அசுரர் அரக்கர் -1





 

அசுரன் அரக்கன் என்பதான தமிழ் வார்த்தைகளுக்கு ஒரு பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது (Demon), அவை இரண்டும் பெரிய உருவங்கள் படைத்த  நல்லவன் இல்லை என்ற அர்த்தத்தால் குறிக்கும் சொல்லாகப் பயன்படுகிறது என்றுதான் அறியப்படுகிறது. அப்படித்தான் இணையத்தள தேடல்களும் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி தேடுதலே இந்தக் கட்டுரையின் நோக்கம். 


இதைப் பற்றி அறிவதற்கு பாரதத்தின் தொன்மைக்குச் சென்று படைப்பிலிருந்தும், ஆழ்வார்களின் ஈரச் சொற்களிலிருந்தும் சில விளக்கங்களைப் பெற முயற்சிக்கிறேன். 

காஷ்யப ரிஷி ஸப்த ரிஷிகளில் ஒருவராகவும், பிரம்மாவினால் படைப்பு தொழிலில் உதவி 
புரிவதற்காகப் படைக்கப் பட்ட பிரஜாபதிகள் பத்துகளிலும் ஒருவர். 

பிரம்மாவினால் படைக்கப்பட்ட மற்றொரு பிரஜாபதி தட்சன் (தக்கன்). தக்கன் பிரம்ம ரிஷிகளில் ஒருவர்.

காஷ்யப ரிஷி தட்சனின் 13 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு பல இனங்களைப் படைக்கிறார். 

காஷ்யப ரிஷிக்குப் பிறந்த குழந்தைகள், அவர்களைப் பொதுவாக அசுரர்கள் அதாவது வலிமையானவர்கள் என்ற அர்த்தத்தில் அழைக்கப்படுகிறது.‌

மனைவி அதிதி - இந்திரன், அக்கினி போன்ற தேவர்கள், ஆதித்தர்கள், மற்றும் வாமனர்.

மனைவி திதி - தைத்தியர்கள் இரணியாட்சன், இரணிய கசிபு.

மனைவி கத்ரு - நாகர்கள்

மனைவி வினதா - அருணன், கருடன் 

மனைவி சுரசை - பசுக்கள், எருமைகள்

மனைவி தனு - தாவரங்கள்

மனைவி முனி - அரம்பையர்கள்


இதனைப் பார்க்கும்போது கருடன், ஜடாயு , சம்பாதி போன்ற பறவை இனங்கள், நாகர்கள் போன்ற பல பாம்பினங்கள், அழகான பெண்கள் ரம்பை,ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற தேவ மங்கையர்கள், பசுக்கள் , எருமைகள் போன்ற விலங்கினங்கள், தாவர இனங்கள் என்று, பல இனங்கள் அல்லது கணங்கள் அவரால் படைக்கப்படுகின்றன. 

பிரம்மாவினால் படைக்கப்பட்ட மற்றொரு பிரஜாபதி புலஸ்தியர். இவரும் பிரம்ம ரிஷிகளில் ஒருவர். புலஸ்தியரின் மகன் விஸ்ரவ  முனிவருக்கும் சுமாலி என்ற அரக்கர் குல மன்னனின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்கள் இராவணன்,கும்பகர்ணன், வீபஷணன்சூர்ப்பணகை.‌இவர்களை பொதுவாக அரக்கர்கள் என்று அழைக்கிறார்கள்.

ஆனாலும் இருவரும் பிரம்மாவினால் படைக்கப்பட்ட பிரம்ம ரிஷிகளின் மூலமாகப்  படைக்கப்பட்ட போதிலும் , எப்படி இவர்களை அரக்கன் அசுரன் என்று எவ்வாறு வித்தியாசம் காணலாம். ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. 

இரண்டு வார்த்தைகளும் நல்லவன் இல்லை என்ற ஒரு புள்ளியில் இணைவதால், இரண்டும் ஒன்று என்று சொல்லும் அளவுக்கு வழக்கமாகி அன்றாட உபயோகத்தில் இருப்பதையும் காண முடிகிறது. நல்லவன் இல்லை என்பது சரியாக இருக்கமுடியாது. நல்லவர்கள் கெட்டவர்கள் என்பது எல்லா கணங்களிலும் இருக்கும். 

வலிமையானவர்கள் என்ற அர்த்தத்தில் பார்த்தாலும் , அசுரன் அரக்கன் என்பவர்கள் வலிமையானவர்களே.‌ அதன் அடிப்படையிலும் ஒன்றாகத் தோன்றுகிறது.‌

நீங்கள் இணையத்தில் இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தத்தைத் தேட ஆரம்பித்தால், இரண்டும் ஒன்று என்று அர்த்தத்தில் பதில்கள் வருவதைக் காணலாம். 

அப்படி என்றால் அரக்கன், அசுரன் என்ற சொல் ஒரு அர்த்தத்தைக் காண்பிக்கிறதா? அல்லது வேறு வேறு அர்த்தங்களைக் காண்பிக்கிறதா?  


"ஐயம் ஒன்று இல்லை அரக்கர்* அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்* 
உய்யும் வகை இல்லை தொண்டீர்!* ஊழி பெயர்த்திடும் கொன்றே" 

           - திருவாய்மொழி 5-2-5


'உய்விடம் ஏழையர்க்கும்* அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம் என்றுஇலங்கி* மகரம் தழைக்கும் தளிர்கொல்"

       - திருவாய்மொழி 7-7-6

"சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு* சங்கொடு சக்கரம்வில்,* 
ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்* தண்டு கொண்டு புள் ஊர்ந்து,* உலகில் 
வன்மை உடைய அரக்கர்* அசுரரை மாளப் படைபொருத,* 
நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற* நான் ஓர் குறைவு இலனே"

        - திருவாய்மொழி 3-10-1

நம்மாழ்வார் அரக்கர் அசுரர் என்று இரண்டு சொற்களையும் அடுத்தடுத்து ஒரே பாசுரத்தில் உபயோகித்துள்ளதைப் பார்க்கும் பொழுது, அர்த்தம் வேறு வேறு என்று தெளிவாகத் தெரிகிறது.  

அசுரன் அரக்கன் என்ற சொற்களுக்கு தமிழ் இணையத்தளம் தேடல் மூலம் கிடைக்கும் அர்த்தத்திற்கு மாறாக இருப்பதையும் உணரமுடிகிறது. 

மேலும் பார்ப்போம் ...........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி