ஈரம்


அன்பின் வெளிப்பாடு என்பது விருந்தோம்பல், அதனை வள்ளுவ பெருந்தகை விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் வைத்துக் கூறும் போது, 

"மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து"

விருந்தோம்பல் அன்பின் வெளிப்பாடு. அதற்கு மூன்று இன்றியமையாதது, அதாவது இன்முகம், இன்சொல், வழி நன்று ஆற்றல் ( விருந்து) என்று பரிமேலழகர் உரை காண்கிறார். 

தூரத்தில் வரும்போது இன்முகம் காட்டி, அருகாமையில் வந்த பிறகு இன்சொல் பேசி விருந்து செய்வது என்பது இங்கே பரிமேலழகரால் காட்டப்பட்டது. 

இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் வள்ளுவ பெருந்தகை, அறம் என்பன யாது என்று கூறும் போது, 

"முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்"

இன்முகம் , இன்சொல் என்பது அறத்தின் பண்புகள். இந்த இரண்டையும் மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பொருளாகக் கொடுப்பது என்பது பொருள் வயத்தில் உள்ளது, அது சில சமயங்களில் இருக்கும் சில சமயங்களில் இருக்காது, ஆனால் இந்த இரண்டு பண்புகளும் உயிர் உள்ளவரை எப்பொழுதும் தன்வயத்தில் இருப்பதனால் இதன் சிறப்பு இந்தக் குறளில் கூறப்பட்டது.

இன்முகம் காட்டுவதில் பெரிய அங்கம் வகிப்பது நமது கண்பார்வை. கண்பார்வையில் அன்பும் கருணையும் வெளிப்படும். இன்சொல் என்பது நா சுழற்றில் உள்ளது. இன்சொல்லின் மூலமும் அன்பு, கருணை வெளிப்படும். இன்சொல் அவசியத்தை எதிர்மறையாக வள்ளுவ பெருந்தகை திருக்குறளில்,

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு" 

என்று கூறுகிறார் 

கண் மற்றும் நாக்கு என்ற இரண்டு புற உறுப்புகள் மட்டுமே மனித உடலில் ஈரத்துடன் உள்ளது. இயற்கையில் ஈரம் அதாவது அன்பு காட்டுவதற்காகக் கடவுளால் படைக்கப்பட்ட உறுப்புகள் , அதை விடுத்து அன்பற்ற தன்மையைக் காட்டுவது என்பது அறமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது. சொற்கள் என்பது அறநிலையில் நின்று அன்பு மற்றும் கருணையைக் காட்டும் எளிய சொற்களாக இருக்க வேண்டும். ஈரம் அதிகம் இருக்க வேண்டும்.‌

"இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்"

இன்சொலாவன, அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற் சொற்கள். மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. வாய் என வேண்டாது கூறினார், தீய சொல் பயிலா என்பது அறிவித்ததற்கு என்று பரிமேலழகர் உரை காண்கிறார். 

ஆழ்வார்கள் ஈரத்தமிழில் பாடிய தெய்வப்பனுவல்கள் திராவிட வேதம் என்று சிறப்பித்து அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களின் திவ்ய பிரபந்த சொற்களை "ஈரச்சொற்கள்" என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதாவது ஆழ்வார்களின் சொற்களில் அன்பு , கருணைக் குடிகொண்டிருக்கிறது என்று அர்த்தமாகிறது. அது உண்மையும் கூட என்பது ஆழ்வார் ஆசாரியர்களின் வாக்குகள் கொண்டு நிரூபணம் ஆகியுள்ளது.

ஆழ்வார்களின் பாடல்கள் இன்னிசை , இன்தமிழ் என்று மதுரகவியாழ்வார் புகழ்ந்து பாடுகிறார். 

ஆழ்வார்களின் பாசுரங்கள் "பாவின் இன்னிசை" இனிமையான இசை கூடியது என்பதனை மதுரகவியாழ்வார் பாடல்கள் மூலம் அறியப் பெறுகிறோம்.‌

"நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே"

அடியவர்கள் இன்புற (அவ் அருமறைகளை அதாவது வடமொழி வேதங்களை) ஆயிரம் இன் தமிழில் நம்மாழ்வார் பாடினார் என்று மதுரகவியாழ்வார் மேலும் கூறுகிறார். 

"அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே"

வடமொழி வேதங்கள் பரந்து விரிந்து அர்த்தங்களைக் கூறும் போது அதில் சில மயக்கங்கள், கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அதைத் தெளிவிக்கும் சொற்கள் ஆழ்வார்களின் பாடல்களில் இருப்பதனால் " ஆழ்வார்களின் சொற்கள் ஈரச் சொற்கள்". அந்த கருணைச் சொற்களைக் கைவிளக்காகக் கொண்டு இராமானுஜர் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதினார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து அறிகிறோம்.‌ 

"அல்ப ஞானிகளால் கலங்கின வேதமானது உண்மை
ஞானத்துக்குத் துறையான ஆழ்வார் பக்கலிலே சேர்ந்து
ஆழ்பொருளை அறிவித்தது" என்றார் ஆச்சாரிய ஹ்ருதயம் என்ற நூலில் அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்.

ஸ்வாமி தேசிகன் " செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியஓதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே" என்று குறிப்பிடுகிறார். வேதத்தின் அர்த்தங்களை ஆழ்வார்களின் தமிழ் மாலைகள் மூலம் தெளியப் பெறுகிறோம் என்பது ஸ்வாமி தேசிகனின் அருள்வாக்கு.

வடமொழி வேதம் நான்கு, அதற்கு சிக்ஷா, வியாகரணம், சந்தஸ், ஜோதிஷம், நிருக்தம், கல்பம் என்று ஆறு அங்கங்கள் இருக்கிறது. நான்கு வேத சாரமாக நம்மாழ்வார் செந்தமிழில் திருவிருத்தம், திருவாசிரியம் , பெரிய திருவந்தாதி,திருவாய்மொழி என்று பாடியுள்ளார். அதற்கு ஆறு அங்கமாகத் திருமங்கையாழ்வார் செந்தமிழில் பெரிய திருமொழி, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவெழுக்கூற்றிருக்கை, திருகுறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்று பாடியுள்ளார். 

 "வேதம் தமிழ் செய்த மாறன்" " மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த" என்று நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரை உபதேச ரத்தின மாலையில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் குறிப்பிடுகிறார். 

எளியவர்களுக்கும்,பெரிய வித்வான்களுக்கும் தெளியாத வடமொழியின் மறை அர்த்தங்களைத் தெளிய வைத்த தமிழ் மறையான ஆழ்வார்களின் சொற்கள் அன்பு வடிவமானது, கருணை வடிவமானது, இனிமையானது, எளிதானது என்று மேற்கூறிய ஆழ்வார் ஆசாரியர்களின் வாக்குகள் மூலம் புலப்படுகிறது. 

அறத்தை நிலைநாட்ட வந்த வடமொழி மறைகளை, தெளியாத மறை நிலங்களைத் தெளிய வைக்க வந்த ஆழ்வார்களின் தமிழ் மாலைகள் என்பது அனுபவம் உணர்வு மிகுந்தது. ஆதலால் ஆழ்வார்களின் தமிழ் மாலைகளை "ஈழத்தமிழ்" என்றும், "ஈரச்சொற்கள்" என்றும் அழைக்கப்படுவது மிகவும் பொருத்தமாகப் பார்க்கப்படுகிறது. 

நெஞ்சில் ஈரம் இருந்தால் மானுடம் சிறக்கும். 

மகர சடகோபன் 
தென்திருப்பேரை 





கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி