கம்பனின் அம்பறாத்தூணி



சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கலைமாமணி நாஞ்சில் நாடன் அவர்களை , அவரது கோயம்புத்தூர் இல்லத்தில் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்த கால அளவு (11/2 மணி ) என்பது மிகவும் குறைவு. 

அந்த குறைந்த நேரத்தில் கம்பனின் சொல் என்பது தமிழுக்குக் கிடைத்த மாபெரும் கொடை. கம்பன் பிறந்தது என்பது தமிழுக்கும் தமிழகத்துக்கும் பெருமை என்றால் மிகையாகாது. கம்பனின் நாவில் உருவாகிய சொற்கள் என்பது கடவுளின் பூரண அருளினால் மட்டுமே என்றும் பல செய்திகளைத் தந்த வண்ணம் இருந்தார். 

தமிழ்க்கடலை சந்தித்த ஒரு மகிழ்ச்சி எனது மனதில் ஓடியது. அடியேனது சமீபத்திய படைப்பான மூன்று புத்தகங்களை அவரது பார்வைக்குக் கொடுத்தேன். பிரியும் நேரத்தில் அவர் எழுதிய "அம்பறாத்தூணி" "சங்கிலிப்பூதத்தான்" என்ற இரண்டு புத்தகங்களை வழங்கினார். 

அதில் கம்பனின் அம்பறாத்தூணி என்ற புத்தகம் அடியேனை மிகவும் கவர்ந்தது.‌ கடல் வற்றினாலும் வற்றும் ஆனால் இராமனின் கணைப்புட்டிலிருந்து கணைகள் வற்றாது. அதுபோல் கம்பனின் அம்பறாத்தூணியில் சொற்கள் வற்றாது. 

அம்பு + அறாத்+ தூணி என்று பெயர் வைத்தது என்பது மிகவும் அழகாகவும் அருமையாகவும் பொருத்தமாகவும் இருந்தது. 

புத்தகம் முழுவதும் அருமை. அதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தால் பல தொடராக எழுத வேண்டும்.  அவ்வப்போது சில சொற்களைக் கொண்டு எழுதலாம் என்பது அடியேனது விருப்பம். 

ஒரு சொல் அடியேனுக்கும் வியப்பாக இருந்தது, அதனை நாம் அறியாத சிறப்பைப் பற்றி இந்த நூலில் மூலம் அறிந்து கொள்வோம். பூஜை , பூசை , பூசனை என்றால் இறைவன் வழிபாடு அல்லது ஆராதனை என்ற அர்த்தத்தில் நாம் உபயோகப்படுத்தியுள்ளோம் அல்லது அறிந்து கொண்டுள்ளோம். 

பூஜை என்ற வடமொழிச் சொல்லுக்கு மாற்றாகத் தமிழில் பூசை என்று பெயர் வைத்தனர் என்று சொல்லுபவர்களும் உண்டு. 

பூசனை என்பது தூய தமிழ்ச் சொல். 

"பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து
வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்
நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே" 

என்பது நம்மாழ்வார் வாக்கு. 

"இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில், பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது, மழை பொழிந்திட, தளர்ந்து
ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல், எம் பெருமான் அருள் என்ன,
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை திருவல்லிக்கேணிக் கண்டேனே"

என்பது திருமங்கையாழ்வார் வாக்கு. 

பூசனை என்பதனை பூசு + அனை என்று பிரித்து , அதிலிருந்து மருவிய சொல் பூசை வந்தது என்று சொல்பவர்களும் உண்டு. 

பூசை என்பது ஆராதனைக்கான மருவிய சொல் அல்லது வடமொழிச் சொல்லுக்கு மாற்று என்ற முறையில் மட்டுமே நாம் அறிந்து இருந்தோம். 

எங்களது பகுதியில் பூசை என்ற சொல்லுக்கு அடி என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தும் வழக்கம் உண்டு. இன்னிக்கு நல்ல பூசையா அப்பாவிடமிருந்து என்று கேட்பதும் உண்டு. இருவருக்கிடையே நடக்கும் சண்டையில் ஒருவனுக்கு நல்ல பூசை என்று கூறுவார்கள். 

ஆனால் கம்பனின் அம்பறாத்தூணி என்ற புத்தகத்தில் பூசை என்ற சொல்லுக்குப் பூனை என்ற மற்றொரு அர்த்தம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் ஆசிரியர். 

அகலிகை என்ற பெண்ணை, இந்திரன் கௌதம முனி போல் மாறுவேடத்தில் வந்து புணர்ந்து , அதன்பின் கௌதம முனி வந்தவுடன் பூனையாக மாறி வெளியில் சென்றான் என்று வர்ணிக்கும் பாடலில் , பூனைக்குப் பூசை என்ற சொல்லை உபயோகப்படுத்தியுள்ளார் என்று அழகாக ஆதாரத்துடன் அகலிகை படலத்திலிருந்துக் காட்டியுள்ளார். 

"சரம் தரு சாபம் அல்லால் தடுப்ப அருஞ் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா,
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்;
புரந்தரன் நடுங்கி, ஆங்கு ஓர் பூசை ஆய்ப் போகலுற்றான்"

மேலும் சங்க இலக்கியம் பரிபாடல் , இந்த இந்திரன் அகலிகை சம்பவத்தைக் கூறும் போது, இந்திரன் பூனை வடிவில் சென்றதை விளக்குகிறது என்கிறார் ஆசிரியர். 

"இரதி காமன், இவள் இவன்' எனாஅ,

விரகியர் வினவ, வினா இறுப்போரும்;

'இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன்

சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு

ஒன்றிய படி இது' என்று உரைசெய்வோரும்" 


பாலக்காண்டத்திலிருந்து ஆசிரியர் மேலும் ஒரு பாடலைக் காட்டுகிறார். 

"ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! "


பாற்கடலில் உள்ள பால் அனைத்தையும் குடிக்கப் புறப்பட்ட பூனையைப் போல இந்த இராம காதையை நான் சொல்லப் புறப்பட்டிருக்கிறேன் என்று ஆரம்பிக்கிறார் கம்பன். 


தமிழில் பூனையைப் பூசை என்று இப்பொழுது அழைப்பதும் இல்லை, முற்றிலும் வழக்கத்தில் இல்லாத சொல்லாக மாறிவிட்டது என்றும், ஆனால் கேரளாவில் மலையாளத்தில் பூனையை "பூச்சை" என்று வழக்கமாக அழைக்கும் சொல்லாகப் பயன்படுத்தி வருவதை ஆசிரியர் அழகாகக் குறிப்பிட்டு, தூய தமிழ்ச் சொற்கள் நம்மிடம் வழக்கொழிந்த நிலையில் அண்டை மாநிலத்தவரான மலையாளிகள் உயிரோடு வைத்திருப்பதைப் பெருமையாகச் சொல்கிறார் ஆசிரியர். இந்த ஒரு சொல் மட்டும் அல்ல , தமிழகத்தில் வழக்கொழிந்த பல தூய தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் உயிருடன் இருப்பதை ஒரு பாடமாக இந்த புத்தகத்தில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.‌

இதைப் படிக்கும் போது பல பெருமாள் கோவிலில் பூனைகள் சர்வ சாதாரணமாகப் பூசனை நேரங்களில் வலம் வருவதையும் , கோவிலைச் சுற்றி இருப்பதையும் தொடர்புப் படுத்திப்பார்த்தேன். 

எனது தமையானார் கோவிலில் பூசனை செய்பவர். ஆனால் 20க்கும் மேற்பட்ட பூனைகளை வளர்க்கிறார். பூசை , பூனை என்ற சொற்களைப் படிக்கும் போது எனது தமையானாரின் செயல்களும், இந்த சொற்களில் இயல்பான ஒற்றுமைக்கும் ஒரு தொடர்பு இருப்பதை உணர்ந்தேன். 

ஒரு ஜென் கதையில் பௌத்த சந்நியாசி சமய பேருரைச் செய்யும் போது ஒரு பூனையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்தார் என்றும் , அப்படியே அச்சமயத்தில் பூனையை வைத்துக் கொண்டு பல நூற்றாண்டுகள் சமய உரை நிகழ்த்துவது என்பது ஒரு வழக்கமாக மாறிவிட்டதையும் , பின்பு காரணம் அறிந்து அதை விலக்கியதாகவும் ஒரு புத்தகத்தில் படித்தேன். இதிலும் ஒரு தொடர்பு இருப்பதை உணர்ந்தேன். 

பூனைக்கும் பூசைக்கும் உள்ள இயல்பான தொடர்பு என்பதனை நம் தாய் மொழி தமிழ் உணர்த்துவதை அறிந்து உணர்ந்துப் பெருமைப் பட்டேன் . 

தமிழை நேசிப்பவர்களுக்கு ஒரு அருமையான புத்தகம் "கம்பனின் அம்பறாத்தூணி".  

 மகர சடகோபன் 
தென்திருப்பேரை 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி