அசுரர் அரக்கர் கட்டுரையின் நோக்கம்

ஐந்தாவது பாகம் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டோம். இதைப் பார்த்து எனது நண்பர்கள், ஐந்து பாகமாகக் கட்டுரை ஒரு ஆய்வுக்கான நோக்கம் போல்  கொண்டிருக்கிறது. அதன் காரணம் என்னவோ ? என்று வினவி இருந்தார்கள். 

இதே கேள்வி சில வாசகர்களிடம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதனால், பதிலை எல்லோரிடமும் பகரும் விதத்தில் எழுதும் கட்டுரை. 

அரக்கர் அசுரர் வார்த்தைகள் தமிழில் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும் வண்ணம் உபயோகப் படுத்தப்படுகிறது. பலரிடம் உரையாடும் போது ஒரே வார்த்தை என்பதனால் அரக்கர் இடத்தில் அசுரர் என்றும் , அசுரர் இடத்தில் அரக்கர் என்றும் உபயோகப் படுத்தலாம் , அதில் தவறு இல்லை என்று கூறுவதைக் கவனித்தேன். 

ஐந்து அல்லது ஆறு வருடத்திற்கு முன் திருப்பாவை "புள்ளின் வாய் " பாசுர அனுபவமாக ஒரு கட்டுரை வெளியிட்டேன். "பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை" என்பது  இராவணனை அழித்த ராமனைக் கொண்டாடுகிறார்கள் என்பது வ்யாக்னம். அந்த பாடல் கிருஷ்ண ராம அவதாரத்தைக் கொண்டாடும் பாசுரம். 

அடியேன் கிள்ளி என்ற சப்தம் நகத்தினால் செய்யப்படும் காரியம் என்று கருதி , நரசிம்ம அவதாரத்துடன் ஒப்பிட்டு, நரசிம்மனையும் இராமன் கிருஷ்ணனுடன் கொண்டாடுவோம் என்று எழுதியிருந்தேன். 

பொல்லா அரக்கன் என்று சொல்லுவதனால், நல்ல அரக்கன் உண்டு என்பதனை ஆண்டாள்  தெரிவிக்கிறாள், அதாவது நல்ல அரக்கன் விபீஷணன் என்பது மறைமுக அர்த்தம்.

 நரசிம்ம அவதாரத்தில் நல்லவன் பிரகலாதன் என்றும் குறிப்பிட்டிருந்தோம். 


இந்த உவமையை நிறைய வாசகர்கள் ரசித்து , நன்றாக இருக்கிறது என்று பதில் உரைத்திருந்தனர். இந்த உவமை ரசிப்பை எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் அவரது "திருப்பாவை எளிய விளக்கம் " என்ற புத்தகத்தில் அடியேனது பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.‌

இதன்பிறகு ஒரு பண்டித ஶ்ரீவைணவர், இந்தக் கருத்து தவறு என்றும் , நரசிம்மனுடன் ஒப்பிட முடியாது என்றும் , வ்யாக்யாதாரர்கள் அரக்கன் என்ற சப்தத்தை இராவணனுக்கு மட்டுமே உபயோகப் படுத்தியுள்ளனர் என்றும் , இப்படித் தவறு தவறாகக் கருத்துச் சொல்லுவது மிகவும் மோசமாக இருக்கும் என்றும், கருத்தைச் சிறுக் கோபமாகக் கூறினார். அவரிடம் இதற்கு விளக்கம் அடியேனுக்குப் புரியும்படி , ஏற்கும்படி கூறினால் ( சாதித்தால்) நன்றாக இருக்கும் என்று வினவினேன். பதில் வரவில்லை.  
 
பிறகு ஒரு சைவப் பெரியவரிடம் விளக்கம் கேட்டேன். எல்லாம் ஒரே இடத்திலிருந்து வந்ததனால் , எல்லாம் ஒன்றுதான் என்று குறிப்பிட்டு பதில் எழுதியிருந்தார். 

சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ் வார்த்தைகளை அலசி ஆராயும் அறிஞர் ஒருவரிடம் கேட்டேன். அவர் வித்தியாசத்தை நான்கு வரிகளில் அசுர சப்தம், அதற்கான உதாரணம், அரக்கர் சப்தத்துக்கு உதாரணம் இராவணன் என்று குறிப்பிட்டிருந்தார். விளக்கம் விபரமாக இல்லையென்றாலும், வித்தியாசம் இருப்பதாக அவரது நான்கு வரி சமாதானம் என்பதாக அமைந்தது. 

நம்மாழ்வார் அசுரர் அரக்கர் என்று ஒரே பாசுரத்தில் அடுத்தடுத்து உபயோகப் படுத்தியுள்ளதை அறிந்து, அதன் காரணம் என்ன என்பதனையும், இரண்டு வார்த்தைகளும் ஒன்று என்றால் இப்படி ஆழ்வார் உபயோகம் செய்து இருப்பாரா? என்று மனதுக்குள் வினவி,

இந்த தேடலின் தொடரே, திவ்ய பிரபந்தம் மூலமாகவே விடை தேட ஆரம்பித்து , இந்தக் கட்டுரைகளின் வடிவம் உங்கள் முன், நீங்களும் பயன்பெறும் படி எழுதி வருகிறேன். 

இதுவே இந்த கட்டுரைத் தொடரின் நோக்கம். 

மகர சடகோபன்
தென்திருப்பேரை 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்