பிரயாக்ராஜ் யாத்திரை -3 (அயோத்தியா, நைமிசாரணியம்)
வாரணாசி மீண்டும், இந்த தடவை ரயில் நிலையம் பக்கத்தில் தங்கும் அறை எடுத்தேன். அனைத்து சுமைகளையும் தங்கும் அறையில் வைத்துவிட்டு, நீராடி நடக்க ஆரம்பித்தேன். கோயில் வரை நடந்து சென்று அன்னபூரணி , விசாலாட்சி அம்மனைத் தரிசித்துவிட்டுப் புறப்படலாம் என்று நினைக்கும்போது, ஏன் ஒரு முறை ஈஸ்வரனையும் தரிசிக்கலாம் என்று தோன்றியது. இரண்டாவது முறை வெகு விரைவில் தரிசனம் கிடைத்தது. அது அவனது அருளே என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. அன்னபூரணி அம்மனை தரிசித்து, அன்னபூரணி கோயிலில் இரவு சிற்றுண்டி முடிந்துவிட்டதால், மீண்டும் நடை தங்கும் இடத்தை நோக்கி விரைந்தது.
மறுநாள் காலை எழுந்து அயோத்தியா செல்லும் ரயிலைப் பிடிக்கச் சென்றேன். ஆனால் வாரணாசி ரயில் நிலையத்தில் ஏற்பாடு என்பது அவ்வளவு சரியாக இல்லை. மக்கள் நெருக்கடியில் ஒரு வழியாக ரயிலில் ஏறி அயோத்தியா மூன்று மணி நேரத் தாமதத்துடன் வந்தேன். ரயில் நிலையத்திலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் ஏறித் தங்கும் இடத்திற்கு இரவு 8.30க்கு வந்தேன். இப்பொழுது சென்றால் இரண்டு மணிநேரத்தில் தரிசனம் செய்துவிடலாம் என்று கூற, உடனடியாக நடக்க ஆரம்பித்தேன். இரண்டு கி.மீ. நடந்த பிறகு கோயில் வளாகத்தை அடைந்தேன். இங்கே பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் வரிசையாகச் செல்லும் அமைப்பு என்பது இருந்தது.
வரிசையாகச் செல்லும் அமைப்பு என்பது ஆங்காங்கே தளர்க்கப்பட்டு, மீண்டும் வரிசைத் தொடர்வதால் , தளரும் இடத்தில் நெரிசல் அதிகமாக இருக்கிறது. மக்கள் ஒரு வரிசையிலிருந்து மற்றொரு வரிசைக்கு, வரிசை தளரும் இடத்தில் மாறுகிறார்கள். இதைத் தவிர்த்து இருக்கலாம்.
வரிசை அமைப்பு இருக்கிறது ஆனால் சரியாக இல்லை. திருமலை சென்று பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கட்டணம் வசூலிப்பதைப் பயிற்சி எடுத்துக் கொள்ளக்கூடாது. வாரணாசி மற்றும் அயோத்தியில் கட்டண தரிசனம் என்பது இல்லை. எல்லோருக்கும் தர்ம தரிசனம் ஒன்றே. அது மிகவும் பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
இவ்வாறு வரிசையிலும், பெரிய இடிபாடுகளிலும் கோயிலுக்குள் சென்று , கர்ப்ப கிரகத்தை நோக்கி கூட்டத்தில், கூட்டமே நம்மை நகர்த்தி பால ராமன் முன் நிறுத்தியது. கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் என்றபடி பால ராமனின் அழகு என்பது வார்த்தையால் சொல்லமுடியாது. அந்த அழகை ஒரு நிமிட நேரத்தில் கண்ணால் கண்டு மனதார உள்வாங்கி மனதுக்குள் அசைபோட்டு நிலை நிறுத்துவது என்பது கடினம்.
திருவரங்க நாதனைச் சேவிக்கும் நேரத்தில் அவன் அழகைக் காட்டுவான், அதன் பிறகு அவன் படுத்திருக்கும் அழகு என்பது நம்மை எவ்வாறு வாட்டுமோ, அதேமாதிரி பால ராமனின் அழகு வாட்டிக் கொண்டிருக்கிறது. அழகை ரசித்தவண்ணம் கோயில் வளாகத்தை விட்டு வெளியில் வந்தேன். மீண்டும் மீண்டும் சேவிக்க வேண்டும் என்ற ஆவல் ரங்கனிடம் உருவாகுமே , அதே உணர்வு பால ராமனிடம் உருவாகியது. ராமனுக்கும் அரங்கனுக்கும் உண்டான தொடர்பு என்பது அநாதி காலம்.
மேலும் காலணிகளை எங்கே விட்டுச் செல்ல வேண்டும் என்ற தகவல் சரியாக இல்லை. மக்கள் கோயில் வளாகம் வரை அணிந்து வந்து, அங்கே விட்டுவிட்டு உள்ளே செல்வது என்பது பெரும்பாலார் கடைப்பிடித்ததைப் பார்க்க முடிந்தது. அந்த இடத்தில் இலட்சக்கணக்கில் மலை போல் காலணிகள் கிடந்தன. ஏனென்றால் திரும்பி வந்து எடுக்க முடியாத சூழ்நிலை. கோயிலுக்குச் செல்லும் வழியில் காலணியை எந்த இடத்தில் கழற்றிவிட்டுச் சென்றாலும் , மீண்டும் வந்து எடுப்பது என்பது மிகக் கடினம். கோயிலுக்குச் செல்லும் வழி , திரும்பி வரும் வழி என்பது தனித்தனியாகத் தடுப்புகளுடன், காவல்துறை கண்காணிப்பு தீவிரமாக இருப்பதனால் மாறிச் செல்ல முடியாது. நான் மற்றும் நிறைய நண்பர்கள் காலணியை அயோத்தியில் தொலைத்தோம்.
பாதுகைக்கும் ராமனுக்கும் ஒரு தொடர்பு என்பது அவன் காலம் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது என்பது அடியேனது எண்ணமாக அப்போது இருந்தது.
வரிசை முறையையும் காலாணிகளைக் கழற்றி வைப்பதற்கென்றும் , தரிசனத்திற்குப் பிறகு காலணிகளை எளிதில் எடுத்துச் செல்லும் முறையிலும் சரியான ஒரு ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதை நிவர்த்தி செய்து விட்டால், குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் அனுபவம்தான்.
இதற்கிடையில் இரவு 12 மணி , ராமர் ஆலய வளாகத்தின் வெளியில் நிறைய உணவகங்கள் உள்ளன. எல்லாமே சைவ உணவகம். சுக் சாகர், உடுப்பி ஹோம் போன்ற பெரிய உணவகங்கள் இருக்கின்றன. வாரணாசியில் சாப்பிட அத்தகைய நல்ல உணவகங்கள் இல்லை. பாரதியார் இல்லம் அருகாமையில் இரண்டு தமிழ் உணவகங்கள் இருந்தன. இரவு உணவை ராமர் கோயில் வளாகம் அருகில் முடித்துக் கொண்டு, காலணி இல்லாமல் இரண்டு கி.மீ. நடந்து தங்கும் இடத்திற்கு வந்தேன்.
காலையில் எழுந்து சரயு நதியில் நீராட , மூன்று சக்கர வாகனத்தைப் பிடித்தேன். சரயு நதிக்கரையில் நீராட ஏற்பாடு சரியாக இல்லை. பிரயாக்ராஜில் மண் மூட்டைகள் போட்டு , கரையில் சகதிகள் சேராத வகையிலும், வழுக்கி விடாத தன்மையில் கங்கை, சங்கம நதிக்கரைகள் பராமரிக்கப்பட்டிருந்ததது. அந்த மாதிரியான அமைப்பு சரயு நதிக்கரையில் இல்லை. வழுக்கி விழும் அளவுக்குச் சகதிகள், தண்ணீருடன் சேர்ந்து இருப்பதனால் வழுக்குவதற்குச் சாதகம் அதிகம். பயத்துடன் கவனமாகச் சென்று நீராடினேன்.
ஆனால் அயோத்தியா நகருக்குள், ராமர் ஆலயம் செல்லும் வழியில் , இரண்டு பக்கமும் கரைகள் அமைத்துக் குளிப்பதற்கென்று சரயு நதியை உள்ளிழுத்து நன்றாக ஏற்பாடு செய்துள்ளனர். அது தெரியாமல் சகதிகளைக் கடந்து சரயு நதிக்கரைக்குச் சென்றது என்பது நம் அறியாமை. இந்த அமைப்பைப் பார்க்கும்போது அகமதாபாத் நர்மதை நதியின் அமைப்பு போல் இருந்ததை உணர முடிந்தது. நவீன நதிக்கரையில் நல்ல நல்ல உணவகங்கள் இருக்கின்றன. பிக்கனிர்வாலா உணவகத்தில் சென்று காலை உணவை முடித்து , நவீன நதிக்கரை வழியாக அதன் அழகை ரசித்த வண்ணம் நடந்து சென்றேன். அகமதாபாத்தில் நர்மதை நதிக்கரையில் நடந்த அனுபவத்தை இங்கேயும் கண்டேன். நடைமேடைகள் நன்றாக விசாலமாக இருந்தது.
அந்த நவீன நதிக்கரை வழியாக ராமானுஜ சம்பிரதாய முறையில் அமைக்கப்பட்ட அம்மாஜி ராமர் ஆலயத்தை விசாரித்துச் சென்றேன். அத்திருக்கோயிலுக்கு சத்சங்கம் மூலம் உற்சவ உதவிகள் செய்து வருகிறோம். அந்த கோயில் இராமர், சீதை , லட்சுமணன், பரதன் , சத்ருகன் என்று திருவல்லிக்கேணியில் இருப்பது போல் அனைவரும் குடும்பமாகச் சன்னிதியில் இருப்பதைத் தரிசித்தேன். தமிழக பெருமாள் கோவிலில் இருப்பதுபோல் ஒரு உணர்வு தென்பட்டது.
அயோத்தியில் குரங்குகள் அமைதியாக இருக்கின்றன. தொந்தரவுகள் எதுவும் செய்வது இல்லை. எதையும் பிடுங்குவது இல்லை. மாறாக கண்ணன் க்ஷேத்ரம் பிருந்தாவனத்தில் குரங்குகள் அமைதியாக இருப்பது இல்லை. தொந்தரவுகள் அதிகம் செய்யும். ராமன் க்ஷேத்திரத்தில் ராமனைப் போன்று, கிருஷ்ண க்ஷேத்ரத்தில் கிருஷ்ணனைப் போன்று என்று அனுபவம் கொண்டேன்.
அங்கிருந்த கோயில் மேலாளரிடம் நைமிசாரணியம் செல்ல வாகன ஏற்பாடு கிடைக்குமா என்று கேட்க , உடனே ஏற்பாடு செய்தார்.
அங்கிருந்து வேகமாக நடந்து ராமானந்த ஸ்வாமி ஏற்படுத்தி வழிபட்ட அனுமன் ஹேரி கோயிலுக்குச் சென்று அனுமனையும் தரிசித்து, நடந்து தங்கும் இடத்திற்கு வந்து , உடனடியாக காலி செய்து பயணம் என்பது லக்னோ , நைமிசாரணியம் நோக்கிப் பயணித்தது.
நைமிசாரணியம் என்பது நமது திட்டத்தில் இல்லை. சனிக்கிழமை காலையில் அயோத்தியில் அனைத்து தரிசனம் முடிந்த காரணத்தினால், மேலும் ஞாயிறு காலை 11 மணிக்கு லக்னோவிலிருந்து விமானம் என்பதனால் திடீரென மனதில் தோன்றியது. மேலும் லக்னோ நைமிசாரணியம் தூரம் 90 கிமீ.
நைமிசாரணியம் 108 திருப்பதியில் ஒன்று, திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1-6 பத்தில்,
"வாணிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள்
மாதரார் வனமுலைப் பயனே பேணினேன், அதனைப் பிழையெனக் கருதிப்பேதையேன் பிறவிநோயறுப்பான்,
ஏணிலேனிருந்தேன் எண்ணினே னெண்ணி
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், வந்துன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்து ளெந்தாய்"
என்று பத்துப்பாட்டு பாடியுள்ளார். தன் பிழைகளைக் கூறி, தாயாரை முன்னிட்டு சரணாகதி அனுஷ்டிக்கும் பாசுரங்கள். பெருமாள் வன ரூபமாக ( காடு ரூபமாக) எழுந்துள்ளார்.
அங்கு வானமாமலை மடத்துக்கான ஒரு கோயில் உள்ளது. ஹரிலட்சுமி சமேத தேவராஜப் பெருமாள் (ஹரி). அங்கு வேத பாடசாலை நடந்து வருகிறது. அடியேனது ஆசாரியன் கலியன் ஸ்வாமி சித்திர ரூபத்தில் எழுந்தருளியிருப்பதைச் சேவித்தேன். ஹரிலட்சுமி தாயாருக்குத் தனிச் சன்னிதி. திருமங்கையாழ்வார் குமுதவல்லி தாயாருடன் தனிச்சன்னிதியில் இருக்கிறார். நம்மாழ்வார் ராமானுஜர் , மணவாள மாமுனிகள் கோயிலில் விக்கிரக ரூபமாக இருக்கிறார்கள்.
ஆந்திரா மேற்பார்வையில் திருப்பதி பாலாஜி கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்குச் சென்று பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடவனைத் தரிசித்தேன்.
நைமிசாரணியத்தில் நான்கு வேதங்களும் , ஆறங்கங்களும் , 18 புராணங்களும் தோன்றிய இடம் என்பதனால் , அந்த மண்ணுக்குப் பெருமை அதிகம் என்று சொல்லப்படுகிறது.
சக்கர தீர்த்தம் வட்ட வடிவில் உள்ளது. இங்கு சுகபிரம்ம மகரிஷி தங்கியிருந்த இடம் என்று சொல்லப்படுகிறது. சக்கர தீர்த்தத்தை எடுத்து உடம்பில் தெளித்துக் கொண்டு, புண்ணிய மண்ணைத் தொட்ட உணர்வுடன் வியாசர் கட்டி என்ற இடத்தை சேவிக்கப் புறப்பட்டேன்.
வியாசர் கட்டி என்ற இடத்தில் வியாசர், அவரது மகன் சுகபிரம்மம் வாழ்ந்த இடம் என்ற நம்பிக்கை, வியாசர் ஏற்படுத்திய யாக குண்டத்தில் இன்று வரை நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இங்குதான் பாரதம் பாகவதம் புராணங்களைப் படைத்தார் என்று கூறப்படுகிறது. அந்த புனித மண்ணையும் சேவித்து அனுமன் கட்டி மலைக்குச் சென்று அனுமனைத் தரிசித்தேன். மலையில் அனுமன் உருவம் பெரிதாக உருவாக்கப்பட்டு வழிபட்டு வருகிறார்கள். அங்கே அனுமன் தோளில் இராமன் இலட்சுமனனைத் தூக்கிக் கொண்டு செல்வதுபோல் இருக்கிறது என்று சொன்னார்கள்.ஆனால் அடியேன் கண்ணுக்கும் புத்திக்கும் ராம லட்சுமணன் தோளில் இருப்பது புலப்படவில்லை.
அனுமன் கட்டி மலையிலிருந்து இரவு நேரத்தில் இறங்கி, பயணம் லக்னோ நோக்கி விரைந்தது.
இப்படியாகத் திருமங்கையாழ்வார் நைமிசாரணிய பெருமாளைக் காடு ரூபமாகப் பாடி சேவித்த , இயற்கை வழிபாட்டில் அமைந்துள்ள 108 திருப்பதிகளில் ஒன்றான நைமிசாரணியத்தைச் சேவித்து, சனாதனத்தின் ஆதாரமான நூல்கள் படைக்கப்பட்ட இடம் என்ற புண்ணிய பூமியைத் தரிசித்த உணர்வுடன் நமது பயணம் இனிதே அவனது இன்னருளால் நிறைவேறி முடிந்தது.
இந்தப் பகுதிகளுக்கு எனது முதல் பயணம் என்பதனால், சில விஷயங்களில் முன்னேற்றம் இல்லை, இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றியது. மேலும் வாரணாசி நமது பாரதப் பிரதமர் தொகுதி என்பதனால் அங்கே நிறைய வளர்ச்சியை எதிர்பார்த்தேன். அது இல்லை என்றதும் ஏமாற்றம் தோன்றியது. வாரணாசி ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து விஷயங்களில் இன்னும் அதிக கவனம் தேவை என்பது அடியேன் உணர்ந்தது. பாரதப் பிரதமர் தொகுதி என்பதனால் உலகத் தரத்தில் இருக்க வேண்டும், வளர்ச்சி பேசும் பொருளாக இருக்க வேண்டும் என்பது ஆசை. எதிர்பார்ப்பு நிறைய இருந்த காரணத்தினால் ஏமாற்றம் எஞ்சியது.
ஆனால் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் உள்ளூர் மக்களிடம் உரையாடியதில் தெரியவந்த விஷயங்கள். பத்து வருடத்தில் நிறைய முன்னேற்றங்கள். குறிப்பாகக் குண்டாக்களை எல்லா நகரங்களிலும் ஒழித்துவிட்டார்கள் என்றும், அதனால் உருவான உள்ளூர் இடைத்தரகர் தொந்தரவுகள், பயங்கள் ஒழிந்து சாதாரண மனிதர்கள் சுதந்திரத்துடன் வாழ்வதாகச் சொன்னார்கள். இது மூன்று ஊர்களிலும் பொதுவாகக் கூறிய கருத்து. சிறுசிறு கடைக்காரர்கள் குண்டா ஒழிப்பினால் அடைந்த மகிழ்ச்சி என்பது அவர்களது முகத்தில் தெரிகிறது. இல்லையென்றால் நாள் இறுதியில் கொள்ளையர்களுக்கு இவர்கள் சம்பாதித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம்.
குண்டர்களை ஒழிப்பதில் சாதி மதம் வேறுபாடு இல்லாமல் அழித்துள்ளார் என்பது உள்ளூர் மக்களின் கருத்து. தமிழ்நாட்டிற்காக ஒன்று கூடுதலாகப் சொல்கிறேன், பிராமண குண்டர்களையும் விட்டுவிடவில்லை என்பது அவர்களின் கருத்து.
சாலைகள் விஸ்தரிக்கப் பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் தண்ணீர், மின்சாரம் போன்றவை வழங்கப் பட்டுள்ளன என்று மூன்று ஊர்களிலும் மக்கள் கூறினார்கள்.
வாரணாசி கங்கைக் கரையில் படிகள், கரைகளில் நடக்கும் அளவுக்கு மேடைகள், கங்கை நீரைச் சுத்தப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் இந்த பத்து வருடத்தில் நடந்ததாகவும் , இதற்கு முன் அசிங்கமாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால் இன்னும் அருமையான கட்டமைப்பு தேவை என்பது அடியேனது ஆசை. மக்கள் இந்த மாநில ஆட்சியை நம்புகிறார்கள். 70 வருடம் ஆட்சியிலிருந்தவர்கள் செய்யாத சாதனைகளை, பத்து வருடத்தில் ஒரு சந்நியாசி செய்துதான் சாதனை என்பது மக்களின் நம்பிக்கை.
மோடி ஜி யோகி ஜி தொடர்ந்தால் இன்னும் அதிகமான கட்டமைப்பு வசதி உருவாகும் என்பதுதான் மக்களின் நம்பிக்கையாக இருந்தது. அவர்கள் நம்பிக்கையே நமது நம்பிக்கை என்ற அடிப்படையில், மக்கள் எதிர்பார்ப்பை மேலும் மேலும் பூரணமாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் நாமும் விடைபெற்றோம்.
மகர சடகோபன்
தென்திருப்பேரை
பயணக் கட்டுரை நன்றாக இருந்தது சடகோபன்.
பதிலளிநீக்குநன்றி குகன்
நீக்குGood morning Sadagopan,
நீக்குAbsolutely delighted to go through all the 3 parts of your Varanasi, Prayagraj and Ayodhya pilgrimage trip.
Felt like me myself going through and experiencing the journey. Crisp and neat commentary with pictures.
Final touches of suggestions for infrastructure improvements and focus on cleanliness was perfect to finish your journey series.
Very useful for aspirants like me planning for the same exact pilgrimage tour. Hoping that the blessing will happen soon.🙏
-Rajaram
Thanks Rajaram
நீக்கு