பூர்ணம் - 9


தொடர் ஓட்ட நிலையில் நின்று நிகழ்கால வாழ்க்கையை உணர்ந்து செயல்படும்போது ஏற்படும் ஆனந்தம் என்பது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்பதுதான் உண்மை. மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நொடியிலும் அனுபவிக்க வேண்டிய உணர்வு. அதை அனுபவிப்பதும் இழப்பதும் என்பது நம் கையில்தான் இருக்கிறது. 

இதனைக் கூறும்போது எனது மனதில் செல்வது " சித்தார்த்தன்" என்ற புத்தகம்.  இதை எழுதியவர் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த ஹெர்மேன் ஹெசி. அவருக்கு இந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட ஞானம் என்பது பாரத மண் கொடுத்த கொடை. ஞானப் பூமியில் கர்ம பூமியில் வாழ்ந்த அனுபவம் என்பது அவருக்கு இந்தப் புத்தகத்தை எழுத ஊக்கம் அளித்துள்ளது என்பது உண்மை. 

இந்தப் புத்தகத்தில் வரும் கதாநாயகன் சித்தார்த்தன் அவனது அப்பாவிடம் , அவனது உற்ற நண்பன் கோவிந்தனுடன் வேதங்களைக் கற்று, அதன் மூலம் ஓம் என்ற பிரணவ மந்திர உச்சரிப்பின் முலம் தியானமிருந்து ஆத்ம ஞானத் தேடலைக் காண முயல்கிறான். 

ஆத்ம ஞானத் தேடல் என்பது அவனுடைய இலக்காக இருக்க , பிரணவ மந்திர தியானத்தின் மூலம் ஆத்ம ஞானம் கிடைத்தாலும் மன நிறைவு இல்லை. 

அப்பொழுது முற்றும் துறந்த சமணத் துறவியைப் பார்க்கிறான். அதன் மேல் ஈர்க்கப்பட்டு ,பெற்றோர்கள் ஆசீர்வாதம் அன்புச் சம்மதத்துடன் வீட்டை விட்டு வெளியேறி ஆத்ம ஞானத்தைத் தேடக் காட்டுக்குள் இருக்கும் சமணத் துறவியிடம் ஞானத்தைப் பெற விரும்புகிறான். பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை, அவர்களையும் மீறிச் சமணத் துறவியிடம் செல்கிறான். அவனைப் பின் தொடர்ந்து கோவிந்தனும் சமணத் துறவியிடம் வருகிறான். 

சமணக் கொள்கையில் ஆழ்ந்து இருவரும் கற்று, ஆடை இல்லாமல்,உணவு இல்லாமல் விரதமிருந்து ஆத்ம ஞானத்தைப் பெறுகிறார்கள். சித்தார்த்தன் அவனுடைய ஆத்மாவை மற்ற உயிரினங்கள் மேல் செலுத்தி அனுபவங்களைப் பெறுவது என்ற கலையையும் கற்றுக் கொள்கிறான். 

ஆனால் நிரந்தர உண்மையான ஆத்ம ஞானம் என்பது அவனுக்கு இன்னும் புலப்படாத சூழ்நிலையில் மனநிறைவு என்பது இந்தப் போதனைகளிலும் கிடைக்கப் பெறவில்லை என்பதனை உணர்கிறான்‌.

அப்பொழுதுதான் கௌதம புத்தரின் போதனைகள் மூலம் நிறையச் சீடர்கள் ஈர்க்கப்பட்டு ஆத்ம ஞானம் அடைகிறார்கள் என்பதனைக் கேள்விப்பட்டு, அங்கு இருவரும் செல்கிறார்கள். 

புத்தரின் போதனைகளைக் கேட்டுக் கோவிந்தன் பௌத்தத் துறவியாக மாறுகிறான். சித்தார்த்தன் அங்கும் மனநிறைவின்றி நதியைப் பரிசல்காரன் மூலம் கடந்து நாட்டிற்குள் வருகிறான். 

அங்கு கமலா என்ற அழகான பெண்ணின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு, அவள் மூலம் பெரிய செல்வந்தனாகி , ஆடை அலங்காரங்கள், வாசனைத் திரவியங்கள் , சூதாட்டம், களியாட்டம் என்று அனைத்தையும் ஆழமாகச் சென்று அனுபவிக்கத் தொடங்குகிறான். 

கமலாவிடம் அனைத்து காமக் கலைகளையும் கற்று அவளையும் அனுபவித்து ஆனந்தம் என்ற உச்சத்தையும் உணர்கிறான். இப்படியிருக்கையில் ஒரு நாள் தான் யார் என்பதனை மீண்டும் நினைக்கத் தோன்றும் போது இது வேறு சித்தார்த்தன் என்பதனை உணர்கிறான். 

அப்பொழுதே பிரிந்து ஆத்ம ஞானத் தேடலை மீண்டும் காட்டிற்குள் சென்று தேடவேண்டும் என்று நதிக்கரைக்கு வருகிறான். அந்த நதியின் சப்தம் அவனுக்கு ஓம் என்று பிரணவ மந்திரத்தை உச்சரிப்பது போல் இருக்கிறது என்று நினைத்து நதிக்கரையில் தியானத்தில் அமர்கிறான். 

பரிசல்காரன் வசுதேவன் மூலம் நதியைக் கடக்க முயல்கிறான். வசுதேவனிடம் ஞானத் தேடலைப் பற்றியும் , அதன் விளைவாக ஏற்பட்ட அனைத்துச் சம்பவங்களையும் விளக்குகிறான். ஒன்றும் பேசாமல் வசுதேவன் அனைத்தையும் ஆழ்ந்து கேட்கிறான். 

நதியின் ஓட்டத்தின் மூலம், இந்த நதியின் மூலம் ஞானத் தேடலை அடைய முடியும் என்ற வாசுதேவனின் போதனைகள் அவனை ஈர்க்கிறது. மனைவியை இழந்த வசுதேவனுடன் சித்தார்த்தன் நதிக்கரைக் குடிலில் தங்குகிறார்கள். 

அவருடன் சேர்ந்து பரிசல் செய்வது, பரிசல் ஓட்டுவது என்ற கலைகளைக் கற்றுத் தேர்ந்து நதியிடம் பேசுவது, நதி எழுப்பும் ஒலிகளை உற்றுக் கேட்பது, பறவைகள், மீன்கள், மரங்களின் ஒலிகள் அசைவுகளை ரசித்து அதனுடன் ஒன்றாக இணைந்து அனுபவித்து உணர்கிறான். 
காலம் என்பது பொய் என்பதனையும் நிகழ் காலத்தில் அந்த நொடியில் ஏற்படும் ஏற்படுவதுதான் உண்மை என்பதனையும் உணர்ந்து அனுபவிக்கத் தொடங்குகிறான்.

நதி என்பது தொடர் ஓட்டத்தின் மூலம் அப்படியே எல்லா இடத்திலும் இருப்பதை உணர்கிறான். ஆனால் நீர் என்பது மாறிக்கொண்டே தொடர் ஓட்டத்தில் இருக்கிறது. பல இன்னல்களைச் சந்தித்துப் பெரும் ஒலியுடன், சுழல்களுடன், பலவற்றையும் சேர்த்துக் கொண்டும், பலருக்கு நன்மையைக் கொடுத்தும், சில இடங்களில் தீங்கு ஏற்படுத்தியும் வருவதை நதி அவனுக்கு மௌனமாகச் சொல்வதைத் கேட்கிறான். 

புத்தர் பெருமான் அவரது இறுதிக் கட்டத்தில் இருப்பதைத் தெரிந்து மக்கள் திரளாக அவரைப் பார்க்க நதியைக் கடந்து செல்வதற்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். வசுதேவனும் சித்தார்த்தும் நதியைக் கடக்க உதவுகிறார்கள். 

அந்தக் கூட்டத்தில் கமலா ஒரு சிறு பையனுடன் இருப்பதைப் பார்க்கிறான். அந்தப் பையன் இவனது சாயல் இருப்பதை உணர்கிறான். வயதானத் தோற்றத்தில் இருக்கும் கமலாவை இந்தப் பையன் அடம்பிடித்துச் செய்யும் தொந்தரவுகளைப் பார்க்கிறான். 

இதற்கிடையில் பாம்பு தீண்டி கமலா நிலத்தில் வீழ்கிறாள். வசுதேவன் கமலாவைத் தூக்கிக் கொண்டு குடிலுக்கு அழைத்து வருகிறார்கள்.  அந்தப் பையன் உங்களது பையன் என்ற உண்மையையும் உரைத்து கமலாவின் மூச்சு நிற்கிறது. 

பையனை வளர்க்கும் பொறுப்பு என்பது வருகிறது. அவனோ அடம்பிடித்துக் கோபக்காரனாக இருக்கிறான். நதிக்கரை என்பதோ காட்டில் இருக்கப் பையனுக்கு விருப்பமில்லை. ஆனால் சித்தார்த்தன் அதிக அன்பு செலுத்தி அவனைத் திருத்த நினைக்கிறான். 

ஒரு நாள் அந்தப் பையன் நதியைக் கடந்து நாட்டிற்குள் சென்று விடுகிறான். அன்பின் காரணமாகச் சித்தார்த்தன் பின் தொடர்கிறான். கமலாவின் வீடு புத்த பிட்சுகள் வாழும் ஆஸ்ரமாக மாறி இருப்பதைப் பார்க்கிறான். பையன் திரும்பி வர மறுக்கிறான். 

சித்தார்த்தன் நதிக் கரைக்கு வருகிறான். வசுதேவனிடம் சொல்கிறான். நதியிடம் கேள் என்று பதில் அளிக்கிறார். நதியின் ஓட்டத்தில் சித்தார்த்தன், அவனது அப்பா, பையன், கமலா என்றும் மாறிமாறி உருவங்கள் வருவதை உணர்கிறான். 

சித்தார்த்தன் என்ற மனிதனின் பல உருவங்கள் வந்து செல்வதையும் உணர்கிறான். வசுதேவன் வயது முதிர்ச்சியின் காரணமாகப் பரிசல் , குடில் அனைத்தையும் சித்தார்த்தனிடம் கொடுத்துவிட்டுக் காட்டுக்குள் பிரம்மம் என்ற ஒருமை நிலையுடன் கலக்கச் சென்றுவிடுகிறார். 

நதி என்பது மழையில் மலை உச்சியில் தோன்றி பல காடுகளில் பாய்ந்து , பாறைகளில் மோதி , பல உப நதிகளை இணைத்து, பல சுழல்களுடன் பாய்ந்து, இறுதியில் கடல் என்ற ஒருமை நிலையில் கலந்து, கடலிருந்து ஆவியாகி மேகமாகி, மழையாகி மீண்டும் மீண்டும் பல இன்னல்களுடன் பாய்ந்து வருவதை உணர்கிறான்.

ஞானம் என்பது  போதனைகளால் சொற்களால் உருவாகுவதில்லை. ஞானம் என்பது கண்டு அனுபவத்தின் மூலம் அடைவது. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உண்மை என்பது இரண்டு சரிச்சமமாக இருப்பதுதான். ஒரு போதனை உண்மை என்றால், மறு போதனைகளும் உண்மையே. இளைமையில் முதுமை என்ற உண்மை இருக்கிறது. பிறப்பு என்றால் இறப்பு என்ற உண்மை ஒளிந்து நிற்கிறது. அன்பு ஒன்றே நிரந்தரம். 

கல் மண் ,அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பு செலுத்தி, தொடர் ஓட்ட நிலையில் நதியைப் போல் நிகழ்கால நிகழ்வுகளில் மனத்தைச் செலுத்தி கடமைகளைச் செய்வதன் மூலம் கிடக்கும் மனநிறைவு என்பது பூர்ணம் என்பதனையும் சித்தார்த்தன் மூலம் அறிகிறோம். 

இங்கு வாழ்நாட்கள் முக்கியமல்ல, வாழ்ந்த முறை,  செயல்கள், செயல்கள் உருவாக்கியச சமுதாயத் தாக்கமே முக்கியமாகப் பூரணமாகக் கருதப்படுகிறது. இஃது இக்கிகை புத்தகம் கூறும் கருத்துக்கு எதிர்நிலையில் இருக்கும். இதைப் பற்றி ................... ( தொடரும்) 

 

 

கருத்துகள்

  1. நன்றி ஜி

    கல் மண் ,அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பு செலுத்தி, தொடர் ஓட்ட நிலையில் நதியைப் போல் நிகழ்கால நிகழ்வுகளில் மனத்தைச் செலுத்தி கடமைகளைச் செய்வதன் மூலம் கிடக்கும் மனநிறைவு என்பது பூர்ணம் என்பதனையும் உணர்கிறோம் - பிடித்த வரிகள்

    பதிலளிநீக்கு
  2. உலகத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்திலும் பூரணத்தை உணர் பவன் நிச்சயமாக ஞானி தான்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எல்லைச்சாமி

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

பாமாலை (மூலம்)