அன்பு அறத்தின் அடித்தளம்

தமிழ் மரபில் அறத்தின் சின்னமாக, தர்மத்தின் சின்னமாகச் செங்கோல், வெண்குடை பார்க்கப்படுகிறது . செங்கோல் , துலாக்கோல், கோல் என்று தமிழ் நூல்களில் காணப்படுகிறது. 

"செங்கோலுடைய திருவரங்க செல்வனார்" என்று ஆண்டாள் பாடியுள்ளாள். இன்றும் திருவரங்கநாதன் செங்கோலுடன்தான் புறப்பாடு கண்டருளிகிறார்.  

வள்ளுவ பெருந்தகை செங்கோன்மை என்ற அதிகாரத்தில் 

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் 
கோல்நோக்கி வாழும் குடி" 

குடி மன்னவன் கோல் நோக்கி வாழும்- குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். - பரிமேலழகர் உரை

"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்  
 நின்றது மன்னவன் கோல்"

அந்தணர்க்கு உரித்தாய வேகத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலை பெற்றது அரசனால் செலுத்தபடுகின்ற செங்கோல் - பரிமேலழகர் உரை.

கொடுங்கோன்மை அதிகாரத்தில், 

"மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் 
மன்னாவாம் மன்னர்க் கொளி"

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள் தாம் நிலைபெறுதல் செங்கோன்மையான் ஆம்; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின் அவர்க்கு அப்புகழ்கள் தாம் உளவாகா. 

தர்மத்தின் அடிப்படையில் நீதி தவறாமல் ஆட்சி புரிய வேண்டும், அரசாள்பவர்களுக்கு அவ்வப்போது அறநெறியை உணர்த்தும் சின்னமாக அரசவையில் செங்கோல் நிறுத்தப்பட்டது. அறம் என்பது அடிப்படை குணமாகக் கருதப்பட்டது. எந்தவொரு காரியம் செய்தாலும் அறம் என்ற உரைகல்லில் தேய்த்துச் செய்யப்பட்ட காரியத்தின் அறம் அறியப்பட்டது. அறத்தின் சின்னமான செங்கோலுக்குத் தமிழகத்தில் அவமானம் என்றால், அறம் வீழ்ச்சி அடைகிறது என்பதுதான் மறைமுகமாகப் புலப்படுகிறது. அற வீழ்ச்சிக்குக் காரணம் தனிமனித ஒழுக்கமின்மை. தனிமனித ஒழுக்கமே அறம். தனிமனித ஒழுக்கம் குடும்பத்தில் தொடங்க வேண்டும். இதனை எங்கே கண்டோம்? திருவள்ளுவ பெருந்தகை திருக்குறளில்.

திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பலர் இருந்தாலும் , பரிமேலழகர் உரை என்பது தனிச்சிறப்பு. அதிகார அமைப்பு என்பது சங்கிலித் தொடர் போல் தொடர்புப் படுத்தி திருக்குறளில் அழகாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனை பரிமேலழகர் உரைக் கொண்டு அறிய முடியும்.

அதிலும் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அதனை விளக்கும் போது அருமையாக இருக்கும். அவருடைய விளக்கம் என்பது மிகவும் எளிமை. உரை நிகழ்த்துபவர்களில் அடியேனுக்கு மிகவும் பிடித்தவர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களும் ஒருவர். 

அறம் என்பது பாரத தேசம் முழுவதும் பேசப்படும் முக்கியமான பொருள். அதற்குப் பலரும் பல அர்த்தங்கள் கூறலாம். நான்கு புருஷார்த்தங்களில் தலையாய புருஷார்த்தம் தருமம் என்ற அறம். அறம் பிறழ்வது என்பது தனிமனிதன் அழிவுக்கும், சமுதாய சீரழிவுக்கும் வழிவகுக்கும். 

இயற்கை சுரண்டல் என்பது அறத்தின் வீழ்ச்சி. அறத்திற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் அறத்துப் பாலில் வள்ளுவ பெருந்தகை, அறம் என்பது இல்வாழ்க்கை என்ற குடும்பத்திலிருந்து தொடங்குகிறார்.  

அஃதாவது இல்லாளோடு கூடிய வாழ்தலினது சிறப்பு. இல்நிலை அறம் செய்வதற்கு உரிய இருவகை நிலையுள் முதல் ஆதலின், இஃது அறன் வலியுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.‌ இவ்வாறு இல்லற இயல் பாயிரத்தில் பரிமேலழகர் கூறுகிறார். 

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை"

இயல்புடைய மூவர்க்கும் - அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் - அதாவது பிரம்மச்சரியம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற மூன்று நிலையில் அறநெறியோடு வாழும் மக்களை நல்வழியில் அதாவது அறநெறியில் நின்று காப்பாற்றுவது இல்லறத்தான் அறம் என்று இங்கே காட்டப்பட்டது.  

இல்லறத்துணை மூலம் அன்பு என்பது ஒருவருக்கொருவரிடையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. அன்பு, வாழ்க்கைத் துணை நலம் பேணுதல் என்ற முறையில் இருவருக்குமாக வளர்கிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து , அன்பைப் பரிமாற்றம் செய்ய மக்கட்பேறு. அன்பு பெருக்கெடுத்து அறம் தொடர்ந்து செயல்பட மக்கட்பேறு இன்றியமையாதது.  

அப்பொழுது அன்புடைமை என்ற அதிகாரத்தில் அன்பு என்பது அறம் செயல்பட எவ்வாறு துணை நிற்கிறது என்பதனை விளக்கி , அன்பு பெருக்கல் விருந்தோம்பல் என்ற சமுதாய நலன் தொடக்கமாக நின்று, மேன்மேலும் அன்பு பெருக்கல் சமுதாய பலனாக மாறி அறம் சார்ந்த சமுதாயம் உருவாக்கப்படுகிறது என்று விளக்குகிறார்.

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓப்பல் தலை" 

இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம் என்பது , அறநெறி வழுவாமல் சொல்லப்பட்ட ஐந்து பேருக்கும் செய்தல்.‌ சொல்லப்பட்ட ஐந்து பேர்கள் என்பது பித்ருக்கள் (தென்புலத்தார்), தேவர்கள் ( தெய்வம்) , விருந்தினர், சுற்றத்தார், தான்.‌ 

தான் - தனக்கு ஒழுகுவது என்பது அறமா? 

எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின், தன்னை ஓம்பலும் அறனாயிற்று. தன்னை ஓம்பாமல் மற்ற நால்வரையும் ஓம்புவது என்பது அடித்தளம் இல்லாத கட்டிடம் போல். 

அன்பு பெருக்கல் கணவன், மனைவி , குழந்தைகளையும் தாண்டி வழியும் போது விருந்தோம்பல் என்பது இல்லறத்தில் வருகிறது. அன்பின் வெளிப்பாட்டுச் சின்னமாக விருந்தோம்பல் பார்க்கப்பட்டது.‌ அன்பு பெருக்கல் சமுதாய நலன் பேணுவதற்கும் அடித்தளம். 

தென்புலத்தார் என்ற குறளில் விருந்தோம்பல் என்பதனை மத்தியில் வைத்து, அறத்திற்கு நடுநாயகமாக விருந்தோம்பல் என்று சொல்லாமல் சொல்லி வைத்தார் வள்ளுவ பெருந்தகை. 

தென்புலத்தார், தெய்வத்திற்குச் செய்யும் காரியங்கள் உயர்ந்த அறமாக இருந்தாலும் கண்ணுக்குப் புலப்படாத அறம். சுற்றத்தார்,தனக்குச் செய்யும் காரியங்கள் கண்ணுக்குப் புலப்படும்,ஆனால் உயர்ந்த அறமன்று. விருந்து என்பது கண்ணுக்குப் புலப்படும் ஆனால் உயர்ந்த அறம்.

"மாத்ருதேவோ பவ, பித்ருதேவோ பவ, ஆசார்யதேவோ பவ, அதிதிதேவோபவ" என்கிறது வேதம். 

விருந்தோம்பல் என்பது உயர்ந்த தருமம் என்று வேதம் போற்றுகிறது. அன்பு மிகுதியினால், அதன் வெளிப்பாடாகப் புலப்படுவது விருந்தோம்பல். 

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு"

மனைவியோடும் வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம், விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. 

விருந்தோம்பல் என்பதனை பெரும் வேள்வி என்று வள்ளுவ பெருந்தகை குறிப்பிடுகிறார். 

"இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்" 

அறம் செய்வதற்கு நல்ல குடும்ப அமைப்பு தேவை என்பதனை வலியுறுத்தி, அன்பு என்பது அறம் செய்வதற்கு அடித்தளமாக இருப்பதையும் வலியுறுத்தி வள்ளுவனார் கூறுகிறார். 

"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்"

என்பு இல்லாத உடம்பை வெயில் சுடுவதைப் போல அன்பு இல்லாத உயிரை அறம் சுடும். 

வெயிலுக்கான குணங்கள் என்பன வெளிச்சம் தருவது ஒன்று, சுடுவது என்பது மற்றொன்று. வெளிச்சம் என்பது கண்ணுக்குப் புலப்படும் குணம். சுடும் தன்மை என்பது கண்ணுக்குப் புலப்படாதது, ஆனால் தொட்டால் சுடும். எலும்பு இல்லாத புழுக்கள் வெயிலில் வந்து தானாகவே விழுந்து வேகமாகச் செல்ல முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும். அது போல அன்பு இல்லாதவன் கண்ணுக்குப் புலப்படாத அறத்தின் மேல் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வான். இதில் வெயில் , அறம் இரண்டின் மேல் குற்றம் இல்லை , குற்றம் என்பு இல் , அன்பு இல் என்று கூறப்படுகிறது. 

அன்பு இல்லாத இன்றைய அவசர சமூகத்தில் அறம் என்பது கேள்விக்குறியே? அதனால் அறத்தின் சின்னமான செங்கோலும் கேள்விக்குறியே? இது ஒன்றும் வியப்பில்லை. தமிழை மறந்து, தமிழ் நூல்களை மறந்து, தமிழ்த் தந்த வள்ளுவனை மறந்து, கம்பனை மறந்து, அவர்கள் தந்த அறத்தை மறந்து, தமிழ்க்குடி குடியின் பின் செல்வது ஒன்றே அறம் என்று வாழ்கிறது.  

காலம் வரும் காவலன் வருவான் 

ஆபயன் பெருகும் அறுதொழிலோர் நூல்ஒதுவர் 
காவலன் காத்து எனின்

மகர சடகோபன்
தென்திருப்பேரை 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்