ஈரம் - 2




"நெஞ்சில் ஈரம் இருந்தால் மானுடம் சிறக்கும்" என்று ஈரம் என்ற கட்டுரையை முடித்தோம். ஈரம் மண்ணில் இல்லை என்றும் தோன்றும் அளவுக்கு , ஈரம் இல்லாத மண் வறண்ட நிலமாக , நிலம் பிளவுண்டு, வெடிப்புடன் கோரமான முகத்துடன் நிலமகள் உள்ளாள் என்பதனை மண்ணில் வாழும் மைந்தர்கள் நிரூபித்து, அறம் இல்லை அன்பு இல்லை, பொய்யா மொழி புலவனின் வார்த்தை பொய் என்று நிரூபிக்கும் கலி காலம் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு, கலியே நடுங்கும் அளவுக்கு, காலத்தால் காரியம் நடந்து நிறைவேறியுள்ளது.

"பொலிக பொலிக பொலிக!போயிற்று வல் உயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த, நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின்" 

கலியும் கெடும் நரகமும் நைந்து நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை என்று நம்மாழ்வார் அருளிய வாக்கு பொய்யானது. நமன் உருவத்தில் நரகர்கள் வந்து நாலுலகம் வெட்கி தலை குனிய இருக்கும் செயலை , சுதந்திரமாகக் காற்றை உள்வாங்கும் வேலையில் சுதந்திரமாகக் காற்றை உள்ளிருந்து வாங்கியுள்ளார்கள். 

இந்த செயல் என்பது, என்ன காரணத்தினால் ஆனாலும், இது ஒரு அறங்கெட்ட செயல். இங்கே சிலர் மனிதனின் உளவியல் தன்மையைக் கொண்டுவந்து உளவியல் ரீதியில் அணுக வேண்டும் என்று வாதாடுவார்கள். சிலர் முன் விரோதம் இருக்குமோ , அரசியல் பின்னணி இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி ஆறுதல் கூறும் நேரத்தில் அன்பற்ற முறையில் அலைப்பறிப்பார்கள்.‌ சிலர் அரசு அதிகாரத்தில் உயர் பதவியில் இருந்து கொண்டு கயவர்களைக் கண்டுபிடிக்கும் பதவியில் இருப்பவர்கள் வீதியில் வந்து நின்று மனசாட்சியை விற்று மனித நேயத்தை விற்று நியாயம் வழங்க வேண்டும் என்று கேட்டு திசை திரும்புவார்கள். அதிகாரம் இவர்கள் கையில் இருக்கும்போதே 12 மணி நேரத்துக்குள் பிரேதப் பரிசோதனை செய்து பிரதேத்தை எரியூட்ட செய்வார்கள். பிறகு வீதியில் வந்து நியாயம் கேட்பார்கள்.  எந்த காரணமாயினும் இதுவொரு அன்பில்லாத அறம் கெட்ட செயல். 

" என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்

மேற்கூறிய குறளுக்கு நேர்மாறாக நடப்பதனால் குறளின் அர்த்தமும் இவ்வுலகில் ( கலியுலகில்) மாறாடி கிடக்கின்றன. அதாவது
எலும்பு இல்லாத புழுக்களிடம் ( சாதாரான இந்திய குடிமகன்) கூட அன்பு இருக்கும் , எலும்பு இருக்கும் மனிதனிடம் ( நான்கு ஜனநாயக தூண்கள்) அன்பு இருக்காது. ஆதலால் அறமும் அன்பு இருக்கும் மக்களைப் புழுக்களாக நினைத்து நசுக்கும். அன்பு இல்லாத எலும்பு உள்ள மனிதர்களை அறம் வாழ வைக்கும். இந்த காலகட்டத்தைப் பார்க்க நம்மாழ்வாரும் வள்ளுவரும் இல்லை. இல்லையென்றால் இந்த நிலைமையைப் பார்த்து வேறு மாதிரி பாடல்களைப் பாடியிருப்பார்கள். 

ஒரு அறங்கெட்ட செயல் மிருகங்களை விடக் கொடுமையான முறையில், பல வன்புணர்வுகளுடன் ( மிருகம், பறவைகள் கூடச் செய்யாது) பாதகத்தைச் செய்து, இதை மறைக்க மற்றொரு அறம் கெட்ட செயல் நடந்தேறியது. இது அதையும் விடக் கொடூரமானது. 

150 மில்லி கிராம் விந்து என்பது குறைந்தபட்சம் நரகர்கள் நரிக் கூட்டமாக ( குறைந்தபட்சம் 15-30 நரிகள்) வந்து, அந்தப் பெண் நரகத்தை இங்கே  அனுபவிக்கும் வண்ணம் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக நாச வேலைகளைச் செய்துள்ளனர் என்பது மிகவும் வேதனையான ஒன்று. 

மருத்துவர்கள் வெள்ளை சட்டை அணிவிப்பது என்பது மிகவும் உலகளாவிய எல்லா மருத்துவக் கல்லூரியிலும் , அதை ஒரு மாபெரும் சடங்காக நடத்தி , மனிதக் குலத்தை மனித நேயத்துடன் காப்போம் என்ற உறுதி மொழியுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். 

 உறுதி மொழி ஏற்றுக் கொள்வது என்பது ஒரு சடங்கு என்பதற்கு இதுவும் விதிவிலக்கல்ல. எல்லா துறைகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், ஆனால் குறைவாக இருக்கிறார்கள். இதுதான் மனித நேயத்தை நசுக்குகிறது எல்லா துறைகளிலும். 

Man the unknown என்ற புத்தகத்தில் மருத்துவர்களால் மருத்துவ உலகத்தில் நடக்கும் மனித நேயமற்ற செயல்களை ஒரு மருத்துவராக நோபல் பரிசு பெற்ற டாக்டர் அலெக்ஸ் க்ரெல் எழுதியிருப்பார். அதனால்தான் உறுதி மொழி என்பது சடங்கு என்றே தோன்றுகிறது, உறுதிமொழி சடங்காகவே எல்லா துறைகளிலும் பரவலாகி விட்டது. டாக்டர் அலெக்ஸ் க்ரெல் புத்தகத்தின் கடைசியில் படிப்பை விட நீதி நெறிகள் (Ethics) முக்கியம் என்று முடித்து இருப்பார். 

மனித நேயத்துடன் மனிதர்களைக் காப்பாற்ற வந்த மருத்துவருக்கு மருத்துவமனையிலே மனித நரகர்களால் மனிதநேயம் இல்லாமல் அந்த பாதக செயல் நடந்தேறிய கையோடு, மனித நேயம் இல்லாமல் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் என்பது இங்கே மனிதநேயம் முழுவதுமாக மாசு படிந்து , அன்பு இல்லாத அறமற்ற செயல்கள் , சுதந்திர நாட்டில் மக்களால் நடக்கும் மக்கள் ஆட்சியில் மக்கள் முன் நடந்தது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. 

மக்களாட்சியைத் தாங்கி பிடிக்கும் நான்கு தூண்களும், அறம் கெட்ட முறையில், உறுதி மொழி என்பது ஒரு சடங்கு என்று சொல்லும் அளவுக்கு உறுதியாக நின்று பொய்யைக் கட்டவிழ்த்து விட்டதுதான் இங்கே மாபெரும் கொடுமை. 

சிலர் மனசாட்சியே இல்லாமல் பாலியல் துன்புறுத்தல், கொலை என்பது அங்கங்கே நடந்த வண்ணம் இருக்க , இதற்கு மட்டும் பொங்கி எழுவது ஏன் என்று மனசாட்சி இல்லாமல் பேசும் மானிட குரல் இன்னும் சில இடங்களில் ஒலிப்பதைப் பார்க்கும் போது மானுடம் தோற்றதம்மா என்று, கம்பனின் வார்த்தையும் மாறாடி நிற்பதைக் காணமுடிகிறது. 

மக்களாட்சியின் நான்கு தூண்கள் மக்கள் மன்றம்(சட்டமன்றம், பாராளுமன்றம், அரசியல்வாதிகள்), அதிகாரிகள், நீதித்துறை (சட்டம் ஒழுங்கு, காவல்துறை உட்பட) ஊடகத்துறை . இந்த நான்கும் சேர்ந்து பயிரை மேய்ந்து அரசியல் சாசனத்தையும் பாரதத் தாயையும் சிதைத்து நிற்கின்றனர்கள் என்பதுதான் கொடுமையின் உச்சக்கட்டம். 

கல்லூரி முதல்வர் பிரேதப் பரிசோதனையை மிகவிரைவில் முடித்து, பெற்றோர்களுக்குத் தற்கொலை என்று அறிவித்து,  சம்பவம் நடந்த இடத்தில் கட்டிட வேலையை ஆரம்பித்து தடயங்களை அழித்து என்பது போன்ற செய்திகள் வருவதைப் பார்க்கும் போது ஜனநாயகத்தின் நான்கு தூண்களும், வள்ளுவ பெருந்தகை சொல்லிய அறமற்ற தன்மையான நான்கு கூறுகளை அவசியம் கொண்டுள்ளது என்பது தெரிகிறது. 

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்"


நான்கு தூண்கள் சரியாக மக்களாட்சியைத் தாங்கி நிற்க , வள்ளுவ பெருந்தகைக் கூறிய அறத்தின் நான்கு பண்புகளும் மக்களுக்குத் தேவை. பொறாமையின்மை, ஆசையின்மை, கோபமின்மை, இன்சொல் என்ற நான்கு அறத்தின் அடையாளம் என்று எதிர்மறையாக மேற்கூறிய குறளில் காட்டப்பட்டது.

நடப்பதைப் பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது. நியாயம் வழங்கும் பதவியில் இருப்பவர்கள் வீதியில் நின்று நியாயம் கேட்பது என்று ஜனநாயக தூண்கள் முற்றிலும் விழுந்து தரை மட்டமாகி விட்டதே என்று தோன்றுகிறது. 

நான்கு தூண்கள் வேண்டாம் சமுதாயத்துக்கு , ஆனால் நான்கு பண்புகள் அவசியம் வேண்டும்.  

அப்படியானால் அன்பு பெருகும் , கலியும் நரகமும் நையும், மானுடம் வெல்லும் என்று தமிழ் பெரியோர்கள் கூறிய ஈரச்சொற்கள் பொய்க்காமல் மெய்ப்பித்து நிற்கும்.

மண்ணில் ஈரம் இருந்தால் பயிர்கள் தழைக்கும்

மண்ணில் ஈரம் இருந்தால் விவசாயம் தழைக்கும் 

மனதில் ஈரம் இருந்தால் உயிர்கள் தழைக்கும் 

மனதில் ஈரம் இருந்தால் 
மானுடம் தழைக்கும் 

மகர சடகோபன் 
தென்திருப்பேரை 



 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி