எல்லைச்சாமி



அமரன் படம் பார்த்து ராணுவ வீரர்களின் தியாகத்தையும்  பாராட்டி செய்திகள் வந்து விட்டன. சிலர் சுயசரிதை கதைகளைப் படமாக எடுக்கும்போது உண்மையான கதாபாத்திரங்களை அவர்களது  தன்மையுடன் சாதீய மத  அடையாளங்களுடன் காட்டவேண்டும் என்று செய்திகளை வெளியிட்டார்கள். இதோ நமது பார்வை இந்த கட்டுரையில். உணர்வு  தியாகம் என்பது குடும்பத்துடன் செயல்படுவது தான் ராணுவ வீரரின் அழகு. அதுவும் இந்த படத்தின் நிஜ கதாநாயகனின் வாழ்க்கையிலும் நடைபெற்றுள்ளது. 

கிராமங்களில் நான்கு திசை எல்லைகளில் சிறு தெய்வங்கள் காவல் தெய்வங்களாக நிற்பார்கள். அந்த கிராமங்கள் காப்பாற்றப்படுவது அந்த எல்லை தெய்வங்கள் என்பது ஊர் நம்பிக்கை. ஊரை விட்டுச் செல்லும் போது அந்த எல்லை தெய்வங்களைக் கைகூப்பி வணங்கி விடைபெற்றுச் செல்வார்கள்.‌ வெளியூர் சென்றாலும் கூடவே இருந்து காப்பாற்றுவது இந்த எல்லைச்சாமிகள் என்ற நம்பிக்கை. அதாவது மனிதன் இல்லாத காலி வீடுகளைக் காப்பாற்றுவதும் அந்த எல்லை தெய்வங்கள் என்பதும் மிகப்பெரும் நம்பிக்கை. 

ஒவ்வொரு எல்லை தெய்வங்களும் ஒவ்வொரு சமுதாய மக்களால் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமுதாய மக்கள் ஒன்று கூடி வருடத்திற்கு ஒருமுறை நன்றி செலுத்தும் விதமாக "கோயில் கொடை" நடத்துவார்கள். அப்பொழுது அனைத்து ஊர் சமுதாய மக்களும் கலந்து கொள்வார்கள். விழாவை நடத்துவதற்கான நன்கொடை அளிப்பார்கள். இப்படியாக ஊர் ஒற்றுமையையும், சமுதாய நல்லிணக்கத்தையும் ஊருக்கு உணர்த்துவது எல்லைச்சாமிகள். 

ஊரைக் காப்பாற்றும் எல்லைச்சாமிகள் ஊருக்கு வெளியே பிரபலமாகத் தெரியாது. அந்த ஊரில் இருக்கும் பெருந்தெய்வங்களின் மூலம்தான் அந்த ஊரின் அடையாளங்கள், பெருமைகள் எல்லாம் பிரபலப்படுத்தப்படும். 

நமது நாட்டின் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்கள் என்பது கிராமங்களில் இருக்கும் எல்லைசசாமிகள் போன்று , ஆனால் இந்த எல்லைச்சாமிகள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்பது நம்பிக்கை மட்டுமல்ல நிதர்சனமும் கூட. இந்த எல்லைச்சாமிகளும், அவர்களது பெருமைகளும் செயல்களும் வெளியில் அதிகம் தெரியாது. பிரபலம் இல்லாமல் அவர்களது கடமையைத் தினம் செய்து கொண்டு இருப்பவர்கள்தான் இந்த ராணுவ வீரர்களான எல்லைச்சாமிகள்.

இந்த எல்லைச்சாமிகள் வாழ்க்கை என்பது மிகவும் கடினமான பாதை. தேசப்பற்றின் காரணமாக உந்தப்பட்டு நாட்டைக் காக்கும் இந்த வேலையில் விருப்பப்படி சேர்ந்தாலும் உடல்ரீதியான, உணர்வு ரீதியான உருவாகும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம். 

அமரன் படம் பார்த்து அனைவரும் பாராட்டியது, ராணுவ வீரனாக திரு.முகுந்த் வரதராஜன் நாட்டிற்காகச் செய்த செயல்கள் மற்றும் உயிர்த் தியாகம். அவரது தேசப்பற்று மிகவும் பாராட்டக் கூடிய, போற்றப்படக் கூடிய செயல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. 

ஆனால் அதையும் தாண்டி அவரது குடும்ப வாழ்க்கை உளவியல்ரீதியாக மிகவும் கடினம் என்பதனை ஆங்காங்கே படத்தில் ஒரு கீற்று போல் காண்பித்துச் செல்கிறார்கள். 

கணவன் மனைவி உறவு என்பது பிரிந்து வாழ்வதற்கான வாழ்க்கை அல்ல. பிரிந்து வாழவேண்டும் , எப்பொழுதாவது சேர்ந்து வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல. சேர்ந்து வாழும் பொழுது மட்டுமே இருவரின் உறவுகள் என்பது மேன்மேலும் மலரும். சரியாகப் புரிந்து கொண்டு கருத்தொற்றுமையுடன் அமைதியாகச் சிறப்பாக வாழ முடியும். குழந்தைகள் பெரிதாகி அவர்களது படிப்புக்காக குடும்பங்களாகக் கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய சூழல் உருவாகிறது. ஆனால் அந்த சூழலில் கணவன் மனைவி உறவு என்பது 12-15 வருடங்களைத் தாண்டி இருக்கும். மேலும் அந்த பிரிவு என்பது குடும்ப நலனுக்காகவும், மேன்மைக்காகவும். அந்த பிரிவு என்பதும் மனதளவிலும் உடலளவிலும் சில உளவியல் பிரச்சினைகளை இருவருக்கும் ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன. குடும்பங்கள் இந்த பிரிவைத் தவிர்ப்பது நலம். தவிர்க்க முடியவில்லையென்றால் கால இடைவெளிகளைக் குறைப்பது நலம். 

பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் வாழும் இந்திய தொழிலாளர்களின் வாழ்க்கையும் இதே நிலைதான். குடும்ப நலனுக்காகப் பொருளாதார சூழலை மேம்படுத்த அவர்கள் மேற்கொள்ளும் வலி என்பதனை அருகாமையிலிருந்து உணர்ந்தவன் என்ற நிலையில் பலவற்றை அறிவேன். அவர்களும் மனதளவிலும் உடலளவிலும் உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதைச் சமாளிக்கும் பொருட்டு பல நேரங்களில் தடம் புரண்டு வாழ்க்கை என்பது மது, மாது, போதைக்கு அடிமையாகி, அதிலிருந்து மீளமுடியாத துயரத்தை அனுபவித்து வரும் நபர்களும் உண்டு. குடும்ப நலனுக்காக வந்து குடும்பத்தைச் சிதைக்கும் அளவுக்கு சில நேரங்களில் சென்றுவிடும்.‌ 

இவர்களது வாழ்க்கையும் ஒருவகை தியாக வாழ்க்கைதான். கணவன் , மனைவி இருவருமே இந்த வளைகுடா வாழ்க்கையிலும் ஒரு வகை தியாகத்தைக் கொடுத்துத்தான் குடும்பத்தை மேம்படுத்துகின்றார்கள். மேலும் குடும்பமாக ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கு கொள்ளமுடியாது, ஊர் திருவிழாக்களில் உறவினர்கள் நண்பர்களுடன் கலந்து கொள்ளமுடியாத நிலைகள் அவ்வப்போது உருவாகி , சமுதாய விலகலை அவர்களது வாழ்க்கையில் ஏற்படுத்தும். உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பைக் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்படுத்தும். 

ஆனால் ராணுவத்தில் இந்த மாதிரி எல்லைப்பகுதி பாதுகாக்க்கும் வீரர்களின் திருமண வாழ்க்கை என்பது, பிரிந்து வாழவேண்டும் என்ற கட்டாயம் கல்யாணம் முடிந்த நாளிலிருந்து தோன்றி விடுகிறது.‌ ராணுவ வீரர்கள் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், வேலையின் நிர்ப்பந்தம் , மேலும் அவர்கள் விரும்பிய நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் அவர்களது எண்ணங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரலாம். ஆனாலும் மனைவியிடம் அன்பைத் தெரிவிக்கும் நேரங்களில் சில உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை பல நேரங்களில் எழலாம். இதில் அதிகம் தியாகம் செய்தவர்களாகக் கருதப்படுபவர்கள் ராணுவ வீரர்களின் மனைவிகள். இவர்களது பிரிவு என்பது மற்றவர்களைப் போல் குடும்ப நலனுக்காக அல்ல, மாறாக நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்கள் சௌகரியமாக குடும்பத்துடன் வாழ்வதற்காகவும் மட்டுமே என்பதுதான் உண்மை. 

ஆசைகளையும் அன்புகளையும் , கனவுகளையும் காமங்களையும், உள்ளங்களையும் உணர்வுகளையும் உள்ளடக்கி, கணவர்களின் விருப்பத் தொழிலான நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக அனைத்தையும் தன் உள்ளத்தில் அரவணைத்துக் கொண்டு தியாகம் செய்வது என்பது எளிதல்ல. 

அமரன் படத்தில் கணவன் மனைவி காணொளி மூலமாகப் பேசிக்கொண்டே இரவு முழுவதும் தூங்கும் காட்சி என்பது மனதளவிலும் உளவியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் காட்சி. ஆனால் அது ஒரு கீற்று போல் படத்தில் வந்து செல்லும்.  மேலும் மற்றொரு இடத்தில் விமான நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் சந்தித்துப் பேசும் நேரங்கள் என்பது மிகவும் குறைவாகக் காணப்படும். வேலை நிமித்தமாகக் குறுகிய நிமிடங்களில் பிரிய ஏற்படும். அந்த பிரிவு வலி என்பது கணவன் மனைவி இருவரும் மட்டுமே உணரும் பேசப்படாத வலி.அவர்களது பிரிவு கணவன் மனைவி இருவருமாகச் சேர்ந்து நாட்டுக்காகச் செய்யும் உச்சபட்ச தியாகம். 

வெளியூர் மக்களுக்குச் சிறு கிராமங்களின் எல்லைச்சாமிகள் தெரியாதுபோல், இந்த நாட்டு எல்லைச்சாமிகளும் சமுதாயத்துக்கு அதிகமாகத் தெரியாது. 

இந்த எல்லைச்சாமிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், உணர்வு ரீதியாக உள்ளங்களைத் தட்டி எழுப்பவும், சமுதாயத்தின் பார்வை என்பது இந்த எல்லைச்சாமிகள் மேல் மரியாதை செலுத்தும் வகையில் திருப்பவும், பாரத நாட்டின் அனைத்து மக்களின் பிரதிநிதியாக நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தீபாவளி அன்று எல்லைப் பகுதிகளுக்குச் சென்று எல்லைச்சாமிகளுடன் இனிப்புகள் வழங்கி தீபாவளி நன்னாளைக் கொண்டாடுவதன் மூலம் நமது பிரதமர் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறார் என்பது என் எண்ணம். 

ராணுவ வீரர்களுக்கு 140 கோடி மக்களின் குடும்பமும் இருக்கிறது, ராணுவ வீரர்கள் 140 கோடி குடும்பங்களின் பிள்ளைகள், அவர்களது மனைவிகள் குழந்தைகள் அனைவரையும் 140 கோடி மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற ஒரு மனநிலையை உருவாக்குவதற்குக் கடந்த 11 வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் என்பது என் எண்ணம்.

எல்லைச்சாமிகள் எல்லைகளைக் காப்பாற்றும் நேரங்களில் உயிருக்கு ஆபத்து எந்நேரத்திலும் எங்கிருந்தும் ஏற்படலாம் என்று தெரிந்தும், அவர்களது குடும்பம் குழந்தைகள் என்று தன்னலத்துடன் பாராமல், பாரத நாட்டின் பல்வேறு குடும்பங்களின் பாதுகாப்பைக் கருதிப் பல இடர்களிலிருந்தும் பாதுகாக்கப் பரந்தாமன் அவதாரம் போல் பாதுகாக்கும் எல்லைச்சாமிகளுக்கு எல்லையில்லா அன்பினையும் பெரும் மதிப்பையும் வழங்கி காலம் உள்ளவையும் காவலனை வணங்கி நிற்போமாக 

எல்லை சாமி ஒருவன்
எல்லையில் காத்து நிற்க 

அன்பு கொண்டு ஒழுகும்
அன்பு உயிர்களின் அரணாக 

பாரம் என்றும் பாராமல் 
பாரதம் காக்கும் காவலன்

எங்கள் எல்லை சாமிகள் 
எங்கள் எல்லை சாமிகள் 

அச்சமில்லை என்ற உணர்வுடன் 
அச்சத்தை எதிரிகளிடம் உருவாக்கி

அச்சமின்றி பாரதீயர்கள் வாழ
அச்சமின்றி எல்லைகளைக் காக்கும் 

எல்லை சாமிகள் வாழி வாழி வாழியவே

மகர சடகோபன் தென்திருப்பேரை 





கருத்துகள்

  1. அற்புதம்... அனைவரின் கருத்துகளையும் பிரதிபலித்து விட்டீர்கள் ....நன்றி...
    சுந்தரராஜன் 🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு
  2. தெரியாத எல்லை சாமிகள் நன்றி சார்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி