அசுரர் அரக்கர் -2


படைப்பில் ஒரு விஷயத்தை உற்று நோக்கினால் புலப்படும் உண்மை என்பது, பிரம்மாவினால் படைக்கப்பட்ட பிரஜாபதிகள்,ரிஷிகள் மூலம் பல விலங்கினங்கள்,  தாவரயினங்கள், பறவையினங்கள், ஊர்வனயினங்கள், தேவர்கள் , தைத்தியர்கள், அரம்பையர்கள், கந்தர்வர்கள்,அரக்கர்கள், வித்யாதரர்கள் போன்ற மனிதக்குல இனங்களும்,மற்றவை களும்,  படைக்கப்பட்டு  விஸ்தரிக்கப்பட்டுள்ளன.‌

கின்னரர்கள் , கிம்புருஷர்கள் என்பவர்கள் இரு வேறு இனங்களின் உருவங்களைக் கொண்டவர்கள். கின்னரர்கள் குதிரை முகம் கொண்டவர்கள் என்றும் , கீழ் உடம்பு பறவைகளைப் போலவும் மேல் உடம்பு மனிதர்களைப் போலவும் இருக்கும் என்று அறியப்படுகிறது.

கிம்புருஷர்கள் சிங்க முகமும் மனித உடம்பையும் கொண்ட அமைப்பு. கிம்புருஷர்கள் கின்னரர்கள் இருவருக்கும் ஒரு தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களே கிராத இன மக்கள் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.‌

கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர்கள். இப்படியாக 18 இனக்குழுக்கள் படைக்கப் பட்டன என்று புராணங்கள் கூறுகின்றன.‌

பரத்வாஜ முனிவர் பட்சியாக மாறினார். அந்த பறவை பரத்வாஜ பட்சி அல்லது வலியன் அல்லது ஆனைசாத்தான்  அல்லது இரட்டை வால் குருவி என்ற பறவை இனம் அழைக்கப்பட்டது  என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. 

மனித இனங்களின் உருவ அமைப்புகள் , உடல் அமைப்புகளில் வேறுபாடுகள் இருந்ததன் அடிப்படையில், வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு இருந்தனர் என்பதும் தெரியவருகிறது. அடையாளத்துக்காக மட்டுமே , வேறுபாட்டுக்கு அன்று.‌

பிற்காலத்தில் பல்வேறு மனித இனங்களில் கலவைகள் ஏற்பட்டு, இன்றைய மனிதக் குல வளர்ச்சியின் பரிமாணங்கள் உருவாகியிருக்கின்றன. இன்றும் மனித இன கலவைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மனிதக் குல இனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுப் பல புதிய இனங்கள் , பதிய உடல் அமைப்பு, புதிய உருவ அமைப்பில் தோற்றம் என்பது நடந்த வண்ணமாக இருப்பதை நாம் உணர்கிறோம். 

படைப்பில் மற்றொன்றும் புலப்படுகிறது.‌காஷ்யப ரிஷி என்பவர் ஒருவரே, ஆனால் வெவ்வேறு மனைவிகள் மூலம் பல கணங்கள் படைக்கப்பட்டு இருக்கிறது என்பது நன்றாகப் புலப்படுகிறது. அப்படியானால் கணங்கள் என்பது தாய் வழியில் உருவாகியுள்ளது என்பதும் புலப்படுகிறது. 

புலஸ்தியரின் மகன் விஸ்ரவ முனிவருக்கும் இரண்டு மனைவிகள். முதல் மனைவி பரத்வாஜ ரிஷியின் புத்திரி இலவித அல்லது இலவிலா. இவள் யட்சிணி குலப் பெண். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் குபேரன். குபேரன் வம்சாவளிகள் யட்சகர்கள் என்றும் , யட்சகர்கள் இலங்கையை ஆண்டு வந்தனர் என்ற வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. குபேரனிடமிருந்து இலங்கை அரசு, விஸ்ரவ முனியின் மற்றொரு மனைவி அரக்ககுலப் பெண் கைகேசிக்கும் பிறந்த இராவணனிடம் சென்றது. 

புலஸ்தியரின் மகன் விஸ்ரவ முனியின் குழந்தைகளும் அவர்களது தாய்வழியைக் கொண்டு பிறந்ததனால் யட்சகர்கள், அரக்கர்கள் என்று அழைக்கப்பட்டனர். 

சுரன் என்ற‌ தேவர்களுக்கு எதிர்மறையாக இருந்தவர்கள் பொதுவாக அசுரர்கள் என்றும், மனிதக் குலத்திற்கு எதிராக‌ இருந்தவர்கள் அரக்கர்கள் என்றவொரு கருத்தும் நிலவுகிறது. 

அசுரன் அரக்கன் என்பதற்கு வலிமையானவர்கள் என்பது சரியான அர்த்தமாக இருக்கும், மேலும் தீயவன், கொடியவன், பொல்லாதவன் என்ற வார்த்தை அர்த்தங்கள் பொருந்தாது என்பதும் அடியேனது கருத்து. எல்லா இனங்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருப்பார்கள். 

ஆண்டாள் "பொல்லா அரக்கனைக் கிள்ளி களைந்தானை" என்று திருப்பாவையில் குறிப்பிடுகிறாள். ஒரே அர்த்தம் தரக்கூடிய பொல்லா , அரக்கன் என்ற வார்த்தைகளை அடுத்து அடுத்ததாக உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரக்கர் குலத்திலும் நல்லவர்கள் , பொல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தைக் காண்பிக்கவே ஆண்டாள் " பொல்லா அரக்கன்" என்று பாடியுள்ளாள். நல்ல அரக்கன் விபீஷணன் மற்றும் அவனைச் சார்ந்த அரக்கர்கள் என்பது மறைமுகமாக வெளிப்படுகிறது.

அசுர அரக்க குலங்களிலும் ஒரு சிலருக்கு ஆணவம் இறுமாப்பு தலைக்கு ஏறும் போது தவறுகள் அதிகமாகச் செய்து தர்ம வழியிலிருந்து பிறழ்ந்து மற்றவர்களையும் துன்புறுத்தும் நிலைக்குச் செல்கின்றனர். வலிமைமிக்க ஆணவம் இறுமாப்பு நிறைந்த இலங்கையர் கோன் அரக்கர் குல இராவணனை  அரக்கன் என்ற சொல்லினால் பல இடங்களில் பாசுரங்கள் பாடியுள்ளனர். ஆனால் ஒரு இடத்தில் கூட மாறியும் இராவணனை அசுரன் என்று பாடவில்லை. 

"இலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி"
 - பெரியாழ்வார் திருமொழி

"அரக்கர் தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த ஏழிற் தோள் எம் இராமன்"
 - பெரியாழ்வார் திருமொழி 

"வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்" 
         - பெருமாள் திருமொழி

"குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அங்கு அரங்க வெஞ்சரம் துரந்த ஆதி நீ"
                - திருசந்தவிருத்தம்

"ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்" 
                           - திருமாலை 

"மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான்
சாளக்கிராமம் அடை நெஞ்சே" 
                
"இலங்கைப் பதிக்கு அன்று இறை ஆய அரக்கர்'
                
"தென் இலங்கை அரக்கர் வேந்தை"

"இலங்கை-தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை"

"அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குலப் பாவை-தன்னை
வெம் சின மூக்கு அரிந்த"

                 - பெரிய திருமொழி
                 
"தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத்"
                     - பெரிய திருமடல்

"இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான்"

"வல் அரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே"

"போர் அரக்கர் குலம் கெடுத்தான்"

                    - திருவாய்மொழி 

அனைத்து பாசுரங்களிலும் ஆழ்வார்கள் அனைவரும் இலங்கை அரசன் இராவணனை அரக்கர்  என்று பாடியுள்ளார்கள்

ஆனால் இராவணனை இராக்கதர் என்ற சொல்லினால் பெரியாழ்வார்
"இராக்கதர் வாழ் இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே" என்று பாடியுள்ளார். 

"வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்த மலைபோல் உருவத்து ஓர் இராக்கதரி மூக்கு அரிந்திட்டவன் காண்மின்"
                - பெரிய திருமொழி

திருமங்கையாழ்வாரும் இராக்கதர் என்ற சொல்லை அரக்கன் இராவணன் தங்ககைக்கு உபயோகப்படுத்தியுள்ளதைபார்க்கமுடிகிறது. 

இறுதியாக அரக்கன், அரக்கி என்ற சப்தங்களை அரக்கர் குலத்தில் ஆணவம் இறுமாப்பு உள்ள மக்களைக் குறிக்கும் சொல்லாக ஆழ்வார்கள் பயன்படுத்தியுள்ளனர்.‌ இவர்கள் இராமாயண காலத்தில் இருந்துள்ளதை ஆழ்வார்களின் வாயிலாக அறிய முடிகிறது.‌ அதே நேரத்தில் அரக்கர் குல விபீடனணை, 

 "மின் இலங்கும் பூண் விபீடண நம்பிக்கு"  

"செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே"     
                           "இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே"

நம்பி , நல்லானை என்று அழைக்கிறார்கள். 

அரக்கர் குலம் என்பது புலஸ்தியர் மகன் விஸ்ரவ முனிவருக்கும் சுமாலி மன்னனின்  கைகேசிக்கும் பிறந்த குழந்தைகள் மற்றும் சந்ததியினர். அதற்கு முன் இருந்தாலும் கூட இராமாயண காலத்திற்குப் பின் இராவணன் மூலம் உலகுக்கு உணர்த்த படுவதனால், கொடிய தீங்கு செய்யும் சொல்லாகப் பார்க்கும் அளவுக்கு சென்று விட்டது.  

அரக்கர் குலவழித்தோன்றல் விபீடனண், த்ரிசடை போன்றோர்கள் நல்லவர்கள் என்று புகழப்பட்டனர். செயல்களினால் நல்லவன் தீயவன் என்று அறியப்பட்டு, அவர்களின் உடல் உருவ அமைப்பினால் ஒரு குலம் என்றும் அறியப்பட்டனர். 

"நாற்ற துழாய்முடி நாராயணன்"

நாற்றம் என்பது வாசனை, ஆனால் எப்படி இப்பொழுது கெட்ட வாசனைகளைக் குறிக்கும் சொல்லாக உபயோகப் படுத்தப்படுகிறது. அதுபோலவே அரக்கன் என்ற சொல் பொதுவாக கெட்டவன் என்று உபயோகப்படுத்தப் படுகிறது. 

மேலும் பார்ப்போம் ........

மகர சடகோபன்
தென்திருப்பேரை 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்