அசுரர் அரக்கர் - 3
அரக்கர் குலம் என்பது புலஸ்தியர் மகன் விஸ்ரவ முனிவருக்கும் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்த குழந்தைகள், இலங்கையர் கோன் இராவணன் மற்றும் அவனது வழித்தோன்றலும் என்பதனை தெளிவாக ஆழ்வார்கள் பாசுரங்கள் மூலம் அறியப்பட்டோம்.
மேலும் அரக்கர் குலம் என்பது இராமாயணம் காலம் என்பதனால் தமிழின் மிகப் பெரிய காவியமான "கம்ப ராமாயணத்தில்" இந்த சப்தம் எவ்வாறு எதனை வெளிப்படுத்துகிறது என்று பார்த்தால் , இராவணன் மற்றும் அவனது வழி தோன்றலைக் குறிக்கும் சொல்லாகவே கம்பர் அமைத்துள்ளார் என்பது புலப்படும்.
"ஐயிரு தலையினோன் அனுசன் ஆதி ஆம்
மெய் வலி அரக்கரால்" (197) என்று பால காண்டத்தில், பத்து தலைகளைக் கொண்ட அரக்கரால் என்று இராவணனைக் குறிப்பிடுகிறார்.
தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து
“அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக“ என உரைத்தனன் அசனி எஞ்சவே. (379)
என்று அகத்திய முனிவர் தாடகையின் புத்திரர்கள் மாரீசன் சுபாகுவை நோக்கி சாபமிடும்போது ," எல்லா உயிர்களையும் அழிப்பதனால் , அரக்கர் ஆகியே இழிவாயாக" என்று கம்பர் குறிப்பிடுகிறார். அழிவு செய்தலால் அரக்கர் என்று இந்தப் பாட்டின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
தாடகையின் கணவன் சுந்தன் அகத்தியர் ஆசிரமத்தில் உள்ள மரங்களை வெட்டினான். அதன் விளைவாக அகத்தியரின் சாபத்தினால் சாம்பலாகி போனான். அதை அறிந்து தாடகை மற்றும் குழந்தைகள் ஆசிரமம் வர , அவர்களை அரக்கராகி இழிவாயாக என்று சாபமிடுகிறார்.
"வெருக் கொள உலகையும்
விண் உேளாரையும்
முருக்கி எவ் உயிரும் உண்டு
உழலும் மூர்க்கர் ஆம்
அரக்கர்கள் ஆயினர்
அக்கணத்தினில்,
உருக்கிய செம்பு என
உமிழ்கண் தீயினர்" (380)
எல்லா உயிர்களையும் உண்டு உழலும் மூர்க்கர்கள் "அரக்கர்கள்" ஆயினர் அந்த கணங்களில் என்று அகத்தியர் தாடகை மற்றும் குழந்தைகளுக்கு சாபமிடும் காட்சியை கம்பர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
கவி சக்கரவர்த்தி கம்பன் அநேக இடங்களில் இராவணன், அவனின் தம்பிகள், அவனது வழித்தோன்றல்களையும், அவனது உற்றார் உறவினர்களையும் "அரக்கன்" என்ற சப்தத்தினால் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. கட்டுரையின் நீளக்குறைப்பைக் கருத்தில் கொண்டு அத்தனைப் பாடல்களையும் இங்கே பதிவிடாமல், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
மேலும் ஆண்டாள் "பொல்லா அரக்கன்" என்ற சப்தத்தை இராவணனுக்கு பயன்படுத்தியதன் மூலம் , நல்ல அரக்கன் விபீஷணனைக் குறிக்கும் என்று மறைமுகமாக உணர்த்தினாள் என்று பார்த்தோம். ஆனால் ஆழ்வார்கள் விபீஷணனை நம்பி என்றும், நல்லானை என்று குறிப்பிட்டதையும் பார்த்தோம்.
விபீஷணன் அரக்கர்கள் சூழ வந்து இராமனை அடி வணங்கினான் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
"தேன் இமிர் அலங்கல் பைந்தார் வீடணக் குரிசில் செய்ய மான வாள் அரக்கரோடும் வந்து, அடிவணங்கிச் சூழ்ந்தான்"
"குகனைத்தன் பதியின் உய்த்து, குன்றினை வலம்செய் தேரோன்
மகனைத் தன்புரத்தில் விட்டு வாள் எயிற்று அரக்கர் சூழ, ககனத்தின் மிசையே எய்தி கனைகடல் இலங்கை புக்கான்"
கூர்மையான கோரபற்களைக் கொண்ட அரக்கர்கள் சூழ விபீஷணன் இலங்கை புக்கான் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
மேற்கூறிய இரண்டு பாட்டுகளிலிருந்து விபீஷணன், அரக்கர்கள் சூழ்ந்து இருந்தான் என்பது தெரியவருகிறது. விபீஷணன் நல்லவன் என்றால் , அவனைச் சூழ்ந்து இருக்கும் அரக்கர்கள் குலமும் நல்லவர்கள் என்றே அனுமானமாக நினைக்கவைக்கிறது.
"குரக்கு வீரன், அரசு, இளங் கோளரி,
அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்,
பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லி, அத்
திருக் கொள் மார்பன் இனையன செப்பினான்"
அனுமன், சுக்ரீவன், அங்கதன் முதலோர் அரக்கர் கோமகன் விபீஷணனுடன் இராமனை அடி வணங்க, திருக்கொள் மார்பன் இராமன் நீதிகளை எடுத்துரைத்தான்.
"ஆதலான், அரக்கர் கோவே! அடுப்பது அன்று உனக்கும்,
இன்னே சாதுகை மாந்தர் தம்மைத் தடுப்பது' என்று அருளி,
செங்கண் வேதநாயகன் தான் நிற்ப, வெய்து உயிர்த்து, அலக்கண் எய்தி,
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன்
குணங்கள் தூயோன்
அரக்கர் கோவே விபீஷணனே, எந்த தவறும் செய்யாத சாதுவான சாமானிய மனிதர்களை அடித்து விரட்டுவது உனக்கு பொருந்துவது அன்று என்று சொல்லி செங்கண் வேதநாயகன் இராமன் நிற்க , குணங்களில் தூயவனான அரக்கர் கோவான விபீஷணனின் குற்றமில்லாத மனமும் உடம்பும் நடுங்கிற்று என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் வர்ணிக்கிறார்.
ஆழ்வார்கள் விபீஷணனை நம்பி என்றும் ,நல்லான் என்று பாடியதை மனதில் கொண்டு, கம்பர் விபீஷணனை குணங்களில் தூயவன் என்று பாடியுள்ளார்.
முதலில் தாடகை மற்றும் குழந்தைகளை சாபமிடும் போது அரக்கனாகி இழிவாயாக என்றும் மூர்க்கர் என்று கூறியதன் மூலம், அரக்க குணங்கள் என்பது கெட்டவர்கள் தீயவர்கள் என்ற அர்த்தம் அறியும்படியுள்ளது.
ஏனென்றால் இலங்கையர் கோன் இராவணனை அரக்கன் என்ற சப்தத்தில் எல்லா நூல்களும் குறிப்பிடுவதனால், அவனுடைய குணங்களே அரக்கனின் குணமாகி மாறி, அரக்கன் என்ற சப்தம் மூர்க்கர்களைக் குறிக்கும் வண்ணம் உலாவிக் கொண்டிருக்கிறது.
விபீஷணனை அரக்கர் கோன் என்று சொல்லி, குணங்களில் தூயவன் என்றும் ,குற்றமில்லாத மனமும் தேகமும் கொண்டவன் என்று சொல்லியதன் மூலம், அரக்கர்கள் என்பவர்கள் கொடியவர்கள், கெட்டவர்கள் , துன்புறுத்துவர்கள் என்று அர்த்தம் கொள்ள முடியாது என்றே அறியும்படியும் அமைந்துள்ளது.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் வாக்குக் கொண்டு நோக்கும்போதும் அரக்கன் என்ற சொல்லின் அர்த்தம், கடந்த கட்டுரையில் கூறியதைப் போல் நாற்றம் என்ற வார்த்தையின் அர்த்தம் போல் அமைந்துள்ளது.
பி.கு.
கம்பனும் இராக்கதர் என்ற சொல்லை அரக்கர்களைக் குறிக்கும் சொல்லாக பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.
மகர சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக