பரமசாமி ( வழக்கொழிந்த தமிழ்ச்சொல்)



அம்பறாத்தூணி என்ற வார்த்தை உபயோகம் எனது நெஞ்சத்திற்கு நெருக்கமானதை உணர்ந்தேன். நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள் 18.03.2022 அன்று "கம்பன் நூல்களை வெளியிடுங்கள்" என்ற ஒரு காணொளியை அனுப்பியிருந்தார். அந்த காணொளியில் யானைக்குத் தமிழில் பல சொற்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டு, சில சொற்களையும் குறிப்பிட்டு, இதுவெல்லாம் உபயோகப்படுத்தவில்லையென்றால் அழிந்துவிடும், காலப்போக்கில் யானை என்ற ஒற்றைச் சொல் மட்டுமே தங்கும் என்றும், தமிழனுக்கு அந்த ஒரு சொல் மட்டுமே போதும் என்ற நிலையில் உள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். 

அப்பொழுது குழைக்காதர் பாமாலையிலிருந்து ஆசிரியர் நாராயண தீக்ஷிதர் குறிப்பிட்டிருந்த யானையின் மாற்றுச் சொல்லைப் பாடலுடன் குறிப்பிட்டிருந்தேன். கைம்மா, நால்வாய் என்று ஆழ்வார்கள் குறிப்பிட்டு இருந்ததையும் தெரிவித்து இருந்தேன். அவருக்குத் தெரியாது இல்லை, இருந்தாலும் நான் அறிந்தவற்றைப் பகிர்ந்து இருந்தேன். 

அதே போல் பரம் என்ற கட்டுரையில் பரமசாமி ( The Supreme Being) என்றால் கடவுள் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டிருந்தார் ஐயா நாஞ்சில் அவர்கள். 

அப்பொழுது அடியேன் திருமாலிருஞ்சோலை அழகனுக்கு பரமசாமி என்ற நாமம் உண்டு என்று குறிப்பிட்டு இருந்தேன். மதுரை பக்கம் வைணவர்கள் தங்களது பெயராக பரமசாமி என்று வைத்துக் கொள்வது வழக்கம் என்று தெரிவித்தேன். அவர் இது புது தகவல் , குறித்துக் கொள்கிறேன் என்று பதில் உரைத்திருந்தார். 

ஆசிரியருக்கு மாணாக்கர் சொல்லிக் கொடுப்பதைப் போல் உணர்ந்தேன் அன்று.‌ ஆனால் அந்த வார்த்தை யான் அறிந்தது என்பது என் திரு தகப்பனார் மூலம். அவரோ ஒரு ஞானக் கடல் , தத்துவத்தின் சிகரம் என்றால் மிகையாகாது. ஆனால் அவரிடம் சரியான முறையில் திவ்ய பிரபந்தம் கற்றுக்கொள்ளவில்லை என்ற வருத்தம் இன்றளவும் என் மனதில் சென்று கொண்டிருக்கும். அவரும் அடியேனை வற்புறுத்திச் சொல்லிக் கொடுக்கவில்லை. அவர் அன்றாடம் வழக்கு மொழியாகக் கையாளுவது என்பது ஆழ்வார்களின் அமுத மொழிகள். வீட்டில் பிரச்சினை என்றாலும் , எனது தாயாருடன் சண்டை என்றாலும், பிள்ளைகளுடன் சண்டை என்றாலும் கையாளப்படுகின்றன வார்த்தைகள் என்பது ஆழ்வார்களின் ஈரச்சொற்கள். அப்படித்தான் திவ்ய பிரபந்த சொற்கள் என் மனதில் நின்றவை. 

எனது சித்தப்பா மகன் கல்யாண பத்திரிகை அச்சடிக்க வேண்டும். அதில் வீட்டிற்குப் பெரியவர் என்ற முறையில் மாப்பிள்ளை வீட்டுத் தரப்பில் எனது திருதகப்பனார் பெயரும் , பெண் வீட்டுத் தரப்பில் பெண்ணின் அப்பாவின் பெயரான பரமசாமி என்ற பெயரை அச்சிட வேண்டும். அப்பொழுது பரமசாமி என்ற பெயரா என்ற ஒரு குழப்பம் நிலவிய சூழலில் , எனது திருதகப்பனார் பரமசாமி என்பது சுந்தரதோளுடையான் நாமம் என்றும் , அது வேறு பெயர் அல்ல , வைணவம் போற்றும் உத்தம நாமம் என்று கூறினார். (பெயர்களை வைத்து வைணவனா என்று அறியப்படும் காலமாக இருப்பதனால் , இந்த மாதிரி பல பெயர்கள் வைணவர்களிடம் வழக்கொழிந்து விட்டது) 

சிறுவயது ஆனால் இந்த சம்பவம் , அந்த சொல் என்பது என்மனதில் ஆழமாக ஊன்றி விட்டது. 

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களில் , வைணவத்தில் பரமசாமி என்பது இந்த கட்டுரையின் தகவல் . 

மகர சடகோபன் தென்திருப்பேரை 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்