போதும் என்ற மனமே............


சமீபத்தில் இரண்டு படங்கள் பார்த்தேன். படம் பார்த்து நான் புரிந்து கொண்ட உண்மை என்னவென்றால் " போதும் என்ற மனமே ........ பொன் செய்யும் மருந்து " என்பது ஒன்று  , மற்றொன்று "மேலும் ஒன்றை ஆரம்பிக்கும் போது எப்பொழுது எங்கே முடிக்க வேண்டும் " என்ற அறிவுத் தன்மை. 

இந்த இரண்டுமே ஒருவனுடைய வாழ்க்கையைச் சரியாகத் தீர்மானிக்கிறது. குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு உதவுகிறது. 

ஒரு படத்தில் கதாநாயகன் பாரதத்தில் ஆற்றில் மண் எடுக்கும் தொழிலைச் செய்து வருகிறான். அதிலும் ஒரு தருமம் காட்டப்பட்டுள்ளது. ஆற்று மண்ணை கையால் சட்டியை வைத்து எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு எடுக்கிறார்கள். இந்த மண் அள்ளும் முறையை நான் இலங்கை சென்றிருந்தபோது கவனித்து வியந்து இருந்தேன். இங்கே JCB வைத்து எடுத்து, ஆற்றின் உருவகத்தையே மாற்றிவிட்டார்கள். ஆறு ஆறாக இல்லை. ஆறு என்பது கருவேல் மர காடாகக் காட்சியளிக்கிறது. இதுவும் போதும் மனம் இல்லாததின் விளைவுதான். நாம் சொல்ல வந்த கருத்துக்குக்குள்ளேச் செல்வோம். 

அப்படியாக ஆற்று மண் அள்ளி தொழில் செய்து சந்தோஷமாக குடும்பம் இருக்கிறது. கணவன் மனைவி சந்தோஷத்தில் எந்தவொரு குறைபாடும் இல்லை. சமுதாயத்தை உற்று நோக்கி சிலரின் பொருளாதார வளர்ச்சி கதாநாயகன் மற்றும் குடும்ப உறுப்பினரின் கண்ணில் படுகிறது. அவர்களைப் போல் நாமும் வீடு வாங்க வேண்டும் , வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை தூண்டப்படுகிறது. 

இதை ஒரு மனவியாதி என்று நான் படித்த " Perfection Trap" என்ற புத்தகத்தில் குறிப்பிடப்படுகிறது.‌ இந்த மனவியாதியில் சிக்கியவர்களின் நிலை என்பது தன்னையே அழிக்கும் விளிம்புக்குத் தள்ளிவிடும். 

இங்கே கதாநாயகன் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்களாலும் தூண்டப்படுகிறான். அதற்காக அவன் கடன் வாங்கி பணம் கொடுத்து வளைகுடா பகுதிக்கு வேலைக்கு வருகிறான். 

வளைகுடா பகுதிக்கு வந்த பிறகுதான் அவனுடைய வேலை என்பது அவனுக்கே தெரிய வருகிறது. பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் தொழில். 

நடு பாலைவனத்தில் ஆட்கள் இல்லாத இடத்தில் ஒட்டகத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் அவன் படும் கஷ்டங்கள் ஏராளம். அவனிடம் அலைபேசி கிடையாது. குடும்பத்துடன் தொடர்பு கொள்ளமுடியாது. சரியான உணவு கிடையாது. தூங்குவதற்குச் சரியான இடம் கிடையாது. பகலில் வெயிலிலும் இரவில் பாலைவன குளிரிலும் அவன் படும் கஷ்டம். குடிப்பதற்குத் தண்ணீர் கிடையாது. ஒட்டகம் குடிக்கும் தொட்டியில் இவன் அதே தண்ணீரை அருந்த வேண்டும். குளியல் என்பதே கிடையாது. அவ்வப்போது வீசும் மணல் சூறாவளியில் படும் கஷ்டங்கள். 

இப்படியாகப் பல வருடங்கள்(20 வருடங்களுக்கு மேல்) செல்கிறது. கதாநாயகன் இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு ஒரு பைத்தியம் போல் காட்சியளிக்கிறான். அவ்வப்போது அவன் சந்தோஷமாக மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கை ஞாபகம் வந்து மேலும் அவனை வாட்டுகிறது. ஆனால் அவனது நிலைமை என்பது அவன் படும் கஷ்டங்களை யாருடனும் தெரிவிக்க முடியாது. அடிக்கடி அவன் முதலாளி வந்து அவனைத் திட்டுவதும் அடிப்பதும் வேறு. 

பாரதத்தில் அவன் குடும்பங்கள் இவன் இருக்கிறானா இல்லையா என்று தெரியாமல், குடும்பத்தை நடத்த மேன்மேலும் கடன் வாங்கி மிகப்பெரிய அழுத்தத்தில் வாழும் காட்சி ஒரு பக்கம். மற்றொரு பக்கம் இவன் பாலைவனத்தில் தனியாகச் சந்திக்கும் துன்பங்கள். அங்கும் இங்குமாக நினைத்துப் பார்க்கமுடியாத சோகம் நிறைந்த வாழ்க்கை.


இந்த நரக வேதனையிலிருந்து ஒரு நாள் தப்ப முடிவு செய்து தப்பி வரும் நேரத்தில், பாலைவன வழியில் அவன் சந்திக்கும் துன்பங்கள் ஏராளம். கடைசியாக அவ்வளவு துன்பங்களையும் பல வருடங்கள் அனுபவித்து பாரதத்தில் வீடு வந்து சேருகிறான்.

கதை கற்றுக் கொடுக்கும் பாடம் என்பது, ஆசையினால் தொலைந்தது பணம், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை, மனநிம்மதி.‌ "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழமொழியை மேன்மேலும் மனிதர்களாகிய நாம் வாழ்க்கையில் தினம் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும்  

மகர சடகோபன் 
தென்திருப்பேரை




படம்: ஆடு ஜீவிதம்

இந்த படம் என்பது ஆடு ஜீவிதம் என்ற 2008ல் வெளிவந்த மலையாள நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். வளைகுடா பகுதியில் கதாநாயகன் போல் நிறையப் பேர் கஷ்டப்படுகிறார்கள் என்பதும் உண்மை.

(மற்றொரு படத்தைப் பற்றி அடுத்த பகுதியில்)

 



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி