அசுரர் அரக்கர் -7 (அவுணன்)

ஆழ்வார்கள் அவுணன் என்ற சொல்லை பெரும்பாலும் அசுரர்களைக் குறிக்கும் சொல்லாக உபயோகப்படுத்தியுள்ளார்கள்.‌

"கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்
குருதி குழம்பி எழ கூர் உகிரால்" 

"முன் நரசிங்கமது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான்"
                     - பெரியாழ்வார் 

"பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு  அரிய ஆதிப்பிரான்" 
               - திருப்பாணாழ்வார் 

"அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்"
           - திருமங்கையாழ்வார்

"அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே"

"புக்க அரி உரு ஆய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன" 

"செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்"
                            - நம்மாழ்வார் 

மேற்கூறிய பாசுரங்களில் அவுணன் என்பது ஹிரண்யகசிபுவைக் குறிக்கும் வண்ணம் ஆழ்வார்கள் பாசுரங்களை அமைத்துள்ளார்கள். 

"அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான்" 

"வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான்"

"ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப, ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து"

மேற்கூறிய பாசுரங்களில் அவுணர்க்கு நாயகன் என்று ஹிரண்யகசிபுவின் பரம்பரையில் வந்த மாவலியைக் குறிக்கும் வண்ணம் அவுணன் சொல்லை அமைத்துள்ளார் திருமங்கையாழ்வார். 

"தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச்"
           - திருநெடுந்தாண்டகம்

தெற்கேயுள்ள இலங்கை கோட்டைகள் அழிந்து , இராவணன் முடிந்தான் என்ற வரலாற்றை கூறும்போது, அவுணன் என்றால் அரக்கன் இராவணன் என்று பாடலைத் திருமங்கையாழ்வார் அமைத்துள்ளார். 

அவுணன் என்ற சொல் பெரும்பாலும் அசுரனை அதாவது ஹிரண்யகசிபு , மாவலியைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தினாலும், ஒரு பாட்டில் ஆழ்வார் அரக்கன் இராவணனைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தியுள்ளதை அறியும்போது , அவுணன் என்ற சொல் அசுரன் அரக்கனைக் குறிக்கும் பொதுச் சொல் என்பது புலப்படுகிறது. 

கம்பராமாயணத்தில் அவுணன் 

"அன்னவன் எமக்கு அரசன் ஆகவே
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள்
முன்னவன் குலப் பகைஞன் முட்டினான்
மின் எயிற்று வாள் அவுணன் வெம்மையான்"

மிகக்கோபமுடைய ஒளிவீசும் கூர்மையான பற்களையுடைய அசுரன் மாயாவி (துந்துபி சகோதரன் அல்லது மகன் என்ற கருத்தும் உள்ளது) வாலியுடன் போர் செய்தான். 

தமிழ் தாத்தா உ வே சா  துந்துபி அரக்கன் என்று குறிப்பிட்டு , அவனது மூத்த மகன் மாயாவி என்று  இந்த பாடலில் குறிப்பிடுகிறார். 

"துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன், மீது
இந்துவைத் தொட நிமிர்ந்து
எழு மருப்பு இணையினான்
மந்தரக் கிரி எனப் பெரியவன், மகர நீர்
சிந்திடக் கரு நிறத்து
    அரியினைத் தேடுவான்" 

மேலேயுள்ள சந்திரனைத் தொடும் படியாக மேலெழுந்து வளர்ந்துள்ள இரண்டு கொம்புகளை உடையவனும், மந்திர மலைப் போன்ற பெரிய உருவம் உடையவனும், மிகவும் கோபம் கொண்ட 
துந்துபி என்ற அசுரன், கடல் நீர் சிதறிச் சிந்தும்படி, கரிய நிறத்துடைய திருமாலை  போரிடத் தேடிச்சென்றான் என்ற வரலாற்றை சுக்ரீவன் இராமனுக்குக் கூறுவதாக கம்பர் அமைத்துள்ளார். 

தமிழ் தாத்தா உ.வே.சா துந்துபி அசுரன் என்று இந்த பாடலில் கூறுவதன் மூலம் , அவுணன் என்ற சொல் பொதுச் சொல்லாக அமைந்துள்ளது என்பது தெரிகிறது. 

மயன் என்பவன் கட்டடத்துறையில் மிகப் பெரிய ஞானி. அவனது மகன் துந்துபி,  மகள் மண்டோதரி. மண்டோதரி இராவணனின் மனைவி. இந்தக் கோணத்தில் பார்த்து முதல் பாடலில் துந்துபி அரக்கன் என்று தமிழ் தாத்தா  உ.வே.சா கூறுகிறரா? 

"இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து இகல்
அந்தகற்கு அரிய போர் அவுணன் தேய்த்தனன்;
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன்
வெம் துயர்க் கொடும் பழி வில்லின் தாங்கினேன்"

தசரதன் சம்பரன் என்ற அசுரனை அழித்து இந்திரன் துயரந் தீர்த்ததைக் கூறும் பாடல்

"நின்றான், எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்சத்
தன் தோள் வலியால் தனி மால் வரை சாலும் வாலி,
குன்றூடு வந்து உற்றனன்; கோள் அவுணன் குறித்த
வன் தூண் இடைத் தோன்றிய மா நரசிங்கம் என்ன"

அவுணன்  ஹிரண்யகசிபுவை அழிக்க வலிய தூண்களுக்கு இடையில் தோன்றிய பெரிய நரசிம்மன் என்று கூறும் பாடல்.‌

"பண்டு நான்முகன் படைத்தது, கனகன் இப் பாரைத் தொண்டு கொண்டது, மது எனும்
அவுணன் முன் தொட்டது,
உண்டு இங்கு என்வயின் அது துரந்து உயிர் உண்பென் ‘என்னா" தண்டு கொண்டு எறிந்தான், ஐந்தோடு ஐந்துடைத் தலையான்"

பண்டைக்காலத்தில் பிரமனால் படைக்கப்பட்டதும், இந்திரன் இவ்வுலகத்தை வெல்வதற்கு காரணமாக இருந்ததவும், அசுரன் மது கையில் ஏந்தி இருந்த தண்டாயுதம் இங்கு என் கையில் உள்ளது. அதனை ஏவி உயிரை உண்பேன் என்று கருதி பத்து தலை இராவணன் கதாயுதத்தால் தாக்கினான். 

அவுணன் என்ற சொல் பெரும்பாலும் அசுரனைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் ஒரு இடத்தில் அவுணன் என்ற சொல்லுக்கு அரக்கனைக் குறிப்பிடுகிறார். 

கம்பராமாயணத்தில் அவுணன் என்ற சொல் அசுரனைக் குறிக்கும் சொல்லாக கம்பர் அமைத்துள்ளார் என்பது நன்றாகத் தெரிகிறது. 

ஆனால் துந்துபி என்பவன் அசுரனா அல்லது அரக்கனா என்பதில் ஒரு இடத்தில் உ.வே.சா உரையில் கருத்து பேதம் இருப்பது தெரிகிறது. ஆனால் அவுணன் என்ற சொல்லுக்கு அசுரன் என்றே அர்த்தத்தைக் காண்பிக்கிறார் தமிழ் தாத்தா உ.வே.சா. 

அசுரன் அரக்கன் என்பது  இரு வெவ்வேறு கணங்கள், அது வேறு வேறு என்றும், சில ஒற்றுமைகள் இருப்பதையும், இதுவரை திவ்ய பிரபந்தம், கம்பராமாயணம் பாடல்கள் மூலம் அறிந்தோம். 

இராக்கதர் என்ற சொல் அரக்கனைக் குறிப்பதாகவும், தானவர், அவுணர் என்ற சொற்கள் அசுரனைக் குறிப்பதாகவும் திவ்ய பிரபந்தம், கம்பராமாயணம் பாடல்கள் மூலம் அறிந்தோம். 
  
ஆழ்வார் வாழி அருளிச்செயல் வாழி 

கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழி 
கம்பனின் கவிகள் வாழி 

             * சுபம் முற்றும் *

மகர சடகோபன்
தென்திருப்பேரை 









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்