந்தது. மிகமிகக் குறைவான காவலாளியே கோபமாக மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர்.
பீஷ்மர் அம்பு படுக்கையில்
(நாகவாசுகி கோவில்)
பிராயக்ராஜ் நகரில் அமைந்துள்ள நாகவாசுகி , வேணி மாதா , அலபோ சங்கரி சக்தி பீத கோயில், பாரத்வாஜ ஆசிரம் போன்ற இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்தேன்.
இவ்வளவு மக்கள் கூட்டத்தில் ஒரு களவு இல்லை, ஒரு ஏமாற்றம் இல்லை , ஒரு கற்பழிப்பு இல்லை, பெண்களை இழிவு படுத்தும் செயல் இல்லை. இதுதான் தர்மம் தானாகவே சேர்ந்த கூட்டம். சத்தியத்தின் கூட்டம். பார்ப்பதற்கு ஏழைகள் தூய்மை இல்லை என்பதுபோல் தோற்றம் அளிக்கலாம் ஆனால் தர்மம் இருந்தது. நேர்மை இருந்தது. மேலாக மானுடம் இருந்தது.
இப்படியாக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு குறையாக நான் உணர்ந்தது, மக்களை அதிகமாக நடக்க வைத்தது. எல்லைகளில் நான்கு சக்கர மூன்று சக்கர வாகன வசதிகள் இல்லாமல் மூடி நடக்க விட்டதைத் தவிர்த்து இருக்கலாம்.மாற்று ஏற்பாடுகள் செய்து இருக்கலாம். அதையும் செய்திருந்தால் குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்று சொல்லும் அளவுக்கு ஆனந்தமாக இருந்திருக்கும்
ஆனால் மக்கள் பொறுமையாக , சிறு முனுப்பு சலிப்பு இல்லாமல் , அமைதியுடன் பெரியவர்களும் சிறுவர்களும் நடப்பதைப் பார்த்துப் பார்த்து வியந்தேன். இந்த மக்கள் பெருந்திரளில்
எந்த அடிப்படையில் இது சாத்தியம் என்று பார்த்தேன்.
பக்தி ! பக்தி! பக்தி!
நம்பிக்கை ! நம்பிக்கை! நம்பிக்கை!
அந்த மண்ணின் பெருமை என்பது பக்தி , நம்பிக்கை , எளிமை , சகிப்புத் தன்மை., பொறுமை.
பிரயாக்ராஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏற்பாடு என்பது மிகச் சிறப்பு. முன்பதிவு செய்த பயணிகள் ஒரு புறம், முன்பதிவு செய்யாத பயணிகள் ஒரு புறம் என்று பிரித்தார்கள். இரண்டுக்கும் இடைவெளி தூரம் என்பது குறைந்த பட்சம் ஒரு கி.மீ. தூரம் இருக்கும். முன் பதிவு செய்த பயணிகளும் இரண்டு மூன்று பாதுகாப்பு சோதனையைக் கடந்து தற்காலிக தங்கும் இடத்துக்கு அனுப்பினார்கள். அங்கிருந்து ரயில் வருவதற்கு அரை மணிநேரத்திற்கு முன், ரயில் இருக்கும் மேடைக்கு டிக்கட் சோதனைக்குப் பின் அனுமதித்தார்கள். அந்த ரயில் மேடையிலும் கயிறு கட்டி அந்தந்த வகுப்புக்கு முன் நிறுத்தி வைத்தார்கள். கிளம்பும் வரை ஏற்பாடு நன்றாக இருந்தது. ரயில் கிளம்பிய பின் ஏராளமான கூட்டம் என்பதனால் முன்பதிவு செய்யாத பயணிகள் எல்லா வகுப்பு பெட்டிகளிலும் புகுந்து உட்கார்ந்தார்கள். இங்கே யாரும் வட இந்தியர்கள் அப்படித்தான் என்று சொல்லி ஏளனம் செய்ய வேண்டாம். எங்கள் பெட்டியில் எங்கள் பக்கத்தில் அமர்ந்த 10 பேரும் தமிழ் பேசத் தெரிந்த தென்னிந்தியர்கள். பக்தியின் வேகம் எல்லாவற்றையும் மறக்கச் செய்து, அவர்களும் நம்மை மாதிரி சீக்கிரம் ஊர் சென்று சேர வேண்டும் என்ற உந்துதலில் எல்லா பயணிகளும் நகர்வதை உணர முடிந்தது. ஆனால் இந்த பாதுகாப்பு ஏற்பாடு என்பது வாரணாசி மற்றும் அயோத்தியா ரயில் நிலையத்தில் இல்லை.
திரிவேணி சங்கமத்தில் நீராடி மீண்டும் ரயிலில் காசி சென்று விசுவநாதரையும் , விசாலாட்சி, அன்னபூரணி அம்பாளையும் தரிசித்து, பிறகு ரயிலில் ஏறி அயோத்தியா சென்று பால ராமனைத் தரிசிக்கச் சென்றேன் பால ராமன் அயோத்தி ராமன் அனுபவம் ................ ( தொடரும்)
மகர சடகோபன் தென்திருப்பேரை
அருமையாக இருந்தது சடகோபன்! இந்த ஆன்மீகப் பயணத்தில் நேரடியாக சென்று இறைவனுடைய ஆசிர்வாதத்தை பெற முடியாவிட்டாலும் உங்களைப்போன்றோர் பதிவு செய்த இந்த பிரயாண அனுபவம் எங்களை அந்த உலகிற்கு இழுத்துச் சென்று விட்டது
பதிலளிநீக்குகுஹன்
நன்றி குகன்
நீக்குNamaste Makara sadagopan.
பதிலளிநீக்குதிருவேணி சங்கமத்தில் புனித நீராடல் மற்றும் மகாகும்ப புனித யாத்திரையில் மூலம் உங்களுக்குக் கிடைத்த அருமையான ஆன்மீக அனுபவத்தை
மற்றவற்களுடன் பகிர்ந்து
கொள்ளும் உங்களுடைய
நல் எண்ணத்தைப் பாராட்டு வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
"History of Mahakumbh, an amazing Divine experience" என்ற தலைப்பில் செந்தமிழில் எழுதினால்
வாசகர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கும் என்பது
எனது கருத்து. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இறைவன் அருள் புரிவானாக.
நன்றி. முயற்சிக்கிறேன்.
நீக்கு