சங்க தமிழ் (மாலை)


மார்கழி மாதம் தொடங்கி விட்டால் என்றால் ஆன்மீக வழிபாடு, அதிகாலையில் பக்தி பாடல்களை இசைத்துக் கொண்டு வீதிகளை வலம் வருவது என்பது போன்ற நிகழ்வுகள் சைவம் வைணவம் என்ற இரு சமயத்தாரும் செய்து வருகின்றனர். 

சனாதனத்தின் இரு பெரும் பிரிவுகளும் இந்த மாதத்தை வெகு விமரிசையாகப் பாவை நோன்பு நோற்று தத்தம் மூல நாயகனை ஆடியும் பாடியும் கொண்டாடியும் தொழுதும் வருகின்றனர். 

சைவர்கள் மாணிக்கவாசகப் பெருமான் இயற்றிய திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாடல்களை அதிகாலை ஓதுவதும், சிவனை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வைணவர்கள் தொண்டரப்பொடியாழ்வர் இயற்றிய திருப்பள்ளியெழுச்சி, ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடல்களைச் சேவிப்பதும், விஷ்ணுவை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

சனாதனத்தின் ஒற்றுமை என்பது வேற்றுமையிலும் அழகாக ஒருங்கிணைந்து காணப்படுகிறது. ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஏற்படுத்திய பக்தி இலக்கிய தமிழ் மரபு என்பது சங்க பாடல்கள் கூறும் தமிழ் மரபின் நீட்சி.‌ 

சங்க பாடல்களில் தை நீராடல் பற்றிக் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த தை நீராட்டத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், மாதங்கள் எப்படி தமிழில் இருந்திருக்கலாம் என்று பார்ப்போம். 

பாரதத்தில் ஆண்டுகள் என்பது சூரியன் சந்திரன் சுழற்சியை வைத்துக் குறிக்கப்படுகின்றன. சந்திரனை வைத்து ஆண்டுகள் தொடங்குவது என்பது கர்நாடகம், ஆந்திரம் , மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள். சூரியனை வைத்து ஆண்டுகள் தொடங்குவது என்பது தமிழ்நாடு, பஞ்சாப், வங்காளம் போன்ற மாநிலங்கள். 

சந்திரனின் சுழற்சியில் ஆண்டுகள் குறிப்பிடும் பொழுது அமாவாசை முடிந்த பிரதமையில் தொடங்குகிறது. அதை அவர்கள் யுகாதி என்று ஆந்திரம் , கர்நாடகம், மகாராட்டிரம் மாநிலங்கள் அமாவாசையை அந்தமாகக் கொண்டு ஒரு முறையைப் பின்பற்றி ஆண்டுகள் கொண்டாடி வருகின்றனர்.‌

தமிழ்ச் சங்க பாடல்களில் மார்கழி ஆதிரை, தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை சித்திரை (சித்ரா பௌர்ணமி), ஆவணி திருவோணம் , கார்த்திகை கார்த்திகை போன்ற விழாக்களின் குறிப்புகள் கிடைக்கின்றன.‌ இந்த திருவிழாக்களின் ஒற்றுமை என்பது பௌர்ணமி அல்லது பௌர்ணமி ஒட்டி வரும் நாட்கள். அன்று பெருவிழாக்கள் இரவு முழுவதும் விழித்து சந்திர ஒளியில் இயற்கையாகக் கொண்டாடி வந்துள்ளனர். ஆதலால் திருவிழாக்கள் பௌர்ணமி அன்று தொடங்கி, மறுநாள் பிரதமை காலை வரை செல்லலாம். 

மற்றொன்று பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயர் கொண்டு மாதங்கள்,தை பூசம் (பூசம் - தைஷ்யம், புஷ்ய) , பங்குனி உத்திரம் ( உத்தர பல்குநீ) , சித்திரை சித்திரை (சைத்ரா), வைகாசி விசாகம் (விசாகா), ஆனி கேட்டை (ஜேஷ்டா), ஆவணி திருவோணம் (ச்ரவண), கார்த்திகை கார்த்திகை (க்ருத்திகா) , மார்கழி மிருகசீர்ஷம் (மார்க்கசீர்ஷம்) குறிப்பிடப்பட்டுள்ளன. 

இதை வைத்துப் பார்க்கும் பொழுது, சந்திரனின் சுழற்சியில் பௌர்ணமியை அந்தமாகக் கொண்டு மாதங்கள் தமிழர்கள் மரபில் கொண்டாடப் பட்டிருக்கலாம். (????) 

" நிலவே நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பி, கலியெழு மறுகின், விழவு அயரும்பே" 

                 - நற்றிணை 348 1-4

பௌர்ணமி நிலவில் விழா கொண்டாடப்பட்ட செய்தியை நற்றிணை என்ற சங்க பாடலின் மூலம் அறிகிறோம். 

நாள் முழுவதும் வேலை செய்தவர்களுக்கு ஓய்வு என்பது தேவைப்பட்டது. மேலும் மாதம் ஒரு முறை உள்ளத்திற்குப் புத்துணர்ச்சி ஏற்படுத்த ஊர்கூடி ஒற்றுமையாக விருப்பத்துடன் விழா எடுத்தனர். இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக முழு நிலா நாட்களைத் தமிழர்கள் தேர்ந்தெடுத்தனர் என்று சங்க பாடல்களின் மூலம் அறிகிறோம்.

சங்க இலக்கியங்கள் தைந்நீராடல் என்க, பக்தி இலக்கியங்கள் மார்கழி நீராட என்கிறது .........…...( தொடரும்)

 
மகர சடகோபன் 
தென்திருப்பேரை                     


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

எல்லைச்சாமி