புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

ஆண்டாள் நாச்சியார் தனது இரண்டு பிரபந்தங்களிலும் இயற்கையை உணர்ந்து உள்வாங்கி ,  தான் அனுபவத்தில் கொண்டு ,  தனது கவிகளின் மூலம்  உணர்த்திய சிறந்த புலவர். இயற்கை அனுபவங்களைக் கொண்டு இயற்கையையும் படைத்த கண்ணன் பரமாத்மாவை அனுபவிக்க வந்த கவிகள் அவளது "  பிரபந்தங்கள்" என்றால் மிகையாகாது.‌

அவள் திருப்பாவையில் எழுதிய "  கீசு கீசு" என்று பறவைகளின் ஒலி சப்தங்களுடன்  பாடலைத் தொடங்கி , அதில் அந்த ஆனை சாத்தன் என்ற பறவையின் ஒலி சப்தம் இதுதான் என்று பாடலில் பாடியது என்பது, இயற்கையை எந்த அளவுக்கு உணர்ந்து பாடியிருப்பாள் என்று தமிழ் அறிஞர்கள் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 


ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஆண்டாளின் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு, இது எந்தப் பறவை , அந்த பறவையின் குணாதிசயங்கள் என்னவென்று இன்றும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்கள். 

இன்று அதிகாலை  புள்ளரையன் கோயில்  தெருவில் அடியேன் உணர்ந்தது, ஆண்டாள் அனுபவித்த "புள்ளும் சிலம்பினகாண்" என்ற பாடல் வரிகள். 

அதிகாலை பெரும்பாலும் எழுந்திருக்கும் பழக்கம் உடையவன் என்ற வகையில், காலை 3.30 மணியளவில் குயிலின் அழகான சப்தங்கள் என் காதுகளுக்கு இன்னிசை விருந்தாக இருந்தது. எழுந்திருந்து வெளியில் சென்று பார்த்தேன். குயில்கள் என் கண்களுக்குத் தென்படவில்லை. ஆனால் குயில் பாடும் சப்தங்கள் என்பது ராகத்துடன், எதிர்ப்பாட்டுடன் ஆனந்தமாக இருந்தது. அடியேன் குயிலைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியபோது, ஆண் குயில் இசை பாட அதற்கு  அதே அளவுடன் பெண் குயில்  ஒன்று பாடும் என்று குறிப்பிட்டிருந்தேன். அளவுடன் பேச வேண்டும் என்ற குணத்தைச் சுட்டிக் காட்ட எழுதியிருந்தேன். இதை இன்று அதிகாலை புள்ளரையன் சந்நிதியில் உணர்ந்தேன். 

புள்ளரையன் என்றவுடன் நம்மாழ்வார் என்ற ஆழ்வார்களின் தலைவரும், முண்டாசு கவிஞன்என்ற  நமது பாரதியும் என் மனதில் அலைந்து கொண்டிருந்தார்கள். பாரதி காக்கை , குயில் இவற்றை ரசித்து பாட்டுப் பாடியது என்பது ஞாபகம் வந்தது. 

நம்மாழ்வார் தென்திருப்பேரை பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது " புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்" என்று பாடியுள்ளார். புள் என்ற கருடப் பறவை மீது ஏறி வரும் அழகைக் காணீர்" என்று வியந்து பாடியது ,ஶ்ரீ மகரநெடுங் குழைக்காதனே புள்ளரையன் என்று அனுபவித்த பாசுர வரிகளும் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.‌

குயில்கள் அதிகாலைப் பொழுதில் இசையுடன் அழைத்துக் கொண்டிருக்க சில மணித்துளிகளில் இரட்டைவால் குருவி ஒன்று "கீசு கீச்சு" என்று ஒலித்துக் கொண்டிருந்தது. அங்கும் இங்கும் பறந்த வண்ணம், பிறகு மின் கம்பியில் அமர்ந்து, கீசு கீசு என்று ஒலிகளை அவ்வப்போது எழுப்பிக் கொண்டிருந்தது.‌ அதன் பிறகு காகங்கள் ஒலிகளை எழுப்ப , இரட்டை வால் குருவியிடம் பறந்து வர, குருவி வேகமாகப் பறக்க காகங்களும் அதைத் துரத்திக் கொண்டு பறக்க விளையாடிக் கொண்டிருந்தன.  ( காகம் இரட்டை வால் குருவியைக் குயில் என்று நினைத்து அப்படி செய்ததோ?)

இந்த இரட்டை வால் குருவி என்பதுதான் ஆண்டாள் குறிப்பிட்ட ஆனை சாத்தன் பறவை என்பது வல்லுநர்களின் கருத்து. வியாக்ன சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை தனது உரையில் பரத்வாஜ பக்ஷி என்று குறிப்பிட்டுள்ளார். பறவைகளின் ஒலிகளைக் கேட்ட வண்ணம் பூனைகள் தனது இரைகளைத் தேடும் வண்ணம் அலைந்து கொண்டிருந்தன.‌

"புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்" என்று ஆண்டாள் தனது திருப்பாவை 6வது பாட்டில் பாடியது , புள்ளரையன் என்ற தென்திருப்பேரை ஶ்ரீ மகரநெடுங் குழைக்காதன் சந்நிதியில் குயில்கள், இரட்டை வால் குருவிகள், காகங்கள் எழுப்பிய ஒலிகளை ஒரே வரியில் அனைத்து பறவைகளையும் குறிக்கும் சப்தமான புள் என்று உபயோகித்து, புள்ளும் சிலம்பினகாண் என்று பாடியது இந்த அனுபவத்தை அனுபவித்துப் பாடியிருப்பாளோ என்பதனை உணர்ந்து உணர்ந்து இன்று மெய்சிலிர்த்தேன். 

அடுத்த 7வது பாடலில் சுறுசுறுப்பாக இயங்கும் இரட்டை வால் குருவியின் ஒலிகளைத் தனியே " கீசு கீசு" என்று பாடி , அதே போல் நாமும் அதிகாலையில் எழுந்திருந்து , அதன் வேகத்தைப் போல் பறந்து " வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன் என்ற நம்மாழ்வார் அனுபவித்த கண்ணன் ஶ்ரீமகரநெடுங் குழைக்காதன் அனுபவத்திற்குச் செல்வோம் என்று பாடியிருப்பாளோ என்பதனையும் உணர்ந்தேன்

மகர சடகோபன் 
தென்திருப்பேரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்