அசுரர் அரக்கர் - 5

அரக்கர் என்பவர்கள் யார் என்றும் அசுரர் என்பவர்கள் யார் என்றும், ஆழ்வார்கள் கம்பன் நூல்களிலிருந்துப் பார்த்தோம். 

அரக்கர் அசுரர் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன என்பதனை ஆழ்வார்கள் கம்பன் பாசுரங்கள் மூலம் அறிகிறோம். 

வலிமை மற்றும் கூர்மையான பற்கள் கொண்ட முக அமைப்பு 

"வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை"
  - பெரியாழ்வார் திருமொழி

"மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவற்கு அருள் புரிந்து அரசு-அளித்த பெற்றியோய்"
                 - திருசந்த விருத்தம்

"இலங்கை-தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான்"
                 - பெரிய திருமொழி

"மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன்"
                       - வில்லி பாரதம் 

அரக்கர் என்பவர்கள் வலிமையானவர்கள் (வல்லாளன்), உயர்ந்த கூர்மையான பற்களைக்    (வாள் எயிற்று) கொண்டவர்களாக இருந்தார்கள் என்பது பாசுர வார்த்தைகளின் மூலம் தெரியவருகிறது.

"வரத்தினிற் சிரத்தை மிக்க வாள்-எயிற்று மற்றவன்
உரத்தினிற் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்" 
               - திருசந்தவிருத்தம்

மிக்க வரம் பெற்ற கூர்மையான பற்களைக் கொண்ட அசுரன் ஹிரண்யகசிபு உடம்பை கைநகங்களினால் கிழித்த வைபத்தைக் கூறுகிறார் திருமழிசையாழ்வார்.‌

"கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகி கொடு வல் அசுரர் குலம் எல்லாம் சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வக்  கோமானே"
                     - திருவாய்மொழி 

கொடுமையான வலிய அசுரர் குலமெல்லாம் என்று நம்மாழ்வார் குறிப்பிடுகிறார்.

"அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே? ஓ"
                      - திருவாய்மொழி

வலிய அசுரர் குலத்தை வேர் அறுத்த பெருமானே என்று நம்மாழ்வார் குறிப்பிடுகிறார். 

"கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்"

"நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்று அடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்"

வாழ்ந்த உலகம்

இவர்கள் மூன்று லோகத்தில் பூலோகத்தில் வாழ்ந்தவர்கள் என்பது "இலங்கையர் கோன்" என்ற சொல்லின் மூலம் இலங்கை நிலப்பரப்பில் என்று தெரிகிறது. 

அசுரர்கள் கீழுலகில் அழுத்தி எழுந்து வொட்டாதபடி இருந்தார்கள் என்பதை ஆழ்வார்கள் பாசுரங்கள் மூலம் அறிந்தோம். இருப்பினும் 
அசுரர்கள் நிலப்பரப்பில் வாழ்ந்தார்கள் என்பதற்கு மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டு , பாதாளம் முதல் விண்ணுலகம் மூன்றையும் அளந்தார் என்பதன் மூலம் அசுரர்கள் நிலத்தில் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. 

மேலும் கிருஷ்ணன் மதுரா நகரில் பிறந்து , உருவம் மாறி வந்த அனைத்து அசுரர்களையும் இங்குதான் வதம் செய்தார் என்று பார்க்கும்போது அசுரர்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்தார்கள் என்பது தெரிகிறது. 


உருவ அமைப்பு மாற்றும் சக்தி

அரக்கர்களுக்கு உருவங்களை மாற்றிக் கொள்ளும் தன்மை இருந்ததா? என்றால் , இருந்தது என்பது ராவணன் மாரீசன் கதைகளிலிருந்துத் தெரியவருகிறது.‌ 

"பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்"

"சிலை வணக்கி மான் மறிய எய்தான்தன்னைத்"

உருவ மாற்றும் சக்தி இவர்களுக்கு உண்டு என்பது மாரீசன் பொன்மானாக மாறும்போது தெரியவருகிறது. மேலும் சுந்தர காண்டத்தில் சீதை அனுமனை அசோக வனத்தில் முதலில் பார்க்கும் போது, இவன் இராவணனாக இருக்குமோ என்று ஐயப்படுகிறாள். இராவணனே குரங்காக வேடமிட்டு வந்திருக்கிறான் என்று பயப்படுகிறாள்.‌ வேறு மனித உருவத்தில் பரனசாலைக்கு வந்து சீதையைக் கவர்ந்து சென்றான். இதிலிருந்து இராவணனுக்கு உருவ மாற்றம் செய்யும் சக்தி இருந்ததாகவும் தெரிகிறது. 

அசுரர்கள் பூதணை, கேசி, பறவை, கன்று , விளாமரம், சகடம், குவலாய பீடம் என்று பல உருவங்களில் வந்து பகவான் கிருஷ்ணனைத் தாக்கினார்கள். தாக்கியவுடன் அழிந்தனர் என்பதனைப் பல பாசுரங்களில் மூலம் முன் கட்டுரையில் பார்த்தோம். உருவங்களை மாற்றும் தன்மை அனைத்து அசுரர்களுக்கும் இருந்தது என்பது மேற்கூறிய அசுரர் வரலாற்றிலிருந்தும், காகாசுரன் வரலாற்றிலிருந்தும் நன்றாக தெரிகிறது. 

நல்லவர்கள் தீயவர்கள் 

அரக்கர்கள்  குணங்களிலானல்  நல்லவர்கள் தீயவர்கள் என்று  இருப்பதை விபீஷணன் இராவணன் மூலம் முறையாக அறிந்தோம்.

"கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன் 
குணங்கள் தூயோன்"  என்று தூயோன் விபீஷணன் என்று கம்பர் கூறுவதைப் பார்த்தோம். 

அசுரர்களில் குணங்களிலானல்  நல்லவர்கள் தீயவர்கள் என்று  இருப்பதை பிரகலாதன் ஹிரண்யகசிபு மூலம் முறையாக அறிந்தோம்.

'ஆயவன் தனக்கு அருமகன்,
    அறிஞரின் அறிஞர்ன்,
தூயர் என்பவர் யாரினும்
    மறையினும் தூயன்,
நாயகன் தனி ஞானி, நல்
    அறத்துக்கு நாதன்,
தாயினி மன்னுயிர்க்கு அன்பினன்,
    உளன் ஒரு தக்கோன்'

பிரகலாதனை விட அறிஞரும் , தூயவனும் இல்லை என்பது கம்பர் வாக்கு. நல் அறத்துக்கு நாதன், தாயை விட அன்பில் சிறந்தவன் பிரகலாதன் என்று கவிச்சக்கரவர்த்தி குறிப்பிடுகிறார்.‌

இவ்வாறு பல ஒற்றுமைகள் இருப்பதனாலும், ஒரே இடத்திலிருந்து தோன்றியவர்கள் என்பதனாலும் , அரக்கன் அசுரன் என்ற சொல்லை ஒரு சொல்லாகப் பயன்படுத்தியதில் தவறு இல்லை என்று கருதியதால், பலர் தமிழில் ஒரே அர்த்தத்தில் உபயோகப்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரியவருகிறது.‌

ஆனால் ஒற்றுமைகளை வைத்து இரண்டு வார்த்தைகளும் ஒன்று என்று கருதும்படி இருந்தாலும், ஆழ்வார்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பன் போன்ற ஞானம் படைத்தவர்கள் அரக்கர் , அசுரர் வார்த்தைகளை  வேறுபடுத்திக் காட்டியுள்ளார்கள். 

அவுணன் , தானவன் என்ற சொற்களும் மேற்கூறிய அரக்கர் அசுரர் வார்த்தைகளுக்குப் பொருந்தும்படி இருப்பதால், அவர்கள் யார்? அவர்களைப் பற்றி ஆழ்வார்களின் கருத்துகளையும் அடுத்த பாகத்தில்........

மகர சடகோபன்
தென்திருப்பேரை 











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்