அசுரர் அரக்கர் - 6 (இராக்கதர் தானவர்)



அசுரர் அரக்கர் பற்றி நூல்களிலிருந்து தேடும்போது அதற்கு ஈடான வார்த்தைகளை ஆழ்வார்களும் கம்பரும் உபயோகப்படுத்தியுள்ளது என்பது தெரியவந்தது.‌

இராக்கதர்

ஆழ்வார்களும் கம்பனும் அரக்கன் என்ற சொல்லுக்கு இராக்கதர் என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர்கள்.

"இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு"
                        - பெரியாழ்வார் 

அரக்கர்கள் வாழும் இலங்கை என்பது ஆழ்வார் பாடல்.

"அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன்"
                        - பெரியாழ்வார் 

அசுரர் அரக்கர் குலத்தை களைந்த இருடிகேசன் என்ற எம்பெருமான் என்பது ஆழ்வார் பாடல்

"முன நாள் வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலைபோல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின்"
           - திருமங்கையாழ்வார் 

சூர்ப்பணகை என்ற அரக்கி மூக்கை அரிந்திட்ட வரலாற்றைக் கூறும் ஆழ்வார் பாடல்.‌

கம்பராமாயணத்தில் இராக்கதர்:

இராக்கதர் சொல்லைக் குறிக்கும் பல பாடல்கள் இருந்தாலும்,  சில பாடல்கள் இங்கே. 

"தரெிகணை மாரி பெய்ய,
    தேர்களும், சினைக் கைம் மாவும்,
பரிகளும், அரக்கர் தாமும்,
    பட்டன கிடக்கக் கண்டார்
இருவரும் நின்றார்; மற்று அங்கு
    இராக்கதர் என்னும் பேரார்
ஒருவரும் நின்றார் இல்லை;
    உள்ளவர் ஓடிப் போனார்"

"என்ற காலையின், ‘என்றுகொல்
    ஏவுவது? ‘என்று
நின்ற வாள் எயிற்று அரக்கனும்
    உவகையின் நிமிர்ந்தான்;
சென்று தேர்மிசை ஏறினன்;
    இராக்கதர் செறிந்தார்,
குன்று சுற்றிய மதகரிக் குலம்
    அன்ன குறியார்"

"என்னினும் வலியர் ஆன
    இராக்கதர் யாண்டும் வீயார்
உன்னினும் உலப்பு இலாதார்;
    உவரியின் மணலின் மிக்கார்;
“பின் ஒரு பெயரும் இன்றி
    மாண்டனர் “ என்று பேசும்
இந்நிலை பொய்ம்மை; மெய்ம்மை
    விளம்புவீர் விரைவின் என்றான்"

இராவணன் அவனது குலத்தை இராக்கதர் என்று அழைத்து , கடல் மண் போன்று எண்ணற்ற அரக்கர் குலத்தில், தனது குலத்தில் பெயர் சொல்வதற்கு ஒருவர் கூட இருக்க மாட்டார்கள் என்று அரக்கன் இராவணன் புலம்பலைத் தெரிவிக்கிறார் கம்பர். 

அரக்கர் , இராக்கதர் என்று ஒரே அர்த்தங்களைக் கொண்ட இரண்டு சொற்களையும் ஒரே பாட்டில் அமைத்திருப்பது என்பது கம்பரின் அழகு. 

தானவர்: 

தானவர் என்ற சொல்லை பெரும்பாலும் ஆழ்வார்களும் கம்பரும் அசுரனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தியுள்ளனர்.  தானவர்கள் என்பவர்கள் தட்சனின் மகள் தனு விற்கும், காஷ்யப ரிஷிக்கும் பிறந்தவர்கள். தானவர்கள் , தைத்தியர்கள், அசுரர்கள் பதினெட்டு கணங்களில் தனித்தனியே இருந்தாலும் , குணத்தின் அடிப்படையில் அசுரர்கள் என்று ஒரு சொல்லின் மூலம்  தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியப்படுகிறார்கள். 

தானவன் என்ற சொல்லை ஆழ்வார்கள் பல பாசுரங்களில் பயன்படுத்தியுள்ளனர்கள். அதில் சில, 

"தானவன் வேள்வி-தன்னில் தனியே குறள் ஆய் நிமிர்ந்து
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்"

தானவன் வேள்வி என்பது மாவலி யாகம் , மாவலியை அசுரன் என்ற சொற்களினால் குறித்து பாசுரம் ஆழ்வார்கள் அமைத்திருந்ததைப் பாகம் - 4ல் பார்த்தோம்.

"எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள்
அம் கண் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே"
           - திருமங்கையாழ்வார்

தேவர்கள் அசுரர்கள் கூட்டமாக நின்று வழிபடும் வேங்கடவன் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.  

வானவர் தானவர் , தேவர் தானவர் என்று ஆழ்வார்களும் , கம்பனும் நிறைய இடங்களில் அடுக்கு மொழியாக அடுத்தடுத்து உபயோகப் படுத்தியுள்ளதைப்  பார்க்கமுடிகிறது. 

"மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு
கூறாகக் கீறிய" 
            - திருமழிசையாழ்வார்

"தானவன் மார்வு அகலம் இரு கூறா நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே"
                           - நம்மாழ்வார் 

மேற்கூறிய இரண்டு பாசுரங்களிலும் ஹிரண்யகசிபு என்ற அசுரனைத் தானவன் என்று  குறித்து பாசுரம் அமைத்துள்ளார்கள் ஆழ்வார்கள்.

அசுரர்களைக் குறிக்கும் சொல்லாக "தானவன்" சொல்லை உபயோகப் படுத்தியுள்ளது தெரியவருகிறது. ஆனால் கீழே பார்க்கும் பாசுரத்தில் அசுரத் தன்மையுடன் ஒப்பிடும்போது சிறு அர்த்த மயக்கம் ஏற்படுகிறது. 

"தையலாள்மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும்" 
                -பெரிய திருமொழி 

இராவணன் வரலாற்றைக் கூறும் பாசுரத்தில் "தானவன்"  "வாளரக்கன்" என்ற வார்த்தையுடன் சேர்த்து வைத்திருப்பதைப் பார்த்தால் , தானவன் என்ற சொல் அரக்கனைக் குறிப்பதாக நினைக்கும்படி அமைந்துள்ளது. 

ஆனால் வ்யாக்னத்தில் அசுர குணத்தைக் கொண்டுள்ள அரக்கனைக் குறிக்கும் சொல்லாகக்  காட்டியுள்ளார்கள்.  இராவணனுடைய செயல் என்பது அசுர தன்மை கொண்டது என்பது இப்பாசுரத்தின் மூலம் புலப்படுகிறது. 

இந்த நிலைப்பாடு என்பது நம்மை மேலும் அர்த்த மயக்கத்தில் ஆழ்த்தி, இராவணனையும் அசுரன் என்று அழைக்கலாமோ? எண்ணும்படியாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது. 

அசுர சக்தி படைத்தவர்கள் தானவர்கள் , தைத்தியர்கள், அசுரர்கள். அந்த அசுர சக்தி படைத்தவன் அரக்கன்  இராவணன் என்பது திருமங்கையாழ்வார் வாக்கு. 

கம்பர் தானவர் என்ற சொல்லை 50க்கும் மேற்பட்ட பாடல்களில் உபயோகப் படுத்தியுள்ளார். 

"இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்
தந்திரம் படத் தானவர் 
இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்
தந்திரம் படத் தானவர் வானவர்;
மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு
அந்தரம் இனி யாது கொல் ஆம்? ஐயா!

கம்பரும் தானவர் என்ற சொல்லை அசுரனைக் குறிப்பதாகப் பாடலை அமைத்துள்ளார் அனைத்து பாடல்களிலும். 

"திருக் குவால்மலி செல்வத்துச்
    செருக்குவேம் திறத்துத்
தருக்கு மாய்வுற, தானவர்
    அரக்கர்
வெஞ் சமரில்
இரிக்க, மாழ்கி நொந்து, உனைப் புகல்
    யாம்புக, இயையாக்
கருக்குளாய் வந்து தோற்றுதி;
    ஈங்கு இது கடனோ?"

கம்பர் யுத்த காண்டத்தில் இந்த பாடலில் தானவர் அரக்கர் என்ற சொல்லை, நம்மாழ்வார் அசுரர் அரக்கர் என்று பயன்படுத்தியதைப் போல் அடுத்தடுத்து உபயோகப்படுத்தி இரண்டிற்குமான வித்தியாசத்தை எடுத்துக்காட்டி , தானவர் என்பது அசுரனைக் குறிக்கும் சொல்லாகக் குறிப்பிடுகிறார்.  

கம்பராமாயணம் தமிழ் தாத்தா உ. வே.சா. அவர்கள் உரையில் தானவர் என்று சொல்லுக்கு அனைத்து பாடல்களிலும் அசுரர் என்ற அர்த்தமே குறிக்கப் பட்டிருக்கின்றது என்பது மிகவும் கூடுதலான தகவல்.

அவுணன் என்ற சொல்லை அடுத்த பாகத்தில் ...........

மகர சடகோபன் 
தென்திருப்பேரை 

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்