அசுரர் அரக்கர் - 4

அசுரர்கள் என்பவர்கள் காஷ்யப ரிஷி திதி தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகள். இதைத் தெளிவாகக் கம்ப இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் சடாயுகாண் படலத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வர்ணிக்கிறார். 
  
உலக உயிர்களின் தோற்ற வரலாறு என்று 5 பாடல்களில் கம்பன் , தக்கன் மகள்கள் பதின்மூவர் காஷ்யப ரிஷியை மணந்து , உயிர்கள் உருவாகுவதை விளக்குகிறார். 

"தக்கன் மனை வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள் தொக்க பதின்மூவரை அக்காசிபனும் புணர்ந்தனன்; அத் தோகைமாருள் மிக்க அதிதிப் பெயராள், முப்பத்து
முக்கோடி விண்ணோர் ஈந்தாள்; மைக் கருங் கண் திதி என்பாள், அதின்
இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள்" (2805)

அதிதி மூலமாகப் பிறந்தவர்கள் விண்ணோர் கள் என்றும் , தேவர்கள் என்றும், அமரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படுகிறது. 

ஆண்டாள் திருப்பாவையில் "முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்" என்று முப்பத்து முக்கோடி தேவர்களை அமரர்கள் என்று அழைக்கிறாள். 

திருமால் வாமன அவதாரம் எடுக்கும் காலத்தில், காஷ்யப ரிஷி மற்றும் அதிதி தம்பதியினரை வாமன அவதாரத்தில் பெற்றோர்களாகத் தேர்ந்தெடுக்கிறார் என்பதையும் அறிவோம். தேவாதி தேவனும் இந்தக் கணத்தைத்தான் அவதாரம் செய்வதற்காக தேர்ந்தெடுக்கிறார் என்பது மூலம் இக்கணத்தின் பெருமையை நாம் அறியலாம். 

காஷ்யப ரிஷி திதி தம்பதியினருக்குப் பிறந்தவர்கள் தைத்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த தைத்தியர்கள் பெரும்பாலும் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

"கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே"

பாதாள உலகத்தில் வாழும் அசுரர்களை கிளம்ப வொட்டாதபடி கருவழித்தான் அரங்கன் என்று பெரியாழ்வார் தெரிவிக்கிறார். இதிலிருந்து ஒரு விஷயம் புரிகிறது, வானுலகில் தேவர்களும், பூலோகத்தில் மனிதர்களும் , பாதாளத்தில் அசுரர்களும் வாழ்ந்தார்கள் என்ற கருத்திற்குப் பெரியாழ்வார் பாசுரம் வலு சேர்க்கிறது.

இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணத்தில் இராமன் பெரும்பாலும் அரக்கர்களுடன் போரிட்டு அவர்களை அழித்து தருமத்தைக் காத்த வரலாற்றைக் கூறுகிறது. மற்றொன்றான மகாபாரதத்தில் கிருஷ்ணர் அசுரர்களை வதம் செய்து தருமத்தைக் காத்த வரலாற்றைக் கூறுகிறது.‌

“மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய

வாணாசூரன் அல்லது பாணாசூரன் என்பவன் மகாபலி சக்கரவர்த்தியின் புதல்வன். ஆயிரம் தோள்களுடையவன் வாணன். அவனது ஆயிரம் தோள்களையும் குருதிகள் பொழிய வெட்டியவன் கிருஷ்ணன் எம்பெருமான். 


"பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு"

பறவை உருவத்தில் வந்த கள்ள அசுரன் "பகாசுரனை" வதம் செய்ததைப் பெரியாழ்வார் தெரிவிக்கிறார்.

"கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரர் தம்மைச் சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே
விளங்காய் எறிந்தாய் போலும்"

கன்றின் உருவில் வந்த "வத்ஸாசுரன்" என்ற அசுரனின் வாலைப் பிடித்து, விளங்காய் உருவத்திலிருந்த "கபீத்ஸாசுரன்" என்ற அசுரன் மேல் எறிந்து, இரண்டு அசுரர்களையும் கிருஷ்ணன் வதம் செய்தார். 

"முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட
மாயனார் மன்னிய கோயில்"

நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரன் ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்து வதம் செய்ததைத் தெரிவிக்கிறார் ஆழ்வார். 

"ஆராத போரில் அசுரர்களும் தானுமாய் கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக பேராமல் தாங்கிக் கடைந்தான்"

தேவர்கள் அசுரர்கள் அமுதத்தை எடுக்கும் போரில் பாற்கடலைக் கடைந்த நிகழ்வைத் தெரிவிக்கிறார் சிறிய திருமடலில் திருமங்கையாழ்வார்.

"பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல்"

 வாமன அவதாரத்தில் மாவலி என்ற அசுரனை வஞ்சித்து உலகம் அளந்த வைபவத்தை விளக்குகிறார் பெரியதிருமடலில் திருமங்கையாழ்வார்.‌

"தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே"

சகடாசுரனுடைய உடலானது கட்டுக்குலைந்தும் நடுவே முறிந்தும் வேறாகும்படி பிளந்து உருமாயத் திருவடியால் காரியம்கொண்ட பெருமானே கிருஷ்ணன்! என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் தெரிவிக்கிறார்.

"நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோல் துணித்த"

நரகாசுரன் என்ற அசுரனை சத்யபாமா கொண்டு  அழித்தவன் கிருஷ்ணன். வாணா சூரன் தோள்களைத் துணித்தவன் கிருஷ்ணன்.‌

பேரன் மகாபலி, அவரது புதல்வன் வாணனை ஆழ்வார்கள் அசுரன் என்று அழைப்பதைப் பார்க்க முடிகிறது.‌ இவர்களில் ஒருவனாக இருந்த பிரகலாதனை ஆழ்வார்கள் அசுரன் என்று அழைக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.‌

"பொய்ம் மாய மருது ஆன அசுரரைப் பொன்றுவித்து இன்று நீ வந்தாய்"

நாரதரின் சாபத்தால் பல ஆண்டுகளாக இரண்டு மருதமரங்களாய் நின்றனர் நளகூபரன்,மணிக்ரீவன் என்னும் இரண்டு அசுரர்கள். உரலில் கட்டுண்ட எம்பெருமான் உரலைக் கொண்டு மருதமரத்தைச் சாய்த்து அவர்களுக்குச் சாபவிமோசனம் கொடுத்தார் என்று பெரியாழ்வார் தெரிவிக்கிறார். 

இவர்கள் இருவரும் குபேரனின் புதல்வர்கள். குபேரன் யட்சகர்கள் குலம் என்றும் , விஸ்ரவ முனிவருக்கும் பரத்வாஜ ரிஷி பெண் இலவித அல்லது இலவிலாக்கும் பிறந்தவன் என்றும் முதலில் பார்த்தோம். குபேரன் மற்றும் இராவணன் விஸ்ரவ முனிவரின் குழந்தைகள். 

"மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான்"
என்று இராவணனை அரக்கர் குலத்தில் பிறந்தவன் என்று கூறிய ஆழ்வார், யட்சகர் குலத்தில் பிறந்த குபேரனின் இரு குழந்தைகளை யட்சகர் என்று அழைக்காமல், அசுரர் என்ற சப்தத்தினால் ஆழ்வார் அழைக்கிறார். அவர்கள் தம் செருக்கினால் இறுமாப்பினால் நாரத முனிவரிடம் சாபம் பெற்று ,  இரட்டை மருத மரமாக நின்றனர் என்ற காரணத்தினால் என்பதுதான் புலப்படுகிறது.

"ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த
அடல் ஆழித் தடக் கையன்"

நரகாசுரன் வராக அவதாரத்தில், பூமி தாயாருக்கு மகனாகப் பிறந்தவன் என்றும், தாய் ஒருவரால் மட்டுமே மரணம் என்ற வரத்தை வாங்கி பல காலம் வாழ்ந்து அனைவரையும் துன்புறுத்தி வந்தவன். அந்த நரகாசுரனைக் கிருஷ்ண அவதாரத்தில் சத்யபாமா கொண்டு வதம் செய்து , தாயாரின் வேண்டு கோளுக்கிணங்க அவனது இறந்த தினத்தைத் தீபாவளி என்று சந்தோஷத்துடன் அனைவரும்  கொண்டாடி வருகிறோம். பூமி தாயாருக்கு மகனாய் தோன்றிய நரகாசுரன் என்பவன் அசுரர் குலம் என்று தெரிய வருகிறது.

 அசுரர்களும் வலிமை பொருந்தியவர்கள், உருவங்களை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்பதும் மேலேயுள்ள பாசுரங்கள் மூலம் தெரிய வருகிறது. 

இந்திரன் தேவர்கள் குலத் தலைவன் என்று கருதப்பட்டாலும் , அவனது செயல்கள் தாழ்ந்த நிலையிலிருந்தது என்று, அகலிகை வரலாற்றின் மூலம் அறிகிறோம். அவனது புதல்வன் ஜெயந்தன், காகம் வடிவம் எடுத்து சீதையின் மார்பைத் தீண்டி, காகாசுரன் கண்கள் அறுபட்ட வரலாற்றை இராமாயணத்தில் பார்க்கிறோம். ஏன் இந்திரனைக் கூட அசுரன் என்று அழைக்கக்கூடாதா? என்று பொதுவாகத் தோன்றலாம்.‌

ஆதலால் அசுரன் என்பது பிரகலாதன் நீங்கலாகத் தைத்தியர்களுக்கு பொதுவாக ஆழ்வார்கள் பெயர் சூட்டினாலும், தேவர்களிலும் அசுர குணம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை காகாசுரன் வரலாறு உணர்த்துகிறது. 

தேவர்களும் அசுரர்களும் ஒரு கணத்திலிருந்தாலும் அவர்களுடைய வலிமையானாலும் குணத்தினாலும் மற்றவர்களுக்குத் தீமைகள் செய்பவர்களை அசுரன் என்று பெயரிட்டு அழைத்தனர் என்பதுதான் ஆழ்வார்களின் பாசுரம் மூலம் அறியப்படுகிறோம்.

மகர சடகோபன் 
தென்திருப்பேரை 



   
 







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி