பிள்ளை



ஹிந்தி மொழியில் ஒரு படம் பார்த்தேன். பிறவியில் கண் தெரியாத குழந்தை , தந்தை மிகவும் வருத்தத்துடன் உயிருடன் புதைக்கச்செல்லத் தாய் தடுத்து நிற்க, அந்த குழந்தை சமுதாய பிரச்சினைக்கிடையில் வளர, கூர்மையான அறிவின் பயனால் எல்லாவற்றிலும் முதலாகத் தேர்ச்சி பெற, தேர்ச்சி பெற்றும் அவன் நினைத்த விஞ்ஞானத் துறையில் +2 படிக்கத் தடை. காரணம் பார்வையில்லை. நீதிமன்றம் மூலம் வாதிட்டு பார்வை இல்லாதவர்களும் விஞ்ஞானத் துறையில் படிக்கலாம் என்ற சூழ்நிலையை மாற்றி, +2 முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லூரியில் அதே பார்வை இல்லாத காரணத்தினால் சேரத் தடை. அமெரிக்கா MIT கல்லூரியில் இடம் கிடைக்க, விமானத்தில் தனியாகச் செல்ல தடை. அந்த தடையையும் வெற்றி கொண்டு அங்குச் சென்று படித்து முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று வருகிறான். 

மீண்டும் இந்தியாவிற்கு வந்து பார்வை இல்லாத மனிதர்களை வைத்து , உதவாத பொருட்கள் என்ற குப்பைகளைக் கொண்டு ஒரு தொழிற்சாலை அமைத்து , அதை இந்தியாவில் முதன்மைத் தொழிற்சாலையாக மாற்றி வெற்றி சிகரத்தைத் தொடும் காட்சி. இதில் அவன் செய்த உபகாரம் என்பது மாற்றுத்திறனாளி என்று ஒதுக்கப்படும் மக்களின் மேன்மைக்கு வழி வகுத்து அவர்களுக்கு உபகாரம் செய்வது என்பது கருப்பொருள். இவன் அல்லவோ உண்மையான பிள்ளை பெற்றோர்களுக்கும் சமுதாயத்துக்கும். சமுதாயத்தில் தனியாகப் பிரிந்து நின்று , போராட்ட குணத்துடன் அனைத்து தடைகளையும் படிக்கல்லாக மாற்றி தன்னைச் சார்ந்த சமுதாய முன்னேற்றம் கண்ட ஆண்பிள்ளை , சமுதாய செல்லப்பிள்ளை . 

பிள்ளை என்பது சாதியப் பெயரா? அப்படியென்றால் ஆண்பிள்ளை, பெண்பிள்ளை, செல்லப்பிள்ளை, அணிப்பிள்ளை, கீரிப்பிள்ளை, தென்னம் பிள்ளை, கிளிப்பிள்ளை என்றவை பின்னால் வரும் பிள்ளை ? 

தமிழில் ஒரு சொல் என்பது பல பொருட்களைக் குறிக்கும் சொல்லாக இருக்கும். அதே போல் ஒரு பொருளைக் குறிப்பதற்குப் பல சொற்களும் இருக்கும். 

ஆனால் நடைமுறையில் ஒரு சொல் என்பது ஒன்று அல்லது இரண்டு பொருளைக் குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் இருக்கும். காலப்போக்கில் மற்றவற்றைக் குறிக்கும் சொல்லாக இல்லாமல் , வழக்கொழிந்து விடும் என்பதனை பரம சாமி என்ற கட்டுரையில் கண்டோம். 

பரம் என்ற சொல் , இருபது பொருளைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது என்று தமிழ் அகராதி கூறுகிறது என்று பரம் கட்டுரையில் ஐயா நாஞ்சில் நாடான் தெரிவிக்கிறார்.

1. மேலானது 2. திருமால் நிலை ஐந்தினுள் ஒன்று 3. கடவுள் 4. மேலுலகம் 5. திவ்யம் 6. மோட்சம் 7. பிறவி நீக்கம் 8. முன் (பிங்கல நிகண்டு) 9. மேலிடம் 10. அன்னியம் 11. சார்பு 12.தகுதி 13. நிறைவு 14.நரகம் (பிங்கல நிகண்டு) 15. பாரம் (பிங்கல நிகண்டு) 16. உடல் 17. கவசம் (சூடாமணி நிகண்டு) 18. கேடய வகை 19. குதிரைமேல் அமர்வதற்கான சேணம் 20. அத்தி மரம் 

ஆனால் வழக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு பொருட்களுக்குப் பயன்படுத்தி வருகிறோம். 

அதே போல் யானை என்ற பொருளைக் குறிப்பதற்குத் தமிழில் பல சொற்கள் இருக்கின்றன. வாரணம், கைப்போதகம், களிறு, பிடி, குஞ்சரம், கைம்மா, நால்வாய், வேழம், கரி என்று 24 சொற்கள் இருக்கின்றன. 

பிள்ளை என்ற சொல் குழந்தைகளையும் , சாதியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் தமிழ் அகராதி பல அர்த்தங்களைக் காட்டுகின்றன. 

பிள்ளை (பிள் +ஐ) என்ற சொல் பிள் (அ) பிள்ளுதல் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கும் என்பது சிலரின் கருத்தாக அமைகின்றன. அதாவது பிள்ளை என்ற சொல்லுக்குக் குழந்தை, இளமை, சிறுமை என்ற அர்த்தம் கிடைக்கப் பெறுகிறது.  

பிள் அல்லது பிள்ளுதல் என்றால் பிரி, பகு, பிள, பிளவு செய் , துண்டு செய் என்ற அர்த்தம் காட்டப்படுகிறது. பிள என்றால் ஒன்றை இரண்டாகவோ அல்லது பலவகையாகவோ அறுத்தல். தாயிடமிருந்து பிளவுண்ட சேய் - குழந்தை, பிள்ளை.

அரம் என்றால் ஒன்றை இரண்டாக அறுக்கும் கருவி என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.அறம் என்பதும் அறுத்தல் என்ற சொல்லிலிருந்து ஆதாரமாக நிற்கும் என்று பகரப்படுகிறது.  அறம் என்பது பிரித்துப் பார்த்து நல்லது கெட்டது என்பதை ஆராய்ந்து, பார்த்தால் நல்லதை எடுத்து நல்வழிப்படுத்தலுக்கு உபகாரமாக இருப்பது. இதில் நல்லதைப் பிரித்துப் பார்த்து உபகாரம் செய்தவர்களைத் தமிழ் மரபில் வேளாளர் என்றும் பிள்ளை என்றும் அழைத்தனர்கள்.‌ அறத்தின் வழியில் மேன்மையைக் குறித்து நின்றவர்கள் வேளாளர் , பிள்ளை என்றால் மிகையாகாது. 

வேளாண்மை என்பதற்கு உபகாரம் என்பதனை திருக்குறளில் பரிமேலழகர் உரைக் கொண்டு அறியலாம். 

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு"

விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. 

பிள்ளை என்பவன் குடும்ப சந்ததி விருத்தி என்ற உபகாரம்‌. வள்ளுவ பெருந்தகை மக்கட்பேறு மூலம் சமுதாயத்தில் அறம் என்ற உபகாரம் பேணிக் காக்கப்படுகிறது என்று காட்டுகிறார். 

உழவுத் தொழில் என்பது உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரம். அடிப்படை. ஆதலால் பெரிய உபகாரம் என்பதனால் உழவுத் தொழிலுக்கு வேளாண்மை என்று பெயர். இங்கே இம்மைப் பயன் பொருட்டு நிற்கிறது.‌

உபகாரம் செய்த இனத்தை - வேளாளர் என்று பெயரிட்டு அழைத்தனர்கள். ஒரு தொழில் மேன்மையைக் குறித்துப் பகுத்து, அந்த தொழிலில் சிறப்புறச் செம்மைப் பெறுவதற்கு வழி வகுத்த பெருமக்கள். அந்த வேளாளர் மக்கள் சில பகுதிகளில் பிள்ளை என்றும் அழைக்கப்பட்டனர். இசைத் தொழிலை மேன்மைப் படுத்த வந்தவர்கள் இசை வேளாளர். சமுதாயத்தில் உபகாரம் செய்த மேன்மக்களைப் பிள்ளை , வேளாளர் என்று அழைத்தனர்கள் என்று புலப்படுகிறது.

வைஷ்ணவத்தில் ஆசாரியர்கள் பலர் பிள்ளை என்ற பெயரிலிருந்தார்கள் என்பதைப் பார்க்கமுடிகிறது. 

1. நம் பிள்ளை 
2. பிள்ளை உறங்காவில்லி நாஸர்
3. வடக்கு திருவீதிப்பிள்ளை
4. பெரியவாச்சான் பிள்ளை 
5. பிள்ளை உலகாசிரியன்
6. தூப்புள் பிள்ளை (தேசிகன்)
7. விளாஞ்சோலைப் பிள்ளை 
8. திருவாய்மொழி பிள்ளை 

என்று பட்டியல் நீண்டு செல்வதைக் காணலாம். இதில் பல சாதியில் பிறப்பால் பிறந்தவர்கள் இருக்கின்றனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிள்ளை என்பது சாதியின் அடையாளமாக இல்லாமல் மேன்மை பொருந்திய மக்களைக் குறிக்கும் சொல்லாக நிற்பதை வைஷ்ணவ ஆசாரியர்களின் பெயர்களிலிருந்து நன்றாகத் தெரிகிறது. பெரிய உபகாரமான ஆத்மாவை உய்விக்க வந்த மேன்மக்கள் இவர்கள். இங்கே மறுமைப் பயன் பொருட்டு நிற்கிறது. 

உபகாரம் செய்த தாவரம் தென்னை தென்னம் பிள்ளை என்றும், உபகாரம் செய்த விலங்கு அணில், கீரி போன்றவை அணிப்பிள்ளை , கீரிப்பிள்ளை என்றும், பறவைகளில் உபகாரம் செய்த கிளி கிளிப்பிள்ளை என்றும் வழக்கத்தில் அழைக்கப்படுவதையும் இங்கே சற்று நினைவில் கொள்ளவும். உபகாரம் என்பது கருப்பொருளாக உள்ளது. உபகாரம் என்பது அறம். பகுத்து, பிரித்து, அறுத்துப் பார்த்து உபகாரம் செய்தவர்கள் பிள்ளை. 

இம்மைக்கும் மறுமைக்கும் பிள்ளை தேவை. அறத்தை நிலைநாட்டப் பிள்ளை தேவை. 

மகர சடகோபன் 
தென்திருப்பேரை 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்