பேராசை ....பெருநஷ்டம்



"போதும் என்ற மனமே....." என்ற கடந்த கட்டுரையில் மணல் அள்ளுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இலங்கையில் எவ்வாறு மணல் எடுக்கிறார்கள் என்பதனையும் குறிப்பிட்டிருந்தேன். ஆற்றில் தினசரி மணல் எடுக்க அனுமதிப்பதில்லை. வாரம் மூன்று அல்லது நான்கு முறை எடுக்கலாம். அதுவும் ஆறுகளை அரசு சோதனை செய்து மணல் மேடுகளைக் கண்டறிந்து அதன் எல்லைகளை வரையறுத்து மணல் கையால் எடுப்பதை அனுமதிக்கின்றார்கள். இயந்திரம் கொண்டு தோண்டுவது என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்று. 

பொருளாதார வளர்ச்சி என்பது தனி மனிதனுக்கும் நாட்டிற்கும் தேவை. ஆனால் வளர்ச்சி என்பது எல்லையற்று இருக்க வேண்டுமா? என்ற கேள்வி இங்கே தொக்கிக் கொண்டிருக்கிறது பதில் தெரிந்தும் தெரியாத வகையில்.‌ எல்லையற்ற வளர்ச்சி என்பது மனிதக் குலத்தையும், உலக உயிர்களையும் , சுற்றுப்புறச் சூழலையும் முற்றிலும் அழித்துவிடும். வளர்ச்சி மற்றும் பயன்கள் ( Cost Vs Benefits) பற்றி ஆராய்ந்து, வளர்ச்சி என்பது உலக சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்ற கட்டத்தில் அதன் வளர்ச்சி என்பதை மட்டுப்படுத்தத் தெரிய வேண்டும். 

தனிமனித வளர்ச்சி என்பதும் அவனது உடல்நிலை , மன அமைதியைக் கெடுக்கும் பட்சத்தில் அதனை நிறுத்தத் தெரியவேண்டும். மீறித் தொடர்ந்தால் மன அமைதி, உடல் பாதிப்பு ஏற்படும். 

சமீபத்தில் வெளிவந்த லக்கி பாஸ்கர் என்ற படத்தில் கதாநாயகன் வங்கியில் வேலை செய்யும் சாதாரண நபர். குடும்பம் என்பது அழகாகச் சென்று கொண்டிருக்கிறது. கதாநாயகன் தனது குடும்பம் மற்றும் அவனது அப்பா, தம்பி , தங்கை என்று அனைவரையும் காப்பாற்றும் பெரும் பொறுப்பு. ஆனால் அவன் வாங்கும் சம்பளம் என்பது மிகக்குறைவாக இருக்கிறது. குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. 

வேலையிலும் பதவி உயர்வு சம்பள உயர்வு என்பது இல்லை. கதாநாயகனின் மனைவி வீட்டில் கூட இவர்களையும் இவர்களுடைய குழந்தைகளையும் மதிப்பதில்லை. பணம் இல்லை என்ற காரணத்தினால் அவமதிக்கப்படுகிறார்கள். 

இந்த அவமானம் என்பதை "Social prescribed Perfection" என்று "Perfection Trap" புத்தகத்தில் குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர். 

அதனால் உந்தப்பட்ட கதாநாயகன் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று நினைத்து, சில தவறான முறைகளில் சென்று பணம் சம்பாதித்து, அந்த பணத்தை சட்டப்படி சரியான பணமாகப் பங்குச்சந்தை மூலம் மாற்றி பொருளாதாரத்தில் ஒரு வளர்ச்சியை அடைகிறான். 

அந்த வளர்ச்சி என்பதற்கு எல்லை ஒன்று இல்லாமல், மீண்டும் பணம் பரிவர்த்தனை மூலம் சட்ட விரோதமாக நிறையப் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். 

இதில் ஒன்று அவ்வப்போது காண்பிக்கப்படுகிறது. கதாநாயகன் பொருளாதார வளர்ச்சியில் ஏறும் முகத்தில் இருக்கும்போது இந்த சமுதாயம் கொடுக்கும் ஊக்கம் , சமுதாய மரியாதை என்பது (Reward) அவனை மீண்டும் மீண்டும் அந்த வழியில் தவறு செய்யத் தூண்டுகிறது. இதுதான் "Socially Prescribed Perfection Trap"

பணம் சம்பாதிக்கும் குறிக்கோளில் குடும்பத்துடன் குழந்தைகளுடன் நேரம் கொடுப்பதில்லை. மது மாது என்ற தீய பழக்கத்திற்கும் அடிமையாக்கப்படுகிறான். குடும்ப மன அமைதி கெடுகிறது. மனைவி பைத்தியம் போல் செயல்பட்டு அவள் நடத்தி வந்த கடைகளை அடித்து நொறுக்குகிறாள். 

ஒரு இடத்தில் அவன் அரசாங்கத்திடம் மாட்டிக் கொள்கிறான். அந்த இடத்தில் அவனது அப்பா சொல்லும் வார்த்தை என்பது " ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் தேவையான அருமையான வார்த்தை" . 

அப்பா கதாநாயகனிடம் கேட்கிறார், இவ்வளவு பணம் எப்படி எதற்காகச் சம்பாதித்தாய் என்று. அதற்கு அவன் குடும்பத்திற்காகச் சம்பாதித்தேன் என்று சொல்வான். 

இது தவறு என்று தெரிந்தும் தொடர்ந்து நீ செயல்பட்டது என்பது பெருந்தவறு என்று அப்பா கூறுவார். மேலும் "ஒரு கட்டத்தில் நிறுத்தி இருக்கவேண்டும்". நிறுத்தாமல் தொடர்ந்ததால் உன்செயல் உன்னையும் உன்னைச் சார்ந்து இருக்கும் குடும்பத்தையும் அழிக்கும் விளிம்பிற்கே கொண்டு சென்றுவிட்டது என்று கூறுவார். 

எந்த சமுதாயம் தூண்டியதோ , எந்த சமுதாயம் அவமானப் படுத்தியதோ, அதே சமுதாயம் மேலும் இவனைத் தவறான மனிதன் என்று சித்தரிக்கும் அளவுக்கு எடுத்துச் சென்று விட்டது. 

எல்லை அறிந்து ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும், போதும் என்று நினைத்து ஒரு இடத்தில் நிறுத்த வேண்டும். அதற்கான மன தைரியம் வேண்டும். 

பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிக்கேற்ப கள்ளத்தனமாக நாட்டை விட்டு வெளியேறி அடுத்த நாட்டுக்குச் செல்கிறான் என்று படத்தை முடித்து உள்ளார்கள். முடிவில் நமக்கு உடன்பாடு இல்லை

"பேராசை பெருநஷ்டம்"

"மற்றவர்களை ஒப்பிட்டு வாழ்க்கை நடத்துவது என்பது தவறு" 

"எல்லை அறிந்து செயல்பட வேண்டும்"

"தொடக்கம் ஒன்று இருக்குமானால் நிறுத்தம் ஒன்று இருக்க வேண்டும்" 

அருமையான பாடங்கள் கற்பித்த படம். 

மகர சடகோபன் 
தென்திருப்பேரை 

(ஹர்ஷமேதா கதை. ஒரு கட்டத்தில் பங்குச் சந்தையில் கொடிகட்டிப் பறந்தவர். இப்பொழுது இருந்த இடம் தெரியவில்லை. இதுதான் மனித வாழ்க்கை). 



கருத்துகள்

  1. எல்லை அறிந்து ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும், போதும் என்று நினைத்து ஒரு இடத்தில் நிறுத்த வேண்டும். அதற்கான மன தைரியம் வேண்டும்.


    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி