கோண்
கோண் என்பதற்குக் கோணுதல், வளைவு, மாறுபாடு, கொடுங்கோன்மை, கோணம், நுண்ணிய பகுதி, பாத்திரத்தின் மூக்கு என்று பல அர்த்தங்கள் தமிழ் அகராதியில் உள்ளது.
அம்பறாத்தூணி புத்தகத்தைப் படிக்கும்போது, இந்த சொல்லைக் கம்பன் பயன்படுத்திய இடத்தைச் சொல்லி இது ஒரு விஞ்ஞான சொல்லாக இருப்பதை ஆச்சரியத்துடன் ஆசிரியர் நாஞ்சில் நாடன் அவர்கள் பதிவிடுகிறார். அது நமக்கும் மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது.
யுத்த காண்டம் இரணியன் வதைப் படலத்தில் ,
“‘சாணினும் உளன்; ஓர் தன்மை
அணுவினைச் சதகூறு இட்ட
கோணினும் உளன்; மாமேருக்
குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன
சொல்லினும் உளன்; இத்தன்மை
காணுதி விரைவின் என்றான்;
நன்று எனக் கனகன் சொன்னான்"
எம்பெருமான் எங்குளன் என்று இரணியன் கேட்க , பக்த பிரகலாதன் பதில் கூறும் பாடலாக அமைந்துள்ளது. நன்று என்று கனகன் (இரணியன்) சொன்னான் என்று பாடல் இறுதியில் உள்ளது.
சாணிலும் - சாண் என்ற அளவிலும் உளன். மாமேரு குன்றிலும் உளன். இங்குள்ள தூணிலும் உளன். நீ சொன்ன சொல்லினும் உளன் என்று கூறும் போது,
"ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்"
ஒன்றாக உள்ள அணுவினை நூறு கூறிட்டுப் பிளந்த ஒரு சிறு பகுதியிலும் உளன் என்று பக்த பிரகலாதன் கூறுவதாகக் கம்பன் பாடலை அமைத்துள்ளார். அதாவது நுண்ணிய பொருள் என்று அழைக்கப்படும் கோணினும் உளன் என்பது இப்பாடலின் மூலம் தெரியவருகிறது.
உனது நாராயணன் எங்குளன் என்று இரணியன் கேட்க, தூணிலும் உளன் துரும்பிலும் உளன் என்று பக்த பிரகலாதன் பதில் உரைத்ததாக நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தத் துரும்பு என்ற நுண்ணிய பொருளை இங்கே " கோண்" என்று பயன்படுத்துகிறான் கம்பன்.
"எங்குளன் கண்ணன்" என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஒரே வரியில் பக்த பிரகலாதன் கூறியதைச் சுருக்கிக் கூறுவதைக் காணலாம்.
அணு என்பது மிகச் சிறிய அளவு என்பதை நாமறிந்த விஞ்ஞான உண்மை. அதை நூறு பகுதியாகப் பிளக்கும்போது உருவாகுவதை எலக்ட்ரான் என்று இப்பொழுது விஞ்ஞானத்தின் மூலம் அறிகிறோம் .அணுக்கரு பிளவுறும் போது ஒரு பெரிய வலிமைமிக்க சக்தி உருவாகிறது என்பது நவீன விஞ்ஞானம்.
இராமானுஜ சம்பிரதாயத்தில் இறைவன் ஐந்து நிலைகளில் இருப்பதாகவும், அதில் ஒரு நிலை "அந்தர்யாமி". எல்லாவற்றிலும் உள் உறையும் தன்மை என்பது "அந்தர்யாமி".
"விண்மீதிருப்பாய், மலைமேல்நிற்பாய், கடற்சேர்ப்பாய்
மண்மீதுழழ்வாய், இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்
என்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி உன்மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ?" - திருவாய்மொழி
என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஐந்து நிலைகளைப் பாடல் மூலம் அழகாக விளக்குகிறார்.
விண்மீதிருப்பாய்- பரமபதம்
மலைமேல்நிற்பாய்- விபவம் விண்ணிலிருந்து அவதாரங்கள் இறங்கி மலை மேல் வருவதைக் கூறுகிறார்.
கடற்சேர்ப்பாய்- திருப்பாற்கடல்
மண்மீதுழழ்வாய்- திவ்ய தேசங்கள் , அர்ச்சை
இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்
என்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி- அந்தர்யாமி
எல்லாவற்றிலும் மறைந்து உறையும் தன்மை - கண்ணால் பார்க்கமுடியாத நுண்ணிய வடிவம்.
"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் அது எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்று மதுரகவி யார் முதலில் நம்மாழ்வாரைச் சந்திக்கும் நேரத்தில் எழுப்பப்பட்ட வினா. இதில் சிறியது என்பது ஆத்மா.
அந்தர்யாமித்வம் என்பது,
ஆத்மா - மிகச்சிறியது , கண்ணுக்குப் புலப்படாதப் பொருள். அதனுள் உறையும் பரமாத்மா என்பது அதையும் விட சிறியது. அந்தர்யாமியாக இறைவன் ஒவ்வொரு ஆத்மாவினுள் நின்று இயக்குகிறான் என்பது பொருள்.
"சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன், ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன், அன்று
ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் " - திருவாய்மொழி
சிறியன் ஆனால் மிகப்பெரியன் என்று பரமாத்மாவான கண்ணனுக்குப் பொருத்தமாகப் பாடலை அமைத்துள்ளார் நம்மாழ்வார்.
கோண் என்பது பிளக்கமுடியாத நுண்ணிய பொருள் , ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த வலிமையான பொருள். சிறியது ஆனால் மிகப்பெரியது என்பது தன்மை.
கோணினும் உளன் பரமாத்மா ஶ்ரீமந் நாராயணன். கோண் என்பது பரமாத்மாவின் வடிவம் என்பதாக இதன் மூலம் அறியப்படுகிறது.
மகர சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக