பூர்ணம் - 7


பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவனுக்கு ஒப்பீடு முறையில் முழுமை அடைவதற்கான இலக்கை  எல்லையறிந்து கொடுக்கவேண்டும் என்பதும் ஒரு பாடமாக அமைகிறது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லை ஆனால் ஐந்தும் தேவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவை உள்ளது, ஒரு பயன்பாடு உள்ளது. அதன் மூலம் நாம் பயன்படுகிறோம். அனைத்து குழந்தைகளிடம் ஒரு தனித்திறமை இருக்கும். அதில் கவனம் செலுத்தி முன்னேற்ற வேண்டும். அனைவரும் சமுதாயத்திற்கு தேவை.‌

மேலும் குழந்தைகளை சுதந்திரமாக படிக்க , மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்க வேண்டும். பிரபஞ்சத்தில் குழந்தைகள் சுதந்திரமாகக் காற்றைப் போல் திரிந்து வரவேண்டும். அதிலும் சில ஒழுக்கங்களைக் கையாளும் போது, இந்த பிரபஞ்சம் குழந்தைகளுக்கு நிறைய அனுபவங்களைப் பாடமாகக் கற்றுக் கொடுக்கும்.  

தன்னம்பிக்கை ஒருவனுக்கு அனுபவத்தின் மூலம் அதிகமாக உருவாகும். சுவாமி விவேகானந்தர் " படிப்பு, பயிற்சி என்பது மனிதனை மனிதனாக உருவாக்க உதவ வேண்டும் என்று கூறுவார். The ideal of all education, all training should be in man making , said Swamy Vivekananda. பிரபஞ்சத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆதலால் குழந்தைகளை பிரபஞ்சத்தில் இயங்க அனுமதியுங்கள். 

பெற்றோர்கள் அவர்களுடைய சமுதாய அந்தஸ்துக்காக , வீணாக குழந்தைகளிடம் அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.‌ இன்றைய சூழலில் இந்த அழுத்தம் என்பது நிறைய சமுதாயத்தில் நிலவுகிறது. இது அன்றைய சூழலில் கிடையாது. பெற்றோர்களின் சமுதாய அந்தஸ்து என்பது குழந்தைகளின் விருப்பம் அல்ல. இங்குதான் குழந்தைகள் சொல்லமுடியாத மிகப்பெரிய அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு மன உடல் முறிவுகள் ஏற்படுகின்றன. 

இதில் பெற்றோர்களும் குழந்தைகளும் மனம் விட்டு பேசி , அவர்கள் விரும்பும் பாடங்களையும் கலைகளையும் விளையாட்டுகளையும் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுக்க வேண்டும். அவர்களே முடிவு செய்யும்போது அதில் திறமையாக செயல்பட அவர்களே முயற்சிப்பார்கள். பெற்றோர்களும் மற்றவர்களும் குழந்தைகள் அந்தந்தத் துறையில் முன்னேறுவதற்கும், முடிந்த அளவில் அவர்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்கவும் உதவலாம். பெற்றோர்களின் அந்தஸ்து, கௌரவம்  மூலம் கொடுக்கப்படும் அழுத்தம் என்பது " மற்றவர்கள் சார்ந்த பரிபூரணப் பொறி" (Others Oriented Perfection Trap). மற்றவர்கள் நினைப்பதை ஒருவன் மீதி ஏற்றி அவன் எல்லை தெரியாமல் அழுத்தம் கொடுப்பது என்பது மேற்கூறிய பரிபூரணப் பொறி. 

அந்தஸ்து, கௌரவம் கொடுக்கும் அழுத்தம் என்பது தவறா? சரியா? தேவையா? தேவையில்லையா?  அந்தஸ்து , கௌரவம் என்பது சமுதாயம் கொடுக்கும் ஒரு பதவி , அல்லது சமுதாயம் பார்க்கும் பார்வை. சமுதாயத்துடன் கூடி வாழ வேண்டும் என்பது இயற்கையின் நீதி. சமுதாயம் பார்க்கும் பார்வை மற்றும் கொடுக்கும் பதவி என்பதும் முக்கியம். ஆனால் அதுவே வாழ்க்கை, அதுவே பிராதானம் என்று செயல்படும்போது அதுவே அவனை அழுத்தி அழித்துவிடும். அதை ஒரு எல்லையில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கேயும் "எல்லை அறிதல்" என்பது மிகவும் முக்கியம். 

ஒவ்வொரு மனிதனும் வளர வேண்டும் , சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆசை என்பது தேவையா? என்று கேள்விகள் எழலாம். ஆசையை தவிர்த்து விட்டோம் என்றால் வளர்ச்சி, அந்தஸ்து என்பதும் தேவையில்லை என்று ஆகிவிடும். ஆனால் 
மனித வளர்ச்சி, மனித நாகரிகத்தின் பரிணாமம் என்பது ஆசையின் தூண்டுதலினால் ஏற்படும் செயலில் ஈடுபடுவதால் பரிணாம வளர்ச்சி உலகில் இன்றுவரை நடந்துக் கொண்டிருக்கின்றன. ஆதலால் ஆசையை முற்றும் தவிர்க்க முடியாது. ஆசை இல்லையென்றால் காதல் ( ப்ரீத்தி ) இருக்காது. ப்ரீத்தி இல்லையென்றால் செயலில் ஈடுபட முடியாது.  (விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தில் ஒன்று கூறுவார்கள் அனுபவம் ப்ரீத்தி  கைங்கர்யம் ஆனந்தம் அனுபவம் என்ற சுழல், Habit Loop)  மனிதன் செயல்பட ஆசை என்பது அளவோடு தேவை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவு என்பது எல்லை அறிதல். 

கௌரவம் அந்தஸ்து என்பது புகழின் இணைபிரியாத உடன்பிறப்புகள். புகழ் ஒன்றே வாழ்க்கை, கௌரவம் அந்தஸ்தே வாழ்க்கை எனும்போது புகழ் எல்லையை மறைத்து அழுத்தம் எல்லையைத் தாண்டி செல்லும் போது விபரீதங்கள் நடைபெறுகிறது. 

கௌரவம் அந்தஸ்த்தின் காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளை மிக உயர்ந்த உலகதர வரிசையில் முதல் பத்து கல்லூரிகளை தேர்ந்தெடுத்து, அதிலும் மிகச்சிறந்த துறையில் சேர்ப்பார்கள்.‌ அதில் பிள்ளையின் விருப்பு என்பது இரண்டாம் தரம். கேட்டால் இதுவே நமது கௌரவத்துக்கு ஒத்துப் போகும் என்று சொல்லி , பிள்ளையை வலுக்கட்டாயமாகக் கொண்டு சேர்க்க வேண்டியது. கல்லூரியில் சேர்ந்தப்பிறகு பிள்ளைக்குப் படிப்பதில் தாழ்வு  மனப்பான்மை தோன்றலாம். இங்கு என்ன படிக்கிறேன்? இங்கு எதற்காக படிக்கிறேன்? இந்தத் துறையில் படிப்பதால் என்ன லாபம்? என்று பல சிந்தனைகள் பிள்ளைகள் மனதில் அவ்வப்போது எழலாம். எல்லாமே தந்தையின் கௌரவம் அந்தஸ்து காரணம் என்று நினைக்கும்போது, அவனுடைய விருப்பம் மறுக்கப்படுகிறது என்ற உணர்வு மேலோங்கி நிற்கும் போது, ஆசையில்லாமல் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு வெறுப்பின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு தற்கொலை முயற்ச்சிக்குள்  பெரும்பாலார்  செல்கிறார்கள்.‌ அதற்குப் பிறகு பெற்றோர்கள் கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் உணர்கிறார்கள்.‌ சுவரில் சித்திரம் வரைய வேண்டும் நினைத்தார்கள் ஆனால் சுவரையே இடித்துவிட்டார்கள்.  இதுதான் "மற்றவர்கள் சார்ந்த பரிபூரணப் பொறி" யின் விளைவு. 

இன்னொரு நிலை என்பது, உதாரணத்திற்கு ஓட்ட பந்தய விளையாட்டில் ஒரு மாணவன் சிறந்து விளையாடுகிறான். அவனாகவே முன் வந்து ஒரு குறிக்கோளை முன் வைத்து, அந்த இலக்கை அடைவதற்கு முயற்சி செய்கிறான். 

ஒரு இலக்கை அடைந்தவுடன், மீண்டும் ஒரு குறிக்கோள் இலக்கை மாற்றுகிறான். யாருடைய அழுத்தமும் கிடையாது. அவனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில். ஒவ்வொரு இலக்கிலும் வெற்றியைக் காணும்போது அவன் அதில் அதாவது இலக்கில் முழுமை அடைகிறான். ஆனால் மன நிறைவு இல்லை, மேலும் முழுமை பெறுவதற்காக இலக்கை மாற்றுகிறான். 

ஒரு இடத்தில் அவன் அறிய வேண்டிய உண்மை என்பது, அவனது எல்லை. அதைத் தாண்டும் போது மனநோய் உடல் நோய் ஏற்படும். அதுதான் முறிவின் தொடக்கம். இதுதான் "சுய சார்ந்த பரிபூரணப் பொறி" (Self Oriented Perfection Trap). 

இன்னொரு நிலை என்பது மாணவன் ஒரு இலக்கை அடைந்தவுடன், சமுதாயம் இவனை நல்லவன் வல்லவன் என்று சொல்லி புகழுக்கு அடிமையாக்க வேண்டியது. அந்த சமுதாய அந்தஸ்து புகழுக்காக, அவன் முழுமைப் பெற்ற இலக்கை மாற்றி அமைத்து முயற்ச்சிக்கிறான். புகழுக்காக இலக்கை மாற்றி மாற்றி அமைத்துச் செல்லும்போது அவனது எல்லையை புகழ் மறைத்து விடுகிறது. சமுதாய அந்தஸ்துக்கான புகழ் என்பது ஒரு இடத்தில் அவனுக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்து மன உடல் முறிவை ஏற்படுத்தும். இந்த நிலை என்பது " சமூகம் பரிந்துரைக்கும் பரிபூரணப் பொறி" ( Socially Prescribed Perfection Trap) 

இப்பொழுது மனதில் ஒன்று தோன்றலாம் அழுத்தம் என்பது தேவையா?  அழுத்தம் இல்லாத, இலக்கு இல்லாத வாழ்க்கை என்பதும் மன உடல் முறிவை ஏற்படுத்தும் என்பது ஆய்வு. IKIGAI புத்தகத்தில் குறைந்த அல்லது மத்திமமான அழுத்தம் தேவை மனமகிழ்ச்சி ஏற்பட என்பதனைக் குறிப்பிடுகிறார்கள். அதுதான் மனிதனை இயக்கச் செய்யும் என்பதும் உண்மை. மனிதன் இயங்குவதற்கு அழுத்தம் , இழுப்பு மற்றும் தள்ளுதல் என்பது எல்லை அறிந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.‌ Stress is required to maintain the flow of work. 

அதே போல் ஒப்பீடு என்பதும் ஆரோக்கியமாக நல்லவற்றையும், வெற்றி செய்திகளையும், அதற்கான வழிமுறைகளையும் தெரிந்துக் கொள்வதற்கும், தேவைப்படும் நேரத்தில் ஒப்பீடுகளை எல்லையறிந்து செயல்படுத்துவதற்கும்  பயன்படுத்தலாம். 

எல்லை அறிந்து மற்றும் அனைத்தும் பொறிகளையும் கவனமாகக் கூர்ந்து கவனித்து செயல்படுவது  என்பது மிகவும் முக்கியமானப் பாடமாகக் கருதப்படுகிறது. 

மகர சடகோபன் தென்திருப்பேரை 

   ...................... ( தொடரும்) 








கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எல்லைச்சாமி

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

பாமாலை (மூலம்)