சங்கத்தமிழ்(மாலை)-3
அந்த புத்தகத்தில் "மார்கழி நோன்பாகிய தைந்நீராடல்" என்ற தலைப்பில் திரு. மு. ராகவைய்யங்கார் மிக விரிவாக எழுதியுள்ளார். நாம் இரண்டு கட்டுரையில் பார்த்த விஷயங்கள், கட்டுரையின் பார்வை என்பது நாம் அறியாமல் "மார்கழி நோன்பாகிய தைந்நீராடலுடன்" ஒத்திசைந்து சென்றதை அறிந்து பெருமை அடைந்தோம்.
மேலும் பல ஒற்றுமைகள் இருப்பதை அந்த புத்தகத்தின் மூலம் படித்து நாம் அடைந்த ஆனந்தத்தை இங்கே பகர்வது என்று எண்ணி இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
சைவ வைணவ இலக்கியங்களில் கூறும் மார்கழி நீராடல் அதாவது மார்கழி நோன்பு என்பது , பாரத தேசத்தில் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் வழக்கம் என்று ஆரம்பிக்கிறார். பாரதப் பண்பாடு ஒன்றே என்ற நமது வாதத்திற்கு இந்த நூல் வலுசேர்க்கும் என்பதில் ஐயம் இல்லை.
முன்னோர் அனுஷ்டானத்தையே பின்பற்றி அநாதி காலமாக நடைபெற்றுவரும் நோன்புகளும் சிலவுண்டு. பங்குனி மாதப் பௌர்ணமிக்குப்பின் நடைபெறுவதும் ஹோளை ஹேரளகம் என்று வழங்கப்பெறுவதுமான காம நோன்பை வேதவிதியின்றி சிஷ்டாசாரமே பற்றியதென்று கூறுவர் முன்னோர்.
இவ்வாறு இல்லறத்தார் நிகழ்த்தி வந்த நோன்புகளில் "மார்கழி நோன்பு" என்பதும் ஒன்று. இதைப் பின்பற்றி பண்டைய காலத்தில் வழங்கியதென்பது திருப்பாவையாலும் திருவெம்பையாலும் தெரியவருகிறது. திருப்பாவை வ்யாக்னத்தில் தொடக்கத்தே ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்ற பெரியார் இவ்விரதத்தைப்பற்றி குறிக்குமிடத்து "இந்நோன்புக்கு மூலம் எனானெனில், மீமாம்ஸையிலே ஹோளாதிகரண நியாயத்தாலே" சிஷ்டாசாரசித்தம். "மேலையார் செய்வனகள்" என்று ஆண்டாள் தானும் அருளிச் செய்தாள் என்று எழுதலால், மார்கழி நோன்புக்கு ஆன்றோர் அனுஷ்டானமே அதற்கு மூலமென்பதும் , பண்டையோர் கொள்கையென்பதும் நன்கு விளங்கும் என்று ஆசிரியர் திரு.மு.ரா. விளக்குகிறார்.
பண்டைய காலத்தின் நீட்சியே இந்த நோன்பு வழிபாடு தமிழகத்திலும் பாரதத்திலும் கொண்டாடப்பட்டுவந்துள்ளது என்று தெரியவருகிறது. பண்பாடு அடிப்படையில் பாரதம் முழுவதும் ஒரே நிலையில்தான் இருந்தது என்பதற்கு சங்க நூல்களும், தமிழ் பக்தி இலக்கியங்களும் , வடமொழி பக்தி இலக்கியங்களும் சான்று என்று இந்த "ஆராய்ச்சி தொகுதி" நூல் மூலம் தெரியவருகிறது.
மேலும் வடமொழி , தமிழ் பக்தி இலக்கியங்கள், சங்க இலக்கியங்களில் காணப்படும் ஒற்றுமைகள் என்ன என்பதனை காத்யாயனீ தேவி வழிபாடு ( தேவி வழிபாடு) , நாயகனை அடையவேண்டி விரதம் கொள்வதும்,மழை பெய்யாக் குறை வேண்டி பெண்கள் மார்கழி நோன்பு நோற்றதும் என்பது பொதுவாகக் காணப்படுகிறது என்றும் ஆசிரியர் திரு மு.ரா. விளக்குகிறார்.
பெரியவாச்சான் பிள்ளை திருப்பாவை அவதாரிகை வ்யாக்னத்தில் " கோகுலத்துள்ள ஆயர்கள் மழைபெய்யாக் குறையை நீக்க வேண்டிக் கண்ணனைத் தலைமையாக நியமித்துத் தங்கள் பெண்களை மார்கழி நோன்பு நோற்கச் சொல்ல, அவர்கள் அதற்கியைந்து நோற்று, கண்ணபிரானை நாயகனாகப் பெறும் தங்கள் மனோரதத்தை அடையப் பெற்றார்கள் என்பதே ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையின் வரலாறு என்று அவதாரிகையில் எழுதியுள்ளார் என்று திரு மு.ரா கூறுகிறார்.
ஆண்டாள் தனது திருப்பாவையில் நான்காவது பாசுரத்தில் ஆழிமழை கண்ணா என்ற பாசுரத்தில் "வாழ உலகினில் பெய்திடாய்" என்று "வருண பகவானை" வேண்டிக் கொள்கிறாள். மூன்றாவது பாசுரத்தில்"திங்கள் மும்மாரி பெய்து" என்று வேண்டிக்கொள்கிறாள்.
மாணிக்க வாசகர் தனது திருவெம்பாவையில்,
"முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து டையும்...........
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கு மஇன்னரஉளஏ
யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்"
என்று மழைக் கடவுளை வேண்டி பாடியுள்ளார்.
திருப்பாவையும் திருவெம்பாவையும் வேறுவேறு தெய்வச்சார்பு உடையவாயினும் ஒரே பொதுக்குறிப்புடையவன என்பது வெளிப்படுகிறது.
சங்கநூல் பரிபாடலில்
"மாயிறுத் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலினாய் தொடிக் கன்னியர்"
" ஆகமங்களை உணர்ந்த பூசகர் தெய்வத்திற்குத் திருவிழா தொடங்கினராக, பூமியானது மழைவளம் பெற்றுக் குளிர்வதாக, அம்பா ஆடலைச் செய்வதற்கு கன்னிப் பெண்கள் கூடி" தாய் அருகா நின்று தவமாகிய தைந்நீராடல் அவையே என்று பரிபாடல் கூறுகின்றது. இங்கும் மழையைப் பற்றி குறிப்பு வருவதைக் காணலாம்.
ஶ்ரீமத் பாகவதம் - தசமஸ்கந்தம் 22ம் அத்யாயத்தில், கண்ணன் கோபியர் துகில் கவர்ந்த சரிதம் கூறும் தொடக்கத்தே மார்கழி நோன்பு பற்றிய முக்கியமான செய்திகள் கூறப்படுகின்றன என்று தொடங்கி , காத்யாயனீ தேவியை வழிபட்டு , ஒரு மாதகாலம் விரதம் மேற்கொண்டு , கண்ணனை அடைந்தார்கள் என்று விபரமாக ஆசிரியர் திரு மு.ரா. எழுதியுள்ளார்.
மேலும் ஆண்டாள் காத்யாயனீ தேவியை வழிபட்டு கண்ணனை அடைந்தாள் என்றும் , திருமால் பக்தியில் சிறந்த ஆண்டாள் தேவீ விரதத்தை மூலமாகக் கொண்டு ஒரு பிரபந்தம் பாடினார் எனல் தகுமோ என்று இதற்கு சிலர் இங்கே சங்கித்தல் கூடும் என்று திரு.மு.ரா. எழுதியுள்ளார்.
மேலும் கண்ணனைத் தம் நாயகனாக அடைவதற்குக் கோபியர் காத்யாயனீ தேவியை ஆராதித்துப் போந்த செய்தி பாகவதத்தில் பிரசித்தமாய் இருக்கும்போது, அக்கோபியர் விஷயத்தையே ஆண்டாளும் கொண்டு கூறினர் எனின் அதனில் இழுக்குமுளதாமோ? திருமாலைத் தன் நாயகனாக அடைய வேண்டி " உன்னையும் உம்பியையும் தொழுதேன்" எனக் காமனையும் அவன் தம்பி சாமனையும் கூடத் தொழப்புக்க, ஆண்டாள் தேவியைப் பிரார்த்தித்து அப்பெருமாளைப் பெறமுயன்ற கோபியர் செய்தி கூறியதில் குற்றமென்னை? என்று வினவி , தேவி வழிபாடு என்பது பாகவத்திலும், திருப்பாவையிலும் குல ஆச்சாரப்படி சம்பிரதாய விரோதம் இல்லாமல் நிகழ்ந்தது என்று ஆசிரியர் திரு மு.ரா. கூறுகிறார். இதில் விரோதம் இருப்பதாக அடியேனுக்கும் புலப்படவில்லை. இந்தப் பார்வையும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் உள்ளது.
இங்கு அடியேனது கருத்து என்பது தேவி வழிபாடு என்பதற்கு விரோதம் இருக்குமனால் , ஆண்டாள் திருப்பாவையில் கண்ணனை நப்பின்னை பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு அடைகிறாள் என்பதனை "உந்து மத களிற்றன்" "குத்து விளக்கெரிய" " முப்பத்து மூவர்" என்று மூன்று பாசுரங்களின் மூலம் அறிகிறோம். பிராட்டி என்ற தாயார் வழிபாடு இங்கே குறிப்பிடப்படுகிறது. பெண் தெய்வம் வழிபாடு என்பது நோன்பில் கூறப்பட்டதாக வைத்துக் கொண்டுக் கடந்து செல்லலாம் என்பது அடியேனது தாழ்மையான எண்ணம்.
திருவாசகம், திருவெம்பாவை ஒவ்வொரு பகுதிக்கும் அதனதன் பருப்பொருள் புலப்படுமாறு, தலைக்குறிப்புகள் அமைந்திருக்கிறது. தலைக்குறிப்புகள் பின்வந்த பெரியவர்களினால் பண்டைக்காலத்தே அமைக்கப்பட்டவை என்று புலப்படுகிறது. திருவெம்பாவைக்கு அமைந்த தலைக்குறிப்பு "சக்தியை வியந்தது" என்பதாம். உமாதேவியின் புகழ்ச்சியே திருவெம்பாவையின் கருத்து என்பது மிகத்தெளிவாகும் என்று ஆசிரியர் திரு. மு.ரா.கூறுகிறார்.
சங்க பாடலில் "அம்பா ஆடல்" " தாய் அருகா நின்று" என்ற இரு வரிகளைக் கொண்டு, அங்ஙனம் தாயர் நிற்பதை பெரிய விசேடமாகக் கொண்டு , அம்பா ஆடல் என்று பார்ப்பது ஆராய்ச்சிக்குரியது என்று கூறுகிறார். அம்பா என்பது தேவியைக் குறித்தல் வெளிப்படை. இதன் மூலம் பெண்தெய்வ வழிபாடு என்பது சங்கநூலிலும் காணப்படுகிறது.
மேலும் அதிகாலை கன்னிப் பெண்கள் எழுந்திருந்து, ஒருவரையொருவர் அழைத்துக்கொண்டு, கூட்டமாக குளிர்ந்த நீரில் நீராடி , நாயகனை அடைய விரதம் இருந்தார்கள் என்பது மேற்கூறிய எல்லா நூல்களிலும் பாகவதம் உட்பட பொதுவாக அமைந்துள்ளன என்பதனையும் பார்த்தோம்.
இவ்வாறாக வடமொழி இலக்கியங்கள், சங்க இலக்கியங்களில், தமிழ் பக்தி இலக்கியங்கள் கூறும் பாரதப் பண்பாடு ஒன்றே என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
சங்க தமிழ் மாலை போற்றுவோம்
சங்க தமிழ் வளர்ப்போம்
பாரதப் பண்பாடு ஒன்றே என்று முழங்குவோம்
பாரத் தாயை என்றென்றும் நேசிப்போம் பாதுகாப்போம்
மகர சடகோபன்
தென்திருப்பேரை
நன்றி: "ஆராய்ச்சி தொகுதி"
ஆசிரியர்: திரு. மு. ராகவைய்யங்கார்
கருத்துகள்
கருத்துரையிடுக